பண்டைத்தமிழர்களின் வாழ்வியலோடு பெரிதும் தொடர்புடைய அடையாளமாக இன்று நம் மத்தியில் எஞ்சி இருப்பது, ஏறுதழுவல் அல்லது சல்லிக்கட்டு.

  பல நூற்றாண்டுகளைத் தாண்டி நிற்கும் எமது இனத்தின் அடையாளமான ஏறுதழுவல் அல்லது சல்லிக்கட்டு என்பது தமிழர்களில் தொன்மைக் குடிகளான ஆயர்களின் (இடையர், கோனார்) மரபுவழி குல விளையாட்டுகளில் ஒன்றாகும்.

  ஏறு என்பது காளை மாட்டைக் குறிக்கும். மாட்டை மனிதர்கள் அடக்குவது அல்லது கொம்பைப் பிடித்து வீழ்த்துவதுதான் விளையாட்டு.

  சல்லிக்கட்டு தற்போதய தமிழ்நாட்டில் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு வகையாக நடைபெறுகிறது. மதுரை அலங்காநல்லூர் போன்ற இடங்களில் வாடிவாசல் வழியாக வெளியேறும் காளைகளை இளைஞர்கள் விரட்டிச் சென்று அதன் திமில் மீது தொங்கியபடி குறிப்பிட்ட  தொலைவு செல்கிறார்கள்.

 பண்டைய தமிழ் நூல்கள் ஏறுதழுவலை ஒரே  வகையாகத்தான் குறிப்பிடுகின்றன.

 பெயர்க்காரணம்: சல்லிக்கட்டு என்ற பெயர் தற்காலத்தில் உருவான பெயர் மட்டுமே.

  முல்லை நிலத்தில் வாழ்ந்த ஆயர் இன மக்கள் காளையை அடக்குபவனை மணமகனாகத் தேர்வு செய்யும் முறையைக் கைவிட பெண்ணிற்காகக் காளையை அடக்கிய ஆயர் குல ஆடவர்கள் சல்லிக்காசு காளையை அடக்கத் தொடங்கினர்.

  முல்லை நிலத்தில் வாழ்ந்த ஆயர் இன மக்கள் காளையை அடக்குபவனை மணமகனாகத் தேர்வு செய்யும் முறையை ஏன் கைவிட்டார்கள் என ஆராயும்போது,

திருமணம் ஆன ஆண்கள் போட்டியில் கலந்து கொண்டிருக்கலாம்.

வேறு சமுகத்தை சேர்ந்தவர்களும் கலந்து கோள்ளமுயன்றிருக்கலாம்.

  வட தமிழகத்தில் வடம் மஞ்சுவிரட்டு என்ற பெயரில், 20 அடி நீளக் கயிற்றால் காளையைக் கட்டி, இருபுறமும் காளையை ஆண்கள் இழுத்துப் பிடிக்க, ஒரு சிலர் மட்டும் அதன் முன்னே நின்று கொம்பில் உள்ள பரிசுப் பணத்தை எடுக்க முயல்கிறார்கள்.

  சல்லி என்பது விழாவின் போது மாட்டின் கழுத்தில் கட்டப்படுகிற வளையத்தினைக் குறிக்கும். புளியங் கம்பினால் வளையம் செய்து காளையின் கழுத்தில் அணியும் வழக்கம் தற்போதும் வழக்கத்தில் உள்ளது. மேலும் 50 ஆண்டுகளுக்கு முன்பு புழக்கத்தில் இருந்த ‘சல்லிக் காசு’ என்னும் இந்திய நாணயங்களைத் துணியில் வைத்து மாட்டின் கொம்புகளில் கட்டிவிடப்படும் பழக்கம் இருந்தது. மாட்டை அணையும் வீரருக்கு அந்தப் பணமுடிப்பு சொந்தமாகும். இந்தப் பழக்கம் பிற்காலத்தில் ‘சல்லிக்கட்டு’ என்று மாறியது. பேச்சு வழக்கில் அது திரிந்து ‘ஜல்லிக்கட்டு‘ என்று ஆனது என்றும் கூறப்படுகிறது.

