புதிய அரசு செய்ய வேண்டியன!

சட்டமன்றத் தேர்தல் நடைபெற்ற மாநிலங்களில் இன்றைய சூழல் மாறாமலிருந்தால்  மே 2 இல் வாக்கு எண்ணிக்கை முடிந்து ஆட்சி அமைக்கப் போகிறவர்கள் யார் எனத் தெரிந்து விடும். தொடர்ந்து தமிழ்நாட்டிலும் புதிய அரசு அமைந்து விடும். அ.தி.மு.க.வே மீண்டும் ஆட்சி அமைத்தாலும் அது புதிய அரசுதான்.

எடப்பாடி பழனிச்சாமி, அரசியல் நோக்கர்கள், ஊடகத்தினர் கருத்துகளை எல்லாம் பொய்யாக்கித் தன்னை நிலைப்படுத்திக் கொண்டு ஆட்சிக்காலம் முழுவதும் பதவியில் உள்ள சிறந்த ஆளுமையாளர். பா.ச.க.வே பன்னீர் பக்கம் இருந்தாலும் அவரைச் சமாளித்துத் தன் ஆட்சிப்பாதையில் குறுக்கே வராமல் பார்த்துக் கொண்டவர். அரசியல் பண்பின் இலக்கணங்களில் ஒன்றாக ஊழலும் மாறிய பின்னர், அதன் அடிப்படையில் எடைபோடுவது சரியாகாது. பிற பண்புகளின் அடிப்படையில் பார்த்தால் அவரின் ஆட்சி வரவேற்பைப் பெற்றதாகவே அமைந்துள்ளது. அதிமுகவும் திமுகவும் ஏறத்தாழ இணையாக இருக்கும் பொழுது தன் துணையை வலிமை குன்றியதாக ஆக்கிக் கொண்டது அவருக்கு வலுவின்மையை அளித்தது.

தன்துணை இன்றால் பகையிரண்டால் தான்ஒருவன்

இன்துணையாக் கொள்கவற்றின் ஒன்று

(திருவள்ளுவர், திருக்குறள் 875)

என்பதை மறந்தார். குறள்நெறிக்கிணங்கப் பகையை நட்பாகக் கொள்ள வேண்டியவர் தன்னை அண்டி வந்த தே.தி.மு.க.வை வேறோர் அரசியல் கணக்கால் புறக்கணித்து விட்டார். அதுபோல் பா.ச.க.தான் சசிகலாவையும் தினகரனையும் புறக்கணிக்கச் செய்தது. அதன் அதிகாரத் துணை இருந்தும் அதனால் வெற்றி காண முடியவில்லை. எனவே, அதுவே, தினகரனை இணைத்துக் கொள்ளச் சொல்லியும் இணைத்துக் கொள்ளவில்லை. தினகரன் தனிக் கட்சியில் இருப்பதைவிட, அதிமுகவில் இருந்தால் முதன்மைச் செல்வாக்கு பெறுவார் என்னும் உண்மையை உணர்ந்தமையால்-அதிகாரச் சுவையை அடிமைத்தளை பறித்து விடும் என்னும் அச்சத்தால்- விலக்கிவிட்டார். அவர் முதல்வரான சூழலை அனைவரும் அறிவர். அவர், தவழ்ந்து மண்டியிட்டுப் பதவி பெற்றதைத் தரணியே கண்டிருக்கும் பொழுது அது பொய்யென்றும் சட்டமன்ற உறுப்பினர்களால் முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவன் என்றும் கூறியதை அவரது ஆதரவாளர்களே ஏற்கவில்லை. ”சாதி வேறுபாடு பார்க்காமல் தன்னை முதல்வராக ஆக்கிய சசிகலா அம்மையாருக்கு என்றும் கடமைப்பட்டவன் எனினும் கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் கட்சியின் கருத்திற்குக் கட்டுப்பட்டவன்; பெரும்பான்மையர் கருத்திற்கு இணங்க அவருக்கு எதிர் நிலையில் இருக்கக் கடமைப்பட்டுள்ளேன்” என்பதுபோல் அவர்  கூறியிருந்தால் உயர்ந்திருப்பார். மாறாக எட்டப்பனாக மாறிவிட்டு, எட்டபன்களாக மாறிய அணியினரைக் கட்சியில் இணைத்துக் கொண்டு, அவரே, எட்டப்பன் என்றெல்லாம் தினகரன் அணியினரைத் தாக்குவதை யாரும் ஏற்கவில்லை. அவர் இவ்வாறு பேசும்பொழுதெல்லாம் தனக்கு / தன் கட்சிக்கு எதிரான வாக்குகளைத் தானே கேட்டுப் பெறும்  நிலையை எட்டிவிட்டார்.

தே.தி.மு.க., இந்தியக் குமுகாய மக்களாட்சிக் கட்சி(S.D.P.I.) அசதுத்தீன் ஒவைசியின் இசுலாமியர் ஒற்றுமைக்கான அனைத்து இந்திய மன்றம்(AIMIM) ஆகியவற்றுடன் இணைந்து அ.ம.மு.க. தேர்தலைச் சந்தித்துள்ளது. வெற்றிகரமான கூட்டணியை அமைத்ததன் மூலம் தினகரன் அதிமுகவிற்கு அச்சுறுத்தலை அளித்துள்ளார். தினகரன் மட்டுமல்லாமல் கூட்டணியில் ஏறத்தாழ பதின்மர் வெற்றியை அடையும் வாய்ப்பு உள்ளது என்பதையும் மறுப்பதற்கில்லை. வெற்றி தோல்வி எவ்வாறிருப்பினும் தேர்தல் கணிப்பில் தெரிவிக்கப்படுவதைவிட அவர் கூட்டணியினர் கூடுதல் வாக்குகளைப் பெறுவர் என்றும் எதிர்பார்க்கலாம். இதன் பின்னர்தான் தன் தவற்றினை எடப்பாடியார் உணர்வார். ஒருவேளை மாறாக அதிமுக ஆட்சியமைத்து விட்டால் அவரைச் சிறந்த அரசியல் வித்தகராகக் கருதலாம்.

சரிபாதித் தொகுதிகளில் பெண்களைப் போட்டியிடச் செய்தும் இலவச அறிவிப்புகளுக்கு இடம் தராமலும் மக்களிடம் எழுச்சி ஏற்படும் வகையில் பரப்புரை மேற்கொண்டாலும் நாம் தமிழர் கட்சியின் நிலை என்ன என்பதைச் சீமானே அறிவார். கமலின் மையத்திற்கும் ஆட்சியில் மையம் கொள்ளும் அளவிற்கு வெற்றி கிட்டாது என்பதை அவரே அறிவார். இருப்பினும் இவர்கள் பெறும் வாக்குகள் இவர்களைப் பொறுத்தவரை வெற்றிக் கனிகளே. அந்த அளவில் மகிழ்ச்சி கொண்டு அடுத்த ஆட்சிக் கனவைக் காணலாம்.

நேர்மையை இலக்காகக் கொண்டு சகாயம் அரசியல் பேரவை 15 விழுக்காட்டுத் தொகுதிகளில் போட்டியிட்டுள்ளது. (சகாயம் அரசியல் பேரவை 20, தமிழ்நாடு இளைஞர் கட்சி 15, வளமான தமிழகம் கட்சி 01). ஊடக விளம்பரத்தில் மயங்கி, மக்கள்மனத்தைப் புரிந்து கொள்ளாமல் சகாயம் (இ.ஆ.ப.) தேர்தலில் தான் போட்டியிடாவிட்டாலும் கூட்டணி மூலம் பங்கேற்றுள்ளார். வாக்குகள் வந்த வரை ஆதாயம் என்றும் மக்கள் மனத்தைப் புரிந்து கொண்டு அடுத்த செயல் முறைகளை வகுக்கலாம் என்றும் எண்ணிப் போட்டியிட்டிருக்கலாம். எனினும் பா.ச.க.வை இறுதியில் இருந்து முன்னேற்றத்தான் இவர் உதவியிருப்பார்.

