(தோழர் தியாகு எழுதுகிறார் : கட்சியில் இருந்து நீக்கப்பட்டேன். – தொடர்ச்சி)

கீற்று நேர்காணல் (3)(ஆ)

தமிழ்த் தேசியத்தில் முரண்பாடுகள்

நேர்காணல்: மினர்வா & நந்தன்

மா.பொ.க.வில்(சி.பி.எம்மில்) இருந்து வெளியேறியதும் தமிழ்த் தேசியச் செயற்பாட்டில் முழுமையாக ஈடுபடத் தொடங்கினீர்கள் அல்லவா?

இந்தியா இலங்கைக்குப் படை அனுப்புகிறது. ஈழத்தில் தமிழ் மக்கள் இந்தியப் படையால் கொல்லப்படுகிறார்கள். இந்த நேரத்தில் உறுதியாகச் செயல்பட வேண்டும் என்று முடிவெடுத்தேன். அதுதான் திலீபன் மன்றத்துக்கான அடிப்படை. விடுதலைக் குயில்கள் அமைப்பு நடத்திக் கொண்டிருந்த பேராசிரியர் சுப.வீரபாண்டியனுடன் இணைந்து 1993இல் தமிழ்த் தமிழர் இயக்கம் ஆரம்பித்தோம். அவர் அப்போதே சொன்னார் “உங்க அளவுக்கு எல்லாம் எனக்கு தத்துவார்த்தச் சிந்தனை கிடையாது, தி.மு.க. நல்லதாக இருந்தால் அதில் போய் இணைஞ்சுக்கலாம். ஆனா இருக்கிற தி.மு.க. நல்ல தி.மு.க.வா இல்லை அதுதான் சிக்கல்”. அதன்பிறகு தன்னுரிமையா விடுதலையா போன்ற பல்வேறு விவாதங்கள் தொடர்ந்து நடைபெற்றன. விவாதங்களின் முடிவில்தான் தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம் ஆரம்பமானது.

நக்சலைட்ட வாழ்க்கையிலும் சரி, தமிழ்த்தேசியவாதியாகவும் சரி பல்வேறு ஒடுக்குமுறைகளைச் சந்தித்திருக்கிறீர்கள். இரண்டுக்கும் என்ன வேறுபாடு?

நக்சலைட்டு வாழ்க்கையின் போராட்ட வடிவமே ஆயுதப் போராட்டம்தான். சிறையில் இருக்கும் போதும் ஆயுதப் போராட்டத்தை நடத்த விரும்பினோம். வாய்ப்பு கிடைத்த போது அதைத்தான் செயற்படுத்தினோம். எனவே அதற்குப் பதிலான அவர்களின் அடக்குமுறையும் அந்த வடிவத்திலே தான் இருந்தது. எவ்வளவோ சித்திரவதைகள், அடி, உதை எல்லாவற்றையும் சந்தித்து விட்டோம். அதோடு ஒப்பிடும்போது தமிழ்த் தேசியவாதியாக அடக்குமுறையைச் சந்திக்கவே இல்லை. ஏதோ பேசுகிறோம், தடை செய்கிறார்கள், கைது செய்கிறார்கள் என்ற அளவில்தான் இருக்கிறது. மக்கள் போராட்டம் அந்த அளவுக்கு வளரவில்லை. வளர்ந்தால் அடக்குமுறை வரக் கூடும்.

தமிழ்த்தேசியவாதிகள் வைக்கும் முழக்கங்களில் ஒன்று ‘திராவிடத்தால் வீழ்ந்தோம்’ என்பது. நீங்கள் பெரியாரைப் படித்தவர். நீங்கள் இதை எப்படி பார்க்கிறீர்கள்?

பெரியாரின் தன்மதிப்பு(சுயமரியாதை) இயக்கத்தில் இருந்து தொடங்கிப் பின்னால் திராவிட முன்னேற்றக் கழகம் வரை தமிழ்த் தேசியம்தான் இதற்கு அடிப்படை. எந்த ஒரு தமிழ்த் தேசியக் கட்சியும் தி.மு.க எட்டிய அந்த வெகுசன எல்லையை எட்டவே இல்லை. சி.பா.ஆதித்தனார், ம.பொ.சி, சம்பத்து போன்றவர்கள் எல்லாம் தமிழ்த் தேசியத்தை வலியுறுத்தி பல்வேறு பணிகளைச் செய்திருக்கிறார்கள். ஆனால் யாருமே தமிழ்நாட்டின் வெகுமக்களை, தமிழ்த்தேசிய இனத்தைத் தி.மு.க. அளவுக்குச் சென்று சேரவில்லை.

