புலவர்கள் 3. – சி.இலக்குவனார்
(இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல் (சங்கக் காலம்) 31 – தொடர்ச்சி)
இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல் (சங்கக் காலம்) 32
16. புலவர்கள் (தொடர்ச்சி)
அக்காலத் தமிழ்மக்கள் இயலிசை நாடகங்களிலும், நடனங்களிலும் இன்பங் கண்டனர். அக்கால நடனம் எவ்வாறு நடந்தது என்பதை இயற்கைக் காட்சியில் இன்புறக் காட்டுகின்றார்.
இங்கு நடனப் பெண்ணாக மயில் தோன்றுகிறது. பார்த்து மகிழும் அவையினராக மந்திகள் அமருகின்றன. குழலிசையை இயற்கையில் துளைபட்ட மூங்கிலில் கோடைக்காற்று சென்று எழுப்புகின்றது. முழவாக அயலில் ஓடும் அருவியின் இன்னிசை இயம்புகின்றது. தூம்பு முழக்கமாகக் குரங்குக் கூட்டங்களின் குரல் கேட்கிறது. யாழிசையாக வண்டொலி இசைக்கின்றது. விழாக் காலத்தில் நடனமும் அதன் பின்னிசையும் எவ்வாறு மக்களை மகிழ்விக்கும் என்பதனைக் கற்போர் உள்ளங்களிக்குமாறு அமைத்துக் காட்டும் கவின்தான் என்னே !
“ஆடமை குயின்ற அவிர்துளை மருங்கில்
கோடை யவ்வளி குழல்இசை யாகப்
பாடுஇன் அருவிப் பனிநீர் இன்னிசை
தோடமை முழவின் துதைகுர லாகக்
சுணக்கலை இகுக்கும் கடுங்குரல் தூம்பொடு
மலைப்பூஞ் சாரல் வண்டுயா ழாக
இன்பல் இமிழிசை கேட்டுக்கலி சிறந்து
மந்தி நல்லவை மருள்வன நோக்கக்
கழைவளர் அடுக்கத்து இயலி ஆடும் மயில்
விழவுக்கள விறலியில் தோன்றும் நாடன்” (அகநானூறு-82)
இவ்வாறு இயற்கையில் ஈடுபட்ட புலவர்கள் மக்களை மறந்துவிடவில்லை. புலமையின் சிறப்பு, புலவர் கையாளும் உவமைகளாலும் புலப்படும்; உவமை தான் இலக்கிய இன்பத்தைப் பெருக்குவது. உவமைகள் புலவர்களின் சூழ்நிலைக் கேற்பவே அமையும். கண்டதைக் கொண்டு காணாததை நிலைநாட்டுவதே உவமையின் பயன். ஆகவே, புலவர்கள்தாம் எண்ணாததைக் காணாததை உவமையாகக் கூறார்.
தலைமகன் தலைவியை மணப்பதற்கு உடன்பட்டு விட்டான். திருமண நாளையும் உறுதி செய்துவிட்டான். நடக்குமோ நடவாதோ என்று ஐயப்பாட்டிற்கு உள்ளாகியிருந்த தோழிக்கு இச் செய்தி பெருமகிழ்ச்சியைத் தரும் என்பதில் ஐயமில்லை. தோழி எவ்வாறு மகிழ்ந்தாள் என்பதை எடுத்துக் காட்ட வேண்டும். மக்கள் வாழ்வில் கருத்துடைய கபிலர் தோழியின் மகிழ்ச்சிக்கு மக்கள் மகிழ்ச்சியை உவமையாகக் காட்டுகின்றார்.
மழையற்று நாடு வறண்டுவிட்டது. கலப்பைகள் எல்லாம் செயலற்று உறங்குகின்றன. குன்று போன்று உயர்ந்த கரைகளையுடைய பெரிய ஏரிகளில் எல்லாம் நீரே இல்லை. பறவைகள் அவற்றை நாடிச் செல்வதே இல்லை. இவ் வேரிகளை நோக்கி வாழும் மக்கள் உளம் எவ்வாறு இருக்கும் என்று சொல்லவும் வேண்டுமோ! இந்நிலையில் ஏரிகள் நிறையுமாறு பெருமழை பெய்தது. இரவு முழுவதும் பெய்து நின்றது. விடியற்காலையில் இதனையறிந்த மக்கள் உள்ளங்கள் கரைகாணா மகிழ்ச்சியை உற்றன.
மழை பெய்ததால் உவகையுற்றவர் பலர். நாட்டு மக்களில் உழவுத் தொழிலில் ஈடுபட்டோர் எல்லாரும் பெருமகிழ்வு உற்றிருப்பர். இந் நினைவு கபிலர்க்கு வந்தது. பலர் அடைந்த உவகைப் பெருக்கெல்லாம் சேர்ந்தால்தான் தோழியின் உவகைக்கு ஈடாகும் என எண்ணினார். அதனை ஒப்புமையாக்கினார். காதல் நிறைவேறும் என எண்ணியதால் உண்டாகும் உவகைக்கு உழவர் உவகையைக் காட்டும் கபிலரை மக்கள் புலவர் என்றழைப்பின் மாறுபடுவாரும் இருப்பரோ?
