பெரியார் பேருந்து நிலையம்: கோபுரம் இந்து மத அடையாளம் அல்ல! இலக்குவனார் திருவள்ளுவன்
பெரியார் பேருந்து நிலையம்: கோபுரம் இந்து மத அடையாளம் அல்ல!
மதுரை மாநகரில் உள்ள பெரியார் பேருந்து நிலையத்தை மேம்படுத்திச் சிறப்பாக மாற்றி அமைக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. புதிய கட்டுமானத்திற்கான வரைபடம் 20.1.2019 அன்று வெளி யிடப்பட்டது. மீனாட்சியம்மன் கோவில் கோபுர வடிவத்தில் வரைபடம் வெளி வந்ததால் கடும் எதிர்ப்பு வந்ததாகவும் அவ்வாறு இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது. ஆனால், அண்மையில் மதுரையில் உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி, கோபுரம் வடிவிலான வரைபட அடிப்படையிலேயே மதுரை பெரியார் பேருந்து நிலைய முகப்பு அமையும் என்றாராம். இவ்வாறு கூறித், திராவிடர் கழகம் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
தமிழகக் கோயில்கள் இறைவழிபாட்டுத் தலங்களாக மட்டுமில்லை. இலவசக்கல்வி, இலவசஉணவு, இலவச மருந்து, மருத்துவ வசதி, சொற்பொழிவு அரங்கம், கலை-பண்பாட்டுக் கருவூலம் எனப் பல வகைகளிலும் மக்களோடு நெருங்கி மக்கள் நலன்காக்கும் பாசறைகளாகத் திகழ்ந்தன. கோயில்களால் பயன் உறுபவர்கள் பூசை செய்பவர்கள் மட்டுமல்லர். அழகு படுத்துபவர், வண்ணம் பூசுநர், துணிமணிகள் நெய்பவர் அல்லது விற்பவர், பூ வேலை செய்பவர், கோலமிடுபவர், பாடற் கலைஞர்கள், சின்ன மேளம் பெரிய மேளம் வாசிக்கும் கலைஞர்கள், பிற கருவி இசைக் கலைஞர்கள், நாட்டியக் கலைஞர்கள், தச்சர்கள், கொல்லர்கள், பந்தல் அமைப்பாளர்கள், சமையலர்கள், வண்ணார், தோட்டக்காரர்கள், துப்புரவாளர்கள், கோயில் தொடர்பான பணியாளர்கள், நிதியாளர்கள், உண்டியல் எண்ணுபவர்கள் முதலிய பல்வகைத் தொழிலாளர்கள் கோயில்களைச் சார்ந்து வாழ்ந்து வந்தனர்.
திருவிழாக்காலங்களில் சிறுபொருள் வணிகமும் விளையாட்டுகள் தொடர்பான பொருள்கள், உணவுப்பொருள்கள் விற்பனையும் பூ வணிகமும் கேளிக்கை ஆட்டமும் பெருகித் தொடர்புடையவர்கள் நலன் காத்தன. நெய், எண்ணெய் விற்பனை, விளக்குகள், திரிகள் விற்பனை, தேங்காய், பூ, மாலை விற்பனை முதலான சிறு வணிகர்களும் பயன் உற்றனர்.கோயில்களிலும் திருவிழாக்காலங்களில் சாலைகளிலும் தண்ணீர்ப்பந்தல், மோர்ப்பந்தல் வைத்துப் பானங்கள் வழங்கினர் திருச் சோறு வழங்கினர். இதனால் அற உணர்வும் மக்களிடையே தழைத்தது. இப்பொழுதும் இவற்றில் பெரும்பான்மை தொடர்கின்றன. கட்டுமானக் கலை,சிற்பக்கலை வாழும் இடங்களாகவும் கோயில்கள் உள்ளன.
எல்லாக் கோயில்களிலும் குளங்கள் உள்ளன. இதனால் சுற்றுவட்டாரத்தில் நீர் ஊறுவதற்கு வாய்ப்பாக உள்ளது. கோயில்களில் தல மரங்கள் எனப் போற்றப்படுவதால் மக்களுக்கு மர வளர்ப்பில் ஆர்வம் ஏற்படுகிறது. பஞ்சம், வறட்சிக்காலங்களில் கோயில்கள் அடைக்கல இல்லங்களாகத் திகழ்ந்துள்ளன. போர்க்காலங்களிலும் மக்கள் கோயில்களில் தஞ்சம் புகுந்துள்ளனர். ஈழத்தில் நடைபெற்ற பல இனஅழிப்புப் போர்களின் பொழுது நல்லூர் கந்தசாமிக்கோயில் முதலான கோயில்களில் மக்கள் தஞ்சம் புகுந்ததையும் நாம் கண்டுள்ளோம்.
