பேராசிரியர் சி.இலக்குவனார்: s.Ilakkuvanar

பேராசிரியர் இலக்குவனாரின் தமிழ் மீட்பு உணர்வு

 

  தமிழ்ப்போராளி பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார் அவர்கள் தமிழ் வளர்ச்சியையே சிந்தித்துத் தமிழ்க்காப்பையே செயல்படுத்தித் தமிழ்க்காக வாழ்ந்த தலைமகனாவார் என அறிஞர்கள் பலர் குறிப்பிட்டுள்ளனர். தமிழ்த்தாய் என்றே அவரைப் பலரும் விளக்கி உள்ள பொழுது, மேனாள் துணைவேந்தர் முனைவர் கதிர் மகாதேவன், “தமிழ்த்தாய் படத்தைக் காட்டச் சொன்னால் பேராசிரியர் இலக்குவனார் படத்தைக் காட்டுவேன்” என்றார். இவ்வாறு அறிஞர்கள் போற்றுவதற்குக் காரணம், இயல்பாகப் பேசும் பொழுதும் பாடம் நடத்தும் பொழுதும், சொற்பொழிவு ஆற்றும்பொழுதும், இலக்கிய விளக்கங்கள், கட்டுரைகள், இதழுரைகள், நூல்கள் எழுதும் பொழுதும் தமிழ்க்காப்பு பற்றியும் தமிழ் மீட்பு பற்றியும் தமிழர் எழுச்சி பற்றியும் பேராசிரியர் உணர்த்திடத் தவறுவதில்லை. எடுத்துக்காட்டிற்காக சில இலக்கியக் குறிப்புகளை மட்டும் நாம் பார்ப்போம்.

  பேராசிரியர் இலக்குவனார் அவர்கள், தொல்காப்பிய விளக்கம், சங்க இலக்கியப் பாடல்கள் விளக்கம், திருக்குறள் விளக்கம் எனப் பழந்தமிழ் இலக்கியங்கள் குறித்து எளிமையாக விளக்கி உள்ளார். இவற்றுள் சங்க இலக்கியத்தில் அகநானூற்றுப்பாடல் பற்றிய அவரது விளக்கத்தில் சிலவற்றை மட்டும் காண்போம்.

  பேராசிரியர் இலக்குவனாரின் அரும் பெரும் முயற்சிகளால் சங்க இலக்கியங்கள், வாழும் மக்கள் இலக்கியங்களாக நிலைத்துள்ளன. ‘சங்கத்தமிழை வங்கக்கடலில் தூக்கி எறிவோம்’ எனத் தமிழ்உணர்வும் தமிழக வரலாறும் அறியாத் தமிழர்கள் சிலர் முனைந்த பொழுது வீறு கொண்டு எழுந்து சங்க இலக்கியங்களைப் பரப்புவதன் மூலமே இக்கெடுநினைவை அழிக்க முடியும் என உணர்ந்து அவ்வாறு பரப்பிய இலக்கியச் செம்மல் அல்லவா பேராசிரியர் இலக்குவனார். அவ்வாறு அவர் சங்க இலக்கியத்தின் கேடயமாகப் பயன்படுத்தியதுதான் அவர் நடத்திய சங்க இலக்கியம் (1945-1947)என்னும் வார இதழ். இவ்விதழில் தொடர்ந்து சங்கப் பாடல்கள்பற்றி எழுதி உள்ளார். புலவர் மாமூலனார் பாடல்கள் மூலம் சங்கத்தமிழின் தெவிட்டாச் சுவையையும் பழந்தமிழ்ச் சிறப்பையும் உணர்த்தியதுடன் தமிழ் எழுச்சி உணர்வையும் பேராசிரியர் இலக்குவனார் கிளர்ந்தெழச் செய்துள்ளார். இப்பாடல்கள் மூலம் நாம் இழந்துள்ள தமிழக நிலப்பரப்புகளைப்பற்றி அவர் சுட்டிக்காட்டும் சிலவற்றைப் பார்ப்போம். அகநானூற்றுப் பாடல் 61 இல், விழுச்சீர் வேங்கடம் பெறினும் என்னும் அடியை விளக்குகையில் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.

