(தோழர் தியாகு எழுதுகிறார்- “பொதுக் குடியியல் சட்டம்” – புரட்டும் புரளியும் ! (3)-தொடர்ச்சி)

பொதுக் குடியியல் சட்டம்

இந்துச் சட்டம் இந்தியச் சட்டமானது எப்படி?

இந்தியாவில், முதலாண்மைப் பெருங்குழுமங்களுக்கும் இந்துக் கூட்டுக் குடும்பத்துக்குமான பிணைப்புச் சொத்தின் மீதும் மூலமுதலின் மீதும் குடும்பத்தின் கட்டுப்பாட்டைப் பேணுவதில் தனித்தன்மையதாக உள்ளது எனக் கண்டோம். ஒரு சட்டமுறை நிறுவனமாக இந்தச் சலுகை இந்துக்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது, இது இந்துத் தனியாள், குடும்பச் சட்ட நெறிகளில் வரை யறுக்கப்பட்டுப் புனிதமாக்கப்படுகிறது.

அரசமைப்பில் கூறியுள்ளபடி முசுலிம், கிறித்தவர், பார்சி அல்லது யூதர் அல்லாத ஒவ்வொருவரும் சட்டப்படி இந்து ஆவார். பௌத்தம், சமணம், சீக்கியம் போன்ற சமயங்களைச் சேர்ந்தவர்களும் இந்துக்களாகவே கருதப்படுவார்கள். மத ஒழுங்கமைப்புகளுக்கு வெளியே நிற்கும் ஆதிவாசிகள் அல்லது பழங்குடி மக்களும் இந்துக்களாகவே கருதப்படுவார்கள். கிறித்துவம், இசுலாம் அல்லது நிறுவனமயமான எந்த மதத்தையும் தழுவாத பழங்குடிகள் சட்டம் வலுக்கட்டாயமாகவே இந்து மதத்தில் சேர்த்து விடுகிறது. அஃதாவது முசுலிம், கிறித்தவர், பார்சி, யூதர் அல்லாத அனைவரும் சட்டத்தின் பார்வையில் இந்துக்களே . இந்திய அரசமைப்புச் சட்டத்தின் உறுப்பு 25 இவ்வாறு விளக்கமளிக்கிறது. சீக்கியர்களும் புதுப் பௌத்தர்களும் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும் பயனில்லை .

[இந்து மதத்தை உதறி விட்டு இலட்சக்கணக்கானோருடன் பௌத்தம் தழுவிய அம்பேத்துகர் பௌத்தர்களையும் இந்துக்களே என்று வரை யறை செய்ய எவ்வாறு ஒப்புக் கொண்டார்? என்பது ஆய்வுக்குரியது.]

முதலாவதாக, இந்துக் கூட்டுக் குடும்பம் (HUF) சட்டப்படியே தொழில்வணிகக் குழுமத்தின் நிறுவன அடித்தளமாக்கப்பட்டது. இந்துச் சட்ட நெறி அரசின் சட்டநெறியாக்கபட்டது. இந்துக்கள் தமக்குள் கடைப்பிடிக்க வேண்டிய தனியாள் சட்டம் அரசுச் சட்டமாகவே மாற்றப்பட்டு விட்டது. இரண்டாவதாக, இந்துச் சட்ட நெறி தயாபாகா மற்றும் மிடாட்சரா சொத்துகள் வைத்திருப்பதற்கான அறிந்தேற்பை ஏற்படுத்திக் கொடுத்தது. சொத்து மீதான பரம்பரை உரிமைகளை வரை யறுப்பதில் வழக்காறு சார்ந்த சட்டங்களை நீக்குவதற்கு முன்மொழியப்பட்ட மூல(அசல்) வரைவில் இவ்வாறு சமரசம் செய்யப்பட்டது. இரண்டு இந்துக்களுக்கு இடையிலான திருமணம் மட்டுமே சட்ட வரம்புக்குள் கொண்டுவரப்பட்டது. ஆண் பிள்ளைகளே சொத்தின் இயல்பான வாரிசுகளாகும் உரிமை நிறுவனமயமாயிற்று. திருமணத்திற்கு வெளியே பிறந்த குழந்தைகளுக்குச் சொத்தின் மீதான எவ்வித உரிமையும் இல்லாமற் செய்யப்பட்டது. மூன்றாவதாக, திருமணமான இந்து ஆண் எவரும் ‘கூட்டுக் குடும்பத்திலிருந்து’ விலகி, ஒரு புதிய இந்துக் கூட்டுக் குடும்பத்தைத் தொடங்குவதற்கான சட்ட வெளியை அது உருவாக்கியது. ஒவ்வொரு தனிக் குடும்பமும் ஒரு புதிய இந்துக் கூட்டுக் குடும்பத்தின் தொடக்கத்தைக் குறிக்கும் என்பதால், இந்துக் கூட்டுக் குடும்பம் ஒரு சட்டமுறை நிறுவனமாக நிலைத்திருக்க முடிந்தது. இவ்வாறு, முசுலீம், கிறித்தவர், பார்சி, யூதர் அல்லாத அனைத்துக் குடிமக்களுக்கும், இந்துத் தனியாள் சட்டம் அரசுச் சட்டமாக மாறியது. இந்தியாவில் ஆணாதிக்க அடிப்படை யிலான சொத்துரிமைக் கட்டமைப்பு நிறுவனமயமாயிற்று.

