பெருந்தலைச் சாத்தனார்: 2 : ந. சஞ்சீவி

(பெருந்தலைச் சாத்தனார் 1  : ந. சஞ்சீவி தொடர்ச்சி)

சங்கக்காலச் சான்றோர்கள் – 20

3. பெருந்தலைச் சாத்தனார்(தொடர்ச்சி)

அந்நாளில் பாணரும் பாடினியரும், கூத்தரும் விறலியரும் தம் கலைத்திறனால் தமிழகத்தை இசையும் கூத்தும், பண்ணும் பாட்டும் நிறைந்த கலைக்கோயிலாய்த் திகழும் வண்ணம் செய்தனர். அவர்கள் வாழ்வு துன்பம் கண்டிலது. அவர்கள் கையிலும் கருத்திலும், நாவிலும் நெஞ்சிலும் கலையரசியின் களி கடமே சிறந்து விளங்கியது. கலை வளர்த்த அச்செல்வர்கள் வீட்டிலும் வாழ்விலும் இன்ப நடனம் இடையறாது நிகழும் வண்ணம் நாடாண்டும் தலையளி செய்தும் வாழ்ந்த வள்ளல் பெரு மக்களைக் கூற்றுவன் கொண்டேகினான். வளமார்ந்த தமிழகம் வறியதாயிற்று. பாடுவோரும் ஆடுவோரும் தம் பசி போக்கித் துயர் களைந்து இன்பம் நல்கும் வேந்தர்களைக் காணாது மனம் இடிந்து போயினர்; கைந்நெரித்துக் கவலை மிகுந்து கண்ணீர் சொரியலாயினர். நஞ்சு போலும் கொடிய வறுமை நாளும் கலைஞர் வாழ்க் கையை நையுமாறு செய்தது. சொல்லொணாத் துயர்க் கடலில் வீழ்ந்து, வளம் படைத்த வாழ்வு என்னும் கரை சேர வழியின்றி அவதியுற்றிருந்த அருந்தமிழ்க் கலைஞரகளைக் கரையேற்றிக் காக்க வல்ல நாவாயாய்அறவோனாய்த்தோன்றிய அண்ணலே குமணன் என்ற பெயர் படைத்த பெருந்தகையாளன் ஆவன். அவனது முதிரமலை, இயற்கை வளனெல்லாம் ஒருங்கே பெற்றுத் திகழ்ந்தது. தேனொழுகும் தெருக்கள் நிறைந்த அவன் முதிரமலை, அயராது பெருகும் புதுப்புது வருவாயை நாளும் உடையது. அங்கே மூங்கில்கள் வானுற வளர்ந்து ஓங்கி நிற்கும், அவற்றுடன் சுரபுன்னை மரங்கள் பூமணம் கமழப் பொலிவுற்று உயர்ந்து விளங்கும். ஆசினியும், அழகு மிக்க பலாவும், முள்ளைப் புறத்தேயுடையனவாய் முழவு போலப் பருத்து முதிர்ந்து கனிகளைத் தாங்கி நிற்கும். அவற்றை வேட்கை தீர உண்ண விரும்பிய கடுவன், ஆர்வத்துடன் கவர்ந்து செல்லும். தான் பெற்ற தீஞ்சுவைப் பலவினை அன்புடை மந்தியோடு கூடி உண்ண ஆசை கொண்ட கடுவன், பஞ்சு போன்ற மயிரைத் தலையிலுடைய பெண் குரங்கைக் கை காட்டி அழைக்கும்.


