பார்வைத்திறன் பறிபோன பின்னும் படைப்புப் பணியைக் கைவிடாத அறிஞர்..! – இலக்குவனார் திருவள்ளுவன்
பார்வைத்திறன் பறிபோன பின்னும்
படைப்புப் பணியைக் கைவிடாத அறிஞர் ஞானி!
சூழலுக்கேற்பத் தத்தம் திறமைகளை வளர்த்துக் கொள்வோர் பலர் உள்ளனர். சூழல் எதிராக அமைந்தாலும் எதிர் நீச்சல் போட்டு அருஞ்செயல் ஆற்றுவோர் சிலரே. அத்தகையோருள் ஒருவரே அறிஞர் கோவை ஞானி.
இன்றைய கோவையின் அடையாளமாக விளங்கிய அவர் தன் அடையாளத்தை விட்டுவிட்டு மறைந்து விட்டார்.
பெற்றோர் கிருட்டிணசாமி, மாரியம்மாள் சூட்டிய பழனிச்சாமி என்னும் இயற்பெயரைத் துறந்துவிட்டு ஞானி என்னும் புனைபெயரை ஏற்றவர் ஞானத்தின் உறைவிடமாக விளங்கினார்.
தமிழ் இலக்கியம் பயின்ற அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நூலகத்தைப் பெரும் நிதியமாகப் போற்றி மகிழ்ந்தார். எனவே, படிக்கும் பொழுது வகுப்பறையில் இருந்ததை விட நூலகத்தில் மிகுதியாக நேரம் செலவிட்டார். வரலாறு, மெய்யியல், திறனாய்வு தொடர்பான நூல்களைத் தேடித் தேடிப் படித்ததால், இவர் அறியாமலேயே திறனாய்வு இவர் வயமானது. எனவேதான், படிப்பிற்குப் பின்னர் இருபது தமிழிலக்கியத் திறனாய்வு நூல்களை எழுதினார். மார்சியத் திறனாய்வு குறித்து மூன்று நூல்களையும் சமயத்திறனாய்வு குறித்து இரண்டு நூல்களையும் எழுதினார்.
‘தொலைவிலிருந்து’ என்னும் கவிதை நூலை வெளியிட்டவர்(1989) அதற்கு முன்னரே வானம்பாடி கவிதை இயக்கத்துடன் ஏற்பட்ட தொடர்பின் தொடர்ச்சியால் ‘கல்லிகை’ என்னும் குறுங்காவியத்தை எழுதி வெளியிட்டார்(1995). அதன் பின்னர் ‘கல்லும் முள்ளும் கவிதைகளும்’(2012) என்று கவிதைகளை எழுதி வெளியிட்டார். எனினும் “கவிதை எழுதுவது உணர்வுக் கொந்தளிப்பை உள்வாங்கிக் கொள்வதாக அமைகிறது. இந்த உணர்வுக் கொந்தளிப்பு, உடலைப் பெரிதும் வருத்தும். இந்தக் காரணத்தால் கவிதை எழுதுவதைக் கைவிட்டேன்” எனக் கவிதை எழுதுவதில் இருந்து விடை பெற்றார்.
சிற்றிதழ் இயக்கத்துடனும் தொடர்பு கொண்டார். இதன் காரணமாக இவர் ‘புதிய தலைமுறை’, ‘வானம்பாடி’ ‘மார்சிய ஆய்விதழ்’, ‘பரிமாணம்’, ‘நிகழ்’ இதழ்களில் பங்கேற்கவும் இணைந்தும் தனித்தும் நடத்தவும் செய்தார். பின் ‘தமிழ் நேயம்’ இதழின் ஆசிரியராகவும் வெளியீட்டாளராகவும் இருந்து 67 இதழ்களை வெளியிட்டார். இதன் பயனாக இவரது தமிழிலக்கியப்பார்வை சிற்றிதழ் வாசகர்களுக்கும் சென்று சேர்ந்தது.
