நடைமுறை ஆண்டும் தமிழ் ஆண்டுப் பகுப்பின் சிறப்பும் – இலக்குவனார் திருவள்ளுவன்
நடைமுறை ஆண்டும் தமிழ் ஆண்டுப் பகுப்பின் சிறப்பும்
சனவரி முதல் நாளன்று நாம் அனைவரும் புத்தாண்டு வாழ்த்துகளைப் பரிமாறிக்கொள்கிறோம். ஆனால் நாம் எண்ணுவதுபோல் இஃது ஆங்கில ஆண்டுமல்ல, கிறித்துவ ஆண்டுமல்ல. நடைமுறையில் இவ்வாண்டு பயன் பாட்டில் உள்ளமையால் இதனை நாம் நடைமுறை ஆண்டு என்று சொல்லலாம்.
கிறித்துப் பிறப்பின் பொழுதே நடைமுறையில் இருந்த ஆண்டைக் கிறித்துவ ஆண்டு என்று சொல்வது தவறாகும். எனினும் வரலாறு அறிந்தவர்களும் அவ்வாறுதான் கூறுகின்றனர். கிறித்து பிறந்த பொழுது ஐரோப்பிய நாடுகளில் ஆண்டிற்குப் பத்து மாதங்கள்தாம் இருந்தன. அப்பொழுது சூலையும் ஆகத்தும் கிடையாது.
கி.மு.45இல் உரோமானியப் பேரரசர் சூலியசு சீசரால் உருவாக்கப்பட்டு அவர் பெயரால் சூலியன் நாட்காட்டி (Julian calendar) என்றுஅழைக்கப் பெற்றதே முன்பு பயன்பாட்டில் இருந்தது.
அலோசியசு இலிலியசு [Aloysius Lilius (1510 – 1576)] என்னும் இத்தாலிய மருத்துவர், வானியல் அறிஞர், மெய்யியலாளர், காலக்கணிப்பர் எனப் பல்துறை வித்தகராய் விளங்கினார். இவர் உலுயிகி இலிலியோ(Luigi Lilio) என்றும் உலுயிகி கிகிலியோ(Luigi Giglio) என்றும் அழைக்கப்படுவார். இவரால் மாற்றி யமைக்கப்பட்ட வடிவமே சில திருத்தங்களுடன் இப்பொழுது வழக்கில் உள்ளது.
உலகம் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கனவு கண்டாலும் அவர் கனவு நனவாகும் என எதிர்பார்த்திருக்கவில்லை. அலோசியசு மறைந்து 6 ஆண்டுகளுக்குப் பின்னர் அவர் கனவு நனவாகியது. தொடக்கத்தில் ஆண்டுமுறை மாற்றத்திற்கான கருத்துருவை அவர்தான் அளித்திருந்தார். எனினும் 1575 இல் அவரது தம்பி அந்தோனியோ இலிலியோ (Antonio Lilio) நாட்காட்டிச் சீர்திருத்த ஆணையத்திடம் அதனை அளித்தார். இந்த ஆணையம் நாட்காட்டி மீட்புப் புதுச் செறிவுத் திட்டம்(Compendium novae rationis restituendi kalendarium) என்ற பெயரில் 1577 இல் அச்சிட்டு 1578இல் உலகிலுள்ள உரோமன் கத்தோலிக்கு அமைப்புகளுக்குஅனுப்பியது.
அவற்றின் ஒப்புதலையும் சில திருத்தஙு்களையும் ஏற்று, இவ்வாண்டு முறையைத் திருத்தந்தை பதின்மூன்றாம்கிரகோரி [Pope Gregory XIII, 07.01.1502 – 10.04.1585] 24.02.1582 இல் நடைமுறைப் படுத்தினார். எனவே, இதனைக் கிரகோரியன் ஆண்டு அல்லது கிரிகோரியன் நாட்காட்டி என அவர் பெயரால் அழைக்கின்றனர்.
தொடக்கத்தில் 8 நாடுகள் மட்டுமே இந்த ஆண்டுமுறையைப் பின்பற்றின. இப்பொழுது பெரும்பாலான உலக நாடுகள் இம்முறையையே பயன்படுத்துகின்றன.