மு.க.தாலின் கூட்டணி அமைப்பதிலேயே வெற்றிக்கான பல படிகளைத் தாண்டி விட்டார். எனவேதான், பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் தி.மு.க.வே ஆட்சி அமைக்கும் என்கின்றன. கடந்த தேர்தலில் மக்கள் நலக்கூட்டணி வாக்குகளைப் பிரித்திருக்காவிட்டால் தி.மு.க.தான் ஆட்சியில் அமர்ந்திருக்கும். இருப்பினும் இதனை அடிப்படையாகக் கொண்டு தி.மு.க.வை மிரட்டிக் கூடுதல் தொகுதிகள் கேட்கக் கூட்டணிக் கட்சிகளுக்கு இயலவில்லை. அவர்களுக்குத் தெரியும்; இதனால் தி.மு.க. தோற்கலாம். ஆனால், தாங்கள் ஓரிடம்கூடப் பெறமுடியாது என்பதை உணர்ந்திருந்தார்கள். எனவே, தி.மு.க.கூட்டணியில் கரைவதை விட அவர்களுக்கு வேறு வழியில்லை. இதனைத் தெளிவாக அறிந்து தொகுதிப் பேரங்களை நடத்தியதால் தி.மு.க. வெற்றிக்கான அடித்தளத்தை அமைத்துக் கொண்டது. தி.மு.க போட்டியிடும் தொகுதிகளையும் சேர்த்து இந்த முறை (173+14=) 187 தொகுதிகளில் ‘உதயசூரியன்’ களமிறங்கியுள்ளது.

வெற்றியை எதிர்பார்க்கும் கட்சியின் தலைவர்கள் ஆட்சியில் அமர்ந்ததும் செய்ய வேண்டுவன குறித்துத் திட்டமிட்டுப் பட்டியல் போட்டு வைத்திருப்பார்கள். எனினும் நாமும் சிலவற்றை அவர்களுக்குக் கூறுவோம்.

 1. இராசீவு கொலை வழக்கில் சிக்கித் தண்டனைக்காலத்திற்கும் மிகுதியாகச் சிறையில் அல்லலுறும் எழுவரையும் உடனே விடுதலை செய்திட வேண்டும். காலத்தாழ்ச்சி ஏற்படும் எனக் கருதினால் அவர்களை உடனடியாகக் காப்பு விடுப்பில் விட வேண்டும். 14 ஆண்டுகளுக்கும் மேலாக நீண்டகாலமாகச் சிறையில் இருக்கும் அனைவரையும், இசுலாமியரா அல்லரா என்று வேறபாடு பார்க்காமல் விடுதலை செய்ய வேண்டும். அல்லது காலத்தாழ்ச்சி ஏற்படுமெனில் பிணைக்காப்பில் விட வேண்டும். இதனால் நெடுங்காலம் சிறையில் இருக்கும் இசுலாமியர்களுக்கும் நீதி கிடைக்கும்.

 

 1. அனைவருக்கும் அனைத்து நிலையிலும் கட்டணமில்லாக் கல்வி வழங்க வேண்டும். தனியார் கல்வி நிறுவனங்கள் கட்டணமில்லாக் கல்வி வழங்குவதாக இருந்தால் மட்டுமே அவற்றை நடத்துவதற்கு இசைவு அளிக்க வேண்டும். இல்லாவிட்டால் அரசே எடுத்துக் கொள்ள வேண்டும். இதுவரை நன்கொடை பெற்ற தனியார் கல்வி நிறுவனங்கள் நன்கொடையாளர்களை இணைத்துக் கூட்டுறவு முறையில் அவற்றை நடத்த வேண்டும். இவை மருத்துவக் கல்லூரி, பொறியியல் கல்லூரி முதலான தொழிற் கல்விகளுக்கும் பொருந்தும்.

 

 1. மழலை நிலையிலிருந்து ஆய்வு நிலை வரையும், தொழிற் கல்விகளும் தமிழ் வழியே நடத்தப்பெற வேண்டும். இதுவரை ஆங்கில வழியில் பயின்றவர்கள் இனித் தமிழ் வழியில் பயிலும் வண்ணம் தனித்தனிப் பாடத்திட்டம் வகுக்க வேண்டும். ஆங்கில மொழிக்கல்வி ஆறாம் வகுப்பில் இருந்து கற்பிக்கப்பட்டால் போதும். 9,10 ஆம் வகுப்புகளில் பிற தென்னிந்திய மொழிகள் விரும்புவோர் படிக்க வாய்ப்பு தரப்படவேண்டும். மேனிலைக்கல்வியில் பிற அயல்மொழிகள் கற்பிக்க வாய்ப்பு தர வேண்டும். பிற மொழியினர் தங்கள் தாய்மொழிக்கான சான்று அளித்தால் மட்டும் அவர்கள் அந்தந்த மொழிகளைத் தொடக்கக்கல்வியில் கற்க வாய்ப்பு தரலாம்.