மிடாட்சரா அல்லது தயாபாகா சட்டங்கள் எப்படி வந்தன? என்று பார்க்க வேண்டும். பண்டை க்கால இந்து (பிராமண) மத வேதங்கள் (சுமிருதிகள்) மணமாகாத பெண்களுக்குச் சொத்துரிமை வழங்கவில்லை . பெண்ணுக்கு மணமாகும் போது சீதனம் மட்டுமே தரப்படலாம். இஃது இன்றும் மகற்கொடை யாக நீடிக்கிறது.

சுமிருதிகளில் முதன்மை யானது மனுசுமிருதி. இதுவே ‘இந்து’ச் சட்டங்களுக்கெல்லாம் ஆதிமூலம். அடுத்த இடம் யக்குஞவல்கிய சுமிருதிக்குத் தரப்பட்டது. காலப்போக்கில் சுமிருதிகளுக்கு முனிவர்கள் விளக்கமளித்தனர். 9ஆம், 12ஆம் நூற்றாண்டுகளுக்கிடை யே யக்குஞவல்கிய சுமிருதிக்கு விளக்கமளித்தவர் விஞ்ஞானேசுவர முனிவர். இவரது விளக்கம் (‘பாசுயம்’) மிடாட்சரா மரபு என்று பெயர் பெற்றது. சிமூத்தவாகன முனிவர் தந்த விளக்கம் தயாபாகா மரபு என்று பெயர் பெற்றது. இந்தியாவின் வடக்கிலும் மேற்கிலும் தெற்கிலும் மிடாட்சரா மரபு கடைப்பிடிக்கப்பட, வங்காள வட்டாரத்தில் தயாபாகா மரபு செயலாயிற்று. இரண்டுக்குமான

வேறுபாடுகள் ஒருபுறமிருக்க இரண்டுமே இந்துக் கூட்டுக் குடும்பச் சொத்துடை மை ,

பரம்பரைச் சொத்துரிமை , பெண்களுக்குச் சொத்துரிமை மறுப்பு ஆகியவற்றில் ஒத்திருந்தன. கணவர் சொத்தில் கைம்பெண்ணுக்கும், தந்தை யின் சொத்தில் மணமாகாத மகளுக்கும் ஓரளவு சொத்துரிமை உண்டு என்பது தயாபாகா தந்த மாறுபட்ட விளக்கமாம்!

மிடாட்சரா, தயாபாகா சொத்துரிமை , பிறப்புவழி வாரிசுரிமை முறை களை பிரித்தானிய ஆட்சியர்கள் ஏற்றுத் தமது சட்டக் கட்டமை ப்பில் சேர்த்துக் கொண்டது எப்படி? பிரித்தானியர் இந்தியாவைத் தங்கள் வன்குடியே ற்ற நாடாக்கிக் கொள்ளத் தொடங்கிய போது சொத்துரிமை , வாரிசுரிமை தொடர்பான தனியாள் சட்டங்களை இந்துக்களே தீர்மானித்துக் கொள்ளட்டும் என்று விட்டு விட்டனர். அஃதாவது பிரித்தானியருக்கு மொழி பெ யர்ப்பாளர்களாகவும் அறிவுரை யாளர்களாகவும், பூசல் தீர்ப்போராகவும் வளர்ந்து வந்த பார்ப்பனர்கள் சொன்னதுதான் சட்டம் என்றாயிற்று. இப்படித்தான் பிராமண மதச் சட்டங்கள் இந்துச் சட்டங்களாக ஆட்சியேறின. குடியேற்றமும்(காலனியமும பார்ப்பனியமும் கை கோத்துக் கொண்டன.

