பெங்களூரு திருவள்ளுவர் மன்ற நூலகம் சூறையாடல்

–  குற்றவாளிகள் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும்!

  அறிவுப் போராட்டத்துக்கான படைக்கலன்கள் செய்யும் படைவீடு நூலகம்(இங்கர்சால்). நூலகம் இருக்குமிடத்தின் ஒளிவிளக்கு. உலகில் வலிமையான ஆயுதம் எழுதுகோல்; அத்தகைய எழுதுகோலைப் பயன்படுத்துவோரைப் பட்டை தீட்டுவன நூலகங்களே!. எல்லா நிலையினருக்கும் அறிவுச் செல்வங்களை வாரி வழங்கும் வாயில்களாக விளங்குவனவும் நூலகங்கேள! நாட்டின்மீது போர்தொடுத்தாலும் நூலகங்கள்மீது கைவைக்காதவனே சிறந்த தலைவன்.

   வைகாசி 18, 2012 / மே 31, 1981 அன்று யாழ்நூலகம் எரிக்கப்பட்டது!  கிடைத்தற்கரிய நூல்கள் அடங்கிய ஏறத்தாழ நூறாயிரம் நூல்கள் அழிக்கப்பட்டன. சிங்களக் காடையர்களால் நடத்தப்படும் இனப்படுகொலையின் ஒரு பகுதி. இத் துன்பத்தை நினைவுபடுத்தும் வகையில், 1964ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட, பெங்களூரு திருக்குறள் மன்றத்தின்  நூலகம் சிதைக்கப்பட்டுள்ளது. வெறும் நூலகமாக மட்டுமல்லாமல் திருக்குறளின் கன்னட மொழிபெயர்ப்பு முதலான பல் வேறு நூல்களை வெளியிட்டும் வருகிறது இந்நூலகம்.  கடந்த வியாழன்று(சித்திரை 08, 20147 / 21.0402016 ) சூறையாடப்பட்டுள்ளது; அறைகலன்கள் தூக்கிஎறியப்பட்டுச் சிதைக்கப்பட்டுள்ளன; பாதுகாக்கப்பட்டுவந்த காலமுறை இதழ்கள், ஆவணங்கள் ஏறத்தாழ 20,000 நூல்கள் தெருவில் வீசப்பட்டு அழிக்கப்பட்டுள்ளன.

  இதற்குக் காரணம் பலரும்  கருதுவதுபோல், பொதுவான கன்னட வெறியன்று.  நூலகக் கட்டடத்தின் கீழே ‘சரசுவதி சபா’ என்னும் மன்றத்தை நடத்திக் கொண்டு திருவள்ளுவர் மன்ற நூலகத்தைக் கவர்ந்துகொண்டு நிலத்தைக் கைப்பற்ற எண்ணும் பிரபு என்பவரின் பேராசையே எனத் தெரிய வந்துள்ளது.

  தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் மதுரையில் இருந்து ‘குறள்நெறி’ என்னும் இதழ் நடத்திய  1960-65 காலக்கட்டத்தில் பல்வேறு நகர்களில் ‘குறள்நெறி மன்றங்கள்’ தொடங்கப்பட்டன. அவற்றுள் ஒன்றாகப் பெங்களூரில்  குறள்நெறி ஆர்வலர் சண்முகம், முன்னெடுப்பால் 1963-64இல் தொடங்கப்பெற்ற குறள்நெறிமன்றத்தின் வளர்ச்சிநிலையே திருவள்ளுவர் மன்றம்.(இதுபோல் சிறப்பாகச் செயல்பட்டுவந்த இராசபாளையம் குறள்நெறி மன்றம், இந்தி எதிர்ப்புப்போரின்போது அரசின் அடக்குமுறைக்கு அஞ்சித் திருவள்ளுவர் நூலகம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பெற்று இன்றும் சிறப்பாக நடைபெற்று வருகிறது.)

 திருவள்ளுவர் மன்ற நூலகம் பெங்களூரில் தமிழர்கள்  மிகுதியாக வசித்துவரும் அல்சூர் பகுதியில் உள்ள தாமோதர் (முதலியார்) தெருவில் 1976 ஆம் ஆண்டுமுதல் தமிழ் ஆர்வலர் நல்ல பெருமாள் முயற்சியால் இயங்கி வருகிறது.  சோழரின் ஆட்சியில் இத்தமிழ்ப்பகுதி இருந்த பொழுது இதன் பெயர் பழுவூர் என்பதாகும்.   சோழர் படைத்தலைவன் பழுவேட்டரையர் ஆண்ட பகுதி இது.