எசு.என்.நாகராசன், எசு.வி. இராசதுரை, புலவர் ஆதி முதலியவர்களுடன் இணைந்து மார்சியம் பயின்று அதில் ஈடுபாடுகாட்டினார். அதே நேரம், சி.சு.செல்லப்பா, க.நா.சு., சிட்டி, இலா.சா.இரா. முதலிய மூத்த படைப்பாளர்களுடனும் அசோகமித்திரன், இந்திரா பார்த்தசாரதி, சுந்தர இராமசாமி, வெங்கட்டு சாமிநாதன், பிரமிள், பொன்னீலன், செயமோகன் முதலிய அடுத்த தலைமுறை எழுத்தாளர்களுடனும் உறவும் நட்பும் பேணினார். தமிழ் இலக்கிய ஈடுபாட்டால் மரபார்ந்த தமிழறிஞர்களைப் போற்றியவர், சிற்றிதழ் இயக்கத்தால் புதுத்தடப் படைப்பாளிகளையும் மதித்தார். வெவ்வேறு மாறுபட்ட கருத்தாண்மை உடைய படைப்பாளிகளுடன் தோழமை கொண்டாலும் அவர்களுடன் இணைந்தும் முரண்பட்டும் தனித்துவத்தைப் பேணினார். இதனால் அவர் பெற்ற பன்முகப்பார்வை அவரது இலக்கியங்கள் மூலம் படிப்பாளர்களுக்கும் கிடைத்தது.
உடன்பட்டும் முரண்பட்டும் நின்றமையால்தான் மார்சியம் பேசினாலும் தமிழ்த்தேசியத்தை அடிப்படை உணர்வாகக்கொண்டார். மார்சியத் திறனாய்வுகளையும் சிறப்பாகச் செய்தார். பெரியாரியத்துடனும் இணங்கிப் போனார். அஃதாவது வெவ்வேறு தளங்களில் செயல்பட்டுத் தனக்கு வேண்டியதில் உறுதியாக நின்றார்.
மார்சியம் பேசிய தமிழ் அறவாணராக அறிஞர் கோவை ஞானி விளங்கினார். எனவே, இரசிய மார்சியம், சீன மார்சியம் என்பது போல தமிழ் மார்சியம் என்பதை விளக்கினார்.
இவரது மாறுபட்ட பார்வையால் பலவற்றிற்குப் புது விளக்கங்கள் அளித்தார். சான்றாகக் காரல் மார்சு “மதம், மக்களுக்கு அபின்” என்றார். “அபின் என்ற சொல்லுக்குப் போதை தருவது என்ற பொருளுடன் துயரங்களுக்கு மருந்தாக அமைவது என்றும் கொள்ளலாம். இம்முழக்கத்தில், சமயம் என்பது ஓர் அழிவு சக்தி என்று குறிப்பிடவில்லை. மன்பதையில் ஒடுக்கப்படும் சூழலுக்கு எதிராக மக்களுக்கு ஒரு பொறைமை(சகிப்புத்தன்மை) தேவைப்படுகிறது. இதற்கு மதம் பயன்படுகிறது. ஒடுக்கப்படும் சூழல் நிலவும் காலம் முழுவதும் சமயம் உயிரோடு இருக்கும். சூழலை மாற்றினால் ஒழிய மதம் அழியாது.” என்று விளக்கினார்.
மதம் குறித்த மாறுபட்ட கருத்தின் காரணமாகவே ‘கடவுள் ஏன் இன்னும் சாகவில்லை’ என்று நூல் எழுதினார். “கடவுள் என்பது ஓர் அழகிய கருத்தாக்கம்; சற்று போதை தரும் கருத்தாக்கம்”. என்றார். மதம் இருக்கும் வரை ஒடுக்கப்படுவோர்கள் இருப்பார்கள் என்பவர்கள் மத்தியில் “ஒடுக்கப்படும் சூழல் நிலவும் காலம் முழுவதும் சமயம் உயிரோடு இருக்கும். சூழலை மாற்றினால் ஒழிய மதம் அழியாது.” என்றார்.
பள்ளி ஆசிரியராகப் பணியாற்றி மாணாக்கர்களை உருவாக்கி வந்தவர், நீரிழிவால் பார்வை பறிபோனதால்(1988) பணியிலிருந்து ஓய்வு பெற்றுக் கொண்டார். ஆனால், தம் பணியிலிருந்து ஓய்வு பெறவில்லை. பிறரைப்போல் மூலையில் முடங்கித் தன்நிலை குறித்து நொந்துபோகவில்லை. முன்னிலும் மிகுதியாகத் திறம்படச் செயல்பட்டார். அதனால்தான் அதற்குப் பின்னர் நாற்பதிற்கு மேற்பட்ட நூல்களை எழுதியும் தொகுத்தும் வெளியிட்டார்.
மடுத்தவா யெல்லாம் பகடன்னான் உற்ற
இடுக்கண் இடர்ப்பாடு உடைத்து. (திருக்குறள் 624)
என்னும் திருவள்ளுவரின் பொய்யா மொழிக்கு எடுத்துக்காட்டாக விளங்கினார்.
