கீருத்திகா இரவிச்சந்திரன்

கீருத்திகா இரவிச்சந்திரன்

  சாரங்கத்தேவர்தான் கருநாடக இசையை உண்டாக்கியவர் என்றும், பரத முனிவர்தான் பரத நாட்டியத்தைக் கண்டு பிடித்தவர் என்றும் ஒரு கூட்டத்தார் கூறி வருகின்றனர்.

  காசுமீரத்துச் சாரங்கதேவர்தான் கருநாடக இசையைப் படைத்தவர் என்பது உண்மையானால் காசுமீரத்திலும், மத்தியப்பிரதேசத்திலும், உத்தரப்பிரதேசத்திலும் இன்றுள்ள இசைவாணர்கள் மோகனத்தையும் (முல்லைப்பண்), யதுகுல காம்போதியையும் (செவ்வழி), மத்தியமாவதியையும் (செந்துருத்தி) பாடிக் கொண்டிருக்க வேண்டும். வடபுலத்துப் பரத முனிவர்தாம் பரத நாட்டியத்தைக் கண்டுபிடித்தவர் என்பது உண்மையானால், இன்று பஞ்சாபிலும், பீகாரிலும், வங்காளத்திலும் நாட்டியக் கலைஞர்கள் பரதநாட்டியம் ஆடிக்கொண்டிருக்க வேண்டும். கருநாடக இசையும் பாரத நாட்டியமும் ஆந்திராவுக்கு அப்பால் எங்குமே இல்லையே! இதற்கு என்ன பொருள்?

  இன்றுவரையில் தமிழ்ப்பண்களின் பெயர்களைக் கூறித் தமிழில் செவ்விசை பாடிக் கொண்டிருக்கும் ஓதுவார்கள் தமிழர்களா? மற்றவர்களா? 12ஆம் நூற்றாண்டில் ஓதுவார்களின் இசையையும் நாயனக் கலைஞர்களின் இசையையும் தமிழ் நாட்டுக்கு வந்து கேட்டுச் சென்றுதான் சாரங்கதேவர் ‘சங்கீத ரத்னாகரத்தை’ எழுதினார் என்பது அவர்களுக்குத் தெரியாது

  அந்நூலில் தேவாரவர்த்தினி என்றும் திராவிடகுச்சரி என்றும் சாரங்கதேவர் குறிப்பிடும் இராகங்களின் பெயர்களே அவை தமிழர்க்குச் சொந்தமான பண்கள் என்பதைக் காட்டவில்லையா?

  1930 வரையில் தமிழ் நாட்டுத் திருக்கோயில்களிலும் பிறமேடைகளிலும் சதிராட்டம் என்ற பெயரில் பரத நாட்டியம் ஆடிக்கொண்டிருந்தவர்கள் தளியிலார் எனப்படும் தமிழ் மகளிர் தாமே? அந்தப் பரத நாட்டியம் எப்படி மற்றவர்களுக்குச் சொந்தமாகும்? கி.பி.5ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பரதமுனிவர் எழுதிய பரத சாத்திரம்தான் பரத நாட்டியத்துக்கு முதல் நூல் என்றால், அதற்குப் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே சிலப்பதிகாரத்து மாதவி நன்கனம் கடைப்பிடித்து ஆடிய ‘நாட்டிய நன்னூல்’ யாரால் படைக்கப்பட்டது?

– முனைவர் இரா.திருமுருகன் : சிலப்பதிகாரம் தமிழன் படைத்த கலைக்கருவூலம்: புகுமுகம்

Thiru-murugan_ira03