இயேசுநாதர் பிறந்ததாகக் கணிக்கப்பட்ட ஆண்டிலிருந்து ஆண்டுகள் குறிக்கப் பெற்றமையால் கிறிததுவ ஆண்டுஅல்லது ஆண்டவரின் ஆண்டு அல்லது பொதுமுறை ஆண்டு என்றும் அழைக்கின்றனர்.
பூமி சூரியனைச் சுற்றுவதற்காகும் காலம் என்பது 365 நாள் 5 மணி நேரம் 49 நிமையம் 12நொடி ஆகும். கணக்கிடுவதற்கு எளிமையாக இருக்கும் பொருட்டு 365 நாள் என்பதையே ஆண்டுக் காலமாகக் கொள்கிறோம். ஏறத்தாழ கால் நாள் குறைவதால் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை 366 நாள் எனக் கணக்கிடுகிறோம். இதுதான் மிகைநாள் ஆண்டு(leapyear). எனினும் 400 ஆல் வகுபடாத நூற்றாண்டுகளில் மிகை நாள் இருக்காது. அஃதாவது 1900, 2100,2200,2300 ஆகியனமிகைநாள் ஆண்டுகளன்று. ஆனால் 2000, 2400,2800 முதலான ஆண்டுகள் மிகைநாள்ஆண்டுகள்.
3000 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பெற்ற தொல்காப்பியத்தில் அதன் ஆசிரியர் தொல்காப்பியர் கூறுவதன் வாயிலாகத் தொல்காப்பியர் காலத்திற்கு முன்பு இருந்தே 6 பருவங்கள் கொண்ட ஆண்டு முறை இருந்தது என்பதை அறிகிறோம். ஒவ்வொரு பருவத்திற்கும் 2 மாதங்கள். எனவே, ஆண்டிற்கு 12 மாதங்கள். இதனைப் பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த பிங்கல நிகண்டு ஆவணியும் புரட்டாசியும் கார்காலம், ஐப்பசியும் கார்த்திகையும் கூதிர் காலம், மார்கழியும் தையும் முன்பனிக்காலம், மாசியும் பங்குனியும் பின்பனிக்காலம் சித்திரையும் வைகாசியும் இளவேனில் காலம், ஆனியும் ஆடியும் முதுவேனில் காலம் என விளக்குகிறது. (ஆவணி முதலான மாதங்களின் பெயர்கள் யாவும் தமிழே எனப் பேராசிரியர் சி.இலக்குவனார் முதலான தமிழறிஞர்கள் மெய்ப்பித்துள்ளனர்.)
பூமி தன்னைத்தானே சுற்றும் கால அளவினை நாளாக வகுத்தனர் தமிழர்கள்.
நிலா பூமியைச் சுற்றிவரும் கால அளவைத் திங்கள் அல்லது மாதம் என்றனர். (மதியால் அளவிடப்படும் காலம் மாதம் எனப்படுவது தமிழே). பூமி சூரியனைச் சுற்றி வர எடுக்கும் காலத்தை ஆண்டு என வகுத்தனர் நம் தமிழ் முன்னோர்கள். இவ்வாறாக, உரோமானியர், கிரேக்கர் முதலான அன்றைய அயல்நாட்டார் ஆண்டிற்குப் பத்து மாதங்கள் என வரையறுத்திருந்த பொழுது துல்லியமாக 12மாதங்கள் கொண்டது 1 ஆண்டு எனக் காலத்தைப் பகுத்திருந்தனர்.
எனவே பொதுமுறை ஆண்டு அல்லது நடைமுறை ஆண்டு அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்பே இருந்த தமிழ் ஆண்டுப் பகுப்புச் சிறப்பை நாம் மறந்துவிட்டோம். எந் த ஆண்டு முறையைப் பின்பற்றினாலும் நம் ஆண்டுச் சிறப்பை நாம் மறவாதிருப்போம்.
