பெண்ணுக்கு மட்டும் ஏன் இந்தச் சோதனை?

2018-ஆம் ஆண்டு பிறந்தது முதல் அடுக்கடுக்காகப் பெண்கள் படும் துன்பங்களைக் காணும்போது, “பெண்ணுக்கு மட்டும் ஏன் இந்தச் சோதனை?” என்னும் கேள்வியே மனத்தில் எழுகின்றது.

பாலியல் வன்முறை, வரதட்சணைக் கொடுமை, காதலராலும் கணவராலும் கொடுமை, படுகொலை, நாத்தனார், மாமியார் கொடுமைக்கு ஒரு படி மேலாகப் பெற்ற மகனாலே கொலை செய்யப்படும் கொடூரம், பணம் கேட்டு மிரட்டும் பேரனால் சாவு, காவல்துறைக் கெடுபிடியால் சித்திரவதை, அலுவலகத்தில் அவமானம், சக ஊழியரால் துன்பம் என்று எண்ணற்ற சோதனைகள் பெண்களை நிம்மதியாக வாழவிடாமல் பாழாக்குகின்றன.

சிறுமியைப் பாலியல் வன்முறை செய்து கொன்றவன் கைதாகிப் பிணையில் வெளிவந்தவுடன் தாயாரைக் கொன்ற பாதகச் செயலும், காவலர் இரு சக்கர வாகனத்தை உதைத்ததால் விழுந்து திருவெறும்பூர் உசா இறந்த கொடுமையும், சென்னை மாணவி அசுவினி தன் காதலனால் கத்தியால் வெட்டப்பட்ட கோரமும் நம் கண்களில் இரத்தம் வரவழைக்கும் காட்சிகளாகத் தொலைக்காட்சியில் பார்த்ததை மறக்கமுடியுமா?

ஏன் இந்தச் சோதனை? இந்த விபரீதங்களை எப்படித் தடுக்கலாம்? என்னும் வினாக்கள் குறித்துச் சிந்திக்க இதுவே தக்க தருணம்.

பால்மணம் மாறாச் சிறுமிகள் பாலியல் வன்முறைக்காளாவதை உடனே தடுக்க வேண்டுமெனில் அந்தப் பிஞ்சுகளுக்குத் தற்காப்பு பற்றி எளியமுறையில் எடுத்துச் சொல்ல வேண்டுமல்லவா? யார் செய்வது? அம்மாவையும் அப்பாவையும் மிஞ்சிய ஆசிரியர்கள் உண்டா?

அம்மாவும் அப்பாவும் முதலில் குழந்தைகளுடன் நாள்தோறும் ஒரு மணி நேரமாவது செலவழிக்க வேண்டும். தொலைக்காட்சி முன் கண்கள் இமைக்காமல் பார்த்துக்கொண்டிருப்பதை உடனே நிறுத்த வேண்டும். இன்றைக்குப் பள்ளியில் என்ன நடந்தது என்னும் வினாவை நாள்தோறும் கேட்கவேண்டும். அவர்கள் படிக்கும் பாடம் நமக்குப் புரியாது என்றாலும் இக்கேள்வியைக் கேட்டு அவர்கள் கூறும் விடையைப் பொறுமையாகக் காதுகொடுத்துக் கேட்கவேண்டும்.

இதனால் இரண்டு நன்மைகள் ஏற்படும். அன்றன்று நடத்திய பாடம் பற்றிப் பிள்ளைகள் நாள்தோறும் கூறும்போதே அவர்களின் பிஞ்சு மனத்தில் ஆசிரியர் நடத்திய பாடம் அழுத்தமாய்ப் பதிந்துவிடும். இரண்டாவதாக நாள்தோறும் இப்படி உரையாடுவதால் பெற்றோர்க்கும் பிள்ளைகளுக்கும் இடைவெளி குறைந்து மனம்விட்டுப்பேசும் சூழல் நிலவும்.

யாரேனும் குறும்போ தொல்லையோ செய்தால் குழந்தை தயக்கமின்றிக் கூற முன்வரும். அதனால் பெற்றோர் உடனே நடவடிக்கையில் ஈடுபட முடியும். வருமுன் காப்பதே சிறந்தது அல்லவா?

அலுவலகத்தில் பெண்களுக்கிடையே ஒற்றுமை முதன்மையானது. பெண்கள் ஒருவருக்கொருவர் பாதுகாப்பாக இருந்தால் யார்தான் வாலாட்டமுடியும்?

இருசக்கர வாகனம் இருக்கிறதென்ற தைரியத்தில் இரவில் பெண்கள் தனியே செல்லவேண்டா. அதுவும் இரவுப்பணிபுரியும் பெண்கள் நள்ளிரவில் இருசக்கர வாகனத்தில் செல்வது வம்பை விலைக்கு வாங்குவது போல்தான்.

