பசுவை வணங்கு…. கன்றுக்குட்டியைக் காயப்போடு! – புகழேந்தி தங்கராசு
பசுவை வணங்கு….
கன்றுக்குட்டியைக் காயப்போடு!
பசு மாட்டை வைத்து அரசியல் செய்வதை நிறுத்துங்கள்……
எதை உண்பது, எதை உடுத்துவது என்பதைத் தீர்மானிக்க நீங்கள் யார்…..
என்று பொரிந்து தள்ளியிருக்கிறார் வங்காளிகளின் ‘தீதி’ மம்தா பானர்சி.
பசு மாட்டு அரசியல் தான் விந்திய மலைக்கு அந்தப்புறம் கொடிகட்டிப் பறக்கிறது. மாட்டு இறைச்சி வைத்திருப்பவர்களைத் தூக்கிப் போட்டு மிதிக்க ஒரு கும்பல், மாட்டுத்தோல் வைத்திருப்பவர்களைக் கட்டிவைத்துப் பிளக்க இன்னொரு கும்பல் என்று வெறியுடன் திரிகிறது வட இந்தியா. மாட்டுத்தோலை உறிப்பதைத் தடுக்க, மனிதத் தோலை உறித்துக் கொண்டிருக்கிறார்கள். (கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல் – என்கிற இந்த நீதியை எங்கே பிடித்தார்கள்? மத்தியகிழக்கிலிருந்தா?)
செங்கத்தில் ஓர் அப்பாவி மிதியூர்தி(ஆட்டோ) ஓட்டுநர் குடும்பத்தின் மீது காவலர்கள் நடத்திய தாக்குதலுக்கும், குசராத்து உனாவில் ஒடுக்கப்பட்ட இளைஞர்களை ‘இந்து தருமக் காவல்தெய்வங்கள்’ அடித்துப் பிளப்பதற்கும் எந்த வேறுபாடும் இல்லை.
வெற்று அறிக்கையெல்லாம் விட்டுக்கொண்டிருக்காமல், நூறாயிரக்கணக்கான மக்களைத் திரட்டி நீதி கேட்டிருக்கிறார் மம்தா.
“நான் ஆட்டிறைச்சி சாப்பிட்டால் தவறில்லை என்கிறார்கள். ஆனால், மாட்டிறைச்சி சாப்பிடுபவர்களிடம்போய்ச் சிக்கல் செய்கிறார்கள்……….
வங்காளிகளின் விருப்பம் வேட்டி அணிவதுதான். சிலர் வண்ணவேட்டி(சாரம்) அணிய விரும்பினால் என்ன தவறு? அது அவர்கள் விருப்பம்….
தனக்குத் தேவையானதைத் தேர்ந்தெடுக்கிற உரிமை ஒவ்வொருவருக்கும் இருக்கிறது… அதில் தலையிட நீங்கள் யார்…”
பொதுவாகவே மம்தாவின் பேச்சில் அனல் பறக்கும். அவரது கொல்கத்தா உரை, அப்பழுக்கற்ற நெருப்பு மழை.
மம்தாவின் உரை தொடர்பாக, நண்பர்கள் அப்புசாமியும் குப்புசாமியும் வாதுரைத்தபோது, நான் குறுக்கிடவேயில்லை. பசுவின் தெய்வீகத் தன்மைபற்றி அலசி ஆராய நேரமில்லையென்றாலும், ‘பசு ஒரு பேதை உயிரி(அப்பிராணிப் பிராணி‘) என்கிற அப்புசாமியின் வாதத்தில் எனக்கும் உடன்பாடு. அதேசமயம், ‘அதைக்காட்டிலும் பேதையரான(அப்பிராணிகளான) அப்பா அம்மாவையெல்லாம் முதியோர் இல்லத்தில் ஒப்படைத்துவிடுகிறோமே‘ என்கிற குப்புசாமியின் ஆதங்கத்தையும் என்னால் மறுக்க முடியவில்லை.
தேவர் படநிறுவனத்திற்கு மட்டுமில்லை…….. நமக்கும், கோமாதாவே குலமாதாவாக இருந்துவிட்டுப் போகட்டும்! ஆனால், அதை வணங்குகிற மனநிலையும், நமக்கு நிகரான பிறிதோர் உயிராக அதை மதிக்கிற மனநிலையும் ஒன்றல்ல!
குசராத்து மக்களிடையே இருக்கிறதோ இல்லையோ, சத்தீசுகரின் பழங்குடியினமான கோண்டு மக்களிடையே அந்த உன்னதமான மனநிலை இருக்கிறது. அவர்கள், வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடுகிறவர்கள், இதயப்பூர்வமாக இயற்கையை நேசிக்கிறவர்கள்.
கோண்டு இனத்தவருக்கும் மாவோயியத்தினருக்கும் இடையிலான இயல்பான நட்புக்கு, அதிகாரவர்க்கத்தின் துணையுடன் இயற்கை வளங்களைச் சுரண்டி அழிக்கும் ஆதிக்க ஆற்றல்களை மாவோயியத்தினர் எதிர்த்ததுதான் அடிப்படை.
கோண்டு மக்களை மாவோயியயத்தினர் பிடியிலிருந்து மீட்க, கவர்ச்சியான சலுகைகளை ஆட்சியாளர்கள் அறிவிப்பதுண்டு. அப்படித்தான் ஒருமுறை, ‘வீட்டுக்கொரு பசு’ வழங்கப்படுமென்று அறிவிக்கப்பட்டது.
