புயல் துயர மறுவாழ்வு – மத்திய அரசைக் கண்டிப்போம்! – இலக்குவனார் திருவள்ளுவன்
புயல் துயர மறுவாழ்வு – மத்திய அரசைக் கண்டிப்போம்!
அண்மையில் ஏற்பட்ட கடும்புயலால் உயிரிழந்த, உடைமைகள் இழந்த, துயருள் மூழ்கிய, வாழ்விழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நம் ஆறுதல்களைத் தெரிவிக்கிறோம்.
பெரும்புயல் பாதிப்புகளைச் சரி செய்யவும் மறுவாழ்வு உதவிகளை வழங்கவும் பாடுபடும் அரசு ஊழியர்கள், அரசு சார் அமைப்புகளின் ஊழியர்கள், தொண்டு அமைப்புகள், கட்சியினர், இயக்கத்தினர், கலைத்துறையினர், தன்னார்வலர்கள் எனப் பலதரப்பட்டாருக்கும் நம் பாராட்டுதல்களையும் தெரிவிக்கிறோம்.
தமிழக அரசு தன்னால் இயன்றதைச் செய்துள்ளதாகக் கருதி அதனையும் பாராட்டுகிறோம். சட்டியில் இருந்தால்தான் அகப்பையில் வரும். எனவே, எதிர்பார்ப்பிற்கேற்ற போதிய செயல்பாடின்மைக்குக் காரணம் திறப்பாடின்மையே என எண்ண வேண்டி யுள்ளது. திறமையான அதிகாரிகள் இருந்தும் இயலாமைக்குக் காரணம் நமக்குப் புரியவில்லை. எனினும் மேலும் சிறப்பாகவும் விரைவாகவும் செயல்பட்டுத் துயருற்றவர்களின் வாழ்வில் ஒளியேற்ற வேண்டுகிறோம்.
அனைத்துத் தரப்பாரும் பங்கேற்கும் குழுக்களை ஊர்கள் தோறும் அமைத்து மறுவாழ்வுப்பணிகளில் ஈடுபடவேண்டும். இதனால் அரசின் இடர்ப்பாடுகளைப் பிறரும் புரிந்து கொள்வர். அரசும் மக்கள் எதிர்பார்ப்பிற்கேற்ப மறுவாழ்வுப் பணிகளில் ஈடுபட இயலும்.
தேசியப் பேரிடர் மேலாண்மை அதிகாரக் குழாம்(NDMA)-இல் உறுப்பினர் எண்ணிக்கை ஒன்பதிற்கு மேல் இராத வகையில் இருக்க வேண்டும் என்பது விதி. இப்போதைய உறுப்பினர்கள் நால்வர்தாம். எல்லா மாநிலங்களுக்கும் வாய்ப்பு கிட்டும் வகையில் சுழற்சி முறையில் மேலும் ஐவரை உறுப்பினர்களாக அமர்த்த வேண்டும்.
இந்தக் குழாம் இதுவரை 6 முறை மட்டுமே கூடியுள்ளது. நாட்டில் எந்தப்பகுதியில் இயற்கைப் பேரிடர் கூடாமல் இவர்கள் என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறார்கள்? கண் துடைப்பாக இந்த அமைப்பு இருந்து பயனில்லை. உரிய எண்ணிக்கையில் உறுப்பினர்களை நியமிக்கவும் உரிய காலங்களில் கூட்டத்தைக் கூட்டவும் எந்த மாநிலமாக இருந்தாலும் தேவைப்படும் பொருளுதவியை அளிக்கவும் மத்திய அரசை நாம் வலியுறுத்த வேண்டும்.
இச் சூழலில் நாம் அனைவரும் ஒன்றுபட்டு இந்திய மத்திய அரசைக் கண்டிக்க வேண்டும். மத்திய அரசிற்கு மிகுதியான வரி வருவாய் கிடைப்பது தமிழ்நாட்டில் இருந்துதான். என்றாலும் தமிழ்நாடு என்றால் மத்திய அரசு பாரா முகமாக உள்ளது. தமிழ்நாட்டிற்கு இயற்கையால் பெரும்பேரிடர் ஏற்பட்டாலும் அதனை மத்திய அரசு கருதிப் பார்க்காது. நாம் கேட்கும் உதவிக்கும் மத்திய அரசு தரும் உதவிக்கும் தொடர்பில்லாத அளவில் சிறிய தொகையையே வழங்கும். எடுத்துக்காட்டாக அண்மைய உதவிகளைப் பார்ப்போம்.
