நயன்மையை(நியாயத்தை)விட

நயன்மையின்மையையே(அநியாயத்தையே) காதலித்தார்கள்!

நளினி முருகன்

இராசீவு கொலை: மறைக்கப்பட்ட உண்மைகளும் பிரியங்கா நளினி சந்திப்பும்என்ற தலைப்பில் நளினி எழுதி, இதழாளர் பா.ஏகலைவன் தொகுத்த நூலின் 6-ஆம் பகுதி இது.

இந்த நூல் பேசுகிறதா? இல்லை, இந்த நூலினுள் நான் பேசுகின்றேனா என்கிற வியப்பு எனக்குள்!

என் மீது வீசப்பட்ட கொடிய சொற்கள் எவ்வளவு? குடை சாய்ந்து போகும் அளவுக்குத் திணிக்கப்பட்ட மானக்கேடுகள் எவ்வளவு? என்னை நானே அறியாதபடி என் முகம் முழுக்கக் கட்டுக்கதைகளாகச் சேறு பூசப்பட்டிருந்ததே, ஏன்? என்றோ செத்துப் போனவள் இன்று இந்த நூலில் பேசுகிறாளே எப்படி? – இப்படியெல்லாம் எனக்குள் ஆயிரமாயிரம் கேள்விகள். வேட்டையாடும் விலங்குகளுக்கு மான் என்ன பரிதாபமாகவாத் தெரியும்? நடுவண் புலனாய்வுத்துறையுடைய சிறப்புப் புலனாய்வுக்குழுவின் செயலையும் நான் அப்படித்தான் பார்க்கின்றேன். அவர்கள் நீதியைவிட நீதியின்மையின் மீதே மிகவும் ஆவல் கொண்டிருந்தார்கள். நயன்மையை விட நயன்மையின்மையையே கூடுதலாகக் கட்டிக்கொண்டு காதலித்தார்கள். அதனால் அவர்கள் வீசிய சொற்களைப்பற்றியோ, சூட்டிய கதைகளைப்பற்றியோ எனக்கு வருத்தமோ, கவலையோ இல்லை. ஆனால், உடனிருந்தே உலை வைத்தவர்களை நினைத்துத்தான் வேதனைப்படுகிறேன்! ஏதுமறியாதவள் எனத் தெரிந்தே என் மீது அழுக்குச் சேற்றை வாரிப் பூசியவர்களுக்காக வெட்கப்படுகிறேன்! நினைத்துப் பார்க்கும்பொழுதே நெடுந்துயரம் என்னைப் பிடித்தாட்டுகிறது. எல்லாவற்றையும் இந்த நூலின் உள்ளே இறக்கி வைக்க முடியவில்லை. இதில் உள்ள ஒவ்வொரு தலைப்பும் உகத்தின் கதை சொல்லும். என் வேதனை உங்களையும் தாக்கிவிடக் கூடாதில்லையா?

  2000-ஆம் ஆண்டு எனக்கு மட்டும் தண்டனைக் குறைப்பு நடந்தது. 2003-ஆம் ஆண்டு வரை என் வாய் கட்டப்பட்டு இருந்தது. அதன் பிறகு சில ஆண்டுகள் எனக்கு நானே வாய்கட்டி அமைதியாக இருந்து கொண்டேன். மிக நெருக்கடியான காலக்கட்டங்களில் கூட நான் ஏதும் பேசவில்லை. கணவர் உட்பட மூவருக்குத் தூக்குக்கயிறு ஊசலாடியபடியே இருந்தது. அந்த நாட்களில் மூவர் கழுத்துகளையும் சுற்றி இருந்த தூக்குக்கயிறே பலரது கவலைக்கும், பதற்றத்துக்கும் காரணமாக இருந்தது. எப்படியாவது காப்பாற்றி விட வேண்டும் என்று தவித்துக் கொண்டிருந்தனர். அந்த வேதனையும் துடிப்பும் எனக்கு மிகக் கூடுதலாகவே இருந்தது. அதுவே என்னை மிகுந்த பொறுமை கொண்டவளாக மாற்றியிருந்தது.

