நாலடி இன்பம் 5 : அறம் அவசரம் – இலக்குவனார் திருவள்ளுவன், மின்னம்பலம்
நாலடி இன்பம் 5 : அறம் அவசரம்
நின்றன நின்றன நில்லா எனவுணர்ந்
தொன்றின ஒன்றின வல்லே செயின்செய்க;
சென்றன சென்றன வாழ்நாள் செறுத்துடன்
வந்தது வந்தது கூற்று.
பொருள்: உடம்போடு கூடிவாழுமாறு ஏற்பட்ட வாழும் நாட்கள் செல்கின்றன செல்கின்றன; கூற்றுவன் சினந்து விரைந்து வருகின்றான் வருகின்றான்; ஆதலால், நின்றன நின்றன – நிலைபெற்றன நிலைபெற்றனவென்று நினைத்துக்கொள்ளப்பட்ட செல்வப் பொருள்கள், நிலைபெறா என்று உணர்ந்து இசைவான அறச்செயல்களைச் செய்யக் கருதினால் உடன்விரைந்து செய்க.
சொல் விளக்கம்: வாழ்நாள் காலத்தில் ஒவ்வொரு நாளும் குறைந்து போய்க் கடந்தகாலமாகச் சென்றுகொண்டிருக்கின்றன. வாணாளைக் குறைக்கும் எமன் விரைந்து வந்து கொண்டுள்ளான். எனவே, நிலையானது என நாம் எண்ணுகின்ற செல்வம் நிலையற்றது என உணர்ந்து,வாணாள் முடிவதற்குள் அறச்செயல் ஆற்ற எண்ணினால் உடனே விரைந்து செய்ய வேண்டும். விரைந்து வரும் வாணாள் முடிவிற்கு முன்னதாக அறச்செயல்களை விரைந்து முடிக்க வேண்டும்.
வாழ்நாள்=ஆயுள்; சென்றன சென்றன=போயின போயின; செறுத்து= சினந்து; உடன்=உடனே; கூற்று=இயமன்/எமன்; வந்தது வந்தது=வந்தான் வந்தான்; (ஆதலால்), நின்றன நின்றன=நின்றனவாகிய நின்பொருள்கள்; நில்லா என= நிற்காவென; உணர்ந்து=அறிந்து; ஒன்றின ஒன்றின=பொருந்திய நற்செயலை; செயின்=செய்ய எண்ணினால்; வல்லே=சீக்கிரத்தில்; செய்க=செய்திடுக.
எமன் விரைவாக வருகிறான் என்பதை உணர்ந்து அதற்குள் விரைவாக நல்ல செயல்கள் செய்ய வேண்டும் என எண்ணுகிறாயா? அப்படியானால் விரைந்து நல்லன செய்க என்கிறது பாடல். விரைவாக நல்லது செய் என்று பொதுவாகக் கூறுவில்லை. ஏன் எனில் அதற்கான எண்ணம் இருந்தால்தான் செயலாற்ற முடியும். எனவேதான், செய்ய எண்ணினால் செய் என்கின்றனர். எனினும் செய்யவேண்டும், அதற்கேற்ற எண்ணம் கொள் என்பதுதான் உள் கருத்து.
‘அந்தமான் காதலி ‘என்னும் திரைப்படத்தில்
பணம் என்னடா பணம் பணம்
குணம்தானடா நிரந்தரம்
எனக் கண்ணதாசனின் பாடல் வரும். அதுபோல் பணம் நிலையல்ல எனப் புரிந்து கிடைக்கும் பொழுதே அதனைக் கொண்டு நற்செயல் புரிய வேண்டும்.
நாலடி இன்பம் தொடரும்
Leave a Reply