நக்கீரன் இதழினர் மீதான வழக்கு,

ஊடகத்தை அடக்கும் உச்சக்கட்டம்

  ஆளுநர் மாளிகை தேன்கூட்டில் மீது கை வைத்தபின்பும் தன்னை மாற்றிக் கொள்ள வில்லை.

  ஊடகத்தில் நடவடிக்கை எடுப்பதற்குரிய செய்தி வந்தது எனில் எழுதிய செய்தியாளர், செய்தி ஆசிரியர், வெளியீட்டாளர், செய்தி வெளியீட்டில் தொடர்புடைய பிறர் ஆகியோர் மீது வழக்கு தொடுப்பது வழக்கம்.  ஆனால், அடிநிலை ஊழியர்கள் வரை வழக்கு தொடுப்பது முதன்முறைக் கொடுஞ்செயலாகும்.

  இதழ்களில் பல் வேறு பிரிவுகள் இருப்பதை அறிவோம். அந்தந்தப் பிரிவினருக்கு அந்தந்தப்பிரிவில் உள்ள வேலைகளை உரிய நேரத்தில் முடிப்பதற்கே  நேரம் சரியாக இருக்கும். எனவே, ஒரு பிரிவில் வெளிவரும் செய்தி தொடர்பில்லா மறு பிரிவினருக்கு இதழ் வெளிவந்தாலன்றித் தெரியாது. அவ்வாறிருக்க தாம் விரும்பாச் செய்தி வந்தது என்பதற்காக ஒட்டுமொத்தமாக இதழில் பணியாற்றும் அனைவர் மீதும் வழக்கு தொடுப்பது  அறிவுடைமையும் அல்ல, அறமுறையும் அல்ல.

  நக்கீரன் கோபாலைக் கைது செய்த பொழுது இன்று நீ, நாளை நான் என்பதை உணர்ந்த ஊடகத்தினர் அனைவரும் கிளர்ந்து எழுந்துள்ளனர். ஊடகத்தினர் அனைவருக்கும் நம் வாழ்த்துகளைத் தெரிவிக்கிறோம். இருப்பினும் அகங்காரம் கண்ணை மறைப்பதால், நக்கீரன் கோபால் மீதான வழக்கைக் கைவிட வேண்டியவர்கள், நக்கீரன் இதழ்ப்பணியாளர்கள்  அனைவர் மீதும் வழக்கு தொடுத்துள்ளனர். நக்கீரன்   கோபால் மீதான குற்றப்பிரிவே தவறு என நீதிபதி கோபிநாத்து தெரிவித்து அவரை அக் குற்றச்சாட்டிலிருந்து விடுவித்த பின்பும் அவ்விதழில் பணியாளர்கள் முப்பத்தைவர்(1+34) மீதும் வழக்கு தொடுக்கும் கொடுமையை அரங்கேற்றியுள்ளனர். பணியாளர்களின் முன்பிணை வழக்கை உசாவிய உயர்மன்றநீதிபதி தண்டபாணியும் பொருந்தாக் குற்றச்சாட்டை ச் சட்டப்பிரிவு குறித்து வினவியுள்ளார்.

  ஊடகத்தினர் தங்களுக்குக் கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் செய்திகளை வெளியிடுகின்றனர். ஊடகங்களில் வரும் எல்லாச் செய்திகளும் உண்மையாக இருக்கும் என எதிர்பார்க்க முடியாதுதான்.  தவறான செய்திகளும் வரலாம். வெளியிட்ட செய்தி தவறென தெரிவிக்கப்படும் பொழுது உண்மையை உணர்ந்து வருத்தம் தெரிவிக்கவும் தயங்குவதில்லை.

  நிருமலாதேவி தொடர்பான மேல்நிலையுடன் தொடர்புடைய செய்தி தவறெனில் அதை விளக்கியிருக்கலாம். காலங்கடந்து தன்னிலை விளக்கம் அளிப்பவர்கள் அப்பொழுதே விளக்கம் அளித்திருக்கலாம். அதனை நக்கீரனும் வெளியிட்டிருக்கும்.

  அலுவல் சார்ந்த குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டால், அலுவலகத்தினர் விளக்கம் அளிக்கலாம். ஆனால், தனிப்பட்ட ஒழுக்கம் சார்ந்தது எனில் தொடர்புடையவர்தானே விளக்கம் தர இயலும். அவ்வாறிருக்க சார்நிலை அதிகாரி காவல் துறையில் முறைப்பாடு  தெரிவிப்பது சரியாகுமா? நக்கீரன் கோபால் கைதின் பொழுதே குற்றச்சாட்டு முறையானதாக இல்லை எனத் தெரிவித்திருந்தோம். அதனையேதான் நடுவர் மன்றமும் தெரிவித்துள்ளது. பொதுவான முறைப்பாடாக இல்லாமல் குற்றப்பிரிவினரைக் குறிப்பிட்டு வழக்கு தொடுக்கத் தெரிவிப்பது தானே எல்லாம் என்னும் தற்செருக்கு மனப்பான்மையின் அடையாளமாக இராதா?  திருடன் வந்து 6 மாதம் கழித்து நாய் குலைத்ததாம் என்பார்கள். இப்பழமொழி  போல் தவறான செய்தி எனில் உடனே ஏன் மறுப்பு தெரிவிக்கவில்லை என மக்கள் எண்ணுகின்றனர்.

  செய்தி தவறெனில் அவ்வாறு சொன்ன நிருமலாதேவி மீதல்லவா நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். அவரது பேச்சு எல்லா ஊடகங்களிலும் இடம் பெற்றுள்ளனவே. அதன் பின்னணிப் புலனாய்வுச் செய்திதான் நக்கீரனில் வெளிவந்தது.

