தந்தை பெரியார் சிந்தனைகள் 38 இன் தொடர்ச்சி

தந்தை பெரியார் சிந்தனைகள் 39

8. பெரியார் பற்றி அறிஞர்கள்

 

(1) “நாயக்கர் பேச்சில் கருத்துச் செலுத்தியபின்னர் அவர் தமிழ்நாட்டுக் காளமேகமானார். நாயக்கர் பேச்சு மழையாகும்; கனமழையாகும்; கல்மழையாகும்; மழை மூன்றுமணி நேரம், நான்கு மணிநேரம் பொழியும். தனக்கென வாழாப் பிறர்க்குரியாளன் -கருத்து வேற்றுமைக்கு மதிப்பளிப்பவர் ”

-திரு.வி.க.

(2) “எங்கெங்கே தமிழ் உணர்ச்சி தவழ்கின்றதோ, எங்கெங்கே சமுதாயச் சீர்த்திருத்தம் பேசப்படுகின்றதோ, எந்தெந்த இடத்தில் புரட்சி வாடை வீசுகின்றதோ-அங்கங்கெல்லாம் ஈ.வே.இரா.வின் பெயர் ஒளி வீசித் திகழ்கின்றது.”

-சர். ஏ.இராமசாமி (முதலியார்.(1928))

(3) “செய்கையில் உண்மை-நீதியை நிலைநாட்டுவதில் அடங்கா ஆர்வம்-சிறிதும் தன்னலம் என்பதே இல்லாத வாழ்க்கை-இவையே ஒரு மனிதனைச் சிறந்தவனாக ஆக்கக் கூடியவை. இவையனைத்தும் உருண்டு திரண்டுத் திகழும் ஒரு மாமனிதர் ஈ.வே.இரா.”

-சர். ஆர்.கே.சண்முகம் செட்டியார் (1933)

(4) “சமூக சீர்த்திருத்தத் துறையில் பலர் அநேக ஆண்டு பாடுபட்டுப் பயன்பெறாமற்போன வேலையை இவர் (ஈ.வே.இரா) சில ஆண்டுகளில் பயன் அளிக்குமாறு செய்துவிட்டார்.”

-பனகல் அரசர் (1928)

(5) “துணிவு, தியாகம், வேலையை அநுபவத்திற்குக் கொண்டு வருதல் என்ற மூன்று குணங்களமைந்த ஒருவரைத் தென்னிந்தியா முழுவதும் தேடினாலும் நமது நாயக்கரைத் தவிர வேறு யாரையும் கண்டுபிடிக்கமுடியாது.”

-சர்.கே.வி.ரெட்டிநாயுடு (1928)

(6) “திருநாயக்கரிடத்திலுள்ள சிறப்பான குணம் மனத்திற்படும் உண்மையை ஒளிக்காமல் சொல்லுவதுதான். தமிழ் நாட்டின் எல்லாத் தலைவர்களையும்விட பெரிய தியாகி ஆவார்.”

-கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரம்(பிள்ளை) (1928)

(7) “வைக்கம்வீரர் ஒரு மனிதரல்லர்; அவர் எனக்கு ஒரு கொள்கையாகவே தேன்றுகிறார்”

-திரு.எசுஸ். இராமநாதன் எம்.ஏ. பி.எல். முன்னாள் அமைச்சர்(1930)

(8) “தமக்குச் சரியென்று பட்டதை வற்புறுத்துபவர். சமூக சீர்திருத்தமே தோழர் நாயக்கர் அவர்கள் கொள்கையின் உயிர் நாடி. சுயமரியாதை இயக்கத்தை மக்களிடையே வேரூன்றச் செய்தவர்”

-டாக்டர்.பி.சுப்பராயன், முன்னாள் முதலமைச்சர் அவர்கள்(1928)

(9) “தமக்கு நியாயமென்று பட்ட கருத்துகளை அஞ்சாது வெளியிடுவதில் திரு நாயக்கரவர்கள் முதலிடம் பெற்றவர் என்பதை ஒருவரும் மறுக்கமுடியது. சமய-சமூக-அரசியல் துறைகளில் திரு நாயக்கர் செய்துள்ள தியாகமும் சேவையும் அவர்பட்டுள்ள சிரமங்களும் இந்நாட்டில் ஒரு நாளும் மறக்கமுடியாதது”

மரு.பி.வரதராசுலு (நாயுடு), ஆசிரியர் – தமிழ்நாடு (1934)

(10) “நமது பெரியார் அவர்கள் ஒரு மகாத்மா அல்லர். ஆனால் தாம் நினைத்ததைச் சாதிக்கும் ஒரு நேர்மைவாதி. அவருடைய அபிப்பிராயங்கள் ஆணித்தரமானவை. நேர்மையான வழியில் பாடுபடுவார். காங்கிரசுகாரருக்கு வார்தா எப்படியோ -திராவிடருக்கு அப்படி ஈரோடு. அவர்கள் வார்தா போவது போல் நாம் அறிவுரை கேட்க ஈரோடு வருகிறோம். பெரியார் தமிழ் நாட்டின் உண்மைக் களஞ்சியம்!”