“நாடு வறங்கூர நாஞ்சில் துஞ்சக்
கோடை நீடிய பைதறு காலைக்
குன்றுகண் டன்ன கோட்ட யாவையும்
சென்றுசேக் கல்லாப் புள்ள உள்ளில்
என்றூழ் வியன்குளம் நிறைய வீசிப்
பெரும்பெயல் பொழிந்த ஏம வைகறைப்
பல்லோர் உவந்த உவகை எல்லாம்
என்னுட் பெய்தந் தற்றே சேணிடை
ஓங்கித் தோன்றும் உயர்வரை
வான்றோய் வெற்பன் வந்த மாறே” (அகநானூறு-42)
‘ஏர்கள்’ செயலற்றிருப்பதைத் ‘ துஞ்ச ’ என்னும் சொல்லால் ‘ உறங்குகின்றன ’ என்னும் நயம் நோக்குமின். மக்கள் எல்லாரும் என்று கூறாது ‘ பல்லோர் ’ என்றதனால் எவ்வளவு நுட்பமாக மக்கள் நிலை வேறுபாட்டை வெளிப்படுத்துகின்றார் என்று அறிகின்றோம் அன்றோ?
இல்லற வொழுக்கத்தில் கணவன் மனைவி ஆய இருவரிடையே உண்டாகும் ஊடல் தொடர்பான நிகழ்ச்சியை மிக நயம்பட உரைக்கும் ஆற்றல் சங்ககாலப் புலவர்கட்கேயுள்ள தனிச் சிறப்பாகும்.
காதற் கணவன் பரத்தையை நாடி அவளுடன் கூடி மகிழ்ந்துவிட்டு வீட்டுக்கு வருதல் செய்யாது அங்கேயே பின்னும் அவளையே நச்சி அவள் வீட்டுப்புறத்திலேயே சுற்றித் திரிகின்றான். காதல் மனைவி அவனைக் காணப்பெறாது சுற்றத்திடையே தனித்திருந்து வருந்துகின்றாள். ஊடல் மிகுகின்றது. அவனும் வந்து சேர்கின்றான். அவள் ஊடலைப் போக்க அவள் காலில் விழுகின்றான். அதைக் கண்டு அவள் அகமகிழ்ந்து முகமலர்ந்து நகுகின்றாள். இந் நிகழ்ச்சியை உள்ளடக்கி உள்ளுறை தோன்றப் பாடியுள்ளார் மருதனிள நாகனார்.
“விரிகதிர் மண்டிலம் வியல்விசும்பு ஊர்தரப்
புரிதலை தளையவிழ்ந்த பூவங்கண் புணர்ந்தாடி
வரிவண்டு வாய்சூழும் வளங்கொழு
பொய்கையுள்
துனிசிறந்து இழிதரும் கண்ணில்நீர் அறல்வார
இனிதுஅமர் காதலன் இறைஞ்சித்தன் அடிசேர்பு
நனிவிரைந்து அளித்தலின் நகுபவள் முகம்போலப்
பனியொடு திறம்வாரப் பாசடைத் தாமரைத்
தனிமலர் தளைவிடூஉம் தண்டுறை நல்ஊர !” 1
இப்பாடலுள் ஞாயிறு எழுதலும் தாமரை மலர்தலும் தேன் வடிவதலும் அதனை உண்ண வண்டு சூழ்ந்து திரிதலும் ஆய இயற்கை நிகழ்ச்சிகளைக் கூறுவதன் வாயிலாய்த் தலைவன் தலைவி ஊடலும் கூடலும் அழகுறக் காட்டப்பட்டுள்ளமை உணர்ந்து சுவைத்தற்குரியது. தாமரை மலர், இலைகளிடையேயும் மொட்டுக்ளிடையேயும் தனியாக ஓங்கி மலர்ந்து தேன் வடிந்து நிற்றற்கு, உவமையாகத் தலைவியின் மகிழ்ச்சிக் கண்ணீர் வடிக்கும் நகைமுகம் கூறப்பட்டுள்ள அழகுதான் என்னே !
+++
- கலித்தொகை-மருதம் 71
++++
இவ்வாறு சங்ககாலப் புலவர்கள் இனிய இலக்கியங்களை இன்றும் போற்றிப் புகழும் வகையில் இயற்றித் தந்துள்ளனர். இவர்கள் இன்றைய உலகப் பெரும் புலவர்களோடு ஒப்பிடத் தக்க புலமையும் பெருமையும் உடையவர்கள். இவர்கள் அமைச்சர்களாகவும், தூதர்களாகவும், ஆளுநர்களாகவும், மெய்யுணர்வாளர்களாகவும், மக்கள் துயர்போக்கும் சான்றோர்களாகவும், பிறர்க்கென வாழும் பெரியோர்களாகவும் வாழ்ந்து, நாட்டுத் தொண்டும் மொழித் தொண்டும், மக்கள் தொண்டும் ஆற்றினர். இவர்கள் அளித்துள்ள இலக்கிய இலக்கணங்களே இன்று நமக்குக் கிடைத்துள்ள வரலாற்றுக் கருவூலங்களாகும். இவை பெற்றுள்ளமையால் தான் “தமிழனென்று சொல்லடா! தலை நிமிர்ந்து நில்லடா!” என்று முழங்குகின்றோம். இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்பே உலக ஒற்றுமைக்கும் மனித இன உறவுக்கும் உரிமைக்கும் அயராது தொண்டாற்றிய இவர்தம் வழி நின்று தமிழைப் போற்றுவோம்; தமிழரை உயர்த்துவோம்; உலகத்தோடு ஒட்டி வாழ்வோம். உரிமை கெடாது உறவு வளர்ப்போம்.
“ சங்கத் தமிழ்பாடித் தமிழர்புகழ் வளர்ப்போம்
எங்கும் உறவுகொண்டு ஏற்றநிலை காண்போம்.”
Leave a Reply