நாலடி இன்பம்!- 10. காற்றில் காய்களும் விழும்! – இலக்குவனார் திருவள்ளுவன், மின்னம்பலம்
நாலடி இன்பம்!- 10. காற்றில் காய்களும் விழும்!
மற்றறிவா நல்வினை யாமிளைய மென்னாது
கைத்துண்டாம் போழ்தே கரவா – தறஞ்செய்ம்மின்
முற்றி யிருந்த கனியொழியத் தீவளியா
னற்கா யுதிர்தலு முண்டு. (நாலடியார், பாடல் 19)
பொருள்: கொடுங்காற்றால் கனி மட்டும் அல்ல, கனியாத காய்களும் வீழ்வதுண்டு. எனவே, இளமையாகத்தான் உள்ளோம், பின்னர் நல்வினை புரியலாம் என எண்ணாது உள்ளதை மறைக்காது அறம் செய்க!
சொல் விளக்கம்: முற்றி=முதிர்ந்து; இருந்த= இருந்த; கனி=பழங்கள்; ஒழிய= மட்டுமல்லாமல்; தீவளியால்= வலிய காற்றால்; நல்= நல்ல; காய்=காய்கள்; உதிர்தலும்=விழுதலும்; உண்டு=உண்டு; ஆதலால், நல்வினை= நற்செயல்களை; மற்று=இனிமேல்; அறிவாம்=அறிந்து செய்வோம்; யாம்=நாம்; இளையம்= இளமைப்பருவத்தில்தான் உள்ளோம்’; என்னாது=என்று நினைக்காது; கைத்து=கையில் செல்வம்; உண்டாம்= உண்டாயிருக்கும்; போழ்தே= காலத்திலேயே; கரவாது=மறைக்காமல்; அறம்=அறச்செயல்களைச்; செய்ம்மின்= செய்யுங்கள்.
‘கனியொழிய’ என்று குறிப்பிட்டுள்ளதை இருவகைப் பொருளாக(இரட்டுற மொழிதலாக)க் கொண்டு, பழங்கள் உதிராமல் மரத்தில் இருக்கும் பொழுதே, காய்கள் உதிர்வதும் உண்டு என்று பொருள் கொள்ளலாம். அஃதாவது முதியவர் இறப்பதற்கு முன்னர் இளையோர் இறப்பதும் உண்டு எனப் பொருள் கொள்ளலாம்.
‘யாம் இளையம்’. ஆதலின் இளமையில் இன்பங்களை நுகர்வோம். முதுமையில் அறச்செயல்கள் செய்வோம் என்று நினைக்காமல் இளமையில் பொருள் தேடிக் கைப்பொருளைப் பிறருக்கு மறைக்காமல் அறவினைகள் செய்க என்கிறார்.
‘அழகிய தமிழ் மகன் படத்தில் கவிஞர் பா விசய், எழுதிய “முன்னால் முன்னால் முன்னால் ‘முன்னால் வாடா’” எனத் தொடங்கும் “எல்லாப்புகழும் ஒருவனுக்கே” என்னும் பாடல் வரும். அதில்
இன்றை விதைத்தால் நாளை முளைக்கும் ..
நாளை நாளை நாளை என்று இன்றை இழக்காதே ..
நீ இன்றை இழக்காதே ..நீ இன்றை இழக்காதே ..
அதை நீ மறக்காதே ..
நீ அதை நீ மறக்காதே ..
என்னும் வரிகள் வரும்.
நாளை செய்யலாம் என இன்றைக்குக் கிடைத்த வாய்ப்பை இழக்கக் கூடாது. இன்றைக்கே நற்செயல் விதைத்தால் நாளை நற்பயன் கிடைக்கும் என இப்பாடல் அறிவுறுத்துகிறது.
அகவை முதிர்ந்த பின்னர்தான் இறப்பு வரும் என்றில்லை. இளமையிலும் இறப்பு வரலாம் என்னும் நிலையாமையை உணர்ந்து நற்செயல் ஆற்றவேண்டும்.
இலக்குவனார் திருவள்ளுவன், மின்னம்பலம் 27.09.2019
Leave a Reply