(நல்ல தமிழில் மொழிபெயர்த்தல் வேண்டும்! 2/3 – தொடர்ச்சி)

நல்ல தமிழில் மொழிபெயர்த்தல் வேண்டும்! 3/3 – நாகலட்சுமி சண்முகம்

  வெறும் படியெடுத்தல் எனப் பொதுவாக அறியப்படும் மொழிபெயர்ப்பை எப்படி ஒரு கலையாக நீங்கள் உணர்கிறீர்கள்?

மொழிபெயர்ப்பு என்பது கண்டிப்பாக ஒரு கலை. படிப்பவர்கள் அதை மொழிபெயர்ப்பு என உணரா வண்ணம் எழுதுவதே அக்கலையின் உச்சம். சில நேரங்களில், நூல்களின் தலைப்பை மொழிபெயர்ப்பதே கடினமாக இருக்கும். எளிய மூலப்பொருளைக் கூட மெருகேற்றிக் கொடுப்பதே மொழிபெயர்ப்பின் அரும்பணி. தொழிலாக மட்டுமின்றி, அது நம் சிந்தனைத்திறனையும் வளர்க்கும் முறையெனவே நான் கருதுகிறேன்.

மொழியாக்கம் செய்யக்கூடிய நூல்களை நீங்களே தேர்ந்தெடுப்பீர்களா?

சில நேரங்களில் தேர்ந்தெடுப்போம்; சில நேரங்களில், பதிப்பகங்கள் அவர்களது தேர்வைச் சொல்வது வழக்கம். எப்படியானாலும், நான் மொழியாக்கம் செய்யும் நூல் தரமானதுதான் என்னும் எண்ணம் ஏற்பட்ட பின்னரே நான் அந்த நூலை மொழிபெயர்க்க ஒத்துக் கொள்வேன். பல நேரங்களில், பாலுணர்வைத் தூண்டுகிற, விடலை வயதினரை இலக்காகக் கொண்ட நூல்கள் மொழிபெயர்க்கக் கேட்டு வந்துள்ளன. எனினும், அவை போன்றவற்றைத் தவிர்த்தே வருகிறேன்.

அத்தகைய நிலையில், மொழி ஆங்கிலமாயினும், படைப்புகளில் விரவி வரும் மொழிப்பயன்பாடும் சொற்றொடர்களும் அம்மண்ணுக்கே உரித்தான குணங்களைக் கொண்டு வருவது இயல்பு. அப்படிப்பட்ட நூல்களை மொழிபெயர்க்கும்பொழுது மொழிபெயர்ப்பில் அவற்றுக்கு இணையாகத் தமிழின் வெவ்வேறு பேச்சு வழக்குகளை ஆளுகிறீர்களா அல்லது நடுநிலையான எழுத்து வழக்கையே பயன்படுத்துகிறீர்களா?

நான் மொழிபெயர்த்தவற்றில் பெரும்பான்மையானவை தன்முன்னேற்ற நூல்கள் என்பதால் அத்தகைய முயற்சிகளில் வழக்குமொழி என்பது கிடையாது; பொதுத்தமிழாகவே இருக்கும். புதினங்கள் நிறையச் செய்ததில்லை. பொதுவாக, நல்ல தமிழில் மொழிபெயர்த்தல் வேண்டும் என்பதே என் நிலைப்பாடு.

உலகளாவிய முறையில் ஆங்கில மொழிபெயர்ப்பு – அல்லது பொதுவாக மொழிபெயர்ப்பு – எப்படி அமைதல் வேண்டும் என்று ஏதேனும் நெறிமுறைகள் உள்ளனவா?

உலகளாவிய நிலையிலும், இந்திய அளவிலும் இதைக் குறித்த பல கருத்தரங்கங்கள் நடைபெற்று வருகின்றன. நான் முழுக்க முழுக்கப் பட்டறிவின் பேரில்தான் செய்து வருகிறேன். என் பட்டறிவின் மூலம் எனக்கென ஒரு கொள்கையை வரையறுத்துக் கொண்டுதான் பணியைச் செய்கிறேன். எடுத்துக்காட்டாக, மொழிபெயர்ப்பில் ஆங்கிலச் சொற்கள் இருத்தல் கூடாது; வடமொழிச்சொற்கள் 99 விழுக்காடு தவிர்க்கப்படுதல் வேண்டும். இலக்கணத் தூய்மையாக வரிகள் அமைதல் வேண்டும். இவற்றைப் போன்று பல நெறிகளை நானும் என் கணவரும் அமைத்துக் கொண்டுள்ளோம். குறிப்பாக, மொழிபெயர்ப்பு என்பதில் மொழிபெயர்ப்பாளரின் சொந்தக் கருத்துகள் அமைதல் கூடாது; அதே சமயம், மூல மொழியின் சொற்களையோ சொற்றொடர்களையோ அப்படியே எழுதுதலும் கூடாது. தமிழின் இயல்பான நடையில் அமைதல் முதன்மையானது.

