பேச்சு மொழியாக ஆங்கிலம் கற்றல்

வழக்கும் தேவையும்

   பேச்சு/உரையாடல் மொழியாக ஆங்கிலம் (Spoken English) கற்றுத்தர வேண்டும் எனத் தமிழக அரசுக்கு ஆணையிடக் கோரி மேனாள் சட்டமன்ற உறுப்பினர் திரு.அப்பாவு உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடுத்துள்ளார். நீதிமன்றமும் தமிழ்நாட்டு அரசின் கருத்தைக் கேட்டுள்ளது.

   பலநிலைப்பட்ட தமிழ்நாட்டு மக்களும் மாணவர்களின் எதிர்காலம்பற்றி அக்கறையோடு செயல்படுகிற மதிப்புமிக்க பலரும் ஆர்வத்துடன் இந்த வழக்கின் போக்கைக் கவனிக்கின்றனர். பலரின் உள்ளக் கிடக்கை இந்த வழக்கு எனலாம்.

   இந்த வழக்கு, இதில் நீதிமன்றத்தின் அணுகுமுறை, மக்களின் எதிர்பார்ப்பு இவற்றை எல்லாம் நோக்க இரண்டு உண்மைகள் நம் அனைவருக்கும் தெளிவாகத் தெரிந்திருக்கின்றன.

     முதல் உண்மை,

ஆங்கிலம். உரையாடல் மொழியாக ஆங்கிலம் கற்றுத் தரப்பட வேண்டும். உணவு, உடை, உறைவிடம் அடிப்படைத் தேவைகள் என்றது ஒரு காலம். அவற்றுடன் மனிதச் சமூகத்தில் தனது வாழ்வை அமைத்துக்கொள்ளத் தேவையான ஆளுமை மேம்பாட்டையும் வாழ்வியல் திறன்களையும் வளர்த்தெடுக்கிற கல்வியும், உறுதி செய்யப்பட்ட ஏற்ற பணி வாய்ப்பும் இன்றைய அடிப்படைத் தேவைகளே.

  இன்று கல்வியும் இருக்கிறது வேலையும் இருக்கிறது. ஆனால் கற்றவர்களுக்கு வேலை இல்லை. வேலைக்கு தகுதி வாய்ந்த ஆட்கள் இல்லை. உலகமயச்சூழலால் இது விரிவாய் அமைகிறது.

   வாழ்வியலுக்கான கல்வி என்பது, ‘வெறும் வேலைக்குத்தான் கல்வி’ எனப் புரிந்து கொள்ளப்பட்டு தலைமுறை கடந்து விட்டது; ஆனால் கல்வி வேலையைத் தரவில்லை.

 தற்சார்போடும் தன்னுரிமையோடு இருக்கும் நாடுகள் தங்கள் தாய்மொழியில் கல்வியைத் தருகின்றன. அவர்களின் தாய்மொழி, தாய்மொழிவழிக்கல்வி, அவர்களுக்கு வேலையைத் தருகிறது. அதைத்தாண்டி புதிய கண்டுபிடிப்புகளுக்கும் புத்தாக்கங்களுக்கும் படைப்பாக்கத் திறனிற்கான வழியைத் திறந்து வைத்துள்ளது.

   நமது நாடு போன்ற அரைக்குடியேற்ற நாட்டில், அதுவும் இன்றைய உலகமயச் சூழலில் நாம் தற்சார்பை எண்ணுவது பெரிய செயல். வேலை என்பது அயல்நாடுகளில் வேலை அல்லது அயல்நாட்டு நிறுவனங்களில் வேலை என்றாகிவிட்டது. உள்நாட்டு நிறுவனங்கள் மட்டுமல்லாது அரசும் பன்னாட்டு நிறுவனங்களைச் சார்ந்தே செயல்படும் நிலை.

