(பிறமொழிக்காரர்களின் இருட்டடிப்பில்தான் இன்று தமிழர் நிலை 2/3 தொடர்ச்சி)

தலைப்பு-வித்யாசாகர் செவ்வி, இலக்கியவேல் சந்தர்; thalaippu_piramozhi_vidyasakar_sevvi_ilakkiyavel02

பிறமொழிக்காரர்களின் இருட்டடிப்பில்தான் இன்று தமிழர் நிலை 3/3

  – கவிமாமணி வித்தியாசாகர்

செவ்வி  கண்டவர் :

இலக்கியவேல் சந்தர் சுப்பிரமணியன்

?  உங்கள் படைப்புகளுக்காக உலக அளவில் பல பட்டங்களையும், விருதுகளையும் பெற்றுள்ளீர்கள். அதுகுறித்த  உங்கள் கருத்து?

இலண்டன் தமிழ் வானொலி, ஆத்திரேலிய தமிழ் வானொலி,  குளோபல் தமிழ்த் தொலைக்காட்சி மையம், இலங்கை தீபம் தொலைக் காட்சி போன்ற ஊடகத்தினர் எனது படைப்புகள் குறித்து  அறிமுகம் தந்தும் விருதுகள்பற்றிப் பேசியும் நேர்க்காணல்  கண்டும் பெருமை செய்துள்ளனர்.

தமிழ்த்தாய் அறக்கட்டளை அமைப்பு 2010-இல் உலகத் தமிழ்க்கவிதை மற்றும் சிறுகதை அமைப்புடன் சேர்ந்து உலக  மாநாடு ஒன்றை நடத்தியது. அதில் பெருங்கவிக்கோ வா. மு. சேதுராமன் அவர்களின் திருக்கரங்களால், எனக்கு மாற்றாகச் சென்ற அம்மாவிடம்  இலக்கியச்செம்மல் இரண்டு, தமிழ்மாமணி, கவிமாமணி என எல்லோர் முன்னிலையிலும் வைத்து விருது  கொடுத்துப் பெருமையுறச் செய்தனர்.

  அதுபோல் குவைத்தில் நடந்த பெருவிழா ஒன்றில் நமது இந்தியத் தூதர் அவர்களின் திருக்கரங்களால் ‘தமிழோசைக்  கவிஞர்கள் சங்கம்’ திரு. தம்பி இராமையா, கதாநாயகன்  விமல் போன்றோரின் முன்வைத்து ‘பன்னூற்பாவலர்’ எனும்  பட்டத்தைக் கொடுத்துப் பெருமைபடுத்தியது.

அதுபோல் ‘நீதியின் குரல்‘ மாத இதழ் ‘வெண்மனச் செம்மல்  வித்யாசாகர்’ விருது வழங்கிச் சிறப்பித்தது. அடுத்து  கலைமகள் இலக்கிய இதழ் நடத்திய இராமரத்னம் குறும்புதினப்  போட்டியில் முதல் பரிசு, சென்ற 2015 – ஆம்  ஆண்டிற்கான சிறந்த படைப்பாளி விருது மற்றும் பல பரிசுகளும் பாராட்டுகளும் மனத்தை நிறை வடையச்  செய்துள்ளன. ஒரு நல்ல படைப்பாளி எனும் நம்பிக்கையை இம்மன்பதை அவ்வப் பொழுது இப்படிக் கொடுப்பது நிறைவாகவே  உள்ளது.

  ? அண்மையில் உங்கள் படைப் பாற்றலுக்கு அணிசெய்யும்  வகையில் உங்களுக்கு முனைவர் பட்டம் வழங்கப்படுவதாக  அறிவிக்கப் பட்டது. அதுகுறித்த உங்கள் சிந்தனைகள்?