  செய்திக் கட்டுரைகள் வந்தமைக்கும்  கணக்குப்பிரிவு, அலுவலகப்பிரிவு முதலானவற்றிற்கும் என்ன தொடர்பு? இதழ்களைக் கட்டிட்டு அனுப்புவதற்கும் செய்திக்கட்டுரைக்கும் என்ன தொடர்பு?  அவர்கள்மீது எல்லாம் ஏன் வழக்கு? குற்றப்பிரிவைத்தான் சரியாகச் சொல்லத் தெரியவில்லை. யார் மீது வழக்கு தொடுக்கலாம் என்னும் பகுத்தறிவுகூட இல்லை என்பதுதான் வேதனையாகத்தான் உள்ளது.

  இப்படி ஒரு வன்மம் உயர்நிலையில் இருப்பவர்களிடம் இருக்கலாமா? உயர்நிலை என்பது பதவியாலோ, பணத்தாலோ, செல்வாக்காலோ அளவிடக் கூடாது. பண்பினால் உயர்ந்து இருத்தலே உயர்நிலை. குற்றவாளியிடம் அவன் செய்த குற்றத்தைச் சொன்னால் பழிவாங்கும் எண்ணம்தான் வரும். பண்பாளரிடம் செய்யாக் குற்றப்பழியைச் சுமத்தினாலும் பழிவாங்கும் எண்ணம் தோன்றாது.

 ஆனால், தனி மனிதனின் செயல்பாட்டைக் கூறினால், தேசியப்பாதுகாப்பிற்குக் குந்தகம் விளைந்ததுபோல் அடிநிலை வரை பொருந்தாக் குற்றத்தில் குற்றம் சுமத்திச் சிறையில் தள்ளுவதற்கு முயல்வது சரிதானா?  ‘பெரிய மனிதனின் சின்ன புத்தி’ என்பது குறித்துப் பலரும் வெவ்வேறு காலக்கட்டங்களில் எழுதி உள்ளனர். ஆனால் அதற்கு இன்றைக்கு இலக்கணமாக வாழச் சிலர் எண்ணுகின்றனர் போலும்.

சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடும் துன்பஞ்

சுடச்சுட நோற்கிற் பவர்க்கு.(திருவள்ளுவர், திருக்குறள் 267)

என நக்கீரன் குழுவினர் வரும் சோதனைகளைச் சாதனைகளாக்கிப் பணியாற்றுகின்றனர். அவர்கள் மீது வழக்கு தொடுப்பது அவர்களை வீழ்த்தாமல் உயர்த்தத்தான் உதவும். இருப்பினும் ஒட்டுமொத்தமாக அனைவரையும் பொருந்தாச் சட்டத்தின்கீழ்ச் சிறையில் தள்ள எண்ணுவது நடப்பது மக்களாட்சி அல்ல என்பதை அல்லவா உணர்த்துகிறது.

 உயர்நிலையாளர்கள் தங்கள் மீதுள்ள களங்கத்தைத் துடைப்பதாக எண்ணி மேலும களங்கத்தில் மூழ்குகின்றனர். இது தேவைதானா?

 உயர்நிலையர் தங்கள் மீது பொய்யாகக் குற்றம் சுமத்தப்படுவதாகக் கருதினால், அவதூறு வழக்கு போன்ற பிறவற்றின் மூலம் பரிகாரம் காணலாம். மாறாகத் தாம்தான் நாடு, தமக்கு எதிரானது நாட்டிற்கு எதிரானது என்பதுபோல் தேசப்பாதுகாப்பிற்குக் குந்தகம் வந்ததுபோல் நடவடிக்கை எடுப்பது சரியல்ல.

  எனவே, போலி மதிப்பு கொள்ளாமல், நக்கீரன் இதழினர் அனைவர்  மீதான வழக்குகளையும் உடனே திரும்பப் பெற வேண்டும். மத்திய பாசக ஆட்சி தன்மதிப்பைக் காப்பாற்றிக் கொள்ள, மக்களாட்சி வழியில் திரும்ப, ஆளுநரைக் கைப்பாவையாகக் கொண்டு நடவடிக்கைகள் எடுப்பதை நிறுத்த  வேண்டும். நாடெங்கும் ஊடகத்தினரும் மனிதநேய ஆர்வலர்களும் சிறை செய்யப்படும் போக்கு தமிழ்நாட்டிலும் வேரூன்ற விடாமல் தமிழகக் கட்சிகள் தடுக்க வேண்டும். தொடக்கத்தில் நக்கீரன் முதலானவரைக் கைது செய்ய மறுத்த மனச்சான்றுள்ள முதல்வருக்குப் பாராட்டுகள். ஆட்சியை ஆட்டி வைப்போரின் மக்களாட்சிப் படுகொலைச் செயல்களை எதிர்த்து நின்றால் மக்களும் அவர் பக்கம் இருப்பர்.

 ஆசிரியர் முதலான நக்கீரன் இதழினர்  மீதான பொய் வழக்குகளை உடனே திரும்பப் பெற்று ஊடக நலத்தைக் காத்திடவும் மக்களாட்சி மாண்பினைப் பேணிடவும் மீண்டும் வேண்டுகிறோம்.

கொலைமேற்கொண் டாரிற் கொடிதே அலைமேற்கொண்டு

அல்லவை செய்தொழுகும் வேந்து. (திருவள்ளுவர், திருக்குறள் 551)

அன்புள்ள இலக்குவனார் திருவள்ளுவன்

அகரமுதலஇதழுரை