தடைப்படும் இடங்களில் எல்லாம், தளர்ந்து விடாமல் வண்டியை இழுத்துச் செல்லும் எருதைப் போன்ற ஊக்கம் உடையவனுக்கு நேரிடும் துன்பங்களே இடர்ப்பாடு அடையும் என இக்குறளில் திருவள்ளுவர் கூறுகிறார். அதைப்போல் பார்வைக் குறைபாட்டால் ஏற்பட்ட தடைகளையெயல்லாம் உடைத்தெறிந்து முன்னேறினார்.
“சங்கக்காலக் குமுகத்தில் ஏற்றத்தாழ்வில்லை. ஆண்டான் அடிமை என்று இல்லை. இயற்கையில் கிடைத்தவற்றைப் பகிர்ந்து உண்டனர். வேட்டையாடிக் கிடைத்தவற்றையும் பகிர்ந்துகொண்டனர். இவற்றில் முதல் பங்கு கலைஞர்களுக்கும் பெண்கள், குழந்தைகளுக்கும் உரியது. இந்தச் சமூகத்தின் பங்குகள் அழியவில்லை. தமிழிலக்கிய வரலாறு முழுவதும் இப்பண்புகள் தொடர்ந்தன.” எனச் சங்கக் காலத்தைப் போற்றுகிறார். இக்கால இலக்கியங்களைச் சங்க இலக்கியப் பார்வையில் ஆராய்ந்தார். எத்தனைக் காலங்கள் மாறினாலும் சங்க இலக்கியச் சிறப்புகள் எக்காலமும் நிலைத்து நிற்கும் என்பதை உணர்த்தினார்.
மார்சியத்தையும் பெரியாரியத்தையும் போற்றியவர் சமய இலக்கியங்களையும் போற்றினார். “தமிழிலக்கியத்தில் ஒரு பாதி அளவு இருக்கும் சமய இலக்கியத்தை நான் குறை சொல்ல மாட்டேன்.” என்றார். “ஆழ்ந்து பார்த்தால் கடவுள் என்ற பிம்பத்தினுள் இனக்குழுச் சமூகத்தின் மேன்மையான பண்புகளின் கொள்கலமாகக் கடவுள் இருப்பதைக் காண முடியும். இந்தக் கடவுளுக்கு அழிவில்லை.” என்று தெளிவுபடுத்தினார்.
“இந்திய அமைப்பு மொழிவழித் தேசிய இனங்களின் கூட்டமைப்பாக இருக்க வேண்டும்” என்ற தமிழ்ப்போராளி பேரா.சி.இலக்குவனாரின் கோட்பாடும் சங்க இலக்கியங்களை நாம் ஒவ்வொருவரும் கற்கவும் போற்றவும் வேண்டும் என்று அவர் வலியுறுத்தியதும் இவர் மனத்தில் ஆழப்பதிந்து விட்டதாம். எனவேதான், எந்தத் தளத்தில் இருந்தாலும் சங்க இலக்கியத்தைப் போற்றத் தவறவில்லை என்றும் பல்வேறு கருத்தியல் பேசுவோர்களிடம் நட்பு கொண்டாலும் தமிழ்த்தேசியத்தை மூச்சாகக் கொண்டதாகவும் தெரிவித்தார். அதனால், ‘தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார்’ என நூல் எழுதித் தருமாறு வேண்டினார்.அதனையும தமிழ்நேயம் 49 ஆவது இதழாக 2012 பிப்பிரவரியில் வெளியிட்டார். ‘நானும் என் தமிழும்’ என்னும் பொதுத்தலைப்பில் என் தமிழ்ப்பணிகளைப்பற்றிய நூல் ஒன்றையும் எழுதித்தருமாறு கேட்டார். பிறகு தருவதாகக் கூறிக் கூச்சத்தினால் எழுதித் தரவில்லை.
இலங்கை, ஈழத் தமிழ் இலக்கியங்களைப் பரப்புதல், ஆய்வியம், ஒடுக்கியம்(தலித்தியம்), பெண்ணியம், பெரியாரியம், மார்சியம், பண்பாட்டியம், தமிழ்த்தேசியம், தமிழ் ஈழத் தேசியம். இதழியம் எனப் பலவற்றிலும் நுண்ணிய பார்வை கொண்டு அவை சார்ந்த தம் பணிகளை அமைத்துக் கொண்டார்.
இத்தகு சிறப்புமிக்கப் பன்முகத் திறனாய்வாளர் அறிஞர் கோவை ஞானி புகழ் ஓங்குக! அவரன்பர்கள் அவர் வழியில் தமிழ்த்தேசியத்தை முன்னிறுத்துக! மொழிவழித் தேசிய இனங்களின் கூட்டமைப்பிற்குப் பாடுபடுக!
– இலக்குவனார் திருவள்ளுவன்
நமது காவலன் ஆகத்து 1.15. 2020
Leave a Reply