ஆம் அழைத்திருந்தார்கள்; அறிவித்திருந்தார்கள். அமெரிக்க  உலகத்தமிழ் பல்கலைக் கழகத்தின் சார்பில் மதிப்பியல்  முனைவர் (டாக்டர்) பட்டம் தருவதாகச் சொன்னார்கள். நானும்  விடாது “எனக்கெதற்கு முனைவர் பட்ட மெல்லாம், நானென்ன  அப்படிச் செய்து விட்டேன்” என்றேன், அதற்கு அவர்கள்,  இதுவரை  நாற்பது புத்தகங்கள் எழுதியுள்ளதைப் பாராட்டியும், அதிலும் அதை வெளி நாட்டில் வசித்துக்கொண்டு தமிழ்ப் பணி செய்தமையாலும், சிறந்த படைப்புகளைத் தந்துள்ளதாலும், ஆய்வுகள் மேற்கொண்டதன் அடிப் படையில் மொழி வளத்திற்கு உதவியதாலும் ஒவ்வொரு நாட்டிலிருந்து தேர்வு  செய்வதைப் போல் இம்முறை குவைத்து நாட்டிலிருந்து ஒரு  படைப்பாளியாக என்னைத் தேர்ந்தெடுத்ததாக விவரம்  சொன்னார்கள். ஆயினும் விழா நேரம் வேலையின் காரணமாக விடுப்பு கிடைக்காமல் செல்ல மறுத்து விட்டேன். ஒருவேளை  மீண்டும் வரும் வருடத்தில் அதே முனைவர் பட்டம் மீண்டும்  கிடைக்கப்பெறலாம்.

? இலக்கியம் தவிர நீங்கள் பல்வேறு குமுகாய(சமூக)த் தொண்டினையும்  செய்து வருகிறீர்கள். அதற்குப் பக்கபலமாக உங்களுக்கு  உங்கள் குடும்பத்தாரும் துணைசெய்கின்றனரா?

நிச்சயமாக. இறைவன் அளித்த வரங்கள் எனது உறவுகள் அனைத்தும். நட்பாயினும் சரி, அம்மா அண்ணி அண்ணன் தம்பிகள் துணைவி யாராயினும் எங்களுக்குள் ஒருவரைப்பற்றிய ஒருவருக்கான புரிதலும் அதே நேரம் குமுகாயம் குறித்து  உதவுவதற்கான சிந்தனை பல்வேறு வடிவில் அனைவருக்குமே  உண்டு.

குறிப்பாக எனது மனைவியைப் பற்றிச் சொல்லியாக வேண்டும்: “பத்து வருடங்கள் கடந்து திரும்பிப் பார்க்கையில் நான் அவளாகவும் அவள் நானாகவும் மாறியிருந்தோம்”. அங்ஙனம் தொண்டுகள் குறித்தோ எழுத்து குறித்தோ எனது  செயல்பாடுகளிலும் சரி அவருடைய ஒப்புதலிலும் சரி  எங்களுக்குள் வேறுபாடெல்லாம் இருந்ததேயில்லை.

பொதுவாகவே நாங்கள் நிறைய பேசிக் கொள்வதுண்டு. கண்ணாடிக்குள் அடைபட்ட நீரினிடையே இது இந்த நீர், இது அந்த நீர் என்று எந்த ஒரு பிரிவையும்  பார்க்க இயலாதோ அதுபோல்  எங்களுக்குள்ளும் எந்தவொரு பிரிவுணர் வையோ மாற்றத்தையோ  பார்க்க இயலாது. மொத்தத்தில் அவர் எனக்கு மூத்த மகள்; அவருக்கு நானும் அதுபோலவே.

?  இளம் அகவையில் இத்தனைப் படைப்புகளைப் படைத்துள்ள நீங்கள், இலக்கியத்தில் இன்னும்  என்ன வகையான அருவினைகளைச் செய்ய வேண்டும் என்று  திட்டமிட்டுள்ளீர்கள்?

  இருபத்துநான்கு வருடத்திற்கு முன் பத்தாம் வகுப்பு படித்துவிட்டு வெளியே வந்தேன். எனது முதல் சம்பளம் எனது  பதினான்கு வயதில் நான் வாங்கியது பத்து உரூபாய். சிறு வயதில்  தீக்குச்சி அடுக்கி, ஊதுவத்தி அடுக்கி, நறுமண நீரில் தோய்த்து விளையாட்டாகச் சம்பாதித்தது பதினைந்து, இருபது இருபத்தைந்து காசுகள். அப்போது எனது பெயர் வெங்கடாசலம்  மட்டும்தான்.

