நடைமுறைப் புத்தாண்டு வாழ்த்து! – இலக்குவனார் திருவள்ளுவன்
நடைமுறைப் புத்தாண்டு வாழ்த்து!
2020 ஆம் ஆண்டு பிறந்து விட்டது. தமிழ்ப்புத்தாண்டிற்கு வாழ்த்து தெரிவிப்பவர்களை விட ஆங்கிலப் புத்தாண்டிற்கு வாழ்த்து தெரிவிப்பவர்களே பெரும்பான்மையர். ஆனால், உண்மையில் இந்த ஆண்டு முறை ஆங்கிலப் புத்தாண்டு அல்ல. அப்படியானால் இந்த ஆண்டு கிறித்துவ ஆண்டு முறை என்கிறார்களே அது சரிதானா என்றால் அதுவும் தவறு. நடை முறைப் பயன்பாட்டில் உள்ள இந்த ஆண்டினை நாம் நடைமுறைப் புத்தாண்டு என்று சொல்வோம்.
கிறித்துப் பிறப்பின் பொழுதே நடைமுறையில் இருந்த ஆண்டைக் கிறித்துவ ஆண்டு என்று சொல்வது தவறாகும். எனினும் வரலாறு அறிந்தவர்களும் அவ்வாறுதான் கூறுகின்றனர். கிறித்து பிறந்த பொழுது ஐரோப்பிய நாடுகளில் ஆண்டிற்குப் பத்து மாதங்கள்தாம் இருந்தன. அப்பொழுது சூலையும் ஆகத்தும் கிடையாது.
கி.மு.45இல் உரோமானியப் பேரரசர் சூலியசு சீசரால் உருவாக்கப்பட்டு அவர் பெயரால் சூலியன் நாட்காட்டி (Julian calendar) என்று அழைக்கப் பெற்றதே முன்பு பயன்பாட்டில் இருந்தது.
அலோசியசு இலிலியசு [Aloysius Lilius (1510 – 1576)] என்னும் இத்தாலிய வானியல் அறிஞர், மெய்யியலாளர், காலக்கணிப்பர், மருத்துவர் எனப் பல்துறை வித்தகராய் விளங்கினார். இவர் உலுயிகி இலிலியோ(Luigi Lilio) என்றும் உலுயிகி கிகிலியோ(Luigi Giglio) என்றும் அழைக்கப்படுவார். இவரால் மாற்றி யமைக்கப்பட்ட வடிவமே சில திருத்தங்களுடன் இப்பொழுது வழக்கில் உள்ளது.
தாம் வடிவமைத்த ஆண்டுமுறையை உலகம் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று அலோசியசு கனவு கண்டார். எனினும் அவர் வாழ்நாளில் இக்கனவு நனவாகவில்லை. அலோசியசு மறைந்து 6 ஆண்டுகளுக்குப் பின்னர் அவர் கனவு நனவாகியது. தொடக்கத்தில் ஆண்டுமுறை மாற்றத்திற்கான கருத்துருவை அவர்தான் அளித்திருந்தார். எனினும் 1575 இல் அவரது தம்பி அந்தோனியோ இலிலியோ (Antonio Lilio) நாட்காட்டிச் சீர்திருத்த ஆணையத்திடம் அதனை அளித்தார். இந்த ஆணையம் நாட்காட்டி மீட்புப் புதுச் செறிவுத் திட்டம்(Compendium novae rationis restituendi kalendarium) என்ற பெயரில் 1577 இல் அச்சிட்டு 1578இல் உலகிலுள்ள உரோமன் கத்தோலிக்கு அமைப்புகளுக்குஅனுப்பியது.
அவற்றின் ஒப்புதலையும் சில திருத்தஙு்களையும் ஏற்று, இவ்வாண்டு முறையைத் திருத்தந்தை பதின்மூன்றாம்கிரகோரி [Pope Gregory XIII, 07.01.1502 – 10.04.1585] 24.02.1582 இல் நடைமுறைப் படுத்தினார். எனவே, இதனைக் கிரகோரியன் ஆண்டு அல்லது கிரிகோரியன் நாட்காட்டி என அவர் பெயரால் அழைக்கின்றனர்.
தொடக்கத்தில் 8 நாடுகள் மட்டுமே இந்த ஆண்டுமுறையைப் பின்பற்றின. இப்பொழுது பெரும்பாலான உலக நாடுகள் இம்முறையையே பயன்படுத்துகின்றன.
இயேசுநாதர் பிறந்ததாகக் கணிக்கப்பட்ட ஆண்டிலிருந்து ஆண்டுகள் குறிக்கப் பெற்றமையால் கிறித்துவ ஆண்டு அல்லது ஆண்டவரின் ஆண்டு அல்லது பொதுமுறை ஆண்டு என்றும் இதனை அழைக்கின்றனர்.