திருவள்ளுவர் ஆண்டு, தொல்காப்பியர் ஆண்டு, பெரியார் ஆண்டு, கொல்லம் ஆண்டு, பசலிஆண்டு என்றெல்லாம் கூறுவதுபோல் வெவ்வேறு நாடுகளில் வெவ்வேறு வகையான ஆண்டுகள் பழக்கத்தில் உள்ளன. இருப்பினும் அனைவரும் செய்திகள், வரலாற்றுக் குறிப்புகள் முதலானவற்றில் கிரகோரியன் ஆண்டுமுறையையே நடைமுறையில் பயன்படுத்துவதால் இதனை நடைமுறை ஆண்டு எனலாம்.
அவ்வாறாயின் தமிழ் ஆண்டு எது எனலாம். இன்றைய நிலையில் நாம் தை முதல் நாள் பிறக்கும் காலப் பகுப்பையே தமிழ் ஆண்டுப் பிறப்பாகக் கெண்டாடுவோம். அதே நேரம், சித்திரைப் பிறப்பையும் புறந்தள்ள வேண்டா.
சித்திரைத் தொடக்க ஆண்டு முறைக்குத் தவறாகப் புனையப்பெற்ற கதையும் பழந்தமிழ்ப்பெயர்களை மாற்றி அயற்பெயர்களைச் சூட்டிய கொடுமையும் நீங்கவே தமிழறிஞர்கள் திருவள்ளுவர் ஆண்டினை அறிமுகப்படுத்தினர்.
இன்றைய தமிழ்த் தலைறையினரின் 100க்குத் 90 பெயர்கள் தமிழாக இல்லை. பலரின் புனை பெயர்கள் தமிழாக இல்லை. அதனால் நாம் அவர்களைத் தமிழர் அல்லர் எனச் சொல்ல முடியாது. சித்திரை ஆண்டுப் பிறப்பின் பெயர்களை இடைக்காலத்தில் அயற்பெயர்களாக மாற்றி விட்டனர். எனவே, அதனால் அதனை நாம் நம் ஆண்டு இல்லை என ஒதுக்க வேண்டா. பிரபவ முதலான ஆண்டு வட்டத்தை நாம் வேறு பெயர்களில் அழைக்கவும் வேண்டா. முதலாம் ஆண்டு முதல் 60 ஆம் ஆண்டு ஈறாக நாம் பயன்படுத்துவோம்.
ஆவணியில் பிறக்கும் காலப் பகுப்பை நாம் தொல்காப்பியர் ஆண்டு என்போம். சூரியச் சுழற்சியின் அடிப்படையில் அது திசை மாறும் நாளான தைப் பிறப்பில் தொடங்கும் காலமுறையைத் திருவள்ளுவர் ஆண்டாகக் கொண்டாடுவோம். வியாழன் சுழற்சி வட்டத்தின் அடிப்படையில் சித்திரையில் வருடையில் தொடங்கும் வருடத்தினை இளங்கோவடிகள் வருடம் எனக் கொண்டாடுவோம்.
நாளைக் குறிக்க வேண்டிய எல்லா இடங்களிலும் திருவள்ளுவர் ஆண்டையே பயன்படுத்துவோம்.
அனைவருக்கும் சித்திரை வருட வாழ்த்துகள்!
– அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
இதழுரை–அகரமுதல
உங்களுடைய இந்தக் கட்டுரையை இப்பொழுதுதான் நான் முதன் முதலாகப் படிக்கிறேன் ஐயா! 400 ஆல் வகுபடாத நூற்றாண்டுகளில் மிகை நாள் இருக்காது என்று நீங்கள் இதில் தெரிவித்துள்ள செய்தி இதுவரை நான் கேள்விக்கூடப்படாதது. இப்படிப் பல அரிய செய்திகளை இதில் கொடுத்திருக்கிறீர்கள். சில செய்திகளை சித்திரையில் பிறப்பது வருடை, தையில் பிறப்பது ஆண்டு எனும் உங்களுடைய இன்னொரு கட்டுரையோடு இணைத்துப் படித்தால் புரியும் என நினைக்கிறேன். விரைவில் அதைச் செய்கிறேன்.