நகைச்சுவையில் மகிழ்வதற்காக நடிகர் விவேக்கை எமனுலகு அழைத்துக் கொண்டதோ? -இலக்குவனார் திருவள்ளுவன்
நகைச்சுவையில் மகிழ்வதற்காக நடிகர் விவேக்கை எமனுலகு அழைத்துக் கொண்டதோ?
விவேகானந்தன் தூத்துக்குடி மாவட்டம் கோவில் பட்டியில் கார்த்திகை 04, 1992 / 19.11.1961 19 அன்று பிறந்தார். அவருக்கு அருள்செல்வி என்ற மனைவியும், 3 குழந்தைகளும் உள்ளனர். 2009ஆம் ஆண்டு மத்திய அரசின் தாமரைத்திரு(பத்ம சிரீ) விருது அவருக்கு வழங்கப்பட்டது. நாட்டிற்கு நல்ல கருத்துக்கள் வழங்கியதைப் பாராட்டி 2015ஆம் ஆண்டு மதிப்புநிலை முனைவர் பட்டமும் அவருக்கு வழங்கப்பட்டது
இயக்குநர் கே.பாலசந்தரால் 1987ஆம் ஆண்டு ‘மனதில் உறுதி வேண்டும்’ என்ற திரைப்படத்தில் ‘விவேக்’(கு) என்னும் சுருக்கப் பெயரில் அறிமுகம் செய்யப்பட்டார். அதன் பின்னர் தன் நடிப்புத் திறமையால் புதுப்புது அருத்தங்கள், உழைப்பாளி, நான் பேச நினைப்பதெல்லாம், கண்ணெதிரே தோன்றினாள், சாமி, வீரா, காதல் மன்னன், மின்னலே, பாளையத்து அம்மன், தூள், செல்லமே, பேரழகன், எம். குமரன் சன்ஆப் மகாலட்சுமி, அந்நியன் போன்ற எண்ணற்ற தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார்.
தன் நகைச்சுவை நடிப்பாலும், நகைச்சுவைக் கருத்துகள் மூலம் மக்களுக்கு நல்ல கருத்துகளைத் தெரிவித்து வந்ததாலும் ‘சின்ன கலைவாணர்’ என்று மக்களால் அழைக்கப்பட்டு வந்தார். முன்னணி நடிகர்கள் பலருடனும் நடித்து அனைவரின் அன்பையும் பெற்று வளர்ந்தார்.
அபுதுல் கலாம் தூதராக மரக்கன்றுகளை நடுதல் போன்ற பல நற்செயல்கள் மூலம் மக்களின் உள்ளங்களில் இடம் பெற்றுள்ளார். இப்பொழுது மகுடைத் தொற்று(கொரானா நோய்)த் தடுப்பு குறித்தும் விழிப்புணர்வு பரப்புரை மேற்கொண்டு வந்தார். தான் முன் எடுத்துக் காட்டாக இருக்க விரும்பித் தன் குழுவினருடன் நேற்று முதல் நாள் மகுடைத்தொற்று (‘கோவேக்சின்’) தடுப்பூசி செலுத்திக் கொண்டார்.
மறுநாள் நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இன்று(17.04.21) வைகறை ஐந்து மணிக்குக் காலமானார்.
இவர் தடுப்பூசி போட்டுக்கொண்ட அன்று மருத்துவமனையில் 800 பேருக்குத் தடுப்பூசி செலுத்தியும் வேறு யாருக்கும் எந்தச் சிக்கலும் இல்லை என அரசு அறிவித்துள்ளது. மருத்துவமனையிலும் இவரின் நலக்குறைவிற்கும் தடுப்பூசிக்கும் தொடர்பில்லை எனக் கூறியுள்ளனர். எனவே, மக்கள் நலன் கருதி இவர் மரணத்திற்கும் தடுப்பூசிக்கும் தொடர்பு படுத்தி யாரும் புரளியைக் கிளப்ப வேண்டா. ஒரு வேளை இவருடைய உடலில் ஏதும் நலக்கேடு இருந்து அதனால் பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் எனச் சிலர் கருதலாம். எவ்வாறிருப்பினும் மருத்துவர்கள் தெரிவிக்காத எதையும் யாரும் பரப்ப வேண்டா.
