நீலகிரி மாவட்டத்தில் பெருங்கற்காலச் சிற்பங்கள்!
உதகமண்டலத்தில் கிடைத்த
பெருங்கற்காலச் சுடுமண் சிற்பங்கள்
செய்தியாளர்கள் என்பவர்கள் தம்முன் நடப்பதைப் பதிவு செய்பவர்கள் என்றுமட்டும்தான் பலருக்கும் தெரியும் ஆனால் சில செய்தியாளர்கள் அதையும்தாண்டித் தங்கள் மண்ணின் வளமையையும் மக்களின் பெருமையையும் உலகிற்குப் பறைசாற்றுபவர்களாகவும் இருக்கின்றனர். அவர்களில் உதகமண்டலத்தில் உள்ள செய்தியாளர் பிரதீபனும் ஒளிப்படக்கலைஞர் இரகுவும் குறிப்பிடத்தகுந்தவர்கள்.
நீலகிரி மாவட்டதின் பல்வேறு சிறப்புகளைத் தேடித்தேடிக் கண்டுபிடித்துச்,செய்தியாகவும் படமாகவும் வெளியிட்டு மாவட்டத்திற்குப் பெருமை சேர்த்து வருகிறார்கள்
அந்த வகையில் தற்போதைய அவர்களது பதிவுதான் பெருங்கற்காலச் சுடுமண் சிற்பங்கள். இதுகுறித்து, தொட்டபாலி ஆவின் நகரில் வசிக்கும், தொல்லியல் ஆர்வலர் இரவிச்சந்திரனுடன் தொடர்புடைய இடங்களுக்குச் சென்று திரட்டி வெளியிட்ட செய்திகள் மிகவும் சுவையானவையாகும்.
ஊட்டி அருகே, நீர்காய்ச்சி மந்தில், 2000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த, பெருங்கற்கால மக்களின் வாழ்வியலை வெளிப்படுத்தும், சுடு மண் சிற்பங்கள் கிடைத்துள்ளன.
முந்தைய வரலாற்று காலம் என்பது, பழங்கற்காலம்; புதிய கற்காலம்; இடைக்கற்காலம்; பெருங்கற்காலம் ஆகியவற்றை உள்ளடக்கியது.
இதில், இடைக்கற்காலத்திலும், புதிய கற்காலத்திலும் வாழ்ந்த மக்களின் வாழ்வியல் முறைகளுக்குச் சான்றாக விளங்குவது, பாறை ஓவியங்களும் வேட்டைக் கருவிகளும் ஆகும்.
அதே போல, பெருங்கற்காலத்தில் வாழ்ந்த மக்களின் வாழ்வியலில், புதைகுழி ஒழுகலாறு முதன்மை வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
இதனை, 1823 ஆம் ஆண்டு அப்போதைய மலபார் பகுதிகளில் (கேரள மாநிலம்), ஆய்வு செய்த பேபிங்டன் என்ற ஆங்கிலேய தொல்லியல் ஆய்வாளர் வெளி உலகுக்குக் கொண்டு வந்தார். இவர், பெருங்கற்காலத்தில் வாழ்ந்த மக்களின் பண்பாடு, வாழ்வியல் முறைகளை, பல்வேறு ஆதாரங்களுடன் பதிவு செய்தார். அதன்பின்புதான், நம் நாட்டின் தென்மாநிலங்களின் பல்வேறு பகுதிகளிலும், தொல்லியல் ஆய்வாளர்கள் பலர் பெருங்கற்காலம் பற்றிய ஆய்வுகளை மேற்கொண்டனர்.
இதில், தமிழகத்தில், ஈரோடு கொடுமணல், திருநெல்வேலி ஆதிச்சநல்லுார், நீலகிரி தெங்குமரஃகாடா, மசினகுடி, கோத்தகிரி, ஏக்குனி, நீர்காய்ச்சிமந்து ஆகிய பகுதிகள், பல்வேறு வரலாற்று பதிவுகளை உள்ளடக்கியதாக உள்ளன.