  எனது அந்த அமைதியையே சிலர் தங்களுக்கு வாய்ப்பாக்கிக் கொண்டு திட்டமிட்டுத் தவறுகளைச் சிறிதும் உறுத்தல் இன்றி, மற்றவர்கள் உணரவே முடியாதபடி செய்து முடித்தார்கள். சாவுக்கயிறு என்ற திரையைப் பிடித்துக் கொண்டு எனக்கு எதிராக நஞ்சு தோய்த்த அம்புகளை எய்தார்கள். அந்த நச்சுப் பரப்புரையே என்னை 26 ஆண்டுகளைக் கடந்தும் சிறையிலேயே நிறுத்தி வைத்திருக்கிறது. அந்த நுட்பத்தை என்னவென்று கூற? அதில் ஒரு சிலவற்றையே இங்கே பதிவு செய்திருக்கின்றேன். ஏதோ நான்தான் பயங்கரவாதி போலவும், நான்தான் திட்டமிட்டுப் பலரையும் சிக்க வைத்ததைப் போலவும் பல கதைகள் வெளியே இருக்கின்றன. எல்லாரையும் போலத்தான் நானும் ஏதுமறியாதவள் என்பது பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஒருபுறம் ‘கருப்புப்’ பரப்புரைகள் உண்மைகளைத் தடுத்து விட்டன. மறுபுறம், செல்வாக்கு மிக்க நடுவண் புலனாய்வுத்துறையின் அரசுப் பொறிமுறை (இயந்திரம்) செய்த பெருவலிமை கொண்ட பொய்ப் பரப்புரை பாய்ந்து தடுத்தது. நெஞ்சில் சிறிதும் ஈரமில்லாமல், மனத்தில் சிறிதும் கூச்சம் இல்லாமல் என் மீது துளியும் உண்மையற்ற பழிகளை வீசும்பொழுது நான் தடுக்கக்கூடாதா? என் மீது வீசியடிக்கப்பட்ட சாக்கடைச் சேறுகளை நான் கழுவிடக்கூடாதா? அதைத்தான் இப்பொழுது இந்தப் நூலின் வாயிலாகச் செய்திருக்கின்றேன். அனைத்துக்குமே சான்றுகளை வைத்துக் கொண்டுதான் கூறுகின்றேன்.

  உண்மையில் நான் யார்? என் குடும்பப் பின்னணி என்ன? எப்படி இந்த வழக்கிற்குள் சிக்கினோம்? எங்கள் குடும்பமே கைது செய்யப்பட்டதே, எப்படி?  கைது செய்யப்பட்டதில் இருந்து எனக்கு நடந்த சித்திரவதைகள் என்ன?  எங்கள் மானத்தின் மீது விழுந்த அடிகள் எவ்வளவு? கழுத்தைச் சுற்றிய சூழ்ச்சிகள் எத்தனை? இப்படி அடுக்கடுக்கான கேள்விகள் பல உங்களுக்கு எழலாம். இப்படிப் பேசாத பலவற்றுக்குமாகச் சேர்ந்தே இந்த நூலினுள் பேசியிருக்கின்றேன். சிறையில் இருந்த தொடக்கக் காலம் நாங்கள் மிகவும் வறுமையில் திண்டாடிக் கொண்டிருந்தோம். அந்த நேரம் உணர்வாளர்கள் பலர் பொருள் உதவியைச் செய்திருக்கிறார்கள். ஆனால், அந்த உதவிகள் கூட எங்களுக்கு வந்து சேரவேயில்லை. இடையில் இருந்தவர்கள் தடுத்து விட்டிருந்தார்கள். அது கூட என் அம்மா, தம்பி உட்பட 19 பேர் விடுதலையாகி வெளியே சென்ற பிறகு எட்டு ஆண்டுகள் கழித்துத்தான் காலத்தாழ்ச்சியாக எனக்குத் தெரிய வந்தது. அப்பொழுது நானும் என் கணவரும் எப்படியெல்லாம் தனிமைப்படுத்தப்பட்டிருந்தோம் என்பது யாருக்கும் தெரியாது. ஏன், எங்களுக்காக வழக்காட முன் வந்தவர்கள் கூடத் தடுக்கப்பட்டிருந்தார்கள். அவற்றையெல்லாம் மீறி மூத்த வழக்குரைஞரான எசு.துரைசாமி, இராமதாசு அவர்கள் எனக்காக வழக்காட  முன் வந்தார்கள்.

