பூ, கரவீரம்- karaveeram

பலவகை மரங்களின் பெயர்களைக் கொண்ட ஊர்கள்

  கரவீரம் என்பது பொன்னிறப் பூக்களைத் தருகின்ற ஒருவகை மரத்தின் பெயர். பொன்னலரி என்றும் அதனைக் குறிப்பதுண்டு. இன்றும் கரவீரக் கோயிலில் பொன்னலரியே தல மரமாகப் போற்றப்படுகின்றது.

  தேவாரத்தில் குறிக்கப்படுகின்ற திருப்பைஞ்ஞீலி என்ற ஊரும் மரத்தின் அடியாகப் பிறந்ததேயாகும். பைஞ்ஞீலி என்பது பசுமையான வாழையைக் குறிக்கும். அவ்வகையான வாழைகள் சிறந்து விளங்கிய ஊரைப் பைஞ்ஞீலி என்று பழந்தமிழர் அழைத்தனர்.

  இன்னும், வாகையும் புன்னையும் வட ஆர்க்காட்டில் ஊர்ப் பெயர்களாக வழங்குகின்றன. சிவகங்கை வட்டத்தில் காஞ்சிரமும், கருங்காலியும் இரண்டு ஊர்களின் பெயர்களாக அமைந்துள்ளன. தமிழகத்தில் ஆலும் அரசும், அத்தியும் ஆத்தியும், புளியும் புன்னையும், பனையும் தென்னையும், மாவும் வேம்பும் மற்றும் பல மரங்களும் செழித்து வளர்தலால் அவற்றின் பெயர்கள் எல்லாம் ஊர்ப் பெயர்களாக ஆங்காங்கு வழங்கக் காணலாம்.

  நாவல் என்பது ஓர் ஊரின் பெயர். தேவாரம் பாடிய மூவருள் ஒருவராகிய சுந்தரர் அவ்வூரிலே பிறந்தருளினார். ‘அருமறை நாவல் ஆதி சைவன்’ என்று பெரிய புராணம் கூறுமாற்றால் அவர் பிறந்த ஊரும் குலமும் விளங்கும். அந்நாவல், சுந்தரர் தோன்றிய பெருமையால் திருநாவல் ஆயிற்று. ஈசனால் ஆட்கொள்ளப்பெற்ற சுந்தரர் அவரடியவராகவும், தோழராகவும் சிறந்து வாழ்ந்த நலத்தினை அறிந்த பிற்காலத்தார் அவர் பிறந்த ஊரைத் திருநாவல் நல்லூர் என்று அழைப்பாராயினர். நாளடைவில் அப்பெயர் திரிந்து திருநாமநல்லூர் ஆயிற்று.

   கெடில நதியின் தென்கரையில் பாதிரி மரங்கள் நிறைந்த புலியூர், திருப்பாதிரிப்புலியூர் என்று பெயர் பெற்றது. விருத்தாசலத்துக்குத் தெற்கே மற்றொரு புலியூர் உண்டு. அதனை எருக்கத்தம்புலியூர் என்று தேவார ஆசிரியர்கள் போற்றியுள்ளார்கள். அத்தம் என்பது காடு, எனவே, எருக்கத்தம் என்பது எருக்கங்காடாகும். எருக்கஞ் செடிகள் நெருக்கமாக நிறைந்திருந்த காட்டில் எழுந்த ஊர் எருக்கத்தம்புலியூர் என்று அழைக்கப் பெற்றது. சிவபெருமானுக்கு இனிய வெள்ளெருக்கு இன்னும் அவ்வூர்க் கோவிலின் அகநாழிகைக்கு (கருவறை) அருகே விளங்குகின்றது. இக்காலத்தில் அவ்வூர் இராசேந்திரப் பட்டணம் என வழங்கும்.

அட்டை-தமிழகம் ஊரும்பேரும், இரா.பி.சேதுப்பிள்ளை :attai_thamizhagam uurum pearum

–  சொல்லின் செல்வர்இரா.பி.சேது(பிள்ளை):தமிழகம் ஊரும் பேரும்

படம்: நன்றி : சின்னு ஆதித்தியா வலைப்பூ

பெயர்-இ.பு.ஞானப்பிரகாசன் : peyar_e.bhu.gnanaprakasan: