பேரறிவாளன் குறிப்பேடு : தொடரும் வலி! : 1
தமிழனாய்ப் பிறந்ததால் வாழ்வைத் தொலைத்த
பேரறிவாளன் குறிப்பேடு : தொடரும் வலி! : 1
வேலூர் சிறையில் 25 ஆண்டுகளைக் கடந்து முடக்கப்பட்டு இருக்கும் பேரறிவாளன் அவரது வழக்கறிஞர் மூலமாக இளைய விகடனுக்குச் சொல்லி அனுப்பிய தகவல்களின் தொகுப்பு இது!
25 ஆண்டுகள் முடிந்துவிட்டன. நினைக்கவே மலைப்பாக இருக்கிறது. இஃது, ஏதோ அரசியல் வானில் அடியெடுத்துவைத்து அடைந்துவிட்ட பெரும் பதவியின் ஆர்ப்பாட்டமான வெள்ளிவிழா அல்ல… கலைத்துறையில் எனது 25 ஆண்டு அருவினையின் – சாதனையின் -வெற்றிக்கொண்டாட்டம் என நினைத்துவிடாதீர்கள்.
இருள்சூழ்ந்த சிறையகத்தின் – காராகிரகத்தின் – நான்கு சுவர்களுக்குள் முடங்கிப்போன வேதனை ஆண்டுகள் அவை. இந்த 25 ஆண்டுகால துன்பக் கதைகளை, துயர வாழ்வை 25 பக்கங்களிலும் அடக்கிவிடலாம்… 25 தொகுதிகளுக்கான புத்தகமாகவும் அடுக்கி அழலாம்.
இந்தக் கால் நூற்றாண்டு சிறை வாழ்வை மூன்று பகுதிகளாகப் பிரிப்பது சரியாக இருக்கும்.
வைகாசி 28, 2022 / 11-6-1991 முதல் தை 15, 2029 / 28-1-1998 அன்றுவரை விசாரணைச் சிறைவாசியாக இருந்த காலம் முதலாவது.
அப்போது நான் குற்றம்சாட்டப்பட்டவன் மட்டுமே. தை 15, 2029 / 28-01-1998 அன்று வழக்கில் உசாவலை – விசாரணையை – எதிர்கொண்ட 5 பெண்கள் உட்பட 26 பேருக்கும் பூந்தமல்லி ‘தடா’ சிறப்பு நீதிமன்ற நீதிபதி நவநீதம் மரணத் தண்டனை வழங்கித் தீர்ப்பளித்தார்.
அன்றுமுதல் உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதியரசர் சதாசிவம் தலைமையிலான மூவர் அமர்வு, நான் உள்ளிட்ட மூவரின் மரணத் தண்டனையை ஆயுள் சிறையாகக் குறைத்த மாசி 06, 2045 / 18-02-2014 அன்றுவரை ஏறத்தாழ 16 ஆண்டுகள் மரணத் தண்டனைச் சிறைவாசியாக வாழ்ந்த காலம் இரண்டாவது.
மாசி 07, 2045 / 19-02-2014 முதல் ஆயுள் சிறைவாசியாக – இன்னும் சொல்லப்போனால் மாநில அரசால் விடுதலை செய்யப்பட்டுவிட்ட வாணாள் சிறைவாசியாக – (இது விந்தையான நிலைதான், இருப்பினும் குறிப்பிட்டே ஆக வேண்டி உள்ளது) சிறைவாசத்தில் இன்னலுற்றுவரும் தற்போதைய காலம். மூன்று காலக்கட்டமும் வெவ்வேறு வகையான துன்பங்களைத் தந்திருந்தாலும், ஒன்றிலிருந்து மற்றொன்று குறைவானது அல்ல.
எங்களது ஞாயங்கள் வெளி உலகம் அறியாவண்ணம் முடக்கப்பட்டு மூடிய அறைக்குள் நடந்து முடிந்துவிட்ட, காவல் கொடுமைகள் நிறைந்த, ஆறரை ஆண்டு விசாரணைக் காலத்தைக் காட்டிலும், எதிர்காலக் கனவுகளே அற்றுப்போன – எந்த நொடியும் உயிரைக் கொல்லும் உத்தரவு வந்துவிடும் எனத் தூக்குமர நிழலில் வாழ்ந்த 16 ஆண்டு காலத்தைக் காட்டிலும், விடுதலை அறிவிப்புக்குப் பின்னரும் நீடிக்கும் கடந்த இரண்டரை ஆண்டுகாலச் சிறை வாழ்வே சொல்லில் அடங்காச் சோகத்தை தந்துவிட்டது.
எனது துன்பங்கள் அனைத்தையும் அனைவரின் தோள்மீதும் இறக்கி வைப்பது இந்தத் தொடரின் நோக்கம் அன்று. அதில், எனக்கு உடன்பாடும் இல்லை. காரணங்கள் இரண்டு.
முதலாவதாக, கடந்து வந்திருக்கும் அந்த வலிகளுக்கான காரணிகளையும் அதனை உருவாக்கிய மனிதர்களையும் குறிப்பிட வேண்டியிருக்கும். ஆகவே, எனது உண்மையான, முழுமையான வெளிப்பாடாக இருக்கும். தமிழ்நாட்டின் மூத்த தலைவர் ஒருவருக்கு 1993-இல் ஒரு கடிதம் எழுதினேன்.