இவ்வாறு விலங்குகளும் வயிறார உண்டு பேரின்பம் காணத் துணை புரியும் அம்மலை எனின், பாடி வரும் பாணர்க்கும், ஆடி வரும் விறலியர்க்கும் எத்துணை இன்பம் நல்கியிருக்கும் என்பதைக் கூறவும் வேண்டுமோ! கைவண்குமணனது புகழ் கேட்ட இரவலர் கூட்டம் அம் முதிர மலையை முற்றுகையிட்டது. புலவர் கூட்டம் நாளும் பல்கிப் பெருகுதலை அறிந்த குமண வள்ளலும் எல்லையில்லாப் பெருமகிழ்வு எய்தினன். காய்கதிர்ச் செல்வன் கடுமை பொறாது புற்களும் கரிந்து போன கானகத்தில் ‘கல்’லெனும் ஒசையெழுப்பிக் கருவி வானம் அதிரும் குரலோடு இடித்தும் மின்னியும் பெருமழை பெய்து வாடிய நிலமும் பயிரும் செழித்து விளங்கச் செய்வது போன்று, கொல்லும் வறுமையால் அவிழ்ப்பதம் காணாது பசி தின்ன வாடிய யாக்கையினராய் வருந்தி வரும் இரவலர்களின் வயிறு குளிரும் வண்ணம் தாளிப்போடு கூடிய கொழுவிய துவை கலந்த நெய்யுடை அடிசிலை, திங்களைச் சூழ்ந்த திருமீன்களென விளங்கும் செம்பொன்னாலாகிய ‘பொங்குகதிர் மின்னப் புகழ்க்கலங்கள் பல பரப்பி’ வைத்து ஊட்டித் தானும் உடனிருந்து உண்டு மகிழ்வான்; ‘ கேடில்லை ஆகுக பாடு வாரது சுற்றம் என்று வாழ்த்திப் பெறுதற்கரிய பொன் அணிகளையெல்லாம் அவர்கட்கு எளிதாக வழங்கி உள்ளம் இன்புறுவான்; தன்னை நட்டோரினும் தன்னை நாடி வந்த இரவலர்பால் பேரன்பு செலுத்துவான். இத்தகை வள்ளியோனாய்த் திகழ்ந்த அவன் புகழ் எங்கும் பரவி இரவலர்களைக் கூவி அழைத்தது. அவர்களும் கொடிய வறுமை பின்னின்று துரத்த, குமண வள்ளலின் புகழ் முன்னின்று இழுக்க, அணியணியாய் வரலாயினர். அவ்வாறு வந்தோர்க்கு எல்லாம் வானம் பொய்த்து வளமழை மாறிப் பெருவறம் கூர்ந்த நாளிலும் மன்பதை யெல்லாம் சென்று நீர் உண்ணுதற்குக் கங்கையாற்றின் வெள்ளம் பெருக்கெடுத்துத் தோன்றியது போலக் கருணை காட்டினான் குமணன்; ஆறலை கள்வர் வழிப் போவாரை அடித்துக்கொன்று பொருளைக் கவர்தலால் கடத்தற்கு அரியதாயிருக்கும் பேரிருஞ்சுரம் வழியாகத் தம் மனைவியரைப் பிரிந்து வந்த இரவலர் அன்பின்றிப் பிரிந்து சென்ற தம் கணவன்மாரை எண்ணிக் கலங்கி இருக்கும் கற்புடை மகளிர் காணுந்தொறும் களிகொள்ளுமாறு பொன்னும் பொருளும் வாரி வாரி வழங்கினான்; பெருவேந்தரும் கண்டு நாணப் பனையொத்த கைகளையும், முத்துவிளையும் தந்தங்களையும் உடைய களிறுகளின் மீது பக்கமணிகள் மாறிமாறி ஒலிக்கப் பாடி வந்த புலவர்கள் ஏறிச் செல்லுமாறு செய்தான். இத்தகைய அருளும் பொருளும் நிறைந்த அறவோனாய் விளங்கிய குமணன் புகழ் பகலவன் ஒளி போல எங்கும் பரவித் திகழ்ந்தது. அவன் வாய்மையினையும் வண்மையினையும் அறிந்த புலவர் பெருந்தலைச்சாத்தனாரும் அத்தகைய மேலோன் இருக்குமிடம் மேவித் தம் வறுமைத்துயர் களையத் துணிந்தார்.

குமணனது திருநாட்டை அடைந்தார் புலவர். அங்கு அவர் கேட்ட செய்தியும் கண்ட காட்சிகளும் அவர் உள்ளத்து உணர்வுகளை வீறு கொண்டு எழச் செய்தன.