பூமி சூரியனைச் சுற்றுவதற்காகும் காலம் என்பது 365 நாள் 5 மணி நேரம் 49 நிமையம் 12நொடி ஆகும். கணக்கிடுவதற்கு எளிமையாக இருக்கும் பொருட்டு 365 நாள் என்பதையே ஆண்டுக் காலமாகக் கொள்கிறோம். ஏறத்தாழக் கால் நாள் குறைவதால் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை 366 நாள் எனக் கணக்கிடுகிறோம். இதுதான் மிகைநாள் ஆண்டு(leapyear). எனினும் 400 ஆல் வகுபடாத நூற்றாண்டுகளில் மிகை நாள் இருக்காது. அஃதாவது 1900, 2100, 2200, 2300 ஆகியன மிகைநாள் ஆண்டுகளன்று. ஆனால் 2000, 2400, 2800 முதலான ஆண்டுகள் மிகைநாள்ஆண்டுகள்.
இந்த ஆண்டுப் பகுப்பு அறிமுகமாகிய காலக்கட்டத்திலும் அதற்கு பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பும் நாள், வாரம், மாதம், ஆண்டு என்ற காலப்பகுப்பும், கோள்களுக்கான அறிவியல் அடிப்படையிலான பெயர்களும் தமிழர்களால் பயன்படுத்தப்பட்டு வந்து இன்றளவில் தொடர்கின்றன. பொதுமுறை ஆண்டு அல்லது நடைமுறை ஆண்டு அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்பே இருந்த தமிழ் ஆண்டுப் பகுப்புச் சிறப்பை நாம் மறந்துவிட்டோம். கோயில்களில் வழிபாடு, ஒருவரை ஒருவர் சந்தித்து வாழ்த்து தெரிவித்தல், கணக்கு தொடக்கம், முதலான பலவற்றையும் ஆங்கில ஆண்டு எனச் சொல்லப்பட்டு வரும் நடைமுறை ஆண்டுத் தொடக்கத்தை அடிப்படையாகக் கொண்டுதான் செயல்படுத்துகிறோம்.
பழஞ்சிறப்பு வாய்ந்த .தமிழ் ஆண்டு முறையைத்தா்ன புறக்கணிக்கிறோமே! வாழ்த்துகளையாவது தமிழில் தெரிவிக்கின்றோமா என்றால் அதுவும் இல்லை. இனிமேலாவது, நாம் ஒருவரை ஒருவர் சந்திக்கும் பொழுதும் புத்தாண்டு முதலான சிறப்பு நாள்களின் பொழுதும் ஆங்கிலத்தில் வாழ்த்துவதைக் கைவிடுவோம். உதடுகள் உதிர்க்கும் அவற்றை விட உள்ளத்தில் இருந்து தமிழில் வாழ்த்தினால் எண்ணங்கள் கைகூடி மகிழலாம். நம் சங்கப்புலவர்கள் வாழத்திய வாழ்த்து வரிகளை நாம் புத்தாண்டுகளில் தெரிவிக்கலாம். அவை இவைதாம்.
1.) நெல்பல பொலிக!
பொன்பெரிது சிறக்க!
2.) பால் பல ஊறுக! பகடு பல சிறக்க!
3.) நன்றுபெரிது சிறக்க! தீதில் ஆகுக!
4.) அறம் நனி சிறக்க! அல்லது கெடுக!
5.) அரசு முறை செய்க! களவு இல்லாகுக!
6.) பசி இல்லாகுக! பிணி சேண் நீங்குக!
7.) மாரி வாய்க்க! வளம் நனி சிறக்க!
8.) பசியும் பிணியும் பகையும் நீங்கி
வசியும் வளனும் சுரக்க! ..
9.) மண் உயிர்க்கு எல்லாம்
உண்டியும் உடையும் உறையுளும் “
கிடைத்திடுக!
10.) நல்லது செய்தல் ஆற்றீர் ஆயினும்,
அல்லது செய்தல் ஓம்புக!
11.) ஒன்றே செய்க; ஒன்றும் நன்றே செய்க;
நன்றும் இன்றே செய்க; இன்றும் இன்னே செய்க!
12.) நல்லன இனியன சொல்லி அறம் பெருக்குக!
13.) வையை மணலினும் பல்லாண்டு வாழ்க!
இவையெல்லாம் உலக நலனுக்கான பொதுவான வாழ்த்துகளாகும். இதனால் நாடும் நலம் பெறும். நாமும் நலமுறுவோம்.
இந்த நடைமுறைப் புத்தாண்டில் இருந்தாவது, “ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்” என எண்ணி நாம் ஒற்றுமை உணர்வுடன் வாழ்வோம்! தமிழ்நலன் மறவாது பொதுநலம் பேண உறுதி கொள்வோம்!
அவரவர் காணும் புத்தாண்டுக்கனவுகள் நனவாகட்டும்! நானிலம் சிறக்கட்டும்!
இலக்குவனார் திருவள்ளுவன்
தொடர்பிற்கு: thiru2050@gmail.com
தினச்செய்தி
Leave a Reply