முகலாயர் கால இந்தியாவில் முஸ்லிம் பெண்கள் வாரிசுரிமை யாகவோ, மெகர் அல்லது கொடைக்கு மாற்றாகவோ சொத்துரிமை அனுபவித்தார்கள். மெகர் என்பது மனம் போன போக்கிலான மண முறிவுக்கு எதிராகப் பெண்ணுக்கு வழங்கப்படும் காப்பு ஆகும், மத்திய கால இந்தியாவில் சீதனம் மெல்ல மெல்ல மறைந்து வரதட்சணை தலை தூக்கிய போது இசுலாத்திலும் அந்த கொடும்பழக்கம் தொற்றிக் கொண்டது.

இந்துச் சட்டத்தின் கீழ்ப் பெண்மக்களுக்கு அனைத்துச் சொத்துகளிலும் சம பங்கு மறுக்கப்பட்டது. 2005ஆம் ஆண்டு சட்டத்திருத்தம் பெண்மக்களுக்கு இணை மரபுரிமைகள் பெற்றுத் தந்த போதும் மணமான பெண்களுக்கும், கைம்பெண்களுக்கும், மணமுறிவு பெற்றவர்களுக்கும் இந்த உரிமைகள் பொருந்த மாட்டா. நிலம் துண்டாடப்படுவதைத் தவிர்ப்பதற்காக என்று கூறிப் பெண்களுக்கு நிலத்தில் எந்தவிதச் சொத்துரிமையும் மறுக்கப்பட்டது. வரம்புக்குட்பட்ட அளவில் பெண்களுக்கான சொத்துரிமை ஏட்டளவில் ஏற்றுக் கொள்ளப்பட்ட இடங்களிலும் நடை முறையில் ஒரு விழுக்காட்டுக்கு மேல் மெய்ப்படவில்லை .

ஆக, இந்து மதம், இந்துக் கூட்டுக் குடும்பம் என்ற வரையறைகளின் அடிப்படை யில் மதமும் சாதியும் ஆணாதிக்கமும் சொத்துரிமைகளைத் தீர்மானிக்கும் நிறுவனஅடிப்படையாக நிறுவப்பட்டன.

இந்துக் கூட்டுக் குடும்பத்தைச் சட்டப்படியான அமைப்பாக்குவதன் மூலம் இந்து ஆண்களுக்குச் சாதகமாகச் சொத்துரிமையை அரசமைப்பால் உறுதி செய்யப்பட்ட சட்ட உரிமையாக மாற்றியமைத்தனர். இஃது இந்திய விடுமைக்குப் பிறகான முதல் பத்தாண்டுகளில் செய்யப்பட்ட மிக முக்கியத் தலை யீடாகும் என்கிறார் தாசுகுபுதா. .

இந்துக் கூட்டுக் குடும்பம் நடை முறைக்கு வந்த விதத்திலிருந்தும், இந்தியாவின் வருமான வரிச் சட்டங்களிலும் சொத்து வரிச் சட்டங்களிலும் இந்துக் கூட்டுக் குடும்பம் தனித்த அளவீடாக இடம்பெ றுவதிலிருந்தும் இந்தியாவின் குடியியல் சட்டங்களில் இந்து சமயநெ றிகளுக்குள்ள முதன்மையை அறிந்து கொள்ளலாம்.

சட்டத்தில் (அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்ட இந்துச் சட்டநெறிமுறையின் அடிப்படை யில்), இந்துக் கூட்டுக் குடும்பம் (என்பது) பொதுவான மூதாதையரிடமிருந்து வந்த அனைத்து ஆட்களையும், அவர்தம் மனைவிமார்கள், திருமணமாகாத பெண்மக்களையும் உள்ளடக்கியதாகும். இது பிறப்பின் அடிப்படையில் சொத்துரிமை பெறுவதற்கான ஏற்பாடாகும்.

இந்துக் கூட்டுக் குடும்பம் என்பது சட்டப்படியான வரிசெலுத்தும் நிறுவனமாகவும், தனியாட்களிடமிருந்தும், பெருங்குழுமங்களிடமிருந்தும் வேறுபட்டுத் தனித் தன்மை கொண்டதாகவும் அறிந்தேற்கப்பட்டது.

