நமக்குத் தேவை மனிதநேயக்கல்வியே! – இலக்குவனார் திருவள்ளுவன்
நமக்குத் தேவை மனிதநேயக்கல்வியே!
சென்ற இடத்தால் செலவிடா தீதொரீஇ
நன்றின்பால் உய்ப்ப தறிவு. (திருவள்ளுவர், திருக்குறள் 422)
மனம்போன போக்கில் செல்லாமல் நன்மை தீமைகளை ஆராய்ந்து தீயனவற்றை விலக்கி, நல்லனவற்றின்பால் கருத்து செலுத்தச் செய்வதே அறிவு என்கிறார் திருவள்ளுவர். பழியும் பாவமும் பொருள்கேடும் வராமல் நன்மைப்பக்கம் செலுத்துவதே அறிவு என மணக்குடவர் விளக்குகிறார்.
எனவேதான்,
மனம்போன போக்கெல்லாம் போக வேண்டா (உலகநாதர் : உலகநீதி 3.1)
என்று உலகநாதர் கூறியுள்ளார். இத்தகைய அறிவை நமக்குத் தருவதுதான் கல்வி.
“கற்றது கைம்மண் அளவுகல்லாதது உலகளவு” என்னும் ஔவையார் வாக்கினை உணர்ந்து நாம் படித்துக் கொண்டே இருக்க வேண்டும். ஆனால், நம் கல்விமுறை என்பது தொடர்ந்து பெறத்தக்க நிலையில் நல்லனவற்றைத் தெரிவு செய்யும் அளவில் இல்லை.
கல்வி என்பது கல்விச்சாலைகளிலோ பாடநூல்களிலோ மட்டும் பெற்று வருவதல்ல. நாம் படிக்கின்ற செய்திகள், கேட்கின்ற, பார்க்கின்ற நிகழ்வுகள், பட்டுத்தெளிவதால் ஏற்படும் பட்டறிவுகள் ஆகியனவும் இணைந்ததே கல்வி. எனவே, செய்தியிதழ்கள், இலக்கிய இதழ்கள், தொலைக்காட்சிகள், வானொலிகள், நாடகங்கள், திரைப்படங்கள், பாடல்கள், சொற்பொழிவுகள் வாயிலாகவும் நாம் பெறுவன யாவும் கல்வியே! ஆனால், இல்லந்தோறும் ஊடகங்கள் மூலம் மனித நேயமற்ற செயல்கள்தானே சொல்லப்படுகின்றன; காட்டப்படுகின்றன. உறவுகளை எவ்வாறு பிரிப்பது என்றும் எவ்வாறு கொல்வது என்றும் அடுத்தவர் வாழ்க்கைத்துணைவரை எவ்வாறு அடைவது என்றும் நாளும் பார்த்தும் கேட்டும் அல்லனவற்றிற்குப் பழகிப்போகும் மக்களிடம் மனித நேயம் எவ்வாறு மலரும்?
உயிர்கள் அனைத்தின்பாலும் அன்பு செலுத்த வேண்டும் என அறிவுறுத்த வேண்டிய கல்வி, குறைந்தது மனித நேயத்தையாவது வலியுறுத்துகின்றதா என்றால் இல்லை என்பதுதான் உண்மை. மனித நேயம் இல்லாததால்தான் தீண்டாமை தாண்டவமாடுகிறது. தீண்டாமையால் பள்ளிப்படிப்பை இடையில் முடிக்கவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டோர் பலர். மனித நேயமின்மையால்தான் சாதிநோக்கில் காதலர்கள் பிரிக்கப்படுகின்றனர்; திருமண உறவுகள் முறிகின்றன. மனிதநேயம் அற்றுப்போனதால்தான் உறவினர்களிடையேயும் நண்பர்களிடையேயும் கொலைகள் நிகழ்கின்றன. பிறரால் தாக்கப்படும்பொழுதும் கொல்லப்படும்பொழுதும் காக்க வேண்டிய இவர்களே கொலையாளிகளாக மாறுகின்றனர் என்றால் மனித நேயம் மடிந்து விட்டது என்றுதானே பொருள்.