  உச்ச நீதிமன்ற உசாவலுக்கு(விசாரணைக்கு)ச்  சில நாட்கள் முன்பாக (1999-இல்) மூத்த வழக்கறிஞர் ஒருவர் என் கணவரிடம் சென்றார். “உன்னைக் காப்பாற்ற முயற்சி எடுத்தால் நளினியைக் காப்பாற்ற முடியாமல் போய்விடும். நளினியைக் காப்பாற்ற முயன்றால் உன்னைக் காப்பாற்ற முடியாதப்பா! என்ன செய்வது” என்று கூறினார். அதற்கு என் கணவர், “என்னைக் காப்பாற்ற முடியாமல் போனால் போகட்டும். என் குழந்தைக்கு அம்மாவாவது இருந்தாக வேண்டும்! நளினியை எப்படியாவது காப்பாற்றி விடுங்கள்! அதுவே எனக்குப் போதும். என்னைப் பற்றிக் கவலையில்லை” என்ற உறுதியைக் கொடுத்திருக்கிறார்.

அதே வழக்கறிஞர், பிறகு என்னிடம் வந்தார். “உங்களைக் காப்பாற்ற முயன்றால் மற்ற ஏழு பேரையும் காப்பாற்ற முடியாமல் போகுமம்மா” என்று உருகிப் பேசினார். நடுங்கிப் போன நான், “என் உயிர் போனாலும் சரி ஐயா, மற்ற ஏழு பேரையும் எப்படியாவது காப்பாற்றினால் போதும்! வேண்டுமானால் இப்பொழுதே நான் எழுதிக் கொடுத்து விடுகிறேன்” என்று கூறி விட்டேன். அந்த ஏழு பேரில் என் கணவரும் ஒருவர். அவர் தப்பித்தால் குழந்தைக்கு அப்பாவாவது இருக்கிறார் என்ற நிறைவில் என் உயிர் போகும். அந்த நினைப்பில்தான், என்னால் மற்ற ஏழு பேரின் விடுதலையும் பாதிக்கக்கூடாது என்று கூறினேன். (அப்பொழுது 26 பேரில் எட்டுப் பேரை மட்டும் உசாவலுக்கு எடுப்போம் என்று நீதியரசர்கள் கூறியிருந்தார்களாம். அதனால்தான் இப்படி ஒரு பேச்சு ஓடியது) அதனால்தானோ என்னவோ, எங்களுக்கான வாதங்களை அங்கே முன்வைக்காமல் விட்டார்கள். நீதிமன்றத்தில் எங்கள் தரப்பு நயன்மையை எடுத்துச் சொல்ல எங்களுக்கான வாய்ப்பு மறுக்கப்பட்ட நிலையில் குற்றமற்றவர்களான நாங்கள் போராடாமலேயே குற்றவாளிகள் ஆக்கப்பட்டோம் என்கிற வலி இன்றும் இருக்கின்றது. தொடர்ந்து நடந்த நெடிய சட்டப் போராட்டங்களால், என்னுடைய தூக்குத் தண்டனை மட்டும் ஆயுள் தண்டனையாகத் தமிழக அரசால் குறைக்கப்பட்டது.