பெருங்குழுமங்களுக்கும் தனியாட்களுக்குமான வருமான வரிச் சட்டங்களால் அறிந்தேற்கப்பட்ட அனைத்து நிறுவன அமைப்புகளும் குழுமச் சட்டத்தின் அடிப்படை யில் வரை யறுக்கப்பட்டுள்ள அதே போது, இந்துக் கூட்டுக் குடும்பம் மட்டும் சட்டபடியான நிறுவனமாக இந்துத் தனியாள் சட்டத்தின் அடிப்படை யிலேயே வரை யறுக்கப்படுகிறது. உலகியம் [அல்லது சமயச் சார்பின்மை (SECULARISM)] என்பது அரசியலில் மட்டுமல்ல, பொருளியலிலும் சமயங்கலவாமையை கடைப் பிடிக்க வேண்டும். இந்து சமயக் குடும்ப ஏற்பாடு ஒன்று அரசின் தகாப் பொருளியல் சலுகைக்கு வழி செய்யும் போது சமயச் சார்பின்மை என்பதே கேள்விக்குரியதாகிறது.

இந்துக் கூட்டுக் குடும்பத்தை (HUF) 1955-56ஆம் ஆண்டில் தனியாள் சட்ட நெறிகளினால் வரை யறுத்த பின்னர், 1957 சொத்து வரிச் சட்டம், 1961 வருவாய் வரிச் சட்டத்தின் பிரிவு 2 ஆகியவற்றின் மூலம் இந்த இந்துக் கூட்டுக் குடும்ப அமைப்பை நிலைத்திருக்க செய்ய அரசு அடுத்த கட்ட நடவடிக்கை எடுத்தது. இதன் மூலம் குடும்ப வருமானம் மீதான வரியை ஏய்ப்பதற்கான வசதிகள் செய்து தரப்பட்டன. கூடுதலான வரிவிலக்குகளும் குறைந்த வரி விகிதங்களுமான பல சலுகைகள் வழங்கப்பெற்றன.

இந்தியாவில் குடும்பம் சார்ந்த 150 தொழில்வணிகக் குழுக்கள் பற்றிக் கணக்கெடுத்த போது, இந்து மரபில் வந்தவற்றில் இரண்டே இரண்டு தவிர, அனைத்து வணிகக் குழுக்களும் இந்துக் கூட்டுக் குடும்பத்தை (HUF ) சேர்ந்தவை என்று தெரிய வந்தது.

சராசரியாக, ஒவ்வொரு குழுவும் 47 நிறுவனங்களை நேரடியாகவும் மறைமுகமாகவும் கட்டுப்படுத்தின. ஒவ்வொரு வணிகக் குழுவும் சராசரியாக மூன்று முதல் நான்கு சார்புக் குழுமங்களையும் ஒன்று முதல் மூன்று முதன்மைக் குழுமங்களையும் கொண்டிருந்தன.

இந்தக் குழுமங்களில் குடும்பத்தின் தலைவரும், மற்ற உறுப்பினர்களும் தனியாட்களாகப் பங்குகள் வைத்திருந்தனர். இந்துக் கூட்டுக் குடும்ப அமைப்புகள் இந்தக் குழுமங்களில் அடுத்த மிகப் பெரிய ஒற்றைப் பங்குதாரராக இருந்தன. குறைந்தது இரண்டு குடும்ப உறுப்பினர்கள் இந்தக் குழுமங்களின் இயக்குநர்களாக இருந்தனர். இந்தக் குழுமங்கள் பிற வரையறுக்கப்பட்ட பொது, தனியார் மற்றும் கூட்டுக் குழுமங்களின் பங்குகளைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தன.

அத்தகைய குழுமங்களில், குடும்ப உறுப்பினர்களும், பிற வணிகக் குடும்பங்களின் நெருங்கிய கூட்டாளிகளும் இயக்குநர்களாகச் செயல்பட்டனர். இவ்வாறு தொழில்வணிகக் குடும்பங்கள் மூலமுதல் திரட்டல் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளையும் கட்டுப்படுத்துவதற்கான உடைமை யுரிமை க்கும் ஆளுகைக்கும் முறையான கட்டமைப்பு உருவாக்கப்படுகிறது.

இந்துக் கூட்டுக் குடும்பம் என்ற இந்துச் சட்ட ஏற்பாடு இந்தியப் பெருங்குழுமங்களின் கட்டமைப்பிலும் வளர்ச்சியிலும் இன்றளவும் வகித்து வரும் பங்கு குறித்து இன்னும் நிறைய எழுதலாம். இப்போது நம் கேள்வி இதுதான்: இந்துக் கூட்டுக் குடும்பம் துய்த்து

வரும் தனிச் சலுகைகள் ஆர்எசுஎசு-பாசக முன்மொழியும் “பொதுக் குடியியல் சட்டத்துக்கு” ஏற்புடை யவையா? நீங்கள் உண்மையான பொதுக் குடியியல் சட்டத்துக்கு மாறும் போது இந்தத் தனிச் சலுகைகள் கை விடப்படுமா?

தொடரும்)
தோழர் தியாகு
தாழி மடல் 286