புதிய கல்விக் கொள்கையும் இந்தித் திணிப்பும்

இந்திய விண்வெளியியல் ஆய்வு நிறுவனத்தின் முன்னாள் தலைவர் கத்தூரிரங்கன் தலைமையிலான குழு ‘புதிய கல்விக்கொள்கை 2019’ என்னும் தலைப்பிலான கல்விக் கொள்கை வரைவு ஒன்றினை அண்மையில் பொறுப்பேற்றுள்ள மனிதவள மேம்பாட்டு மந்திரி இரமேசு பொக்ரியாவிடம் வழங்கியுள்ளது.

 ‘வரைவு’ என்றால் நடைமுறைப்படுத்துவதற்கான பரிந்துரை என்று பொருள்.

 இந்தக்குழு இதற்கு முந்தைய அமைச்சர் சவடேகரால் 24-6-2017-இல் அமைக்கப்பட்டு 15-12-2018-இல் தனது அறிக்கையை நிறைவு செய்தது. மொத்தம் 484 பக்கங்கள் கொண்ட இந்த அறிக்கை மாறி வரும் உலகச் சூழலுக்கு ஏற்ப இந்தியாவின் கல்விக்கொள்கையில் ஏற்படுத்தவேண்டிய மாற்றங்களைக் கண்டறிந்து ஒரு புதிய கல்விக்கொள்கையை வகுத்து முன்மொழிந்துள்ளது.

 இந்தப் புதிய கல்விக்கொள்கையில் பள்ளி மாணவர்களுக்கு மும்மொழித் திட்டம் கட்டாயமாக்கப் பட்டதும், இந்தி பேசாத மாநிலங்களில் உள்ள மாணவர்களுக்கு இந்தி கட்டாயமாக்கப்பட்டதும் உணர்வுக் கொந்தளிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. எல்லாவற்றிற்கும் மேலாகப் பன்முகப்பாங்கான இந்திய நாட்டின் மொழி, பண்பாட்டு வேறுபாடுகளை மனதில் கொள்ளாது ஒரே மாதிரியான கல்வித் திட்டத்தை வலிந்து திணிக்கும் முயற்சி மாநிலங்களுக்கு உள்ள உரிமையில் வரம்பு மீறித் தலையிடுவதாக உள்ளது.

 கல்வி, மாநிலங்களுக்கும், மத்திய அரசுக்கும் பொதுவான ஒருங்கிணைந்த பட்டியலில் விளங்கி வருவதனை மெல்ல மெல்ல நீக்கிவிடும் முயற்சியில் மோடி அரசு செய்துவருகிறது என்னும் வருத்தம் மூத்த கல்வியாளர்களுக்கு ஏற்பட்டுள்ளது. கடந்த ஆட்சிக் காலத்தில் ‘நீட்’ நுழைவுத் தேர்வுமுறை கட்டாயமாக்கப்பட்ட போதே கல்வி, மாநிலங்களின் பட்டியலில்இருந்து அறிவிப்புச் செய்யாமல் அகற்றப்பட்டுவிட்டதே என்னும் கொந்தளிப்பும், மாநில உரிமைகள் பறிபோகின்றனவே என்னும் ஏமாற்றமும் ஏற்பட்டன அல்லவா?

 இந்தப் புதிய கல்விக்கொள்கை, இந்தியைக் கட்டாயமாக்குவதுடன், மாநில உரிமைகளிலும் தலையிடுவதாக உள்ளது. விரிவான அறிக்கையைப் படித்துப் பார்க்கும்போது இந்தியாவின் கூட்டாட்சி முறைக்குக் குழிபறிப்பதாக இந்தக் கொள்கை திட்டமிடப்பட்டுள்ளது தெளிவாகிறது.