குடும்ப உறவில் விட்டுக்கொடுக்கும் பண்பு வளர வேண்டும். வேலைக்குப் போகும் பெண்களை ‘நடமாடும் பணம் எடுக்கும் (ஏடிஎம்)’ இயந்திரங்களாகக் கருதும் கொடுமை தொலைய வேண்டும். கணவனும் மனைவியும் யாராலும் அசைத்துப் பார்க்கமுடியாத அசாத்திய ஒற்றுமையுடன் வாழவேண்டும். கணவனைப்பற்றி மனைவியிடமும் மனைவியைப்பற்றிக் கணவனிடமும் கோள்சொல்லிப் பயனில்லை எனப் பிறர் கருதும் நிலை குடும்பவாழ்வின் அச்சாணியாகும்.

பிள்ளைகளிடம் பேசும்போது எச்சரிக்கையாகப் பேசவேண்டும். பெற்றோர் நடந்துகொள்ளும் முறையே பிள்ளைகளின் பண்புகளை வளர்க்கும் நாற்றங்கால் என்பதை மறந்துவிடக்கூடாது. அப்பாவைப் பற்றி அம்மாவும் அம்மாவைப்பற்றி அப்பாவும் குறைகூறும் பழக்கமுடைய குடும்பங்களில்தான் குற்றவாளிகள் உருவாகின்றனர்.

காவல்துறையினர் இன்னும் மென்மையான போக்கைக் கடைப்பிடிக்க வேண்டும். குற்றவாளிகளை நீதிமன்றத்தில் நிறுத்துவதே காவல்துறையின் கடமை. அவர்களே நேரடியாகத் தண்டனை வழங்க ஆரம்பித்துவிட்டால் சமூகம் நிம்மதியில்லாமல் நிலைகுலைந்து விடுமல்லவா?

தொலைக்காட்சி, செய்தித்தாள், பொழுதுபோக்குப் பத்திரிகைகள் என்னும் ஊடகங்கள் தங்கள் கடமையை மறந்துவிடக்கூடாது. பெண்ணினத்தின் மென்மையையும் மேன்மையையும் வெளிப்படுத்தும் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் முதன்மை வழங்கவேண்டும்.

நல்ல முன்மாதிரியான ஆளுமைகளைப்பற்றிய செய்திகளை அவ்வப்போது வெளியிட்டுவந்தால் பெண்களைத் துச்சமாகக் கருதும் ஆடவர் மனம் மாறுமல்லவா? படிப்பறிவில்லாக் குடும்பங்களுக்குத் தேவையான அறிவுரைகளையும் வழிகாட்டுதல்களையும் ஊடகங்கள்தானே பரப்பவேண்டும்?

எல்லாக் குடும்பங்களிலும் பெண்தான் அச்சாணியாக, மையப்புள்ளியாக, ஒன்றுபடுத்தும் ஆற்றலாக விளங்குகிறாள் என்பதைச் சொல்லவும் வேண்டுமா? வெளியிடங்களுக்கும் சுற்றுலாவுக்கும் அலுவல் நிமித்தமாகவும் பயணம் மேற்கொள்ளும் பெண்கள் மிகவும் முன்னெச்சரிக்கையாகவும் திட்டமிட்டும் செயற்பட வேண்டும்.

விமானம் ஓட்டுவதிலும் செயற்கைக்கோள் இயக்குவதிலும் பெண்கள் ஈடுபட்டு வெற்றியுலா வரும் காலம் இது. ஆனாலும் மலையேற்றம், குதிரையேற்றம், வான்குடை(பாராசூட்டு) இயக்குதல் போன்ற செயல்களில் ஈடுபடும்போது இத்துறையில் முத்திரை பதித்த முன்னோடிகளின் துணையுடன் ஈடுபட வேண்டும்.

வேறு யார் முன்வந்து காப்பாற்றுவதையும் விடப் பெண் தன்னைத்தான் காத்துக்கொள்ளத் தவறவே கூடாது. அதே நேரத்தில் அளவுக்கு மீறிய தன்னம்பிக்கை அதிக ஆபத்து என்பதையும் உணர வேண்டும். படிப்பில் ஆணுக்குப் போட்டி போட்டுச் சாதனை நிகழ்த்திவரும் பெண்கள் இவற்றையெல்லாம் கருத்தில்கொண்டு மேலும் பல சாதனைகள் படைக்க வேண்டும்.

எல்லா வகையிலும் இன்னல்களைக் கடந்து தொல்லைகளைத் தகர்த்தெறிந்து சமூகத்தின் வலுவான உறுப்பாகப் பெண்ணினம் உயர்வு பெறும் நாள் விரைவில் மலரும்.

மறைமலை இலக்குவனார்

தினத்தந்தி 18.03.2018

 

https://www.dailythanthi.com/Districts/Chennai/2018/03/18113001/Why-is-this-woman-experimenting-only.vpf