நீலகிரியில், 1873 ஆம் ஆண்டு அப்போதைய ஆணையராக இருந்த பிரீக்சு என்ற ஆங்கிலேயர், பெருங்கற்காலப் புதை குழிகளில் இருந்த சுடுமண் சிற்பங்கள் மற்றும் கலை பொருட்களை முதன்முதலாகக் கண்டறிந்தார். அவரால் திரட்டப்பட்ட தொன்மையான கலைப்பொருட்கள், சென்னை அரசு அருங்காட்சியத்திலும், இலண்டன், பெர்லின் போன்ற சிறந்த அருங்காட்சியகங்களிலும், இன்றும் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
பெருங்கற்காலப் புதை குழிகளில், கிணறு வடிவக் கல்லறை, ‘தால்மன்‘ கல்லறை, குத்துக்கல் கல்லறை, கல்வட்ட கல்லறை முதலான நான்கு வகைகள் உண்டு. இதில், கிணறு வடிவக் கல்லறைகள், நீலகிரி மாவட்டத்தில் மட்டும் காணப்படுகின்றன.
இம்மாவட்டத்தில், ஏக்குணி, கோத்தகிரி, நீர்காய்ச்சிமந்து, ஏழுகோட்டை முதலான பகுதிகளில், தொல்லியல் துறை ஆய்வாளர்களால், இத்தகைய புதைகுழிகள் கண்டறியப்பட்டு பதிவுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில், ஊட்டி அருகே உள்ள நீர்காய்ச்சி மந்து பகுதியில், தொல்லியல் ஆர்வலர் இரவிச்சந்தரன் குழுவினரால், உடைந்த நிலையில் சிதறிக் கிடந்த சுடுமண் சிற்பங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
அப்போது, அப்பகுதியில் உள்ள புதைக்குழி, கிணறு வடிவ கல்லறை போன்றவை 2000 ஆண்டுகளை கடந்தும், பாதுகாப்புடன் இருந்தது வியப்பை ஏற்படுத்தி உள்ளது.
கிணறு வடிவக் கல்லறையில் கிடைக்கப்பெற்ற, பெருங்கற்கால மக்களின், சுடுமண் சிற்பங்களில், எருமை, யானை, ஆடு, சிறிய சட்டிகள் ஆகியவை இருந்தன.
பெருங்கற்காலத்தில் வாழ்ந்த மக்கள் இறந்து விட்டால், அவர்களின் சடலத்தைப் புதைக்கும்போது, அதனுடன், நம்முடன் வாழும் கால்நடைகள், பல்வேறு பொருட்கள், சுடுமண் சிற்பங்கள் ஆகியவற்றையும் புதைத்து மரியாதை செலுத்துவதை அக்கால மக்கள் வழக்கமாக கொண்டிருந்தனர். இதனால், பெரும்பாலான புதை குழிகளில் இத்தகைய சிற்பங்கள் காணப்படுகின்றன.
கடந்த 1983, 84, 88, 91 ஆகிய ஆண்டுகளில், அமெரிக்காவில் உள்ள, சிக்காகோ மெக்சிகன் பல்கலைக் கழகப் பேராசிரியர் ஆலன் சாகிரல் என்பவர், இப்பகுதிக்கு வந்து, பெருங்கற்காலப் புதைகுழிகள் பற்றி ஆய்வு செய்து, பல்வேறு கட்டுரைகளை வெளியிட்டுள்ளார். அவை மாணவர்களுக்கான பாடங்களாகவும் உள்ளன. மேலும், இந்தப் பண்பாட்டுப் பரிமாற்றங்கள் அக்காலத்தில், நீலகிரியில் உள்ள மாயார் பள்ளத்தாக்கு; கேரளாவில் உள்ள பாலக்காடு பகுதிகளில் இருந்துதான் பரவியுள்ளன என்பது ஆய்வுகளின் மூலம் தெரியவந்தது. இத்தகைய தொன்மை வாய்ந்த வரலாற்றுக் கருவூலங்களைப் பாதுகாக்க வேண்டியது, மலை மாவட்ட மக்களுக்கு மட்டுமின்றி அனைவருக்குமான கடமையாகும்.
இது தொடர்பான ஆர்வம் கொண்டவர்களும் இந்த கிணறுவடிவ கல்லறை, சுடுமண் சிறபங்களைக் காணவிரும்புபவர்களும் தொடர்பு கொள்ளவேண்டிய எண்:9894009254.
-எல்.முருகராசு
Leave a Reply