 இந்த நிலையில் வெளிநாட்டு வேலைக்கு மட்டுமல்ல இங்கே வேலை செய்யவும் ஆங்கிலம் முதன்மைத் தேவையாக இருக்கிறது. இதை மொழிப்பற்றாலும் நாட்டுப்பற்றாலும் சிலர் மறுக்கக்கூடும். ஆனால் அதுவே உண்மை. எனவே இங்கே நம்நாட்டு மாணவர்களுக்கு உரையாடல் மொழியாக, தெளிவாகச் சொன்னால் தொடர்பு மொழியாக (communicational language) ஆங்கிலம் கற்றுத்தரப்பட வேண்டும் என்பது அனைவரும் ஏற்றுக்கொள்ளும் முதல் உண்மை.

             இரண்டாவது உண்மை

  நமது மாணவர்களுக்கு முறையான ஆங்கிலம் தெரியவில்லை. ஆங்கிலத்தில் பேசத் தெரியவில்லை. ‘Spoken English’ பயிற்சி அவர்களுக்குத் தேவைப்படுகிறது.

 திரு.அப்பாவு கூறுவது போலத் தமிழ்வழியில் படித்த மாணவர்களுக்கு ஆங்கிலத்தில் பேசத் தெரியவில்லை என்பதைத் தாண்டி, ஆங்கிலவழியில் படிக்கும் மாணவர்களில் மிகப்பலர் ஆங்கிலத்தில் பேசத்தெரியாமலே இருக்கின்றனர் அல்லது தவறாகப் பேசுகின்றனர்.

 1. 10 ஆம் நிலை படித்து முடித்தவர்களில் பாதிப்பேர் ஆங்கிலவழியிலேயே 12, 13 ஆண்டுகள் படித்தவர்கள்.
 2. மற்றவர்களும் முதல் நிலையிலிருந்து 10 ஆண்டுகள் ஆங்கிலத்தைப் படித்து வந்தவர்கள்.
 3. பட்டப்படிப்பிலே பெரும்பாலானவர்கள் ஆங்கில வழியிலேயே படிக்கின்றார்கள்.

இவை அனைத்திற்குப் பிறகும் நம் மாணவர்களில் பலருக்கு ஆங்கிலத்தில் பேசத் தெரியவில்லை என்பது இரண்டாவது உண்மை.

   இவற்றிலிருந்து நம் மாணவர்களுக்குத் தொடர்பு மொழியாக ஆங்கிலத்தைக் கற்றுத் தர வேண்டும். நடைமுறையில் உள்ள கல்விமுறையில் நம் மாணவர்கள் தொடர்பு மொழியாக ஆங்கிலத்தைக் கற்றுக்கொள்ளவில்லை என்பன தெளிவாகின்றன. இங்கே நாம் மொழியைக் கற்பது தொடர்பான புரிதலோடு சரியான தீர்வை எட்ட வேண்டும்.

    ஆங்கிலத்தைக் கற்றுக்கொள்வது என்ற இடத்தில் முதலில் சிலவற்றில் தெளிவு பெறுவோம்.

             ஆங்கிலத்தைக் கற்பது

             ஆங்கிலத்தில் கற்பது

என்பன வேறுபட்டவை. பயிற்று மொழியைப் பொறுத்தவரை உலகம் ஏற்றுக்கொண்ட உண்மை தாய்மொழியே பயிற்றுமொழியாக இருக்க வேண்டும் என்பது தான். இங்கே ஆங்கில வழியில் படித்தால் ஆங்கிலத்தை தெரிந்துகொள்வார்கள் என்பது பொய்யாகிவிட்டது. (சில விலக்குகள் இருக்கலாம், அது அனைத்து இடங்களிலும் உண்டு). உண்மையில் ஆங்கில வழியில் படிக்கத் தொடங்கி நம் படைப்பாக்கத்திறனை இழந்துவிட்டோம்.

  சரி, ஆங்கிலத்தைக் கற்றுக் கொள்வதில் எங்கே பிழை? நம் மாணவர்கள் 10 ஆண்டுக்கு மேல் ஆங்கிலத்தை ஒரு மொழியாகக் கற்கிறார்கள். பிறகு ஏன் ஆங்கிலம் பேசத் தெரியவில்லை.

 ஆங்கிலமாக இருக்கட்டும் அல்லது அருகில் இருக்கிற மலையாளமாக இருக்கட்டும், மொழியைக் கற்பதில் சில வகைப்பாடுகள்  உண்டு.

 1. தொடர்பு மொழியாகக் கற்பது
 2. இலக்கிய இலக்கண மொழியாகக் கற்பது
 3. ஆய்வுக்காகக் கற்பது
 4. உயர்படிப்புக்காகக் கற்பது

ஒரு மொழியில் உயர் கல்வியை மேற்கொள்ளும் ஒருவர் அந்த மொழியின் அடிப்படைத் திறன்கள் பெற்று தன்துறை சார்ந்த சொற்களை, வழக்காடல்களைக் கற்றல். உயர்படிப்புக்கான கற்றல் இது.

  ஆய்வுக்காகக் கற்பது ஒருவகை. மொழிகளுக்கு இடையே ஆய்வை மேற்கொள்ளவும். இலக்கண, இலக்கிய ஆய்வுகளை மேற்கொள்ளவும், பண்பாடு, தொல்லியல் என மொழியோடு நெருங்கியத் தொடர்புடைய ஆய்வுச் செய்யவும், இவர்கள் மொழியின் தேவையான வகைப்பாடுகளில் ஆழக்கற்பர்.

  இலக்கண, இலக்கிய மொழியாகக் கற்பது. இது பொதுவில் தாய்மொழிக்குப் பொருந்தும். நாம் நம் தாய்மொழித் தமிழில் எழுத, பேச கற்பதுடன், தமிழின் இலக்கியங்களை அவற்றின் அழகை, செழுமையைக் கற்பது இவ்வகை. இன்று இந்த முறையில்தான் ஆங்கிலம் கற்றுத்தரப்படுகிறது. இது தேவையற்ற, பயனற்ற வெற்றுச்சுமை, தவறான நடைமுறை.

 தொடர்பு மொழியாகக் கற்பது. ஒரு மொழியில் தொடர்பு கொள்ள அடிப்படையாகத் தேவையான மொழித்திறன்களான

  கேட்டல் – பேசுதல், படித்தல் – எழுதுதல் திறன்களைப் பெறுவது. ஒருவர் பேசுவதைக் கேட்கிறோம். கேட்டுப் புரிந்துகொள்கிறோம். ஒருவரிடம் நாம் வெளிப்படுத்த வேண்டிய கருத்தை விளங்கும் வகை சொல்கிறோம். அதேபோல் எழுதப்பட்ட ஒரு செய்தியைப் படித்துப் புரிந்துகொள்கிறோம். நாம் உணர்த்த விரும்பும் செய்தியைப் பிறர் படித்து அறியும் வகையில் எழுதுகிறோம்.

  இந்த 4 தொடர்புமொழித் திறன்கள்தான் இன்று ஆங்கிலத்தில் தேவை என்கிறோம். இதில் படிப்பது, கேட்பது இரண்டும் நாம் சார்ந்தன. நாம் புரிந்து கொள்வோமா, சரியாகப் புரிந்து கொள்வோமா என்பது சார்ந்தன. இதில் ஏற்படும் தவறுகள் வெளியே தெரியாத வரை அதை யாரும் பெரிதாகக் கவலைப்படுவதில்லை.

   அடுத்து ஆங்கிலத்தில் எழுதுவது, பேசுவது என்பன ஆங்கிலத்தில் நிறைய பகுதிகளைப் படித்து, வினா விடைகளை மனப்பாடம் செய்து, எழுதி அதன் சொற்களும் சொற்றொடர் அமைப்பும் ஓரளவு மனத்தில் பதிந்துவிடுகிறது. அதைக்கொண்டு எப்படியோ எழுதிவிடுகின்றனர் பலர். அதிலும் ஏற்படும் நிறைய தவறுகளை யாரும் பெரிதுபடுத்துவதில்லை. அதனால் நாம் அதைப்பற்றிக் கவலைப்படுவதில்லை. முதன்மையான இடங்களில் தவறில்லாமல் எழுத வேண்டிய தேவை இருக்கிறது.