கூலிக்கு ஆளமர்த்திக் கொல்லுவது என்பது அங்கொன்றும் இங்கொன்றுமாக முன்பு இருந்தது. ஆனால், இப்பொழுது பெண்களுக்கே கூலிப்படையினர் இருக்குமிடம் தெரிகின்றது. அவர்கள் மூலம் தங்களின் உற்றார் உறவினர்களைக் கொல்லுகின்றனர். அப்படி என்றால், கூலிப்படையினர் மறைவாகப் பதுங்கியிராமல் அச்சமின்றி உலவுகின்றனர் என்பதுதானே உண்மை! எத்தகைய மன்பதைக்கேடு இது!
மனிதநேயம் மன்னிக்கும் மனப்பக்குவத்தைத் தரும். ஆனால், பழிவாங்கும் வெறிதானே பலரிடம் மேலோங்கியுள்ளது.
மனிதநேயம் விட்டுக்கொடுக்கும் பண்பை உருவாக்கும். ஆனால், தனக்குக் கிடைக்காவிட்டால் வேறு யாருக்கும் கிடைக்கக்கூடாது என்ற கொலைவெறிதானே பெரும்பான்மையரிடம் உள்ளது.
மனித நேயம் துன்பம் நேரும் இடத்தில் உடுக்கை இழந்தவன் கைபோல் விரைந்து உதவும். ஆனால் வேடிக்கை பார்க்கும் மனமும் உரிய இடத்தை விட்டு அகன்று செல்லும் உள்ளமும்தானே உள்ளது.
திண்ணைப்பள்ளிக்கூட முறை இருந்த பொழுது தொடக்கக்கல்வியிலேயே அறநூல்களைப் பழுதறக் கற்றனர். அவர்களை வழிநடத்த இவை உதவின. தமிழ்வழிக்கல்வி இருப்பின் தமிழ்அறநூல்கள் படிக்க வாய்ப்பு இருக்கும். ஆங்கிலவழிக் கல்வி பெருகி, மொழிப்பாடமாகக்கூடத் தமிழைப் படிக்கா நிலையாலும் படிப்போருக்கும் அறம்சார்ந்த படிப்புமுறையைத் தராததாலும் பணிநோக்கிலான மனப்பாடக்கல்வி மட்டுமே வழங்கப்படுகின்றது.
இந்த நிலை மாற வேண்டுமானால், அனைவருக்கும் தமிழ்வழிக்கல்வியும் மனிதநேயக்கல்வியும் கற்பிக்கப்படவேண்டும். வாடியபயிரைக் கண்ட பொழுதெல்லாம் வாடும் வள்ளலார் உள்ளம்போலும் அனைவர் உள்ளமும் பக்குவப்பட மனிதயேக் கல்வியே துணைபுரியும்.
பிறருக்கு இன்னல் ஏற்படும் பொழுது உதவக்கூடிய, உற்றவர்ஆயினும் மற்றவர் ஆயினும் அவரது துன்பத்தைத் துடைக்கத் துணைநிற்கக்கூடிய, எதிர்பாரா நேர்ச்சி(விபத்து), இயற்கை இடர் முதலான சூழல்களில் பிறர் துன்பத்தில் பங்கேற்றுப் போக்கக்கூடிய மாந்தநேயமே நமக்குத் தேவை! பெற்றோரால் விதைக்கப்படவேண்டிய மனிதநேயம், கல்வியால் வளர்ந்து மலர வேண்டும். எனவே தமிழக அரசு இக்கல்வியாண்டு முதலே அனைத்து நிலைகளிலும் மனிதநேயக்கல்வி அமையும் வகையில் பாடத்திட்டங்களை உருவாக்கிச் செயல்படுத்த வேண்டும்.
மனிதநேயக் கல்வி வழங்குவோம்!
மக்களை மாண்புறச் செய்வோம்!
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
இதழுரை
அகரமுதல 142, ஆனி 26, 2047 / சூலை 10, 2016
Leave a Reply