 அரிய நூல்கள் திரட்டுபோன்ற நூலகப்பணிகளில் திருக்குறள் மன்ற நிறுவனரும், நூலகப் பொறுப்பாளருமான நல்லபெருமாள் பெரும் உழைப்பு உள்ளது. நூலகத்திற்கு இழைக்கப்பட்ட கேடு குறித்து தகவலறிந்து நூலகத்துக்கு விரைந்த  இவர், 40 ஆண்டு காலமாக சேகரித்த நூல்கள் வீதியில் வீசப்பட்டிருப்பதைக் கண்டு கண்ணீர் விட்டு அழுதார்.  இக்கொடுமை குறித்து அவரும் தமிழர் முழக்கம் இதழின் ஆசிரியர் வேதகுமாரும் அல்சூர் காவல் நிலையத்தில் வியாழக்கிழமையே  முறையீடு அளித்துள்ளனர்.

 பின்னர்,  இதன்தொடர்பில் அனைத்திந்தியத் தமிழ்ச் சங்க தலைவர் மீனாட்சி சுந்தரம், கருநாடகத் தமிழ்-கன்னட கூட்டமைப்பு நிறுவனத் தலைவர் மணிவண்ணன், கன்னடர்-தமிழர் நல்லிணக்கம் – சமூக நற்பணி அறக்கட்டளைத் தலைவர் இராமச்சந்திரன், கருநாடகத் திராவிடர் கழக தலைவர்  சானகிராமன் முதலான பலரும் காவல் உயர் அதிகாரிகளையும் சந்தித்து முறையிட்டுள்ளனர்.

  காவல்துறை  துணை ஆணையர் சதீசு குமார் விரைந்து நடவடிக்கை எடுத்துக் குற்றவாளி பிரபுவைக் கைது செய்துள்ளார். மீட்டுருவாக்தக்திற்கு முழு உதவி புரிவதாகக்  கூறி உடனடிச் செயல்பாடுகளுக்காகத் தன் பங்கு ஆயிரத்து ஐந்நூறு உரூபாயைத் தாமாகவே முன்வந்து முதலில் அளித்துள்ளார். இதைத் தொடர்ந்து பிறரும் நன்கொடை அளித்துள்ளனர். காவல்துறையினர், மாமன்றத் தலைவர், மாமன்ற உறுப்பினர்கள் என அதிகாரிகளும் மக்கள் சார்பாளர்களும்  தங்களுக்கு ஏற்பட்ட இழப்பாகக் கருதி உதவி வருகின்றனர்

 தனிப்பட்ட கயமையால் ஏற்பட்ட தீங்கினை இனப் பகையாகத்திரிக்க இடம் கொடுக்காமல் கருநாடக அரசு விரைந்து செயல்படவேண்டும். புதிய நூலகக் கட்டடம் உருவாகவும் சிநதைந்த நூல்களைச் சரி செய்யவும் புதிய நூல்கள் வாங்கவும் கருநாடக அரசும் தமிழக அரசும் மத்திய அரசும் தாராள உதவி புரியும் என எதிர்நோக்குகிறோம். தமிழகப் படைப்பாளிகளும் தங்கள் நூல்களை இந்நூலகத்திற்கு அன்பளிப்பாக வழங்கலாம்.

 ஆனால், நாம் முதலில் செய்ய வேண்டியன, அ.இ,த.ச.தலைவர் மீனாட்சி சுந்தரம் வேண்டுகோளை ஏற்றுத் தேவையற்ற செய்திகளைப் பரப்பாமையே; செய்தக்க அல்ல செயக்கெடும்  (திருவள்ளுவர், திருக்குறள் 466)என்பதை உணர்ந்து இச்செய்தியை இன மோதலாகக் கருததும் வகையில் கருத்து தெரிவிக்காமையே  ஆகும்.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

இதழுரை அகரமுதல 130, சித்திரை 11, 2047 / ஏப்பிரல் 24, 2016

feat-default

படங்கள் :  முத்துச்செல்வன் முகநூல்