(பிறமொழிக்காரர்களின் இருட்டடிப்பில்தான் இன்று தமிழர் நிலை 1/3 தொடர்ச்சி)

தலைப்பு-வித்யாசாகர் செவ்வி, இலக்கியவேல் சந்தர்; thalaippu_piramozhi_vidyasakar_sevvi_ilakkiyavel02

பிறமொழிக்காரர்களின் இருட்டடிப்பில்தான் இன்று தமிழர் நிலை 2/3

  – கவிமாமணி வித்தியாசாகர்

செவ்வி  கண்டவர் :

இலக்கியவேல் சந்தர் சுப்பிரமணியன்

?. குவைத்தில் அமர்ந்துகொண்டு இந்தியச் சூழலில் இந்தியாவில் நடக்கும் நிகழ்வுகளை எழுதுவது எப்படிச் சாத்தியமாகிறது?

  இரத்தம் குழையும் உடம்பிற்குள் பாய்வது எனது தாயகத்திலுள்ள உறவுகளின் வலியும் மகிழ்ச்சியும்தானே? உலகின் எம்மூலையில் இருந்தாலும் வாழ்வின் அருத்தத்தை  ஊருக்குள்தானே வைத்திருக்கிறோம்? நான் வெற்றி கண்டால் பேசவும், துவண்டு விழுகையில் சொல்லினால்  அணைத்துக்கொள்ளவும் எனது தாயும் தாய்மண்ணும் எனக்கு  ஒன்றுதானே? எந்த இடத்திலிருந்து தொடங்கினோமோ அந்த  இடத்தை நோக்கித்தானே பயணப்பட்டுக் கொண்டுள்ளோம்?  பிறகு எனது எழுத்துகளுக்கு மட்டும் விதிவிலக்கென்ன?

  வெறும் எனக்கு மட்டும் பசி எனில் அங்கேயே ஒரு  இட்டிலித் துண்டையோ  அரைத்தட்டுச் சோற்றையோ  என்னால் இலகுவாகச் சம்பாதித்துக்கொண்டிருக்க முடியும்.  ஆனால் எனது பசி பலருக்கான பசி. எனது வயிறு பலர் உண்ணுவதில் நிறைகிறது. அதுபோல்தான் எனது  எழுத்துகளும் எப்பொழுதும் முதலில் தாய்மண்ணையே  தாங்கிநிற்கிறது.

 ?.  வெகுவாக நீங்கள் கவிதைகள், கதைகள், கட்டுரைகள் ஆகியன குறித்த படைப்புகளைப் படைத்துள்ளீர்கள்.  இன்றுவரை எவ்வளவு படைப்புகள் பதிப்பாகியுள்ளன? அடுத்து  வெளி வரும் படைப்புகள் எத்தகையன?

  ஏராளமான படைப்புகள் புத்தகமாக உள்ளன. இருபத்தொன்று  முடிந்தும் இன்னும் இருபதுக்கும் மேல் அச்சிடவும் உள்ளன. ‘பிஞ்சுப்பூ கண்ணழகே’ எனும் மகள்-அப்பா பற்றிய  கவிதைகளும், ‘நீ சிரித்தால் பனிவிழும், மலருதிரும்’ காதல்  கவிதைகளும், ‘அம்மையெனும் தூரிகையே’, ‘கல்லும்  கடவுளும்’, ‘காற்றாடி விட்ட காலம்’, ‘பறந்து போ  வெள்ளைப்புறா’, ‘சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள்’,  ‘நீயே முதலெழுத்து’, போன்ற சமூகக் கவிதைகளும், ‘ஞானமடா  நீயெனக்கு’ எனும் அப்பா-மகன் பற்றிய கவிதைகளும்,  வாழ்த்துப் பா, சிறுவர் பாடல்கள், ‘கண்ணீர் வற்றாத காயங்கள்’ எனும் ஈழத்துக் கவிதையுமென நிறைய படைப்புகள் அச்சு  வேலைகள் நடந்துகொண்டுள்ளன.

  இவையன்றித், ‘திரைமொழி எனும் திரைப்பார்வை’. மூன்று  மணிநேரம் செலவிட்டு நாம் பார்க்கும் திரைப் படத்தினை நான் பார்த்த விதம்,. பொழுதைப் போக்கும் படங்களாக அல்லாமல் பொழுதினை ஆக்கும் திரைப்படங்களாக அவைகளை நாம்  எவ்வாறு மாற்றிப் பார்க்கலாம் என ஒரு கட்டுரைத் தொகுப்பும்.  ‘மீனும் மீனும் பேசிக்கொண்டன’ எனும் உயிர்த் தொடர்பு பற்றி  பேசும் தொடர்கட்டுரைத் தொகுப்பும், சிறுகதைத் தொகுதி  மற்றும் ‘காற்றின் ஓசை’ எனும் ஒரு நீண்ட நன்னடத்தைகளைப்  பேசத்தக்கதொரு புதினமும், சில குறும்புதினங்களுமென வீட்டில் விற்காமல் அடுக்கியுள்ள புத்தகங்கள் போக எனது  வலைதளத்துள் அடுக்கி வைத்துள்ள வெளிவராத படைப்புகள்  ஏராளமுண்டு.