கோண்டு இனத்தில் பிறந்து படிப்படியாக முன்னேறி இதழாளரான உடன்பிறந்தாள் புட்பா ரோகேர் அதைப்பற்றிப் பேசியது இப்போதும் நினைவிருக்கிறது எனக்கு! புட்பாவின் வார்த்தை ஒவ்வொன்றும் இதயமுள்ளவர்களைச் சுடும்.
“வீட்டுக்கு ஒரு பசு – திட்டத்தின் கீழ் அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் எங்களுக்குக் கொடுத்த மாடுகள் அநேகமாக வயதானவை, நோய்வாய்ப்பட்டவை. அந்த மாடுகளை வைத்து எங்கள் மக்கள் என்ன செய்திருக்க முடியும் என்று நினைக்கிறீர்கள்” என்கிற புட்பாவின் கேள்வி ஆழமானது….. அதிகாரவருக்கத்தின் உளுத்துப்போன ஊழல் மனப்பான்மையை அம்பலப்படுத்துவது!
இதைத் தொடர்ந்து புட்பா சொல்வது, நம்மை நெகிழவைக்கிற அடுத்த உண்மை..
“நோயிலி(ஆரோக்கியமான) மாடுகளாகவே இருந்திருந்தாலும், கோண்டு இனத்தவரான நாங்கள் பசுவின் பாலைக் கறந்து பயன்படுத்தியிருக்க மாட்டோம். பசுவின் மடியிலிருக்கும் பால், அதன் கன்றுக்கு மட்டுமே உரியது என்பது எங்கள் நம்பிக்கை“…..
புட்பா என்கிற அந்த கோண்டு உடன்பிறந்தாள் சொல்வதைப் படிக்கும்போது, பொறி கலங்கிவிடுகிறது நமக்கு!
வைக்கோல் கன்றுக்குட்டியைக் காட்டி, பசுவின் மடியில் பாலைச் சுரண்டுகிறார் பால்காரர். ”தூய்மையாக இருக்கும் அல்லவா?…. சாமிக்கு திருமுழுக்கு செய்ய வாங்குகிறேன்” என்று, பக்கத்தில் நின்று பீற்றிக் கொண்டிருக்கிறோம் நாம். நமக்கும் கோண்டுகளுக்கும் ஒரே ஒரு வேறுபாடுதான்! அவர்கள் – மனிதச்சாதி!
திருமுழுக்கிற்கு(அபிசேகத்திற்கு)ப் பசுவின் பால் வேண்டும் நமக்கு…..
பேரக் குழந்தைக்குப் பசுவின் பால் வேண்டும்…..
சளியைக் குணமாக்க பனங்கற்கண்டு பசும்பால் வேண்டும்….
தாயின் மடியிலிருந்து பால் சுரண்டப்படுவதை, கட்டிப்போட்ட இடத்திலிருந்து பார்த்துக் கொண்டிருக்கிற ஒரு கன்றுக்குட்டியின் பரிதவிப்பை என்றாவது உணர்ந்ததுண்டா நாம்! அந்தத் தாயின் குழந்தையை வாடவைத்துவிட்டு, “கோமாதா எங்கள் குலமாதா” என்று பாடிக்கொண்டிருப்பது பச்சை தகவிலித்தனமாக (அயோக்கியத்தனமாக) இல்லையா? பசுவை வணங்கு, கன்றுக்குட்டியைக் காயப்போடு – நன்றாக இருக்கிறதல்லவா நயன்மை(நியாயம்)!
நம்முடைய அற்பத் தேவைக்காக, ஓர் அப்பாவி சீவனுக்கு வைக்கோல் கன்றுக்குட்டியைக் காட்டி ஒட்டக் கறந்துவிடுகிற நம்மை எங்கே கட்டிவைக்க வேண்டும், எப்படி அடித்துப் பிளக்க வேண்டும் என்பதையெல்லாம் யார் தீர்மானிப்பது?
“நாவால் நக்குது வெள்ளைப்பசு
நல்லா நக்கிக் குடிக்குது கன்றுக்குட்டி...”
என்று பாடினால், தலையாட்டி மகிழ்கிற என் பேரன் ஆதவனைப் போலவே, உங்கள் வீட்டிலும் ஒரு குழந்தை இருக்கக் கூடும். வைக்கோல் கன்றுக்குட்டியைக் காட்டி ஓர் உயிரை ஏமாற்றுவதைப்போல, இப்படியெல்லாம் பாடி சொந்தக் குழந்தைகளையும் ஏமாற்றிக் கொண்டிருக்கிற நாம் எந்த இனத்தில் சேர்த்தி?
புகழேந்தி தங்கராசு
தமிழக அரசியல் 8:74 :
27.07.2016 – பக்கங்கள் : 08-09
இரண்டு பக்கம்
கண்டிப்பாக நாம் மனித இனத்தில் சேர்த்தி இல்லைதான்! வெகு காலமாக மனதில் உறுத்திக் கொண்டிருந்த கேள்விகள். நன்றாக நாக்கைப் பிடுங்குமாறு கேட்டிருக்கிறார் ஐயா அவர்கள்! உரைக்க வேண்டியவர்களுக்கு உரைக்கட்டும்!