-சர். ஏ. டி. பன்னீர்செல்வம், பார். அட்லா (1938)

(11) “ஈ.வே. இராமசாமி நாயக்கர் அவர்கள் வெகுவாக மதிக்கப்டுகின்ற ஒரு பார்ப்பனரல்லாத தலைவர். தமிழ் நாட்டைத் தனியாகப் பிரித்துவிடவேண்டுமென்று வெளிப் படையாகவே சொல்லிவருகிறார். பாகித்தானத்தில் முதல் அமைச்சராக இருப்பதோடு சின்னாவிற்கு எவ்வளவு உரிமை உண்டோ அவ்வளவு உரிமை தமிழ்நாட்டின் தனி ஆட்சியில் இராமசாமி நாயக்கருக்கு உண்டு”

-சர்.சி.பி.இராமசாமி (அய்யர்) அவர்கள், திருவாங்கூர் முன்னாள் திவான்(1945)

(12) “பொதுமக்களுக்குப் பெரியார் செய்த தொண்டு மிகப் பெரியது. யாகத்தின் பெயரால் பசுக்கொலை முதலிய கேடுகளைச் செய்தவர்களை எதிர்க்கப் புத்தர் பெருமான் தோன்றினார். தமிழையும் தமிழரையும் அடிமைப்படுத்தி வரும் சுயநலக்கூட்டத்தை எதிர்க்கப் பெரியார் அவதரித்துள்ளார். அவர் இல்லாவிடில் நாம் மிகக் கீழான நிலையில், நம்மை வெட்கமில்லாமல் ‘சூத்திரன்’ என்று அழைத்துக் கொள்வதில் பெருமை கொள்ளும் பேதைமையில் இருந்திருப்போம்.”

-முதுபெரும்புலவர் அ.வரதநஞ்சைப்பிள்ளை அவர்கள்(1944) (குறிப்பு 1)

(13) “உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசும் போலிப் பெரியார் வரிசையில் சேராதவர். எண்ணிய எண்ணியாங்கு எய்தும் திண்ணிய முயற்சியுடையார். பொது நலமொன்றையே பேணித் தம் உள்ளத்தால் பொய்யாதொழுகும் நேர்மையாளர். தனக்கென வாழாப் பிறர்க்குரியாளர். தமிழரின் தன்மானக்குரல், புத்துணர்ச்சி, உள்ளக்கொதிப்பு, முன்னேற்றம் எல்லாவற்றிற்கும் பெரியார்தான் காரணம்.”

-பசுமலை நாவலர் ச.சோமசுந்தர பாரதியார், எம்.ஏ.பி.எல்[1942]

(14) “திரு ஈ.வெ. இராமசாமி அச்சம் என்பதையே அறியாத சமுதாய சீர்திருத்தவாதி. அந்தக் காலத்திலேயே “திராவிடநாடு திராவிடருக்கே” என்று முதன் முதலாக முழங்கியவர்.”

  • முனைவர் ஏ.கிருஷ்ணசாமி, எம்.பி. டி. பார். அட்.லா. ஆசிரியர் – லிபரேட்டர்.

(15) “தமக்கென வாழாது பிறர்க்கே வாழவேண்டுமென்பது பண்டைத் தமிழரின் உயரிய கருத்தாகும். இச்சீரியகருத்தைத் தம் வாழ்நாட்களில் கொண்டு அதன்படி எல்லியும் காலையும் தூயதொண்டாற்றி மக்கள் அனைவரும் மாயவலையில் சிக்காதபடி, உண்மை அறிவு கொளுத்தி,‘பிறப்பொக்கும்’ என்னும் தூயமொழியை இம்மாநிலத்தில் நிலைநாட்டிய பேரறிஞருள் ஈ.வெ. இராமசாமி முதல்வர்.”

-காஞ்சிபரவசுது இராசகோபாலாச்சாரியார் பி.ஏ., [1939]

(16) “சுயமரியாதை உணர்ச்சியைத் தமிழ்நாட்டில் துவக்கி விட்டவர் நாயக்கர் ஆவார். பார்ப்பனரல்லாத இயக்கத்திற்குப் புத்துயிர் அளித்த பெருமையும் அவருக்கே உரியது. இன்று இந்தியா முழுவதும் இந்த இயக்கம் கொண்டாடப் பெறுகின்றது. இம்மகத்தான பெருமைக்கு அருகர் நாயக்கரே.”

-இரசிகமணி.டி.கே. சிதம்பரநாத (முதலியா)ர். பி.ஏ.பில் [1929]

(17) “தோழர் இராமசாமி நாயக்கர் அவர்கள் கபடமற்றவர். மனத்தில் நினைப்பதைப் பேசியும், பேசியவாறே செய்தும் காட்டுபவர்.”

-திவான்பகதூர் எசு. குமாரசாமி (ரெட்டியார்), முன்னாள் அமைச்சர் [1928]

+++

குறிப்பு 1. இதே ஆண்டில் நான் துறையூரில் தலைமை ஆசிரியனாக இருந்தபோது, இராசிபுரத்தில் (சேலம் மாவட்டம்) நடைபெற்ற தமிழர் மாநாட்டில் புலவர் தலைமையில் ‘கலையும் நாட்டுநிலையும்’ என்ற தலைப்பில் பேசினேன் (இரண்டாம் உலகப் பெரும்போர் நடைபெற்ற காலம் காங்கிரசும் உரிமைப்போர் முழங்கிவந்த காலம்). புலவர் அவர்கள் ‘கலையும், நாட்டுநிலையும்’ என்ற தலைப்பின் நடுவில் ஒரு காற்புள்ளி இட்டுவிட்டால் நாட்டுநிலைக்கும் பொருந்தும் என்று கூறி அனைவரையும் மகிழ்வித்ததை நினைவு கூர்கின்றேன்.

சென்னைப் பல்கலைக் கழகப் பேராசிரியர் சி.பெருமாள்அறக்கட்டளைச் சொற்பொழிவு – நாள்: 27.2.2001 முற்பகல், ‘தமிழ்ச்செம்மல்’ ‘கலைமாமணி’  

பேராசிரியர் முனைவர் . சுப்பு(ரெட்டியார்), 

தெற்கு தென்கிழக்கு நாடுகளின் மரபுவழிப் பண்பாட்டு நிறுவனம், 

சென்னைப் பல்கலைக் கழகம்

(தொடரும்)