 

 1. அனைவருக்கும் சிறந்த மருத்துவ வசதி இலவயமாக வழங்கப்பெற வேண்டும். ஒவ்வொரு தொடக்க நல்வாழ்வு மையமும் அனைத்து ஆய்வு வசதிகளும் போதிய மருந்துகளும் மருத்துவர்களும் மருத்துவப் பணியாளர்களும் உள்ள சிறந்த மருத்துவ மையமாகச் செயல்பட வேண்டும். தனியார் மருத்துவ மனைகளில் கட்டணங்கள் மிகக் குறைந்த அளவில் இருக்க வேண்டும். மாவட்டங்கள்தோறும் தமிழ் மருத்துவ மனைகள் இணைந்த தமிழ் மருத்துவக் கல்லூரிகள் தொடங்க வேண்டும்.

 

 1. காய்கனிகளையும் மளிகைப் பொருள்களையும் தரமானதாகவும் குறைந்த விலையிலும் மக்களுக்கு வழங்க வேண்டும்..

 

 1. உணவு அட்டை, ஆதார அட்டை அனைவருக்கும் வழங்கப்பட்டிருக்க வேண்டும். வாக்குரிமை உள்ள அனைவருக்கும் வாக்காளர் அட்டை வழங்கப்பெற வேண்டும். வாக்களர் வீடு மாறினால் பெயர் நீக்கப்படக் கூடாது. புதிய முகவரியை அறிந்து அப்பகுதிக்கு மாற்றப்பட வேண்டும். வேலை, தொழில் தொடர்பாகக் குடியேறியுள்ள பிற மாநிலத்தவர்க்குத் தனி அடையாள அட்டைகள் வழங்கப்பெற வேண்டும்.

 

 1. ஆளும் பொறுப்பேற்கும் கட்சி, தன்னுடைய தேர்தல் அறிக்கையில் தெரிவித்த வாக்குறுதிகளை 3 மாத காலத்திற்குள் நிறைவேற்ற வேண்டும்.

 

 1. பள்ளி மாணாக்கர்களுக்கு இலவசக்கல்வியுடன் புத்தகங்கள், சீருடைகள், தேவைக்கேற்பக் கணிப்பொறி முதலானவை கட்டணமின்றி வழங்கப் பெற வேண்டும். கல்லூரி மாணாக்கர்களுக்கான விடுதிகள் தரமானதாகவும் கட்டணமின்றியும் இருக்க வேண்டும்.

 

 1. தொழிலாளிகள், சிறு வணிகர்கள் முதலான வருவாய் குறைந்த நிலை உள்ளவர்களுக்கு விலையில்லா வீடுகள் வழங்கப்பெற வேண்டும். பிறருக்கு அவர்களின் வருவாய் வசதிக்கேற்ற வீடுகள் குறைந்த விலையில் வழங்கப்பெற வேண்டும்.

 

 1. இலங்கைத் தமிழர்கள் திபேத்தியர்கள்போல் உரிய வசதி வாய்ப்புகள் உரிமைகளுடன் வாழ வகை செய்ய வேண்டும்.

 

 1. அரசுத் தளங்களின் இணையப் பயன்பாடு சரியாகச் செயல்படுமாறு இருக்க வேண்டும். ஏறத்தாழ எல்லா இணையத் தளங்களிலும் மக்கள் சரியான விவரங்களைப் பெற இயலாது. ஊழலைக் குறைக்கத்தான் இணையப் பயன்பாடு உதவும். ஆனால், வருவாய்த்துறையில் சான்றிதழ்கள் பெற வேண்டுமானால் தொடக்க நிலையில் சிற்றூர் ஆட்சி அலுவலர் இணையத்தில் விவரங்களை ஏற்றுகிறார். அதன் பின்னர் நாம் தரும் விண்ணப்பங்களை எடுத்துக் கொண்டு வருவாய் ஆய்வர், வட்டாட்சியகம் என்று அலைந்து அங்கங்கே கப்பம் கட்ட வேண்டும். இறுதியில் பெருங்கப்பம் கட்டிய பின்னரே சான்றிதழ் கிடைக்கும். இணையம் இருக்கும் பொழுது மக்கள் ஏன் அலைய வேண்டும். கைகளில் ஏன் விண்ணப்பம் தேவை? அடுத்தடுத்த நிலைகளில் இணைய வழியாகவே சரிபார்த்து உரிய சான்றிதழ்களை இணையம் வழியாகவே பெறச் செய்யலாமே!

