நல்ல தீர்ப்பு: இராசீவு கொலை அப்பாவிகள் எழுவரை விடுதலை செய்யத் தமிழக அரசிற்கு முழு அதிகாரம்.
இராசீவு கொலை:
அப்பாவிகள் எழுவரை விடுதலை செய்யத்
தமிழக அரசிற்கு முழு அதிகாரம்.
உச்சநீதிமன்றத்தின் நல்ல தீர்ப்பு
21.05.1991 இல் நடைபெற்ற இராசீவு கொலையில் உண்மைக் குற்றவாளிகளைவிட்டு விட்டு அப்பாவிகளைத் தண்டித்துள்ளனர். இவர்கள் விடுதலைக்காகப் பல முயற்சிகள் மேற்கொண்டும் மத்திய அரசுகளின் சதியால் பயனற்றுப் போயிற்று.
தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூவரும் குடியரசுத் தலைவருக்குக் கருணை விண்ணப்பம் அனுப்பினர். இதில் முடிவெடுக்கக் காலத்தாழ்ச்சி ஆனதை முன்னிட்டு இவர்கள் தண்டனையை வாணாள் தண்டனையாக மாற்றி 2014இல் உச்ச நீதிமன்றம் தீர்ப்ளித்தது. இவர்கள் விடுதலை குறித்து அரசு கருதிப்பார்க்கவும் தீர்ப்பளித்தது.
இம்மூவருடன் வாணாள் சிறைவாசிகளாக இருந்த நளினி, இராபர்ட்டு பயசு, இரவிச்சந்திரன், செயக்குமார் ஆகிய நால்வரையும் சேர்த்து எழுவரையும் விடுதலை செய்ய செயலலிதா தலைமையிலான தமிழக அரசு முடிவெடுத்தது. மத்தியில் இருந்த பேராயக்கட்சியான காங்கிரசும் இப்போது இருக்கும் பா.ச.க.வும் உண்மைக் குற்றவாளிகள் பிடிபடுவார்கள் என அப்பாவிகள் விடுதலை ஆவதற்கு எதிர்ப்பாக இருந்தமையால் முட்டுக்கட்டைகள் போடப்பட்டன.
இவர்கள் அனைவரும் 24 ஆண்டுகளாகச் சிறையில் உள்ள காரணத்தால், அவர்களை விடுதலை செய்ய முடிவு செய்து, அதற்கு மத்திய அரசின் ஒப்புதல் கோரி கடந்த 2016-ஆம் ஆண்டு தமிழக அரசு 2 மடல்கள் எழுதியது. ஆனால் மத்தியக் குளத்தில் வீசப்பட்ட கற்களாக இவை அமிழ்ந்தன.
அப்போதைய காங்.அரசு உச்சநீதிமன்றத்தில் முறையிட்டு விடுதலைக்கான இடைக்காலத் தடை பெற்றது. இவ்வாறான அரசியல் யாப்பு அமர்வின் தீர்ப்பிற்கு எதிராகத் தமிழக அரசு மறுஆய்வு முறையீட்டை அளித்தது.
நீதிமன்றத்தில் அளிக்கப்பட்ட எழுவரின் தொடர் முறையீடுகளாலும் தமிழக அரசின் மடல்கள், முறையீடுகளாலும் இதுவரை பயனில்லாமல் இருந்தது.முந்தைய சீராய்வு முறையீட்டு வழக்கில் மத்திய அரசு 3 மாதங்களுக்குள் கருத்தைத் தெரிவிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் தெரிவித்தது.
கடந்த ஏப்பிரல் 18 இல் எழுவரையும் விடுதலை செய்யக்கூடாது என மத்திய அரசு உச்சநீதிமன்றத்திற்குத் தெரிவித்தது.
இருப்பினும் உச்சநீதிமன்ற அமர்வு நடுநிலையுடன் ஆராய்ந்து எழுவரையும விடுதலை செய்வதற்குத் தமிழக அரசிற்கு முழு அதிகாரம் உள்ளது எனத் தீர்ப்பளித்துள்ளது.
முன்பே தமிழக அரசு எழுவர் விடுதலைக்குப்பரிந்துரைத்து ஆளுநருக்குக் கோப்பு அனுப்பியதன் அடிப்படையிலேயே ஆளுநர் விடுதலைக்கு ஒப்பமிடலாம். அல்லது இன்றே ஆளுநருக்கு மற்றொரு தீர்மானம் அனுப்பி விடுதலை செய்ய வேண்டும்.
மேலும் இந்த எழுவருக்கும் ஆளுக்கு ஒரு கோடி உரூபாய் உதவித் தொகையாக அளிக்க வேண்டும். விடுதலை பெற்ற சிறைவாசிகள் சங்கம் மூலம் இவர்கள் கேட்கும் உதவிகளை அளித்தல் வேண்டும்.
இவ்விடுதலைக்கு எதிராக யாரும் ஆர்ப்பாட்டங்கள் செய்தால் அவர்களைக் கைது செய்ய வேண்டும்.
20 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் உள்ள இசுலாமியர் உள்பட அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும்.
இவர்களுக்கும் இவர்களுக்கு அளிப்பதுபோன்ற மறுவாழ்வு உதவிகள் அளிக்க வேண்டும்.
இவர்களின் விடுதலைக்குக் காரணம் மேனாள் முதல்வர் செயலலிதா எடுத்த விடுதலை முடிவு என்பதால் இன்றைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் விரைந்து நடவடிக்கை எடுப்பார் என எதிர்பார்க்கிறோம்.
விடுதலைக்குப் பின்னர அமைதியான மகிழ்வான வாழ்வு பெற எழுவரையும் வாழ்த்தி வரவேற்கிறோம்.
நல்ல தீர்ப்பு வழங்கிய உச்சநீதிபதிகளுக்குப் பாராட்டுகள்!
கண்ணோட்டம் என்னும் கழிபெருங் காரிகை
உண்மையான் உண்டிவ் வுலகு. (திருவள்ளுவர், குறள் 571)
Leave a Reply