  ஆனால், எனக்கு அது மகிழ்ச்சியளிக்கவில்லை. என்னுடைய தண்டனைக் குறைப்பு சிலருக்குப் பெரிய எரிச்சலையும், காழ்ப்பு உணர்ச்சியையும் ஏற்படுத்தி விட்டது. “ஏனப்பா, குற்றம் நடந்த இடத்திலிருந்த நளினியை விட்டு விட்டார்கள்; குற்றமற்ற என் மகனைத் தூக்கில் போடப் போகிறோம் என்கிறார்களே! என்னப்பா நீதி?” என்று என் மாமியாரும் சாந்தனின் அம்மாவும் ஊர்தோறும் பரப்புரை செய்தால் எப்படி இருக்கும்? அரசும், அலுவலர்களும் என்ன நினைப்பார்கள்? ‘’அந்தப் பெண் குற்றவாளி என்று அவர்கள் ஆட்களே உறுதிப்படுத்துகிறார்களே? அவருக்குத் தண்டனைக் குறைப்புச் செய்து விடுவித்தால் மற்ற மூவரையும் விடுவித்தாக வேண்டுமே? அது சிக்கலை ஏற்படுத்துமே!’’ என்றுதானே நினைத்துக் கொள்வார்கள். அதுதானே எனக்கு நடந்தது!

  இராசீவு கொலை நடந்த அந்தப் பொதுக்கூட்டத்துக்கு நான் அவர்களோடு சென்றிருந்ததை வைத்துத்தான் என்னை முதன்மைக் குற்றவாளியாக்கினார்கள். அதைக் குறிப்பிட்ட உச்ச நீதிமன்ற நீதியரசர்களில் ஒருவரான கே.டி.தாமசு, என் சூழ்நிலையைத் தெளிவாகவே குறிப்பிட்டு, எனக்கான தூக்குத் தண்டனையைக் குறைத்துத் தீர்ப்பு எழுதினார். ஆக, மூவரில் ஒருவர் என்னைக் குற்றமற்றவர், சூழ்நிலை காரணமாக இந்தச் சூழ்ச்சியில் சிக்கியவர் என்று கூறியிருக்கின்றார். ‘எழுவர் விடுதலை’ என்ற ‘சிலர்’ இவற்றைப் பற்றியெல்லாம் மக்களிடம் போய்ப் பேசவில்லை. மாறாக, அவர்கள் எழுதிக் கொண்ட நூல் மடலில், ‘எங்கள் வீட்டில்தான் சூழ்ச்சித் திட்டக் கூட்டம் நடந்தது என்ற நடுவண் புலனாய்வுத்துறையினரின் பொய்யான குற்றச்சாட்டைப் பதிவு செய்து, தவறான உள்நோக்கத்தை ஏற்படுத்தினார்கள். அப்படி ஒரு கூட்டம் எங்கள் வீட்டில் நடக்கவேயில்லை என்று சான்றுகள் மூலம்  உறுதியான பிறகும் தொடர்ந்து நூலின் மூலம் அந்தப் பரப்புரையைச் செய்து வருகிறார்கள். அதற்கு என்ன சொல்வது? என் இறப்புத் தண்டனைக் குறைக்கப்பட்டபொழுது தமிழகச் சட்டமன்றத்தில் கலந்துரையாடல் நடந்தது. அப்பொழுது “நளினியின் விடுதலை எப்பொழுது” என்ற கேள்விக்கு, ‘‘14 ஆண்டுகள் ஆன பிறகு நளினியின் விடுதலையைப் பற்றிப் பரிசீலிக்கப்படும்” என்று அன்றைய முதல்வர் அறிவித்தார். அது போன்ற ஒரு சூழ்நிலை கனிந்ததும் உண்மை. ஆனால், விடுதலை மட்டும் கிடைக்கவில்லை! கிணற்றில் போட்ட கல்லாக மாற்றி விட்டார்கள்.

– தொடரும்

– நன்றி: இளைய (சூனியர்) விகடன், 18.12.2016 இதழ்

கருத்தாளர்: நளினி முருகன்
எழுத்தாளர்: பா.ஏகலைவன்

தொகுப்பு: சோ.இசுடாலின், ஆ.நந்தகுமார்
தரவு: இ.பு.ஞானப்பிரகாசன்