banana-cartshop

  உலகில் பண்பிலார் பெருகிவிட்டனர். ஒழுங்கின்மையும் ஊழலும் ஒழுக்கக்கேடும் பெருகிவிட்டன. எனினும் பண்பில் சிறந்தவர்கள் இன்றும் உள்ளனர்! இனியும் இருப்பர்!

நெல்லுக் கிறைத்தநீர் வாய்க்கால் வழியோடிப்

புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம் – தொல் உலகில்

நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு

எல்லார்க்கும் பெய்யும் மழை.

 

என்னும் ஔவையார் மூதுரைக்கு(10) இணங்க இத்தகைய சிலரால்தான் பிறர் பயனுறுகின்றனர். இத்தகையோரை நாம் வாழ்வில் சந்தித்திருப்போம்! நானும் பலரைச் சந்தித்துள்ளேன். மறக்க முடியாத அவர்களுள் இருவரைப்பற்றிய நினைவுகளைப் பகிர விரும்புகின்றேன்.

  1980 ஆம் ஆண்டில் ஒருநாள்! வழக்கமாக இரவில் உணவிற்குப் பின்னர், பாரதிசாலையில் (பைகிராப்ட்டு சாலை) நூலகம் முன்னர் அமைந்த பழக்கடையில் பழம் வாங்கி உண்பதை வழக்கமாகக் கொண்டிருந்தேன். அன்றைக்கு அப்பழக்கடையில் 12 அகவை மதிக்கத்தக்க சிறுவன் ஒருவன் இருந்தான். அவன் சொன்ன பழம் விலையில் 2 காசு குறைக்கச் சொன்னேன். முடியாது என்றான். “வழக்கமாக உன் அப்பா இருப்பார். அவரைவிட நீ ஏன் கூடுதலாகச் சொல்கிறாய்” என்று கேட்டு விட்டு அவன் கேட்ட காசைக் கொடுத்து விட்டேன்.

  பொதுவாகத் தள்ளுவண்டியில் விற்போர், நடைபாதையில் விற்போர் எனச் சிறு வணிகரிடம் பேரம் பேசுவதில்லை.(பெரு வணிகரிடம் எங்கே பேரம் பேச முடிகிறது?) என்றாலும் கேட்ட விலையைக் கொடுத்து விட்டால் இன்னும் விலையேற்றி விடுவார்கள் என்ற எண்ணத்தில் ஒரு முறை கேட்டு விட்டு அதற்கிணங்கக் குறைத்தாலும் இல்லாவிட்டாலும் வாங்கி விடுவேன். எனவே, கூடுதலாகக் கேட்டது குறித்துப் பொருட்படுத்த வில்லை. அக்கடையைத்தாண்டி சில அடிகள் எடுத்து வைத்திருப்பேன். திடீரென்று அச்சிறுவன் ஓடி வந்து “இந்தாங்கய்யா 2 காசு” என்றான். “நான் கேட்ட பொழுது குறைத்துத் தராமல், எதற்கு இப்பொழுது திருப்பித் தருகிறாய்” என்று கேட்டேன்.

  “இல்லைங்க ஐயா! அடுத்து வந்தவரிடம் 2 காசு குறைத்து விற்று விட்டேன். அப்படியானால் உங்களுக்கு 2 காசு திருப்பித் தரவேண்டுமல்லவா” என்றான்.“என்னிடம்தான் உன் விற்பனை முடிந்துவிட்டதே! எனவே, நீயே காசை வைத்துக்கொள்” என்றேன். “ஒவ்வொருவருக்கு ஒரு விலை என்பதெல்லாம் நியாயமல்ல. கடையில் ஆளில்லை இந்தாருங்கள்   வைத்துக் கொள்ளுங்கள்.” என்று விடாப்பிடியாகக் காசைக் கையில் திணித்துவிட்டுச் சென்றான்.

கொள்வதூஉம் மிகை கொளாது,

கொடுப்பதூஉம் குறை கொடாது, (பட்டினப்பாலை அடி 210)

வாழும் தமிழர் வணிக அறம் மரபு வழியில் இன்றும் நிலைத்துள்ளது.

  பள்ளிப்படிப்பை அதிகம் படித்திராத சிறுவன், வணிக நாணயத்தைப் படித்துள்ள விந்தை இன்னும் மறக்காமல் உள்ளது! இவனைப் போன்றவர்களால்தான் உலகம் இன்னும் நிலைத்து நிற்கிறது.

 auto-1

  மற்றொரு நிகழ்வு 1986 இல் நடைபெற்றது.