அதில், ‘‘இந்த வழக்கில் பேரறிவாளன், நளினி… என்பதெல்லாம் வெறும் பெயர்ச்சொல் – ஒரு குறியீடு மட்டுமே, நாங்கள் சாமானியர்களாக இருக்கலாம். ஆனால், எமது வழக்கில் தலையிட்டு நீதிபெற வழிவகை செய்ய வேண்டியது ஒரு வரலாற்றுத் தேவை’’ என்பதை வலியுறுத்தி மடல் எழுதியிருந்தேன்.
அப்போது எனது அகவை 21. எனது மடல் அன்று புறக்கணிக்கப்பட்டது. ஆனால், காலம் அதன் தேவையை இன்று உணர்த்தி நிற்கிறது. அவையெல்லாம் கடந்துபோன கசப்பான துய்ப்புணர்வுகள். இதுபோன்ற கசப்புகளைத் தவிர்க்க விரும்புகிறேன்.
அடுத்தவரை சங்கடப்படுத்துவது எனது இயல்பு அல்ல! அதேநேரம் குறைந்தஅளவு சில உண்மைகளை வெளிப்படுத்துவது எனது வரலாற்றுக் கடமை என்பதையும் அறிந்துள்ளேன்.
இரண்டாவது காரணம் – நான் எப்போதுமே நேர்மறை சிந்தனைகளால் நிரம்பியவன் என்பதாக என்னைச் சுற்றி உள்ளவர்களால் அறியப்பட்டு இருக்கிறேன்.
”எவ்வளவு அடிச்சாலும் தாங்குவதால், நீ ரொம்ப நல்லவன்டா…’’ என்று சொல்லிச் சொல்லியே என்னை அனைவரும் உசுப்பேற்றி வைத்திருக்கிறார்கள் – என்பதால் எனது எந்தச் சோகச் சுமையையும் இறக்கிவைக்க விரும்பவில்லை. அது என்னைவிட, என்னைச் சுற்றி உள்ளவர்களைச் சோர்வடைய செய்துவிடும்.
ஆடி 27, 2042/ 12-08-2011 அன்று எம்மூவரின் கருணை மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டன என ஊடகங்கள் செய்தி அறிவித்தன. அன்றிலிருந்து ஆவணி 10, 2042 /26-08-2011 அன்று முறைப்படி எங்கள் மரணத்துக்கு நாள் குறிக்கப்பட்ட கருப்பாணை எனப்படும் மரண அழைப்பாணை (Black Warrant) தரப்பட்ட நாள் வரையிலான 14 நாள் பெரும் சங்கடம் ஒன்றை உறுவிக்க – அனுபவிக்க – வேண்டியிருந்தது.
அந்தக் காலக்கட்டத்தில் என்னைச் செய்தியாளர்கள் பலரும் நேர்கண்டு பேசி அதனை தத்தமது ஊடகங்களிலும் வெளிக்கொண்டு வந்தனர்.
அப்போது அவர்கள் தொடுத்த கேள்வியெல்லாம், 20 ஆண்டுக்காலச் சோகமோ, மரண தண்டனை வலியோ எனது முகத்தில் ஏதும் எதிரொளிக்கவில்லையே, ஏன்? என்பதுதான்.
நான் எதிர்கொண்ட மிகவும் தருமசங்கடமான கேள்வி அது. எனது தாயாரும் என்னிடம் மிகவும் குறைபட்டுக்கொண்டார். சோகமாக முகத்தைவைத்துக் கொள்ளும்படி கேட்டுக்கொண்டார்.
அவைதான் நான் எதிர்கொண்ட மிகவும் நெருக்கடியான சந்தர்ப்பம் என நினைக்கிறேன். இருப்பினும், எனது இயல்பை மாற்றிக்கொள்ள விரும்பவில்லை அல்லது அது மாறிவிடக் கூடாது என்பதாகத்தான் எனது 25 ஆண்டுகாலப் போராட்டமும் இருந்திருக்கிறது எனலாம்.
இதைச் சொல்வதால் எனக்குத் துன்பமே இல்லை என்றோ, நான் ஏதோ அசாத்திய துணிச்சல்காரன் என்றோ தப்புக் கணக்கு போட்டுவிடாதீர்கள். எல்லோரையும்போல் சாவை விரும்பாத, வாழ்வதில் மிகுந்த ஈடுபாடு கொண்ட மனிதன் நான். ‘‘அஞ்சுவது அஞ்சாமை பேதைமை’’ என்பதில் நம்பிக்கை உடைய மிகச் சாதாரணன்.
இந்தப் பின்னணியில்தான் எனது 25 ஆண்டுகால உழத்தல்களை – அனுபவங்களை – உங்கள்முன் இறக்கிவைக்க முயன்றுள்ளேன்.
இதுகுறித்து எழுவர் விடுதலைக்காகத் தொடர்ந்து போராடும் உடன்பிறப்புகள் கேட்டுக்கொண்ட போது, ‘‘25 ஆண்டுக் கால வலி’’ என்பதைவிட ‘‘நிகழ்ந்த பல முக்கியத் திருப்புமுனை நிகழ்வுகளும் ஈடு செய்ய முடியா சில இழப்புகளும்’’ என்ற அளவில் இந்தத் தொடரை குறுக்கிக்கொள்ள வேண்டுகோள் வைத்தேன்.
ஏற்றுக்கொள்வீர்கள் என நம்புகிறேன். இந்தத் தொடர் எம் எழுவரின் விடுதலையை விரைவுபடுத்தும் என்கிற உறுதியோடு தொடர்கிறேன்.
(வலிகள் தொடரும்)
–பேரறிவாளன்
இளைய விகடன், சூன் 26, 2016
Leave a Reply