(இலக்கியம் கூறும் தமிழர்  வாழ்வியல் (சங்கக் காலம்)  30 –  தொடர்ச்சி)

இலக்கியம் கூறும் தமிழர்  வாழ்வியல் (சங்கக் காலம்)  31

16. புலவர்கள் (தொடர்ச்சி)

தொல்காப்பியர், திருவள்ளுவர், இளங்கோவடிகள் ஆய மூவரும் தனிச்சிறப்புடையவர்கள்.  தொல்காப்பியர் காலத்துக்குப் பின்பே தமிழ் வளர்ப்பதற்கெனச் சங்கம் தோன்றியிருக்க வேண்டும்.  ஆதலின், சங்கக் காலத்துக்கு முற்பட்டவராவார் தொல்காப்பியர்.  தொல்காப்பியர் காலம் கி.மு. ஏழாம் நூற்றாண்டு எனவும், திருவள்ளுவர் காலம் கி.மு. முதல் நூற்றாண்டு எனவும், இளங்கோ அடிகளின் காலம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டு எனவும் கொண்டுள்ளோம்.  சங்கக்காலத்தைக் கி.மு. ஏழாம் நூற்றாண்டுக்குப் பின்னர் கி.பி. இரண்டாம் நூற்றாண்டுவரை என வரையறுக்கலாம்.

மொழி வளர்ச்சிக்கெனப் புலவர்கள் சங்கம் அமைத்த நற்பெருஞ் செயல் உலகிலேயே முதன்முதல் நம் தமிழகத்தில்தான் நிகழ்ந்துள்ளது.  மொழி வளர்ச்சியை ஒழுங்கு படுத்தித் திருத்தமுற்ற நெறியில் செல்ல விதிகள் அமைத்து இலக்கியம் இயற்றுவதற்கு இலக்கணம் கண்டதும் நம் தமிழகத்தில்தான்தொல்காப்பியம் போன்றதொரு இலக்கணம் வேறு எம்மொழியிலும் அன்றும் தோன்றவில்லை; இன்றும் தோன்றிடக் கண்டிலோம்.

திருக்குறள் போன்றதொரு அறநூலும், சிலப்பதிகாரம் போன்றதொரு காப்பியமும் தமிழுக்கே உரிய சிறப்பினையுடையன ஆதலின்  “ யாமறிந்த புலவர்களிலே தொல்காப்பியர் போல் திருவள்ளுவர் போல் இளங்கோ அடிகள்போல், இந்நில உலகில் யாங்கணுமே பிறந்திலரே; உண்மை, உண்மை; வெறும் புகழ்ச்சியிலை”என மலையுச்சிமீது நின்று மாஞாலத்திற்கு உரைக்கலாம்.  ஏனைய புலவர்களும் அவர்கள் பாடியுள்ள பாடல்களால் பெரும் புலவர்கள் என மதிக்கத்தக்கவர்களாகவே உள்ளனர்.  இற்றை மேனாட்டு இலக்கிய ஆராய்ச்சியாளர்கள் இலக்கியத்திற்கு வரையறுத்துள்ள இலக்கணங்கள் யாவும் அவை பெற்றுள்ளன.  இலக்கியம் என்பது மக்கள் வாழ்க்கை அடிப்படையில் இயற்கைச் சூழலைப் பின்னணியாகக் கொண்டு தோன்றுதல் வேண்டும் என்பர்.  பழந்தமிழ் இலக்கியங்கள் யாவும் அவ்வாறே தோன்றியுள்ளன.  சங்கப் புலவர்கள் அரண்மனைகளில் தொடர்பு கொண்டிருந்தபோதும் மக்களை மறந்திலர்.  மக்கள் புலவராகவே மக்களுக்காகவே வாழ்ந்துள்ளனர்.  மக்களுக்காகவே இலக்கியம் என்று கொண்டனரே யன்றி இலக்கியத்திற்காக மக்கள் என்று கொண்டிலர்.

       இலக்கியத்திற் கொள்ளப்படும் பொருள்களைத் தமிழிலக்கண நூலார் முதல், கரு, உரி என வகுத்தனர்.

       முதல், கரு, உரி என்பனவற்றுள் உலகமே அடங்கி விடுகின்றது.  ‘முதல்’ என்பது நிலமும் பொழுதும்; ‘கரு’ என்பது தெய்வம், உணா, மாமரம், புள், பறை, செய்தி, யாழ் முதலியன; ‘உரி’ என்பது குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல் என்பனவாம் அகவொழுக்கம்.

முதல்கரு உரிப்பொருள் என்ற மூன்றே

 நுவலுங் காலை முறைசிறந் தனவே

 பாடலுட் பயின்றவை நாடுங் காலை”      (தொல்.பொ-3)

எனத் தொல்காப்பியர் கூறியுள்ளார்.  தொல்காப்பியர்க்கு முன்னும் பின்னும் வாழ்ந்த சங்கப் புலவர்களின் இலக்கியங்கள் இந் நெறி ஒட்டியே தோன்றியுள்ளன.

‘இலக்கியம்’ எனும் சொல்லையே நோக்குக. 

‘இலக்கு’ ‘இயம்’எனப் பிரித்துக் குறிக்கோளை இயம்புவது எனப் பொருள் கொள்ளல் வேண்டும்.  வாழ்க்கையின் குறிக்கோளை இயம்புவதே இலக்கியமாகும்.  வாழ்க்கையின் குறிக்கோள் என்ன? அறநெறியில் பொருள் ஈட்டி இன்பம் துய்ப்பதேயாகும்.  இம் மூன்றும் இலக்கியத்திற்குரியன என்பதைத் தொல்காப்பியர் செய்யுளியலில்,

அந்நிலை மருங்கின் அறமுத லாகிய

 மும்முதற் பொருட்கும் உரிய என்ப ”                (தொல்.பொ-418)

எனக் கட்டுரைத்துள்ளார்.