  மிதியுந்து ஓட்டுநர்களில், அளவுக்கு மீறிப்பணம்கேட்பது, சில இடங்களுக்கு வர மறுப்பது, சுற்றி அழைத்துச் செல்வது, பேசிய கட்டணத்தைவிடக் கூடுதலாகக் கேட்பது, ஏதாவது பேசினால் நாகரிகமற்றுப்பேசுவது எனப் பலரைச் சந்தித்துள்ளேன். ஒரு முறை, காவல்துறைத்தலைவர் அலுவலகம் ( I.G.’s office) முன்னரே ஒருவர் கத்திகாட்டியும் மிரட்டியுள்ளார். அதே நேரம், உதவும் மனப்பான்மையுடன் உள்ளவர்கள், மீதிப் பணம் வேண்டா என்றாலும் திருப்பித் தருபவர்கள், காத்திருக்கநேர்ந்தால் அமைதியாக இருப்பவர்கள், எனப் பண்பான பலரையும் சந்தித்துள்ளேன். எனினும், நான் என்றும் மறக்க முடியாத ஒருவரைப்பற்றிக் கூறப்போகிறேன்.

  எழும்பூரில் இருந்து திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை ஃச்டார் திரையரங்கம் எதிர்ப்புறம் உள்ள சுபத்திராள்   தெருவிற்குச் செல்ல வேண்டும். அங்குள்ள சந்திரிகா மாளிகையில்தான் நான் தங்கியிருந்தேன். மிதியுந்து(ஆட்டோ) ஓட்டுநர் பதினைந்து உரூபாய் கேட்டார். “பத்து உரூபாய்க்குள்தான் ஆகும். பன்னிரண்டு உரூபாய் வாங்கலாம். ஆனால் பதினைந்து உரூபாய் கேட்கிறீர்களே” என்றேன். “எனக்கு இது கூடக் கட்டுப்படியாகாது. என்றாலும்கூடக் கேட்டால் யாரும் தர மாட்டார்கள் என்பதால் இவ்வளவுதான் கேட்கிறேன்” என்றார் அவர். “சரி, நீங்கள் கேட்பதைக் கொடுத்து விடுகிறேன். ஆனால் கட்டணஅளவி(மீட்டர்)- ஐ ப் போடுங்கள்” என்றேன்.

  “பதினைந்து உரூபாய் தருவதாகச் சொலகிறீர்களே! எதற்குக் கட்டண அளவி தேவையில்லை வண்டியில் ஏறுங்கள்” என்றார். நான், வண்டியில் ஏறிக்கொண்டு “விதிப்படி அளவியைப் பயன்படுத்த வேண்டும்.நான் ஏறும் வண்டிகளில் கேட்கும் பணத்தைக் கொடுத்தாலும் அவ்வாறுதான் பயன்படுத்தச் சொல்வேன். நீங்கள் பயன்படுத்துங்கள். பதினைந்து உரூபாயைவிடக் குறைவாகத்தான் காட்டும். என்றாலும் நான், பதினைந்து உரூபாய் தருகின்றேன். ஒருவேளை கூடுதலாகக் காட்டினால் அந்தத் தொகையை நான் தருகிறேன்.” என்றேன்.   “பதினைந்து உரூபாயை விடக் குறைவாகத்தான் காட்டும். அதெல்லாம் தேவையில்லை.” என்றார். “ஒருவேளை, எதனாலாவது சுற்றிப்போக வேண்டிய தேவை வந்தால், உங்களுக்குத்தானே இழப்பு. எனவே, அளவியைப் போடுங்களேன்” என்றேன். “எங்கே சுற்றிப் போனாலும் நான் பதினைந்து உரூபாய்க்கு மேல் வாங்கவில்லை” என்றார். அதற்குள் வண்டி எழும்பூர் நீதிமன்றம் அருகே வந்து விட்டது. அங்கு வண்டிகளைத் தடுத்து நிறுத்தி வேறு பாதையில் போகுமாறு கூறினார்கள். திரும்பி வந்து கண்மருத்துவமனை வழியாகச் சென்றோம். அங்கும் இறுதியில் வண்டியைத் தடுத்துத் திருப்பி யனுப்பினார்கள். காரணம் தெரியாவிட்டாலும் திரும்பும் முன்னரே திருப்பி விடலாமே எனப் பேசிக் கொண்டு அருங்காட்சியகச்சாலை வழியாக வந்து கிரீம்சு சாலையில் சென்றோம். அண்ணா சாலையில் திரும்புவதற்கு முன் தடுத்து நிறுத்தப்பட்டோம். “அண்ணாசாலையில்தான் சிக்கல், நீங்கள் கல்லூரிச்சாலை, சாசுத்திரிபவன், அண்ணா மேம்பாலம் கீழ்ப்பக்கம் இராதாகிருட்டிணன் சாலை வழியாகப் போங்கள்” என்றேன். அவரும் “அப்படித்தான் நானும் நினைக்கிறேன்”   என்று இந்த வழியாகவந்தார். பாட்டா காலணிக்கடையில் பயங்கரத் தீ பிடித்து விட்டதாகவும் எனவேதான் வண்டிகள் திருப்பிவிடப்படுவதாகவும் பின்னர் அறிந்தோம்.