உரிய நாளில் அரியணை ஏறி அருளாட்சி புரிந்து வந்த குமணனுக்குத் தம்பி ஒருவன் இருந்தான். எவ்வாறோ அவன் மனத்தில் தீய எண்ணங்கள் தோன்றுமாறு செய்தனர் பண்பற்ற சிலர்; அண்ணனது புகழையும் பெருமையையும் பற்றிப் பெருமை கொள்ள வேண்டிய அவன் மனத்தில் பொறாமைத்தீக் கொழுந்து விட்டு எரிய வழி வகுத்தனர். சிறியார் விரித்த சூழ்ச்சி வலையில் இளங்குமணன் சிக்கினான், அறிவிழந்தான்; அறமற்ற செயல்களைச் செய்யத் தலைப்பட்டான்.

‘‘நிலத்தியல்பால் நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க்(கு)
இனத்தியல்ப தாகும் அறிவு”         (குறள், 452)

என்ற வள்ளுவர் குறளுக்கு ஒர் எடுத்துக்காட்டாயிற்று இளங்குமணன் வாழ்க்கை. அழுக்காறு என்னும் பாவிக்கு இரையாகிய அவன், எவ்வாறேனும் அண்ணனை அரியணையினின்றும் அகற்றிவிட்டு அதில் தான் அமர வேண்டுமென்று ஆசை கொண்டான்; தன் ஆசையை அண்ணன்பால் சென்று குறிப்பாகவேனும் கூறியிருப்பின், ‘அன்றலர்ந்த செந்தாமரை’யினும் ஒளி நிறைந்த முகத்தோடு, இக்கணமே இவ்வரசுரிமையை நினக்கே ஈந்தேன்!” என்று மகிழ்வோடு கூறி மணிமுடி துறந்திருப்பான் அருளுருவான குமண வள்ளல். ஆனால், மதி கெட்டுப் பொறாமைத்தீயால் மனம் பொசுங்கிக் கிடந்த இளங்குமணனுக்கு அந்த எண்ணம் வருமா? அவன் தன் அற்ப ஆசையை நிறைவேற்ற அறிவற்ற புல்லர் துணையைப் புல்லினான்; சதி பல செய்தான்; அரியணையைக் கைப்பற்றினான். அதோடு அணையவில்லை அவன் ஆசைத்தீ; அருமந்த அண்ணனை நாட்டிலும் வாழ முடியாத வகையில், தீச்செயல்கள் செய்யத் துணிந்தான்; காடே குமணனுக்கு வீடாகுமாறு கொடுமைகள் புரிந்தான். சான்றோனாகிய குமணவள்ளலின் அருள் கனிந்த உள்ளம் அத்தனையும் பொறுத்துக்கொண்டது. ‘ஒறுத்தார்க்கு ஒரு நாளை இன்பம்; பொறுத்தார்க்குப் பொன்றுந்துணையும் புகழ்,’ அன்றோ? குமண வள்ளலின் சால்புள்ளம் பிறர் தீமையைச் சொல்லவும்-நினைக்கவுங் கூட-முன் வந்திலது.

கொல்லா நலத்தது நோன்மை; பிறர்தீமை
சொல்லா நலத்தது சால்பு.’         (குறள், 984)

என்பதன்றோ வள்ளுவர் வாய் மொழி? மகிழ்வு நிறைந்த உள்ளத்தோடு

இருளுடை உலகந் தாங்கும்
இன்னலுக்கு இயைந்து நின்றான்
உருளுடைச் சகடம் பூண்ட
உடையவன் உய்த்த காரேறு
அருளுடை ஒருவன் நீக்க
அப்பிணி அவிழ்ந்த தொத்தான்,’

என்று ‘செப்பருங்குணத்து இராமனை’ப்பற்றிக் கவியரசர் கம்பர் கூறியாங்கு, ‘என் பின்னவன் பெற்ற செல்வம் அடியனேன் பெற்றதன்றோ?’ என்ற இதயக் களிப்புடன் கான் நோக்கிக் கடுகி நடந்தான். புள்ளும் மாவும் கள்ளமின்றி உறையும் காட்டு வாழ்க்கை குமணன் உள்ளத்திற்கு நாட்டு வாழ்க்கையினும் நனிமிக இனித்தது.

(தொடரும்)

முனைவர் . சஞ்சீவி

சங்கக்காலச் சான்றோர்கள்