   ஆங்கிலத்தில் பேசக் கற்பது. இது தான் இன்றைய தேவை. இதை எப்படி சிறப்பாக மேற்கொள்வது?

ஆங்கிலத்தில் பேசக்கற்பது தனியாக பேசக்கற்பதல்ல.   ஆங்கிலம் தாய்மொழி அன்று. அது அயல்மொழி. அதைக் கற்பது என்பது படித்தல், எழுதுதல், கேட்டல், பேசுதல் என்றே அமையும்.

 • மொழியியல் அடிப்படையில் (linguistics method)இல் நமக்குத் தெரிந்த தாய்மொழியோடு ஒப்பிட்டு, ஒத்தமைதலை, வேறுபடுவதை, புதியதைக் கற்பது,
 • படிக்க, எழுத கற்ற பின்னால் கேட்க, பேச கற்றல்,
 • எழுத்து வடிவில் உள்ள தொடர்களை, சொற்றொடர்களில் பேசும்போது ஏற்படும் மாற்றங்களை அறிந்து பேசக்கற்றல்,

பேசும்போது சிறப்பாக

      ஆங்கில ஒலிப்பு முறை அறிந்து (phonetic) பேசுதல் (ஆங்கிலம் இரட்டை மொழி. தமிழைப்போல் எழுதுவதை அப்படியே படிக்க முடியாது).

  ஆங்கிலப்பெயர்ச் சுருக்கங்கங்கள், சொற்சுருக்கங்கள் முறையறிந்து பேசக் கற்றல்.

         ஆங்கிலம் முறைமைகளைப் போற்றும் மொழி. ஒவ்வொரு சூழலுக்கும் ஏற்ற உரையாடல் தொடக்கங்கள், தொடர்கள் உண்டு. அவற்றைக் கற்றறிந்து பேசப்பழகுதல்.

இவை அனைத்தையும் மொழியியல் அடிப்படையில், புரிந்ததில் இருந்து புரியாததைக் கற்றல் என்ற முறையில் கற்க வேண்டும்.

 எனவே இன்று நடைமுறையில் உள்ள

 1. ஆங்கிலப் பயிற்றுமொழியை நீக்க வேண்டும்.
 2. இரண்டாவது மொழியான ஆங்கிலத்தை இலக்கண, இலக்கிய மொழியாகக் கற்றுத் தருவதை மாற்ற வேண்டும்.
 3. ஆங்கிலத்தைத் தொடர்பு மொழியாக மொழியியல் அடிப்படையில் கற்றுத்தர வேண்டும்.
 4. ஆங்கிலம் கற்றுத்தரும் ஆசிரியர்கள் ஆங்கிலத்தை மொழிப்பாடமாக அல்லது மொழியாக கற்றவர்களாக இருந்தால் போதாது. அவர்களுக்கு மொழியியல் அடிப்படையில் பயிற்சி வழங்கிக் கற்றுத்தர வழி செய்ய வேண்டும்.

ஆம், தாய் மொழித் தமிழில் அடிப்படைத் திறன்களைப் பெற்ற பிறகு அதைக் கொண்டு தமிழோடு ஒப்பிட்டு, மொழியியல் – linguistics முறையில் கற்பிக்க வேண்டும்.

இப்படித்தான் உலகநாடுகள் இரண்டாம் மொழியாக ஆங்கிலத்தை அல்லது வேறு மொழியைக் கற்று தந்து வெற்றி பெற்றுள்ளனர். அதுவே நமக்கும் ஏற்புடையது.

கல்வியாளர் வெற்றிச்செழியன்