   பார்க்கப் பார்க்க வலிக்கிறது. வலிக்க வலிக்கப் பீறிடும் உணர்வுகள் கவிதைகளும் கதைகளுமாகின்றன. மொத்தத்தில் அக்கறை, என் சமுதாயத்தின் மீதும் மக்களின் மீதும் மண்  மீதும் கொண்டுள்ள அக்கறையே இரைதேடி உயிர்வாழும்  பறவையைப்போல எனைக் கவிதை, கதையெனவும்  தேடியலைய வைக்கிறது.

  குறிப்பாக ஈழத்தில் வாழும் தொப்புள் கொடி உறவுகளுக்கு  நேரில் சென்று உதவயியலாவிட்டாலும் எழுத்தாகவேனும் எழுந்து நின்று தோள் தருவோமே எனும் பதைபதைப்பில்  வருவதே ஈழத்துப் படைப்புகளுக்கான காரணம். பிறமொழிக்காரர்களின் இருட்டடிப்பில்தான் இன்று தமிழர் நிலை எங்கு  காணினும் இரண்டாம்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. பிறகு நாமும் நம்முறவுகளை, அவர்களின் வாழ்வுநிலையை மறந்து  ஒரு பிடி சோறள்ளித் தின்போமெனில் – நன்றாக  உறங்குவோமெனில் – அதற்கு முன் நம் மனிதத்தையும் நாம்  தொலைத்தே நிற்கிறோம் என்று  பொருள். .

?.  உங்களுடைய படைப்புகளில் பெரும் பான்மையானவை உங்கள் சொந்தப் பதிப்பகமான முகிலின் வெளியீடுகள்தாம். வணிக முறையில் எப்படிச் செயல்படுத்துகிறீர்கள்?

 இப்படி வேண்டுமே என்றொரு குருவி சிறுசிறு குச்சிகளைப் பொறுக்கி அழகானதொரு கூடுதனைப் பின்னுவதைப்போல் நானும் எனது வியர்வைத்துளிகளை த்திரட்டித் திரட்டிப் புத்தகமாக்கிக் கொண்டு வருகிறேன்.

 ஆயிரம் புத்தகம் அச்சடித்தால் அதில் பத்து புத்தகங்களைப்  பெற்றுக் கொண்டு இக்கிம்பாதம் மட்டும் தவறாமல் பணம் கொடுத்து உதவுகிறார்கள். மீதித் தொள்ளாயிரத்துத் தொண்ணூறு  புத்தகங்களும் எனது உழைப்பை, தூக்கத்தை, இயலாமையைப் பார்த்துச் சிரித்தவாறு பரண்தனில் கிடக்கின்றன. அதில் பாதி  சிலவேளை சில கடைகளில் கணக்கின்றி  கொடுக்கப்பட்டுள்ளன. காசு மட்டும் இதுவரை தவறாமல் தர  மறுக்கப் பட்டுள்ளது.

 ? .உங்களுடைய படைப்புகளை ஆய்வு செய்து சில மாணவர்கள் தங்கள் முதுநிலைப் பட்டங்களைப் பெற்றுள்ளார்கள்.  அதுகுறித்துச் சில தகவல்கள்?

புத்தகங்கள் விற்காவிட்டாலென்ன, என் அறிவும் உழைப்பும்  பட்டறிவும் இன்றைய மாணவச் செல்வங்களுக்கு உதவி இருக்கிறதே அது போதுமென்று நிறைவு கொண்ட ஒரு  நற்செயல் அது நிகழ்ந்தது, நண்பர் திரு. கவியருவி இரமேசு  என்பவர் மூலம்.

அவருடைய ஏற்பாட்டின் மூலம் திருவள்ளுவர் பல்கலைக்  கழகத்தில் எனது பல நூல்கள் ஆய்விற்கு எடுத்துக் கொள்ளப் பட்டு “வித்யாசாகரின் எழுத்துக்களில் பெண்ணியம்” என்றும்  “கனவுத்தொட்டில் நாவல் ஓர் ஆய்வு” என்றும் இரு ஆய்வுகள்  நடந்து செல்வி இரா. மகாலட்சுமி, திருமதி அ. கீதா போன்றோர் பட்டங்களைப் பெற்றனர்.

(தொடரும்)

இலக்கியவேல் மாத இதழ் – புரட்டாசி-ஐப்பசி 2047 / செட்டம்பர் 2016: வித்யாசாகர் செவ்வி