(பாரதியாரின் வாழ்வியல் கட்டளைகள்: 15 தொடர்ச்சி)

தலைப்பு-பாரதியார் வாழ்வியல் கட்டளைகள் : thalaippu_bharathiyaarin_vaazhviyal kattalaikal02

பாரதியாரின் வாழ்வியல் கட்டளைகள் 16

வழி நடத்தித் தலைமை தாங்கு!

  வாழ்வியல் கடமைகளாகப் பலவற்றைக் கூறும் மாபெரும் கவிஞர் பாரதியார் தலைமைப் பண்பையும் வலியுறுத்துகிறார்.

        “உன்னைக் கோடிமுறை தொழுதேன் – இனி

                வையத் தலைமையெனக்கு அருள்வாய்” (பக்கம் 133 | யோக சித்தி)

என்பதன் மூலம் கல்வி, தொழில், பண்பு முதலானவற்றில் சிறந்திருக்க வேண்டிய நம் இலக்கு ‘வையத் தலைமையே’ என்பதை அடையாளம் காட்டுகிறார். எனவே, பொறுப்பு கண்டு அஞ்சக்கூடாது என்பதற்காகச் ‘சுமையினுக்கு இளைத்திடேல்’ (ஆ.சூ 29) என்கிறார். ஒருமையுள் ஆமை போல் ஐம்புலன் அடக்கி ஆளுமைத் திறன் பெற ‘ஐம்பொறி ஆட்சி கொள்’ (ஆ.சூ 9) என்கிறார். பின், ‘வையத்தலைமை கொள்’ (ஆ.சூ 109) எனக் கட்டளையிடுகிறார். ஆனால் உலகெங்கும், வையத் தலைமை கொள்வோர் பொருளாசையில் நெறி பிறழும் நிகழ்வுகள் நடந்து வருவதால் ‘புதிய ஆத்திசூடி’யின் முத்தாய்ப்பாக ‘வௌவுதல் நீக்கு’ (ஆ.சூ 110) என்கிறார். எனவே, பிறர் பொருள் விழையா நல்லுள்ளத்துடன் வையத்தில் தலைமை ஏற்பதையே வாழ்வின் நோக்கமாக ஒவ்வொருவரும் கொள்ள வேண்டும்.

பாரதியார் உணர்த்தும் வாழ்வியல் கடமைகளை விரிப்பின் பெருகும். எனவே, அவற்றின் சுருக்கக் கட்டளைகளாக அவர் அளித்துள்ள புதிய ஆத்திசூடியின் அடிப்படையில் மட்டுமே அவை தொகுக்கப்பட்டன. இவற்றை மட்டுமே பின்பற்றும் ஒவ்வொருவருமே உயர்நிலை பெறலாம்.

பாரதியார் புகழ்பாடிப் பைந்தமிழ் வளர்ப்போம்!

(நிறைவு)

thiruvalluvan

இலக்குவனார் திருவள்ளுவன்

பின் குறிப்பு :  பத்தாண்டுகளுக்கு முன்னர் எழுதிய கட்டுரை. இக்கட்டுரையைப் படித்த பாரதியார் குடும்பத்தைச்சேர்ந்த முதியவர் ஒருவர் தொலைபேசி வழி ஏறத்தாழ  ஒரு மணி நேரம் பாராட்டிப் பேசினார். “ஆத்திசூடி மிக எளிமையானது; அக்கருத்து பாரதியார் கவிதைகளில் பரவி உள்ளது என அளித்திருப்பது பாரதியாரின் உள்ளத்தைப் படம்பிடிப்பதாகவும் அவரது கவிதைகளின் சாறாகவும் அமைந்துள்ளது; பாரதியாரின் கவிதைகளையும் கருத்துகளையும் அவரது கவிதைகளுடனும் கருத்துகளுடனும் ஒப்பிட்டு இதுவரை யாரும் ஆராய்ந்ததில்லை” என்பனவே அவரது பேச்சின் மையப்பொருள். இருப்பினும் பாரதியாரின் கொள்ளுப்பேத்தி அல்லது கொள்ளுப்பேத்தி மகள் என எண்ணுகிறேன். அவர் இதனை ஏற்கவில்லை. ஆத்திசூடிக்கு எதற்கு விளக்கம் என்றும் வெவ்வேறு படைப்புகளை ஏன் இணைக்க வேண்டும் என்றும் கருதினார். நம் கருத்தை அனைவரும்  ஏற்க வேண்டும் என எதிர்பார்ப்பது தவறல்லவா?  என்றாலும் பாரதியின் ஆழ்மன அறவுணர்வுகளை எதிரொலிப்பதாக ஆத்திசூடி அமைந்துள்ளதாகக் கருதியதால், தொடராக ‘அகரமுதல’ இதழில் வெளியிட்டுள்ளேன். சில இடங்களில் இன்னும் விளக்கமாக எழுதியிருக்கலாமோ என இப்பொழுது தோன்றினாலும் குறையாகத் தெரியவில்லை. அவ்வப்பொழுது இக்கட்டுரைபற்றிய  நல்லுரை வழங்கிய நண்பர்களுக்கு நன்றி. அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் /  தமிழே விழி! தமிழா விழி!/