ஆயர்களின் வீரம்:

பழந்தமிழ் இலக்கியங்களிலும் சிந்துவெளி நாகரித்திலும் ஏறுதழுவல் நிகழ்ந்ததற்கான சான்றுகள் உள்ளன. ஏறு தழுவுதல் (மஞ்சு விரட்டுதல்) என்ற சொல் பழந்தமிழ் இலக்கியங்களில் காளையை அடக்கும் வீர விளையாட்டின் பெயராகப் பயின்று வருகிறது. கொல்லக் கூடிய காளையைத் தழுவிப் போரிட்டு அடக்குவதால் ‘கொல்லேறு தழுவுதல்’ என்றும் சிறப்பித்துக் கூறப்படுகிறது. புது தில்லி தேசியக் கண்காட்சியகத்தில் பாதுகாக்கப்படுகின்ற சிந்துவெளி நாகரிகம் சார்ந்த முத்திரை ஒன்றில் ஒரு காளை உருவமும் அதை அடக்க முயலும் வீரரை அக்காளை தூக்கி எறிவதும் உயிரோட்டமான விதத்தில் சித்திரிக்கப்பட்டுள்ளது. இதிலிருந்து கி.மு. 2000 ஆண்டு அளவிலேயே ஏறுதழுவல் வழக்கத்தில் இருந்தது என்று ஐராவதம் மகாதேவன் போன்ற அறிஞர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்

கலித்தொகை, பெரும்பாணாற்றுப்படை என பரவலான இலக்கிய படைப்புகளில் ஏறு தழுவுதலைப்பற்றிய செய்திகள் உள்ளன. ஏறு தழுவுவது வீரத்தின் அடையாளமாக மட்டுமின்றி, திருமணத்துக்கான முன்முயற்சியாகவும் முல்லைக்கலியில் பேசப்படுகிறது. வேட்டையிலும் போரிலும் விலங்குகளை அடக்கும் பயிற்சியாகவும் அது கருதப்படுகிறது. ஆயர் குலத்தவர்கள்தான் ஏறு தழுவுதலை வாழ்வியல் பண்பாடாகச் செம்மைப்படுத்தி இருக்கின்றனர்.

  அக்காலத்தில் மண் அசையா சொத்து. செல்வம் என பெயர் பெற்ற ‘மாடு’ அசையும் சொத்து. எதிரியின் இடத்தில் புகுந்து மாட்டு மந்தையை (ஆநிரை) கவர்வதே வம்புக்கிழுக்கும்  போர்த் தந்திரம். ஆநிரை கவர்வோரும், அதை மீட்போரும் காளைகளை அடக்க வேண்டியது கட்டாயம் என்பதால்  அரண்மனை வீரர்களான கள்ளர்களும் மறவர்களும் அக்கலையில் தேர்ச்சி பெற்றிருந்தனர். முல்லை நிலத்தவரை தவிர வேறு எந்த நிலத்தவரும் ஏறு தழுவியதாக எந்தச் செய்தியும் இலக்கியத்தில் இல்லை என்றாலும் இது தமிழர்களின் பண்பாடாகவே அறியப்பட்டுள்ளது.

  சல்லிக்கட்டு என்ற விளையாட்டின் பின்னால் தென்மாவட்ட  ஊர்ப்புறப் பண்பாட்டின் வேர்கள் எவ்வளவு ஆழமாக ஊடுருவியிருக்கிறது. சல்லிகட்டு மாடு வளர்க்கப்படுவதே ஒரு கலை. அந்த மாட்டைப் படைத்துறைக்கு ஆயத்தம் செய்பவரைப்போலப் பார்த்துப் பார்த்து வளர்க்கிறார்கள். பச்சரிசி ஆட்டி உண்ணக் கொடுக்கிறார்கள்.  அன்றாடம் குளியல், நடை, சீற்றம் பாய்வது என்று மாடு கொஞ்சம் கொஞ்சமாக  ஆயத்தமாக்கப்படுவது  ஓர் அரிய கலை.

  ஏறு தழுவுதல் வீறுடைய ஏறு முல்லை நிலத்தில் வளமான புல்லுண்டு. அதனை வயிறார மேய்ந்து மாடுகள் அழகிய மேனி பெற்று விளங்கும். அந் நிலத்தில் வாழும் ஆயர்க்கு அவையே அரும்பெருஞ் செல்வம். மாடுகளில் ஆண்மையுடையது எருது. அதனை ஏறு என்றும், காளை என்றும் கூறுவார். வீறுடைய ஏறுகள் கடும் புலியையும் நேர் நின்று தாக்கும்; வலிய கொம்புகளால் அதன் உடலைபக்கீறிக் கொல்லும். இத்தன்மை வாய்ந்த எருதுகளைக் கொல்லேறு என்றும், மாக்காளை என்றும் தமிழ் நாட்டார் போற்றுவர்.

  மாடு அதை வளர்ப்பவனின் குணத்தினையே பெரிதும் கொண்டிருக்கிறது. சல்லிகட்டில் அதுபோன்ற மாடுகளை யார் வளர்க்கிறார் என்று அறிந்தே அதன் பாய்ச்சலைத் தெரிந்து கொள்கிறார்கள். சில மாடுகள்  இலேசாகச் சீண்டினால் உடனே பாய்ந்துவிடக்கூடியவை. ஆனால் சில மாடுகளோ சலனமேயில்லாமல் நின்று பார்த்தபடியே இருக்கும். நெருங்கிவந்து பாயும்போது மட்டுமே சீற்றம் கொள்ளும். இன்னும் ஒரு சில மாடுகள் பயங்கரமாகத் துள்ளி ஆடித் தெறிக்கும். ஆனால் பிடிபட்டவுடன் பசுபோல அடங்கிப் போய்விடும். அதுபோன்ற மாடுகளைக் கேலி செய்வார்கள். இது போலவே மாடுகளுக்கு ஊர்வாகும் சேர்ந்தேயிருக்கிறது

  பெயினில் (Spain) இன்றும் காளைச் சண்டைகள் நடக்கின்றன. குதிரைப் பந்தய  ஓட்டம் உலகெங்கும் நடந்தபடியே தானிருக்கிறது. நாய்களைப் பழக்கி சண்டையிடுவது அலாக்காவில் காணப்படுகிறது. இவை முறைப்படுத்தபட்டிருக்கின்றன.  விலங்குகளின்  உடல் நலம் நலன் குறித்த அக்கறைகள் முறையாக மேற்கொள்ளவும் கண்காணிக்கவும் படுகின்றன. ஆனால் நம்மிடையே அதற்கான முயற்சிகள் குறைவாகவே உள்ளன. எல்லா வீரக்கலைகளும் போலவே தான் சல்லிகட்டும். அதில் மாடுகள் கொல்லப்படுவதில்லை.

  மாடு நுரை தள்ளிவிட்டால் உடனே நிறுத்தும்படியாக அறிவிப்பு வந்துவிடுகிறது. அதுபோல அந்த மாடுகளைப் பிடிக்க முயல்கின்றவர்கள் பரிசுப்பணத்தின் காரணமாகப் போட்டியில் கலந்து கொள்வதில்லை. அது தரும்  வீர உணர்வையே பெரிதாக நினைக்கிறார்கள்.

சல்லிகட்டு என்ற விளையாட்டின் பின்னால் சொல்லித்தீராத கதைகள் புதைந்திருக்கின்றன.

காலத்தின் போக்கில் மனத்தில் உறங்கிக்கிடந்த சல்லிக்கட்டின் நினைவுகள் பீறிடுகின்றன. காளையின் மூச்சு சீறும்  ஒலி நினைவு அடுக்குகளில் கேட்கத் தொடங்கியுள்ளது.

  “கொல்லேற்றுக் கோடஞ்சுவானை மறுமையும் புல்லாளே ஆய மகள்-கலித்தொகை” அழிந்து வரும் தமிழனின்  பண்பாட்டு வரலாற்றில் மிச்சம் இருப்பது சல்லிகட்டு மட்டும்தான்

  தமிழ் இலக்கியப் படிப்பும் புரிதலும் இதனை மனங்கவர் பெண்ணைஅடைதற்கு வழிமுறையாகவும், ஏனையோர்க்கு வீரவிளையாட்டாகவும் மட்டுமே பதிவுசெய்து போய் இருக்கின்றன . இங்கு நாம்நினைவிற் கொள்ள வேண்டியது பழம்மரபுகள் அனைத்தையும் இலக்கியங்கள் பதிவுசெய்து வைத்திருப்பதில்லை. தொல்குடியின் தொடர்ச்சியாய் உருமாறிப்போன பலவற்றையும் கலை என்ற பெயரில் கூத்தென்ற பெயரில்,விளையாட்டென்ற பெயரில் அவை தம்முள் பொதிந்துவைத்திருக்கின்றன. அவை படைக்கப்பட்டபோதும் பயிலப்பட்டபோதும் அவற்றின் ஆதிகாரணம் இன்னதென அப்பழந்தமிழர் அறிந்திருந்தனரா என்று அறுதியிட்டுக் கூறவியலாது. ஆனால் நமக்கிருக்கும் இன்றைய அறிவு இப்பழந்தமிழ்க் கருவூலங்களில் பொதிந்து கிடக்கும் உட்பொருள்களை, ஆதிமனித எச்சங்களைப் பண்பாடுறத்துடித்த சமூகத்தின் வேர்களை வெளிக்கொணர்வதாய் அமைதல் நலம் பயக்கும் என்று நம்புகிறேன்.