ஒரு காலத்தில் மன்னர்கள் வாழ்விடமாக இருந்த அரண்மனைகள்தான் பின்னர் கோயில்களாக மாறியுள்ளன. கோ + இல் என்றாலே தலைவனின் – மன்னனின் இல்லம் என்றுதான் பொருள். அதனால் அரண்மனையில் தொடர்ந்த நற்பணிகள் கோயில்களிலும் தொடர்ந்துள்ளன.
“கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டா” என ஒளவையார் கூறுகிறார்.
“திருக்கோயில் இல்லாத திருவில் ஊர்” எனத் திருநாவுக்கரசர் கூறுகிறார்.
சியார்சு மிக்கேல், “தென்னிந்தியக் கோயில்கள் சுறுசுறுப்பான தொண்டு மையங்களாக இருந்தன; அவை வழிப்போக்கர்கள், பயணிகள், இறையன்பர்கள், நோயாளிகள் ஆகியோருக்கு இலவச உணவையும் அளித்தன; மாணாக்கர்களுக்குத் தங்கும் வசதியையும் ஏற்படுத்தித் தந்தன” என்கிறார்.(இந்துக்கோயில் – அதன் பொருள் வடிவங்களுக்கான அறிமகம்: An Introduction to Its Meaning and Forms.)
எனவே, கோயில்களை மதங்களுடன்மட்டும் தொடர்பு படுத்திப் பார்க்கக்கூடாது.
தமிழர்களுக்கே உரிய கோயில்களை இந்துமத அடையாளமாகப் பார்ப்பதும் தவறு. தமிழர் மதம் இந்து மதம் அல்ல என்னும் பொழுது, தமிழர் சமய அடையாளமான கோயில்களை மட்டும் இந்து மத அடையாளமாகக் கூறுவது குற்றம் அல்லவா?
இறை ஏற்புக் கொள்கையும் இறை மறுப்புக் கொள்கையும் உலகெங்கும் உள்ளன. அவ்வாறிருக்கப் பெரும்பான்மை இறை ஏற்பர்களுக்கு அடையாளமான கோயில் கோபுரத்தை பேருந்து நிலைய முகப்பில் அமைக்கக் கூடாது என்பது சரியல்ல. வேறு எங்கேனும் வைத்துக் கொள்ளலாம். ஆனால், இறை மறுப்பர் தந்தை பெரியார் பெயரில் உள்ள பேருந்து நிலையத்தில் வைக்கலாமா என எண்ணலாம். தந்தை பெரியார் ஈ.வெ.இராமசாமி, தம் இல்லம் வந்திருந்த தமிழ்த்தென்றல் திரு.வி.கல்யாணசுந்தரனார் முதலான விருந்தினர்களுக்குத் தாமே திருநீறு வழங்கி யுள்ளார். கோயில் அறக்கட்டளை பொறுப்பிலும் இருந்துள்ளார். இத்தகைய பண்பாளர் இப்பொழுது இருந்திருந்தால் கலை, நாகரிகம், பண்பாட்டு அடையாளமாகத் திகழும் கோபுரச்சின்னத்தை மறுக்க மாட்டார்.ஒன்றைவிட மற்றொன்று பெரிதாக அமைக்கப்படாமல், இரண்டையும் சம அளவில் வைக்கலாம்.
எனவே, திராவிடர் கழகம் கலை பண்பாட்டிற்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபடக் கூடாது. மாறாக அரசுக் கட்டடக் கால்கோள்களின் பொழுது பூமி பூசையின் பொழுதும் அணைதிறப்பு முதலான தொடக்க நிகழ்வுகளின் பொழுதும் இறை வழிபாடு தொடர்பான பிற நேர்வுகளிலும் தமிழைத் துரத்திக் கொண்டுள்ளது. மதச்சார்பற்ற அரசாக இல்லாமல் குறிப்பிட்ட வகுப்பாரின் சார்பாக இயங்கிக் கொண்டுள்ளது. தமிழர் கோயில் கருவறைகளில் தமிழர் நுழையவும் தமிழ் நுழையவும் உள்ள தடைகளை உடைத்தெறியவில்லை. எனவே, இவற்றுக்கு எதிராகப் போராடி இறை வழிபாட்டாளர்களின் உரிமைகளைக் காக்க முன்வரவேண்டும். பண்பாட்டுச் சின்னத்திற்கும் மதச்சின்னத்திற்கும் உள்ள வேறுபாட்டைப் புரிந்து கொண்டு இனிச் செயல்பட வேண்டும்!
– இலக்குவனார் திருவள்ளுவன், தினச் செய்தி 14.09.2019
Leave a Reply