2011 புயலின் பொழுது தமிழக அரசு 5249 கோடி உரூபாய் உதவித் தொகைகேட்டதற்கு 500 கோடி உரூபாய்தான் முதலில் விடுவித்தது.
2016 வருதா புயலின்பொழுது தமிழக அரசு 22573 கோடி உரூபாய் நிதியை விடுவிக்க வேண்டியதற்கு வெறும் 226 கோடி உரூபாய்தான் அளித்தது.
2017 ஒக்கி புயலின் பொழுது தமிழக அரசு 13250 கோடி உரூபாய் நிதி வேண்டியதற்கு ஒப்பிற்காக 280 கோடி உரூபாய் தந்தது.
புயல் மழை வெள்ளப்பாதிப்புகளைப் பார்ப்பதற்கு உடனடியாகவும் மத்திய அரசு அல்லது தேசியப் பேரிடர் மேலாண்மை அதிகாரக் குழாம் வராது. காலங்கடந்து வந்தாலும் ‘அவனவன் அப்பன் வீட்டுப் பணத்தைக் கேட்பதுபோல்’ மத்திய அதிகாரிகள் நடந்து கொள்வர். உரிய உதவித்தொகையைப் பெறுவதற்கு நடத்தும் போராட்டமே பெரும் போராட்டமாக இருக்கும் பொழுது தமிழக அரசுதான் என் செய்யும்? இதுபோன்ற பிற மாநில அரசுகளும் என்னதான் செய்யும்?
பேரிடர் மேலாண்மைச் சட்டம் 2005 இன்படி இயற்கைப்பேரிடர் வரையறைக்குட்பட்டவாறான நிதி உதவியைத் தமிழக அரசு மத்திய அரசிடம் கேட்க வேண்டும். மாறாக இழப்புகளுக்கான முழுத் தொகையையும் கேட்கக் கூடாது. மத்திய அரசும் தேவைப்படும் தொகையைக் குறைக்காமலும் காலந்தாழ்த்தாமலும் வழங்க வேண்டும்.
தேசியப்பேரிடர் மேலாண்மை அதிகாரக் குழாத்திலிருந்து மாநிலப் பேரிடர் மேலாண்மைக் குழாம்களுக்குப் போதிய எதிர்பார்ப்புத் தொகைகளுக்கு முன்பணமாக வழங்க வேண்டும்.
இதுபோன்ற இயற்கைப் பேரிடர் எப்பொழுது ஏற்பட்டாலும் தமிழக அரசும் பிற மாநில அரசுகளும் கேட்கும் உதவித்தொகையில் 75 விழுக்காட்டிற்குக் குறையாமல் உடனடியாக மத்திய அரசு விடுவிக்க வேண்டும். எஞ்சிய தொகையை உரிய நடைமுறைகளுக்குப் பின்னர் விடுவிக்கட்டும்.
மத்திய அரசிற்கு உள்ளபடியே நாட்டுமக்கள் நலன்களில் ஈடுபாடு இருக்குமெனில், ஊடகங்கள் மூலம் துயரங்கள் அறிய வந்தவுடன் தானாகவே முன்வந்து உதவித்தொகையை வழங்க வேண்டும்.
இவ்வாறான நடைமுறைகளை உடனடியாகப் பின்பற்றுமாறு மக்களும் கட்சியினரும் மத்திய அரசை வலியுறுத்த வேண்டும். அதற்கு இணங்காவிட்டால் நம் கண்டனக் கணைகள் மத்திய அரசின் மீது பாய் வேண்டும்.
இந்திய அரசே!
உடனடியாகத் தமிழக அரசு வேண்டும் உதவித்தொகைகளை விடுவி!
மக்களின் துயரங்களில் பங்கு கொண்டு துயர் தணிப்புபப் பணிகளில் ஈடுபடு!
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
இதழுரை, அகரமுதல
Leave a Reply