அதே வெங்கடாசலம் வித்யாசாகராகிப், புத்தகங்கள் பல எழுதி,  ஆய்விற்கு உதவி, பிறந்தநாளிற்கு 2010-இல் முதல் தமிழ்ப் பாடல்  எழுதி, விடுதலைக்கும் ஒற்றுமைக்கும் குழந்தைப் படிப்பிற்கும்  பாடல்களை இசையோடு தனது முகில் (கிரியேசன்) படைப்பகம் மூலம் தயாரித்து வெளியிட்டு, முகில் பதிப்பகம்  தொடங்கிப் பிறரது புத்தகங்களையும் அச்சிட்டு தந்து அதோடு  கூடவே தனது படிப்பையும் தொடர்ந்து முதுகலைப்  பொறியியல் பட்டம் பெற்று, உயர் ஆய்வாளருக்கும் படித்து  உலகளாவிய பதிவு செய்யப்பட்டவர்களில் ஒருவராகி இன்று மாதத்திற்கு இலட்சங்களை ஈட்டி அதில் பிறருக்கும் உதவ முடியுமெனில், எனக்கும் கீழுள்ளோரை என்னளவிற்கேனும்  கொண்டுவரும் முயற்சியே எனது எழுத்திற்குமான  இலட்சியமாகும்.

? ‘இலக்கியவேல்’ வாயிலாக வாசகர்களுக்கு நீங்கள் சொல்லவிழையும் செய்தி ஏதேனும் உள்ளதா?

 

  உண்மையாக இருக்க முயலுதல் வேண்டும். உண்மைதான்  நமக்கான ஒளிவட்டம். இயல்புநிலை புரிய எந்த வொரு  சூழலையும் அணுகவேண்டும். பிறர் மனசு பிற உயிர்கள்  நோகாது வாழவேண்டும். பிறருக்கு இயன்றவரை  உதவவேண்டும். எல்லாம் நாம் ஒன்றென்று அறிதல் வேண்டும்.  எல்லோரும் இயற்கையின் பிள்ளைகள் எனவே நமக்கு மதம்  என்பது ஒரு பயிற்சி. கடவுளைப் புரிந்துகொள்ள உதவும் கருவிகளே மதம், சடங்குகள் இவையாவும். எனவே  மதங்களுக்குள் சண்டையோ பிரிவினையோ மனிதர் களுக்குள் ஏற்றத் தாழ்வோ எல்லாம் பார்க்கக் கூடாது. மேல் கீழ் வருமாறு  நம் வாழ்க்கை அமைந்திடக் கூடாது என்பதிலெல்லாம் எச்சரிக்கை வேண்டும். எல்லாம் உயிர்க்கும் பயம் உண்டு; பசி  உண்டு; கோபம் உண்டு என்னும் உள்ளச் சமநிலை உணர்வு  எல்லோருக்கும் இருத்தல் வேண்டும். மன்னிப்பும் மனது  நிரம்பிய அன்பும் கனிவு கொண்ட பார்வையும் தெளிவு  கொண்ட நடையும் கம்பீரமும் வேண்டும். தவற்றைக் கண்டால்  எவர்செயினும் கண்டிக்கும் வீரமும் திருத்தும் அறிவு பலமும் உடல் வலிமையையும் மன திடமும் ஒருங்கே எல்லோருக்கும் இருக்குமாறு நாம் எல்லோரும் வாழ்தல் வேண்டும்.

  இந்த வான் மண் காற்று போல நீர் போல நிலவு சூரியனைப்  போல என்று நான் உனக்கும் நீ எனக்கும் பொதுவாய் அன்புற்று  அமைகிறோமோ அன்றே தேவையற்றுப் போகும் பாதுகாப்பு  ஏவுகணைகளும் போர்க்களங்களும். எனவே உள்ளத்து அன்பை  கையி லேந்தி எல்லோருக்கும் காட்டுங்கள். இயல்பாய் நிறைவாய் எல்லோரும் வாழட்டும். எங்கும் அன்பும்  அமைதியும் நிலவட்டும். எம் மண்ணிலிருந்து ஒரு  நன்னிலத்திற்கான அடையாளம் நீண்டு பரவி உலமெங்கும்  பரவட்டும். பரவட்டும்.

இலக்கியவேலிற்கு நன்றி. ஆசிரியருக்கு நன்றி. வாசகப்  பெருமக்களுக்கு நன்றி. வணக்கம்.

இலக்கியவேல் மாத இதழ் – புரட்டாசி-ஐப்பசி 2047 / செட்டம்பர் 2016: வித்யாசாகர் செவ்வி