  இறங்குமிடம் வந்தது. பொதுவாகத் தெரிந்த மிதியுந்தில் செல்லும் பொழுது கட்டணம் பேசாமல், இறங்கும் இடம் நெருங்குகையில் எவ்வளவுக் கட்டணம் எனக்கேட்பது வழக்கம். ஐம்பது உரூபாய் என்றால் கொடுக்கலாம்.ஆனால், அவர் 100 உரூபாயாவது கேட்பார். எனவே, இறங்கியபின்னரே பேசிக் கொள்ளலாம் என இருந்தேன்.

  இறங்கியதும் “எவ்வளவு வேண்டும்” என்றேன். “பிப்டீன்” என்றார். “ஐம்பது உரூபாய் வேண்டும் என்கிறீர்களா? பிப்படியா? பிப்டீனா? தமிழில் கேளுங்கள்” என்றேன். “பேசியபடி பதினைந்து உரூபாய் தாருங்கள். போதும்” என்றார். “சுற்றியல்லவா வந்திருக்கிறீர்கள். வண்டி தண்ணீரிலா ஓடுகிறது. கேளுங்கள். கொடுக்கிறேன்” என்றேன். “இல்லை நான் கேட்ட பதினைந்து உரூபாய் தந்தால் போதும்” என்றார். நான் ஐம்பது உரூபாயை நீட்டி “இந்தாருங்கள் வைத்துக் கொள்ளுங்கள்” என்றேன்.“இல்லை இல்லை பதினைந்து உரூபாய் போதும்” என்று மீண்டும் சொன்னார். முகப்பிலிருந்த நண்பர்கள், கூடுதல் கட்டணம் கேட்டுத் தகராறு செய்கிறார் என எண்ணி அங்கே வந்து விட்டனர். விடாப்பிடியாகக் குறைவாகத்தான் கேட்கிறார் என்று விளக்கினேன் நான். அதற்கு அவர், அவர் “பலமுறை சொல்லியும் கேட்காமல் நான் அளவியைப் போடவில்லை. சுற்றிப்போனாலும் பதினைந்து உரூபாய்க்குமேல் வாங்க மாட்டேன் எனச் சொல்லியுள்ளேன். அதற்கு மேல் ஒரு காசு கூடுதலாக வாங்கினாலும் சாப்பாடு உடம்பில் ஒட்டாது. எனவே, பதினைந்து உரூபாய் மட்டும் கொடுக்கச் சொல்லுங்கள் போதும்” என்றார். “அடுத்தவர் சொல்லிற்கு மதிப்பு கொடுக்க வேண்டும் என அறியாமல் இருந்த எனக்குக் கூடுதலாகக் கேட்கும் உரிமையில்லை” என்றார். நன்றாகப் பேசத் தெரிந்த அவர், பலமுறை வலியுறுத்தியும் பணநாணயத்தை விட வாக்கு நாணயமே முதன்மையானது என்று பதினைந்து உரூபாய் மட்டும் பெற்றுச் சென்றார்.

  பத்து உரூபாய்த் தொலைவிற்குப் பதினைந்து உரூபாய்கூடக் கட்டாது என்றவர், ஐம்பது உரூபாய்த் தொலைவிற்குப் பதினைந்து உரூபாய் போதும் என வாய்ச்சொல்லிற்குக் கட்டுப்பட்டார்.

  முதலில் கேட்ட தொகை போதும் என்றாலும் அனைவரின் வற்புறுத்தலுக்காக, ஏதேனும் கூடுதல் தொகை வாங்கியிருக்கலாம். என்றாலும் சொன்ன சொல்லைக் காப்பாற்றுவதுதான் பண்பாடு என்பதைச் செயலில் காட்டி உயர்ந்து விட்டார்.

  சொல்லுங்கள்! இத்தகையவர்களால்தானே உலகம் நிலைத்து நிற்கிறது.

பண்புடையார்ப் பட்டுண்டு உலகம் அஃதுஇன்றேல்

மண்புக்கு மாய்வது மன். (திருக்குறள் 996)

என்னும் தெய்வப்புலவர் திருவள்ளுவர் குறளுக்கு எடுத்துக்காட்டாகத் திகழ்பவர்கள் இவர்களல்லவா?

பண்பாளர்களைப் போற்றுவோம்! பண்புடன் வாழ்வோம்!

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

ilakkuvanar_thiruvalluvan+11