நூல்கள் வாங்குவதைக் காலமுறைப்படி ஒழுங்குபடுத்த வேண்டும்! – இலக்குவனார் திருவள்ளுவன்
நூல்கள் வாங்குவதைக்
காலமுறைப்படி ஒழுங்குபடுத்த வேண்டும்!
தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத் தூறும் அறிவு.(திருவள்ளுவர், திருக்குறள் 396)
நமது அறிவுக்கண்களைத் திறக்க உதவுவன புத்தகங்களே! அத்தகைய புத்தகங்களை நல்கும் நூலகங்களே நமக்கு வழிகாட்டிகள். ஒவ்வொருவர் வீட்டிலும் நூலகம் இருக்க வேண்டும் என்பர் அறிஞர்கள். அவ்வாறாயின் ஒவ்வோர் ஊரிலும் நூலகம் இருக்க வேண்டுமல்லவா? தமிழ்நாட்டில் 4028 பொது நூலகங்கள்தாம் உள்ளன. இவைதவிர, கன்னிமாரா பொதுநூலகம், அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகம் என நூலகங்கள் உள்ளன. இருக்கின்ற நூலகங்களே வளர்ச்சிநோக்கில் செயல்படாதபொழுது ஊர்தோறும் நூலகம் தேவை என்பதை வலியுறுத்தி என்ன பயன்?
கோயில்களில், சாதி சமயச் சண்டைகள், சண்டைச்சச்சரவுகள், முதலானவை இடம் பெறுகின்றன. ஆனால், நூலகங்கள் அவ்வாறில்லை. எனவே,
நூலகம் என்பது ஆலயம் அல்ல அல்ல
அதையும் தாண்டிப் புனிதமானது நூலகம்
என்கிறார் கவிஞர் இரா.இரவி.
இத்தகைய நூலகங்கள் சரியாகப் பேணப்பட்டு, முறையாக இயங்க வேண்டுமல்லவா? அதற்கு, நாளும் புதிய புதிய நூல்கள் நூலகங்களுக்கு வரவேண்டுமல்லவா? ஆனால், கடந்த சில ஆண்டுகளாகவே, நூலகங்களுக்கு நூல்கள் வாங்குவது நிறுத்தப்பட்டு உள்ளது. நூல்கள் வாங்குவதால் படைப்பாளர்கள் பெருக்கமும் ஏற்படும். அறிவு வளமும் பெருகும். எல்லாவற்றிற்கும் முட்டுக்கட்டையாக நூலகத்துறைச்செயல்பாடுகள் இருக்கலாமா?
நூலகத்துறையினரே விரைந்து செயல்படுக! சிறந்து செயல்படுக!
என வேண்டுகின்றோம்.
இவ்வாறு நூல்களை வாங்கும் பொழுது, அதனைப் பின்வரும் வகையில் முறைப்படுத்த வேண்டுகின்றோம்.
- விண்ணப்பங்கள் தமிழில் இருக்க வேண்டும். தமிழில் விண்ணப்பங்களை வெளியிடுமாறு வேண்டியும் நூலகத்துறை கேளாச் செவிகளுடன் உறங்குகின்றது.
- ஆங்கிலப்புத்தகங்களுக்குப் பக்க வரையறை இல்லை. தமிழ்ப்புத்தகங்களுக்குப் பக்க வரையறை உண்டு. ஏன் இந்த மொழிப்பாகுபாடு? தமிழ்நாட்டில் தமிழை ஓரங்கட்டி அயல்மொழிக்கு முதன்மை ஏன்?
- புத்தகங்கள் தங்குதடையின்றி ஒரே சீராக வாங்கப்பட அதனைக் காலமுறைப்படி அமைக்க வேண்டும்.
ஆண்டிற்கொரு முறை விளம்பரம் வந்தபின்னர் விண்ணப்பிக்கலாம் என்றில்லாமல் ஒவ்வொரு காலாண்டின் இறுதி நாளில் விண்ணப்பிக்கலாம்.
இவ்விண்ணப்பங்கள் அடுத்த காலாண்டு இறுதிநாளுக்குள் ஏற்கப்பட்டு ஆணை வழங்கப்பட வேண்டும்.
இவற்றிற்கான தொகைகள் அதற்குமடுத்த காலாண்டிற்குள் வழங்கப்பட வேண்டும்.
– இவ்வாறு நூல்கள் வாங்குவதை முறைப்படுத்த வேண்டும்.
பின்வரும் அட்டவணை இதனைத் தெளிவுடுத்தும்.