1965இல் நடைபெற்ற மொழிப் போராட்டத்தில் தி.மு.க.வுக்கு முக்கியப் பங்கு உண்டு. 1938இல் பெரியார் “தமிழ்நாடு தமிழருக்கே” என்ற முழக்கத்தை முன்வைக்கிறார். எல்லைமீட்புப் போராட்டத்தில் பெரியார் அதிகம் கவனம் செலுத்தவில்லை. தேவிகுளம், பீர்மேடு பறிபோவதைப் பற்றியோ, திருப்பதியை இழப்பதைப் பற்றியோ அவர் கவலைப்படவே இல்லை. அதே நேரத்தில் பொருளியல் வழியில் வடமாநிலத்தவர், மார்வாடிகள் இங்கு ஆதிக்கம் செய்வதைப் பற்றி பெரியாருக்கு ஒரு பார்வை இருந்தது.

திராவிடம் என்ற கருத்தியலினுடைய வரலாற்று உள்ளடக்கம் தமிழ்த்தேசியம்தான். தமிழ்த்தேசியத்தின் உருத்திரிந்த வடிவம்தான் திராவிடம்.

அண்ணா திராவிட நாடு கோரிக்கையை முன்வைத்த போது பெரியார் “மொழிவழி மாநிலங்கள் அமைப்பதற்கு முன்னால் நாமும் திராவிட நாடு பற்றிப் பேசினோம். இப்போதுதான் மொழிவழி மாநிலங்கள் அமைந்து விட்டதே, இப்போது எந்த மலையாளியோ, தெலுங்கனோ தனிநாடு கேட்கிறானா? எனவே தனித்தமிழ்நாடு தான் நம் நோக்கமே தவிர, திராவிட நாடு அல்ல. இந்தச் சூழ்நிலையில் திராவிட நாடு கேட்பது ஒரு மோசடி” என்று கூறினார். இன்னொரு சமயத்தில் “நான் ஆதித்தனாருடன் இணைந்து தனித்தமிழ்நாடு கேட்டுப் போராடுவேன்” என்றே பெரியார் குறிப்பிட்டார்.

அண்ணாவிடம் பொதுக்குழு மாநாட்டில் கோவை செழியன் “கட்சியின் பெயரை மாற்ற வேண்டும். இங்கு திராவிட நாடு எங்கிருக்கிறது? நாம் தமிழ்நாட்டில் தானே இருக்கிறோம். எனவே தமிழர் முன்னேற்றக் கழகம் என்று வைக்க வேண்டும்” என்று கேட்கிறார். “அப்படி மாற்றினால் அதைச் சொல்லியே பெரியார் நம்மை ஒழித்துத் தள்ளிவிடுவார். அதைப் பின்னால் பார்த்துக் கொள்ளலாம்” என்று அண்ணா கூறினார்.

பின்னால் தி.மு.க.விலிருந்து வைகோ பிரிந்தபோது நான் அவரிடம் கூறினேன். “இதுதான் நல்ல சந்தர்ப்பம். இதைப் பயன்படுத்தி திராவிடம் என்ற சொல்லை ஒழித்து விட்டு தமிழர் முன்னேற்றக் கழகம் என்றோ, மறுமலர்ச்சி தமிழர் முன்னேற்றக் கழகம் என்றோ வையுங்கள்” என்று சொன்னேன். “அய்யோ இதை வைச்சே கலைஞர் ஒழிச்சுடுவார்” என்று பதறினார் வைகோ.

திராவிடத்தால் வீழ்ந்தோம்’ என்ற கருத்தில் எனக்கு உடன்பாடு கிடையாது. இந்தியத் தேசியமும் ஒருகட்டம் வரைக்கும் முற்போக்கானது. இந்தியத் தேசியத்தை ஆதரித்த காங்கிரசுகாரரான சோமசுந்தர பாரதியார் தமிழ்த்தேசியம் என்ற பேச்சு வந்தபோது அதை ஆதரித்துப் பெரியாரோடு ஒன்றுபட்டார். இராசாசியை ஆதரித்த ம.பொ.சியும் தமிழ்நாடு தமிழருக்கே என்ற முழக்கத்தை ஆதரித்தார். எனவே திராவிடம் என்ற வார்த்தையும் தமிழ்த்தேசியத்தை உள்ளடக்கமாகக் கொண்டிருந்த வரை அது முற்போக்கானது தான்.