அவரைப்பற்றிய சில நினைவுகள்: நடிகர் விவேக்கு தன் பள்ளிப் பருவத்தில் மதுரையில் திருநகரில் நாங்கள் குடியிருந்த தெருவில்தான் குடியிருந்தார். கணக்குப் பாடங்களுக்காகவும் பொது அறிவுச் செய்திகளை அறியவும் நாள்தோறும் எங்கள் வீட்டிற்கு வந்து விடுவார். நான் வேடிக்கைக் கணக்குகளும் போடுவேன். அவற்றிலும பெரிதும் ஆர்வம் காட்டுவார். பல் குரலிலும் பேசிக் காட்டுவார். “விளையும் பயிர் முளையிலே தெரியும்” ஆதலின் நல்ல எதிர்காலம் அவருக்கு உள்ளது எனக் கூறும் பொழுது அவர் அன்னைக்குப் பெரிதும் மகிழ்ச்சி ஏற்படும். பள்ளி முடிந்த பின்னரும் விடுமுறை நாள்களிலும் ஊர் சுற்றாமல் படிப்பு தொடர்பாக எங்கள் வீட்டிற்கு வருவதால் அவர் எதிர்காலம் குறித்துக் கவலை இல்லை என்பார் அவர் அன்னை.
நான் மதுரையில் மாவட்டக் கலைமன்றத்தின் உறுப்புச் செயலராக இருந்த பொழுது, கலைஇளமணி, கலை வளர்மணி, கலை நன்மணி, கலை உயர்மணி, கலைச்செம்மணி, கலை முதுமணி முதலான விருதுகளைக் கலைஞர்களுக்கு வழங்கினோம். மதுரை மாவட்டக் கலைஞர் என்ற முறையில் இவருக்கும் உயரிய விருது அளிக்க எண்ணினோம். ஆனால், அப்போது தொடர்பு கொள்ள இயலவில்லை. அவர் தலைமைச் செயலகத்தில் பணியாற்றிய பொழுது ஒரு நாள் அவரை எதிர்பாராத வகையாகச் சந்தித்து அளவளாவினேன்.
‘நான்தான் பாலா’ என்னும் அருமையான படத்தில் பிராமணப்பாத்திரத்தில் கதைநாயகனாக நடித்திருந்தார். நல்ல படம்தான். எனினும் அவ்வகுப்பாரின் ஆதரவு வேண்டும் எனக் கருதிச் சமசுகிருதத்திலிருந்து தமிழ் வந்தது என மொழியியல் அறிவு இன்றிக் கருத்து தெரிவித்திருந்தார். இதற்கான கண்டனத்தை விளக்கத்துடன் அளித்தேன்.
அப்படத்தில்
“அம்மா ரொம்ப ரொம்ப நகை நான் கேட்கவில்லை
அப்பா மனசுக்குள் வருத்தம் வைக்க வேண்டாம்”
என்ற பாடல் இடம் பெற்றது. அவர் படித்த திருநகர் சோசப்பு பள்ளியில் (இப்பொழுது சவிதா பள்ளியாக உள்ளது) ஆண்டுவிழா ஒன்றில் இப்பொழுது மருத்துவராக இருக்கும் எங்கள் தங்கை செல்வமணி பாடி ஆடிய பாடல். தான் படித்த பள்ளிக்கூடத்தை நினைவுகூரும் வகையில் அப்பாடலைச் சேர்த்தது குறித்து மகிழ்ந்தும் பதிவிட்டுள்ளேன்.
அவர் செயலகப் பணியிலிருந்து விலகி முழு நேர நடிகராக மாறிய பின்னர் அவருடன் எத் தொடர்பும் இல்லாவிட்டாலும் அவரது நகைச்சுவைக்காட்சிகளைப் பார்க்கத் தவறுவதில்லை. சிரிப்பின் மூலமாக மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய முன்னோர் வழியில் இவர் உணர்த்திய குமுகாயக் கருத்துகள் பல. மக்களுக்குத் தொண்டாற்றுவதில் முன்னணியா இருந்த அவர் மறைவு அனைவருக்குமே வருத்தத்தை அளிக்கிறது.
பூமியில் பலப்பகுதிகள் அவரது மரக்கன்றுகளுக்காக ஏங்கிக் கொண்டிருக்கும். ஆழ்ந்த இரங்கல். துயரத்துடன் இலக்குவனார் திருவள்ளுவன்
நடிகர் விவேக்கு புகழ் ஓங்குக!
துயரத்துடன் இலக்குவனார் திருவள்ளுவன்
இதழுரை – அகரமுதல
நல்ல அஞ்சலி ஐயா! நடிகர் விவேக் அவர்களுக்கும் இவ்வளவு நெருங்கிய தொடர்பா! ஆக, நீங்கள் பார்த்து வளர்ந்த மனிதர். வெறுமே அவருடைய விசிறிகளான எங்களுக்கே இவ்வளவு துயராக இருக்கிறதே! உங்களுக்கு எப்படி இருக்கும்! மிகுந்த வேதனை ஐயா!