 

 1. கையூட்டிற்கு எதிரான அறிவிப்பு இல்லாத அரசு அலுவலகம் கிடையாது. அதே போல் கையூட்டு இல்லாத அலுவலகமும் கிடையாது. இந்த நிலையைப் போக்க வேண்டும். நேர்மையான அதிகாரிகளுக்கு இடையூறு தரும் போக்கும் ஊழல் அதிகாரிகள் உயர்த்தப்படும் போக்கும் நிறுத்தப்பட வேண்டும்.

 

 1. அறிவியல் தமிழ் மன்றம்’ தி.மு.க. ஆட்சியில் அமைக்கப்பட்டது – கலைஞர் மு.கருணாநிதியால் உருவாக்கப்பட்டது – என்பதாலேயே அ.தி.மு.க. ஆட்சியில் நிறுத்தப்பட்டது. உடனடியாக அதற்குப் புத்துயிர் அளிக்க வேண்டும். தமிழ் அமைப்பு எதுவாயினும் உண்மைத் தமிழ்ப்பற்று மிக்க தமிழறிஞர்களையே பொறுப்பில் அமர்த்த வேண்டும். வேண்டியவர் என்தற்காகவோ வேறு ஒன்றில் சிறந்தவர் என்பதற்காகவோ பொறுப்பு வழங்கிச் செயல்பாட்டைக் குலைக்கக் கூடாது.

 

 1. செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் தலைவர் பதவி வழியில் முதல்வர். ஆனால், முத்தமிழறிஞர் மு.கருணாநிதியின் பெரு முயற்சியால் நிறுவப்பட்டது என்பதால் அ.தி.மு.க. ஆட்சியில் இவ்வமைப்பு புறக்கணிக்கப்படுகிறது. “கருணாநிதி நட்ட செடிக்கு நான் தண்ணீர் ஊற்றுவதா?” என்பதுபோல் பேசப்பட்டு இவ்வமைப்பு புறக்கணிக்கப்படுகிறது. எனவே, மத்திய அரசின் மூலம் பெறவேண்டிய நிதிஉதவிகளைப் பெற்று ஆற்ற வேண்டிய பணிகளை ஆற்றுவதில் தடை ஏற்பட்டுள்ளது. ஆளுங்கட்சி மாறினாலும் அரசு நிலையானது என்பதைக் கருத வேண்டும். எனவே, ஆட்சி மாறினாலும் தமிழ் நலத் திட்டங்களும் பிற நலத் திட்டங்களும் தங்கு தடையின்றித் தொடர வேண்டியது ஆள்வோரின் இன்றியமையாக் கடமை என்பதை உணர்ந்து செயலாற்ற வேண்டும். புதிய முதல்வர் இதன் தலைவராகச்சிறப்பாகச் செயல்பட்டு இந்நிறுவனத்தை உயர்த்த வேண்டும்.

 

 1. தமிழ் ஆட்சி மொழிச் செயலாக்கம் தொய்வுற்ற நிலையில் உள்ளது. விருது விழாக்களைச் சிறப்பாக நடத்தும் தமிழ்வளர்ச்சித் துறை ஆட்சிமொழிச் செயலாக்கத்தில் பின்தங்கியே உள்ளது. எனவே, தமிழ் ஆட்சிமொழிச் செயலாக்கத்தைச் சிறப்புற மேற்கொள்ள வேண்டும். “எங்கும் தமிழ்! எதிலும் தமிழ்!” என வீர முழக்கம் முழங்குவதில் மன நிறைவு கொள்ளாது உண்மையிலேயே ‘எங்கும் தமிழ்! என்றும் தமிழ்!” என்னும் நிலையை உருவாக்க வேண்டும்.

 

மக்கள் குறைகளை விரைந்து போக்கும் மக்களின் நலத் தேவைகளை உடனுக்குடன் நிறைவேற்றும் மக்கள் நல அரசாகத் திகழ வேண்டும்! மேற்குறித்தவற்றுடன், அவ்வப்போது ஆன்றோர்களும் அறிஞர்களும் ஊடகத்தினரும் தரும் அறிவுரைகளைப் பின்பற்றிச் சிறப்பாகச் செயல்பட்டால் பொற்காலத்தை உருவாக்கலாமே!

முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு

இறையென்று வைக்கப் படும். 

 (திருவள்ளுவர், திருக்குறள் ௩௱௮௰௮ – 388)

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

இதழுரை அகரமுதல சித்திரை 14, 2052 / 27.04.2021