பொதுநூலகத்துறை
நூல்கள் வாங்குகை, பெறுகை அட்டவணை
காலாண்டு எண் |
விண்ணப்பங்கள் பெறும் இறுதி நாள் |
விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டு வழங்கலாணை வழங்கு நாள் |
வழங்கப்பெற்ற நூல்களுக்குத் தொகை வழங்கும் நாள் |
1. | 31.03 | 30.06 நாளுக்கு முன்னதாக | 30.09 நாளுக்கு முன்னதாக |
2. | 30.06 | 30.09 நாளுக்கு முன்னதாக | 31.12 நாளுக்கு முன்னதாக |
3. | 30.09 | 31.12 நாளுக்கு முன்னதாக | 31.03 நாளுக்கு முன்னதாக |
4. | 31.12 | 31.03 நாளுக்கு முன்னதாக | 30.06 நாளுக்கு முன்னதாக |
இங்கே குறிப்பிடப்படும் கால வரம்பு அதிக அளவிற்குரியது. சனவரி இறுதியில் விண்ணப்பம் கொடுத்துவிட்டு அடுத்த நாளே ஆணை வேண்டும் என எதிர்பார்க்கக்கூடாது அல்லவா? எனினும் உடனுக்குடன் நூல்களை மதிப்பிட்டு ஆணை வழங்கப்பெற வேண்டும்.
இவ்வாறான காலமுறையைப் பயன்படுத்தினால், நிலையான அறிவிப்பு வழங்கி விண்ணப்பம் தந்தால் போதுமானது. அவரவர் வாய்ப்பிற்கேற்ப நூல்கள் வெளியிட்டதும் விண்ணப்பிக்க இயலும். எப்பொழுது நூலக ஆணை வரும் என எதிர்பார்த்திருக்க வேண்டா.
நூலக ஆணை வழங்கும்பொழுது, எத்தகைய தாளில் எந்த முறையிலான அச்சு, நூலின் அட்டை எத்தன்மையது என்பன போன்ற அச்சக்கூலியைத்தான் கணக்கில் எடுக்கின்றார்களே தவிர, படைப்பாளரின் அறிவுத்திறனைப் பொருட்படுத்துவதே இல்லை. பதிப்பித்தவருக்கு ஓரளவு ஆதாயம் கிட்டுமே தவிர அதனைப் படைத்தவருக்கு எந்த ஆதாயமும் இல்லை. எனவே, ஏற்கப்படும் நூலின் ஆசிரியருக்குக் குறைந்தது பத்தாயிரம் உரூபாயாவது மதிப்புத்தொகை வழங்க வேண்டும்.
பள்ளிக்கல்விச்செயலராக உதசயச்சந்திரன் இ.ஆ.ப. பொறுப்பேற்ற பின்னர், நூலகத்துறையில் எழுச்சி உதயமாகியுள்ளது. ஆளுமைச்சந்திப்பு நிகழ்ச்சிகளும் பயிற்சிக் கொண்டாட்டங்களும் எடுத்துக்காட்டுகளாகும். எனவே, இவர், காலமுறையில் நூல்கள் வாங்கவும் படைப்பாளர்கள் மதிக்கப்படவும் ஆவன செய்வார் என எதிர்நோக்குகிறோம்.
உள்ளாட்சி அலுவலகங்கள் மூலம் அனைவரிடமும் நூலக வரி வாங்கப்பெறுகிறது. ஆனால், அத்தொகை நூலக வளர்ச்சிக்குப் பயன்படுவதுபோல் தெரியவில்லை. அவ்வாறு நூலகத்துறைக்கு வழங்கப்பெறாத நூலகவரிகளை வட்டியுடன் நூலகத்துறை பெற்று நூலக வளர்ச்சியை மேம்படுத்த வேண்டும். தொடர்ச்சியாக நூல்களை வாங்கி, மக்களின் அறிவுச்செல்வம் பெருகத் துணை நிற்க வேண்டும். மாணாக்கர்களின் கல்வி வளர்ச்சிக்கும் பணிநாடுநரின் வேலைவாய்ப்பிற்கும் இளைஞர்களின் ஆக்கத்திறனுக்கும் உதவ வேண்டிய நூலகங்கள் புத்தெழுச்சி காணட்டும்!
வழக்கம் போலவே சிறந்த பரிந்துரைகளை ஐயா அவர்கள் அரசுக்கு முன்வைத்துள்ளார். தமிழுக்காக நல்ல பல முயற்சிகளை மேற்கொண்டு வரும் உதயச்சந்திரன் இ.ஆ.ப., அவர்கள் இவற்றைக் கட்டாயம் ஏற்று நடைமுறைக்குக் கொண்டு வருவார் என நம்புகிறேன்! பொதுமக்களுள் ஒருவன், தமிழார்வலர்களுள் ஒருவன் எனும் முறையில் இந்தப் பரிந்துரைகளை ஏற்றுச் செயல்படுத்துமாறு உதயச்சந்திரன் அவர்களை நானும் பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்!