  நம் இலக்கியங்கள் களிற்றினும் வலிமை பொருந்திய காளைகளைக் காட்டுகின்றன. அவற்றை அடக்கும் முயற்சியில் உயிர்நீத்த வீரர்களைக் காட்டுகின்றன. தொல்பழங்காலத்தில், காடு கரை, வீடுஎன்பன வெல்லாம் ஒருவன் கொண்ட செல்வத்தின் அடையாளங்கள் அல்ல. ஒருவன் கொண்ட செல்வம் என்பது, அவனிடம் இருக்கும் ஆநிரைகள்தான். அவற்றைக் காடுகளில் உயிரைப் பணயம் வைத்து அவன் பிடித்துவர வேண்டிஇருந்தது. பழக்கப்படுத்தி அவனது பட்டியில் சேர்க்க வேண்டி இருந்தது.

கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவர்க்கு

மாடல்ல மற்றை யவை

என்னும் இடத்தில் செல்வம் என்பதற்கு மாடு என்றே வள்ளுவன் ஆள்கிறான்.

முதலில் இந்த ஏறுதழுவுதல் என்னும் வீர விளையாட்டு பண்டைத்தமிழர்களின் வாழ்வியலோடு பெரிதும் தொடர்புடையதாய் இருந்த ஒரு தொழிலின் அடையாளமாக இன்று நம்மத்தியில் எஞ்சி இருப்பது.

தமிழ் இலக்கியங்கள் ஏத்திப்போற்றும் வீரமும் காதலும் இதில் உண்டு.

தன் வீரத்தைக் காட்டித் தான் விரும்பும் பெண்ணை மணமுடிக்கும் வாய்ப்பினைத் தரும் விளையாட்டாக இது தமிழ் இலக்கியப்பின்புலத்தில் வைத்துப் பார்க்கப்படுகிறது.

  வீர விளையாட்டுகள் எல்லாமே பங்கேற்பாளரின் முழுவிருப்பத்தோடுதான் நடைபெறுகின்றன. அதில் ஏற்படும்  நன்மை, தீமைகளுக்கு அவர்களே முழுப்பொறுப்பாவார்கள்.

  காயங்களும் வலியும், உயிரச்சமும் இல்லாத வீர விளையாட்டுகள் அல்லது  வீரவினை(சாகச) நிகழ்ச்சிகள் எதுவுமில்லை.

  உலகின் மிக உயர்ந்த சிகரத்தைத் தொடவேண்டும் என்று முனைபவனும் சரி, ஆழமான பள்ளத்தாக்கின்மேல் ஒற்றைச் சிறுகயிற்றைக் கட்டிக் கடப்பவனும் சரி, உயிர்இடர்ப்பாட்டிற்குத் துணிந்துதான் அச்செயலில் ஈடுபடுகிறான்.

  மெய்சிலிர்க்க உள்நடுங்கி அதை வியந்து பார்க்கும் பார்வையாளர்களுக்குத் தெரியும்.! “ வீரம் என்பதே உயிர் பொருட்படுத்தாமைதான். ”

  ஓர் இனம் தனது பண்பாட்டின் அடையாளம் என்று பேணிவருகின்ற, காக்கத்துடிக்கின்ற ஒரு மரபு சரியா தவறா என்கிற  சொற்போர் அவ்வினத்தின் உள்ளிருந்தோ புறத்திருந்தோ ஏற்படுகின்ற போது, அவற்றின்  நன்மை, தீமைகளைச் சீர்தூக்கிப் பார்க்கவும் நன்றெனில் ஏற்கவும் தீயதெனில் புறந்தள்ளவுமான அதிகாரம் அவ்வினத்தின் கைகளில் தான் இருக்கவேண்டும்.

  ஒற்றுமைக் குரலொலி, நம் மொழியும் இனமும் சிதைக்கப்படும் இடங்களில் எல்லாம் எப்போதும் ஓங்கி ஒலிக்க வேண்டும்.

– ஈழத்து நிலவன்