மொழியாக்கங்களைத் தரம் பிரிக்க வேண்டுமாயின் அதற்கான அளவுகோல்களாக எவற்றை நீங்கள் முன்வைக்கிறீர்கள்?

இலக்கணப் பிழைகளற்ற, சரளமான மொழி நடையுடன் அமைதலே மொழியாக்கத்தின் எதிர்பார்ப்பு. எந்த ஓரிடத்திலும் படிப்பவர் மனத்தை நெருடுதல் கூடாது. பேச்சு வழக்கு வெகுவாக அமைதல் கூடாது. ஒவ்வாத, நடைமுறையில் இல்லாத சொற்களைப் பயன்படுத்துவதைத் தவிர்த்தல் வேண்டும். ஒரு முறை பன்னாட்டுத் தொலைக்காட்சி ஒன்றிலிருந்து ஒரு நிகழ்ச்சியின் உரையைத் தமிழாக்கம் செய்யும் வாய்ப்பு வந்தது. “நீங்கள் தூயதமிழில் மொழிபெயர்த்துள்ளீர்கள். பேச்சுவழக்கில் அமைதல் வேண்டும்” என்று கேட்கப்பட்டது.

உங்களுக்கான திட்டங்கள் ஏதேனும் உளவா?

என் கணவர் சில நூல்களைத் தேர்ந்தெடுத்து வைத்துள்ளார். நான் இப்பொழுது, குழந்தைகள் வளர்த்தல் குறித்து ஒரு நூலை எழுதிக் கொண்டிருக்கிறேன். பின்னர், வாழ்க்கையை எப்படி மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பது குறித்து ஒரு நூல் எழுதவும் திட்டமிட்டுள்ளேன். கணவன் மனைவி உறவு – பெற்றோர்கள் குழந்தைகள் உறவு – குழந்தைகள் ஆசிரியர்கள் உறவு – ஆசிரியர்கள் பெற்றோர்கள் உறவு இப்படியான ஒரு வட்டம் அமைதல் வேண்டும் என்பதால், இந்த நான்கு தலைப்புகளில் என் சொந்தப் படைப்புகளை எழுதுவதாகத் திட்டமிட்டுள்ளேன். அதன் முதல் படியே நான் எழுதிய திருமணம் குறித்த நூல். இன்னும் மூன்று நிலைகள் உள்ளன. எழுதும் இத்தகைய நூல்களின் கருவை மையமாகக் கொண்டு உரையாற்றுவதையும் என் குறிக்கோளாக வைத்துள்ளேன். தற்பொழுதைய நிலையில் இலக்கு என்பது மிகவும் தவிர்க்க இயலாதது. அத்தகைய இலக்குகளை எப்படித் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதையும், இலக்குகள் அடையும் வழிகள் – முறைகள் குறித்தும் சொல்ல வரும் நூல்கள், உரையாடல்கள், சொற்பொழிவுகள் போன்றவற்றைச் செய்வதுமே என்னுடைய எதிர்காலத் திட்டங்கள்.

‘இலக்கியவேல்’ நேயர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்பும் கருத்துகள் ஏதேனும் உண்டா?

நான் என் இளம் வயதில் நிறையப் படிக்கவில்லை; படித்திருந்தாலும் வெறும் பொழுதுபோக்குப் படிப்பே. நல்லவேளையாக எனக்கு நல்ல கணவர் வாய்த்ததால், நான் படிப்பின்பால் வழிப்படுத்தப்பட்டு இன்றைய நிலையை அடைந்துள்ளேன். இளம் வயதில், நம்மை வளர்த்துக் கொள்வதற்கும் நம் திறன்களை உயர்த்திக் கொள்வதற்குமான நூல்களைப் படித்தல் இன்றியமையாதது என உணர்கிறேன். குழந்தைகளுக்குப் படிக்கும் ஆர்வத்தைத் தூண்டுதல் வேண்டும். ஒவ்வொரு வீட்டிலும் குறைந்தது ஐம்பது நூல்களையாவது கொண்ட ஒரு நூலகம் அமைத்துக் கொள்ளுதல் மிக மிக இன்றியமையாதது. நூலுக்குச் செலவு செய்ய மக்கள் தயங்கக் கூடாது. அத்தகைய நிலையே நல்ல ஒரு குமுகாயத்தை (சமுதாயத்தை) உருவாக்கும் என்பதே என் நிலைப்பாடு.

உங்கள் நேரத்தை ஒதுக்கி உரையாற்றியதற்கு நன்றி! வணக்கம்!

வணக்கம்!

இலக்கிய வேள் சந்தர் சுப்பிரமணியன்

இலக்கிய வேல், சூலை 2017

தரவு: இ.பு.ஞானப்பிரகாசன்