திராவிடத்தால் எழுந்தோம், தமிழியத்தால் வெல்வோம்” என்பதுதான் சரியாக இருக்க முடியும். திராவிடம் என்பது முந்தைய காலத்துக்குரிய ஒரு கருத்து. ‘அந்த சிறைக்குள்ளேயே தான் இருக்க வேண்டும். வெளியே வரக்கூடாது’ என்று சொன்னால் அது சிதைவாக மாறும்.

திராவிடம் என்ற வார்த்தை இந்தி எதிர்ப்பு, வடமொழி எதிர்ப்பு, வடவர் எதிர்ப்பு, தமிழ்மண் காப்பு, தமிழ்நாட்டின் பொருளாதாரத்தைப் பாதுகாப்பது போன்றவை தான். இதுதான் திராவிடம் என்றால் திராவிடத்தின் உள்ளடக்கம் தான் தமிழ்த்தேசியம். ஆனால் இந்த உள்ளடக்கத்தை இழந்து திராவிடம் என்ற சொல் வெறும் பதவிச் சண்டைக்கான சொல்லாக இன்று சிதைந்து சீரழிந்து கொண்டிருக்கிறது.

அதாவது நாற்காலி அரசியலில் கொள்கைகளை விட்டுவிட்டார்கள் என்று சொல்கிறீர்களா?

ஒவ்வொரு புரட்சியும் ஓர் அரசியல் புரட்சியில் இருந்துதான் தொடங்குகிறது. அரசியல் புரட்சியின் முக்கியமான கேள்வி யாருக்கு அதிகாரம் என்பதுதான். அதிகாரத்தைக் கைப்பற்றாமல் சமூகத்தை மாற்ற முடியாது. அதிகாரத்தைக் கைப்பற்றாமல் பொருளியலை மாற்ற முடியாது. அதிகாரத்தைக் கைப்பற்றாமல் பண்பாட்டை மாற்ற முடியாது. அதிகாரம் வேண்டும் என்று நினைப்பதில் தவறே இல்லை.

ஆனால் இவர்கள் தேடும் அதிகாரம் மேலே சொன்ன மாற்றங்களை உருவாக்குவதற்கான அதிகாரம் அல்ல. 1952இல் தி.மு.க. தேர்தலில் போட்டியிடவில்லை. இந்த அதிகாரத்தின் மூலம் திராவிட நாடு சாத்தியமில்லை என்பதால் அவர்கள் போட்டியிடவில்லை. அதே தி.மு.க.தான் 1957இல் போட்டியிடுகிறது. இப்போது வரை அது நீடிக்கிறது. இடையில் கட்சிக்குப் புதிதாக வந்தவர்கள் ஆசை காட்டினார்கள்; இவர்கள் பலியானார்கள்.

கட்சி தேர்தலில் நிற்காத போது தொழிற்சங்கப் போராட்டம், மொழிப் போராட்டம் உட்பட பல்வேறு போராட்டங்களை நடத்தினார்கள். நிறைய இளைஞர்களை ஈர்த்தார்கள். போராட்டங்களுக்காக மாதக்கணக்கில் சிறைத் தண்டனை அனுபவித்தார்கள். தேர்தலில் போட்டியிட்ட போது பதவிகளின் மீது மோகம் வந்தது. அந்தப் பதவிகள் தங்கள் நோக்கங்களுக்கு உதவுமா என்று பார்க்கத் தவறி விட்டார்கள். அப்படியே தங்களது குறிக்கோளையும் இழந்து விட்டார்கள். இலக்கைக் கைவிட்டு அமைப்பைப் பாதுகாத்தார்கள். இப்போது எல்லாவற்றையும் கைவிட்டுவிட்டு ‘இங்கே கொஞ்சம், தில்லியில் கொஞ்சம் கிடைத்தால் போதும்’ என்கிற நிலைக்கு வந்து விட்டார்கள்.

உண்மையான அதிகாரமல்லாத அதிகாரத்தின் மீது கொண்ட மயக்கம் இது. இவர்கள் கையில் இருக்கிற அதிகாரத்தை வைத்துக் கொண்டு இலவசங்கள் தருவதைத் தவிர எந்த மாற்றத்தையும் கொண்டுவர முடியாது. தேர்தலின் மூலம் கிடைக்கும் அதிகாரத்தை வைத்துக் கொண்டு எதையும் செய்ய முடியாது என்பதால்தான் நாங்கள் (தமிழ்த் தேசியவாதிகள்) தேர்தலைப் புறக்கணிக்கிறோம்.

(தொடரும்)
தோழர் தியாகு
தாழி மடல் 300