 கல்வியில் தாய்மொழியின் முதன்மையையும், தேவையையும் சில பகுதிகளில் வலியுறுத்தியுள்ளனர். ஆனால் ஆங்கில அறிவு அறிவியல் வளர்ச்சிக்குத் தேவை எனவும் இந்த அறிக்கையிலே வலியுறுத்தப்பட்டுள்ளது.

தமிழைக் குறிப்பிடும்போது தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஒடியா, பாலி, பெருசியன் என்னும் பட்டியலை விரிக்கும் இந்த அறிக்கையாளர்கள் சமசுகிருதத்தைக் குறிப்பிடும் போதெல்லாம் விரிவாக அதன் பெருமைகளை விளக்கிச் செல்கிறார்கள். காளிதாசன், பாசன் என்றெல்லாம் சமசுகிருதப் புலவர்களின் பெயர் சொல்லிப் பாராட்டும் அறிக்கையாளர்களுக்கு ஓரிடத்திலாவது தொல்காப்பியர், திருவள்ளுவர் என்று கூற வேண்டுமெனத் தோன்றவில்லையே? இடமில்லையா? மனமில்லையா?

விண்வெளியியல் ஆய்வாளரைக் கொண்டு கல்வித்திட்டம் வகுப்பதே பொருத்தமானதாகத் தெரியவில்லையே? இவ்வளவு பெரிய நாட்டில் கல்வியாளர்களுக்குப் பஞ்சம் ஏற்பட்டுவிட்டதா? அறிக்கை உருவாக்கியவர்கள் பட்டியலைக் கவனித்தால் ஒருவர் கூடத் தமிழ்நாட்டிலிருந்து இடம் பெறவில்லை என்னும் குறை உறுத்துகிறதே? கல்வியின் தாயகம் என்று போற்றப்படும் தமிழ்நாட்டில் ஒருவரையாவது குழுவில் இணைத்திருக்கலாமே?

கல்வித்துறையில் 217 பேரைச் சீர்சால் பெருந்தகைகள் என்று பட்டியலிட்டுள்ளார்கள். இப்பட்டியலிலும் இரண்டே பேர் தான் தமிழ்நாடு.

மொத்தத்தில் பாரபட்சம் மிக்க இந்தக் கல்வி கொள்கைத் திட்டத்தை மத்திய அரசு கைவிடவேண்டும். அந்தந்த மாநிலங்களுக்குரிய கல்விக் கொள்கையை அந்தந்த மாநிலச் சூழல்களுக்கேற்ப அந்தந்த மாநில அரசுகள் வகுக்க வேண்டும். எவ்வித அரசியல் தலையீடும் இல்லாமல் கடமையுணர்வு மிக்க கல்வியாளர்களை ஒருங்கிணைத்துக் கல்விக் கொள்கை வகுத்துக் கொள்ளவேண்டும். மத்திய அரசு மாநிலங்களின் சார்பாளர்கள் கொண்ட குழுவை அமைத்துப் பொதுவான சில திட்டங்களை உருவாக்கி மாநில அரசுகளின் இசைவோடு அந்தந்த மாநிலக் கல்வித் திட்டங்களில் இணைத்துக் கொள்ளவேண்டும். அணுவளவும் அரசியல் தலையீடு இருக்கக்கூடாது.

தாய் மொழியின் முதன்மையுணர்ந்து தாய்மொழி வழிக் கொள்கை உருவாக்கினால் நாடு முன்னேறும். காந்தி, தாகூர் போன்ற சான்றோர்கள் கண்ட கனவாகிய ‘தாய்மொழிவழிக் கொள்கை’ நடைமுறைப்படுத்தப்பட்டால் புதிய சிந்தனையும், புதிய கண்டுபிடிப்புகளும் பெருகும். இந்தியா வல்லரசாக உலகில் உயர்ந்தோங்கும்.

முனைவர் மறைமலை இலக்குவனார்

(சிறப்புவருகைப் பேராசிரியர், கலிபோர்னியா பல்கலைக்கழகம், அமெரிக்கா)

– தினத்தந்தி 05.06.2019