eng.collete_struggleengineeringcollege02

  பெரும்பாலான பொறியியற் கல்லூரிகள், பெற்றோர்களிடம் கொள்ளையடித்துத் தங்கள் வருவாயை உருவாக்கிச் செல்வத்தைப் பெருக்கிக் கொள்வதாகவே உள்ளன. பொறியியற் கல்லூரிகள் என்பன அதை நடத்துவோர் வசதிகளுக்காகவே யன்றி, மாணாக்கர்களுக்கும் பெற்றோர்களுக்கும் உதவவோ கல்வி நலனுக்காகவோ அல்ல.

  பொதுவாக எந்த நிறுவனமும் சொந்த நிதிநிலையில் கல்லூரியை நடத்துவதில்லை. பெற்றோரிடம் நன்கொடை என்ற பெயரில் கொள்ளையடிக்கும் பணத்தில்தான் அனைத்து நிறுவனமும் கல்லூரிகளை நடத்துகின்றன. ஆனால், மாணவர்களுக்குரியவசதிகளைச் செய்து தருவதில்லை.

 ஆசிரியர்களுக்கும் விதிமுறைப்படியான முழு ஊதியத்தையும் தருவதில்லை. முறைப்படியான கல்வி வசதிகளை மாணவர்களுக்கு அளிக்க இயலாமலும் ஆசிரியர்களுக்கும் பிற பணியாளர்களுக்கும் ஊதியங்களையும் தரமுடியவில்லை என்றால்,ஏன் கல்லூரிகளை நடத்த வேண்டும்? இத்தகைய கல்லூரிகளை அரசே கையகப்படுத்தலாமே!

 சில கல்லூரிகள் முறைப்படியான ஊதியம் வழங்கினாலும் பிற கல்லூரிகள்போலவே ஆசிரியர்களைக் கொத்தடிமைகளாக நடத்துகின்றன. விடுப்புஉரிமைகளும் விடுமுறை உரிமைகளும் மறுக்கப்படுகின்றன. மகப்பேற்றிற்காக விடுப்பு எடுத்தாலும் ஈவுஇரக்கமின்றி வேலை நீக்கம் செய்கின்றன. கொத்தடிமைகளாக நடத்தப்படும் ஆசிரியர்களால் எப்படி நல்ல மாணாக்கர்களை உருவாக்க இயலும்?

 சில கல்லூரிகளில் தரமான உணவு வழங்குகின்றனர். மாணாக்கர்களுக்குக் கல்வி உதவித்தொகை, கடன்தொகை ஆகியனவும் வழங்குகின்றனர். ஆனால், அடிமைபோல் கட்டுப்படுத்தி வைத்தால்தான் உருப்படுவர் எனத் தவறாகக் கருதி, ஆசிரியர்கள், பணியாளர்கள், மாணாக்கர்களை அடிமைகள் போல் நடத்துகின்றனர். இநத்தகைய தவறான போக்குகளையும் களைய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  அரசு விடுமுறை விடச் சொல்லும் நாளில் கல்லூரிகளை நடத்தித் தண்டத்தொகை(அபராதம்) விதித்தால் கட்டி விடுகின்றன. அரசாணையை மீறும் கல்லூரிகளுக்குத் தண்டத் தொகை விதிக்காமல் அரசேற்பை நீக்குவதாக விதிமுறை அமைக்கவேண்டும். அப்பொழுதுதான் அரசாணைகளைப் பின்பற்றுவர்.

  பெரும்பாலான கல்லூரிகள் சிறுபான்மையர் ஒதுக்கீடு வாங்கி நடத்துகின்றனர். சிறுபான்மையர் விகிதத்திற்கு மாறாகக் கல்லூரி எண்ணிக்கைகள் உள்ளன. மொத்தக் கல்லூரிகளில் 170க்கு மேற்பட்டவை சிறுபான்மை உரிமையில் நடத்தப்படுவனவே! இவற்றில் பெரும்பான்மையன கிறித்துவச் சிறுபான்மையர் என்றும் தெலுங்குச் சிறுபான்மையர் என்றும் இசைவு பெற்றவையே! இவ்வாறு, விகித எண்ணிக்கைக்கு மீறாக ஏற்பிசைவு வழங்குவது பிற சிறுபான்மை இனத்தவருக்கும் பெரும்பான்மை இனத்தவருக்கும் இழைக்கப்படும் அநீதி என்பதை அரசு உணர வேண்டும்.  மேலும், சிறுபான்மையர் என்ற பெயரில் பிற மொழியினர்  நடத்தும் கல்வி  நிறுவனங்கள் பெருகியுள்ளமையால் தமிழ்நாட்டில் தமிழர் நலன் கேள்விக்குறியாகிறது என்பதையும் அரசு கருத்தில் கொள்ள வேண்டும். முழுமையான கல்வி நலன்களையும் ஊதிய நலன்களையும் வழங்காத நிறுவனங்களின் ஏற்பாணையை விலக்குவதன்மூலம் இதனை மட்டுப்படுத்த இயலும்.

  அரசு உறுதியான நடவடிக்கை எடுத்து, அனைத்துக் கல்லூரிகளும் முறைப்படி இயங்குகின்றனவா எனப் பார்த்து இல்லாதவற்றைக் கையகப்படுத்திக்கொள்ள வேண்டும்.

 பெற்றோர்களிடம் கொடைப்பணம் வாங்கி நடைபெறும் கல்லூரிகளைக் கூட்டுறவுக் கல்லூரிகளாக மாற்றிக் கொடையாளர்களைப் பங்கேற்பு உறுப்பினர்களாக மாற்ற வேண்டும். கூட்டுறவிலும் ஊழல்கள் நடைபெறுகின்றன; என்றாலும் ஊழல்களை மட்டுப்படுத்த இயலும்.

 பொறியியற்கல்லூரிகளைப்பற்றி இங்கே குறிப்பிட்டாலும் எல்லாத் தனியார்கல்லூரிகளுக்கும் இவை பொருந்தும். எனவே, அரசு தக்கவர்களைக் கொண்ட ஒரு குழுவை அமைத்து உரிய நடைமுறைப்படி நடவாத அனைத்துக் கல்லூரிகளையும் ஏற்று நடத்த வேண்டும். இதன் மூலம் மாணாக்கர், ஆசிரியர் நலன் மட்டுமல்லாமல் கல்வி நலனும்காக்கப்படும்.

தக்காங்கு நாடித் தலைச்செல்லா வண்ணத்தால்

ஒத்தாங்கு ஒறுப்பது வேந்து( திருவள்ளுவர், திருக்குறள் 561 ).

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

இதழுரை

 அகரமுதல 103 ஐப்பசி 15, 2046 / நவ. 01.2015