இயற்கை, கடவுள் உணர்வை அடிப்படையாகக் கொண்ட மக்கள் வாழ்வு, மக்கள்வாழ்வின் மும்முதற் பொருளாம் அறம் பொருள் இன்பம் எனும் இவற்றை உயிராகக் கொண்டு இயற்றப்பட்ட சங்க இலக்கியங்கள்.  உயர்பேர் இலக்கியங்கள் எனக் கொள்ளுவதில் தடையென்னை? இவற்றைப் பாடியவர்கள் உயர்பெரும் புலவர்கள் என்பதில் தவறு என்னை?

இப் புலவர் பெருமக்கள் இயற்கையை எழிலுறப்பாடுவதில் இணையற்றவர்கள். 

‘“கார்காலம் தொடங்குகின்றது.  பருவ காலத்தில் பெய்வதில் தவறாத வானம் புதுமழை பொழிந்தது.  இடையர்கள் தம் நிரையை நீர் நிரம்பிய இடத்திலிருந்து ஒதுக்கி வேறு இடங்கட்கு ஓட்டிச் செல்கின்றார்கள்.  குளிர் உடலை வாட்டுகின்றது. குளிரைப் போக்க வெப்பம் தரும் கொள்ளிகளைக் கைகளில் வைத்துள்ளனர். பல்வரிசை ஒன்றோடொன்று மோதிக் கன்னம் நடுங்குகின்றது.  மக்கள் மட்டுமா குளிரால் வருந்துகின்றனர்.  பிற உயிர்களும்தான் வருந்துகின்றன.  ஆடுமாடுகள் மேய்வதைக்கூட மறந்து விடுகின்றன.  ஓடியாடும் குரங்குகள் அசைவற்றுக் குந்திக் கொண்டிருக்கின்றன.  மரக்கிளைகளில் இருந்த பறவைகள் குளிரால் பிடி தவறி விழுகின்றன.  கன்றுகள் ஆவலுடன் பால் உண்ணச் செல்கின்றன.  ஆனால் , கறவை மாடுகளோ அவை வாய் வைப்பதால் உண்டாகும் குளிருக்கஞ்சி அவற்றைக் காலால் உதைத்துத் தள்ளுகின்றன.  குன்றுகள் கூடக் குளிரால் வருந்துகின்றன  போன்ற குளிர்காலம். மாலை நேரம்.  இதனை அறிவிக்கின்றன, அப்பொழுது மலர்கின்ற பெரிய முசுண்டைப் பூவும் பொன்போன்ற பீர்க்கம்பூவும். பசிய கால்களையுடைய கொக்குக் கூட்டம் நாரைகளுடன் எங்கும் செல்கின்றன.  கால்வாய்களில் ஓடும் நீரை எதிர்த்துக் கயல்கள் பாய்கின்றன.

என இவ்வாறு ‘நெடுநல்வாடை’ எனும் பாடலில் தோலா நாவினராம் நக்கீரர், குளிர்காலத்தை நன்கு ஓவியப் படுத்திக் காட்டியுள்ளார்.  வாடைக்காலம் வந்தது என்றால் அது எவ்வாறு வரும் என்பதைக் கவினுறக் காட்டும் திறம்தான் என்னே.

வையகம் பனிப்ப வலனேர்பு வளைஇப்

 பொய்யா வானம் புதுப்பெயல் பொழிந்துஎன

 ஆர்கலி முனைஇய கொடுங்கோற் கோவலர்

 ஏறுடை இனநிரை வேறுபுலம் பரப்பிப்

 புலம்பெயர் புலம்பொடு கலங்கிக் கோடல்

 நீடிதழ்க் கண்ணி நீரலைக் கலாவ

 மெய்க்கொள் பெரும்பனி நலியப் பலருடன்

 கைக்கொள் கொள்ளியர் கவுள்புடையூஉ நடுங்க

 மாமேயல் மறப்ப மந்தி கூரப்

 பறவை படிவன வீழக் கறவை

 கன்றுகோள் ஒழியக் கடிய வீசிக்

 குன்றுகுளிர்ப் பன்ன கூதிர்ப் பானாள்

 புன்கொடி முசுண்டைப் பொதிப்புற வான்பூப்

 பொன்போற் பீரமொடு புதற்புதல் மலரப்

 பைங்காற் கொக்கின் மென்பறைத் தொழுதி

 இருங்களி பரந்த ஈர வெண்மணல்

 செவ்வரி நாரையொடு எவ்வாயும் கவரக்

 கயல்அறல் எதிரக் கடும்புனல் சாஅய் . . . . . . . . . . . ..”

என்னும் (1-18) அடிகளும்,  பிறவும் இயற்கை எழிலை இனிதே எடுத்துக் காட்டும் பெற்றியன.

இயற்கையைக் கூர்ந்து நோக்கித் துய்த்தலும் மக்கள் வாழ்வை வளமுறக் காண்டலும் புலவர்தம் பெரும் பொழுது போக்காகும். ‘கபிலர்’ என்னும் புலவர் பெருமான் இயற்கையையும் மக்கள் வாழ்வையும் இணைத்து இன்பங் காணுகின்றார்.

(தொடரும்)

சங்கத்தமிழறிஞர் முனைவர் சி.இலக்குவனார்