வேங்கடம்: தொல்காப்பியர் காலத்தில் தமிழ்நாட்டின் வடக்கு எல்லையாக இருந்த மலை. மாமூலனார் காலத்தும் இதுதான் வடக்கு எல்லையாக இருந்தது. இது இப்போது திருப்பதி என்ற பெயரால் அழைக்கப்படுகின்றது. தெலுங்கர் நாடாகக் கருதப்படுகின்றது. ஆயினும் தமிழர் தங்கட்குரியது என்பதை நிலைநாட்டித் தமது வடவெல்லை மலையாக மீண்டும் கொள்ளுதல் வேண்டும். அரசியல் அமைப்பு மன்றத்தினர் மொழி வகையாக நாடுகளை வகுக்கும்போது தமிழர் அயர்ந்துவிடாது ஆவன செய்வார்களாக.

 

  மொழி வழியாக நாடுகள் வகுக்கப்படும் எனப் பேராசிரியர் தொலை நோக்கு உணர்வில் குறிப்பிட்டுள்ளார். அவர் விழைந்தவாறான மொழிவழித் தேசிய நாடுகளின் கூட்டமைப்பு இன்னும் அமையவில்லை. என்றாலும் இந்தியநாடு என்னும் அமைப்பில் மொழி வழி மாநிலங்கள் பிரிக்கப்பட்டுள்ளன. அவ்வாறு பிரிக்கும் பொழுது வேங்கடம் பறிபோகும் என்பதை உணர்ந்துதான் பேராசிரியர் தமிழர் அயர்ந்துவிடாது ஆவன செய்ய வேண்டும் என அறிவுறுத்தி உள்ளார். மொழி வழி மாநிலங்கள்அமைக்கும்பொழுது ஆண்ட தலைவர்கள் வரலாற்று உணர்வு இல்லாதர்களாகவும் தமிழ்த் தேசிய உணர்வு அற்றவர்களாகவும் இருந்தமையால் நாம் வேங்கடமாகிய திருப்பதியை இழந்தோம். என்றபோதும் தமிழக அகஎல்லையாகத் திருப்பதி அமைய நாம் முயன்று வெற்றி காண வேண்டும்.

  அகநானூற்றுப் பாடல் 91 இல், “குடநாடு பெறினும் தவிரலர்” என்னும் பாடலடியை விளக்கும் பொழுது மொழிக்கலப்பின் தீமையைப் பின்வருமாறு உணர்த்துகிறார்.

  குடநாடு: இன்று ‘மலையாளம்’ என்று வழங்கப்படும் இடம் தான் அன்று தமிழ் வழங்கும் குடநாடாக இருந்தது. இன்று தமிழரின்றும் வேறுபட்டதாகவும், தமிழர்க்கும் தமக்கும் தொடர்பு இல்லையென்றும் நினைக்கும் மக்கள் மிகுந்த நாடாக விளங்குகின்றது. இதுவும் காலத்தின் கோலம்! இவ்வேறுபாடு எதனால் ஏற்பட்டது எனின், பாண்டியநாட்டுத் தமிழரினின்றும் சேரநாட்டுத் தமிழரை மலைகளும் காடுகளும் இடைநின்று பிரித்தன. சேரநாட்டை ஆண்ட பிற்கால அரசர்கள் தமிழையும் தமிழ்ப் புலவரையும் போற்றாது புறக்கணித்தனர். ஆரியம் அங்குச் செல்வாக்குப் பெற்றது. ஆரியமொழியை ஒட்டி இலக்கணம் வகுத்தனர். ஆரிய மொழிச் சொற்களைத் தம்மொழியிற் கலந்து வழங்கினர். ஆகவே தமிழ்மொழி வேற்று மொழியாக உருவடைந்து ‘மலையாளம்’ என்ற புதுப்பெயரையும் பெற்றது. அதனால்தான் தமிழில் வேற்று மொழிச் சொற்களைக் கலந்து எழுதுதலும் பேசுதலும் கூடாது என்கின்றோம்.

 

  இன்று ஊடகங்கள் வாயிலாக மொழிக்கலப்பு மூலம் தமிழ்க்கொலை விரைவாக நடைபெற்றுவருகிறது. மக்களும் மொழிக்கலப்பின் தீமையை உணராமல் பிற மொழிச் சொற்களை மிகுதியாகக் கலந்து பேசியும் எழுதியும் வருகின்றனர். தமிழ் மலைநிலம் மலையாளநாடு என்னும் வேற்ற நிலமாக மாறிய வரலாற்றை உணர்ந்தாவது நல்ல தமிழே பேசுவார்களாக! நல்ல தமிழிலேயே எழுதுவார்களாக!

(உணர்வு பரவும்)

– இலக்குவனார் திருவள்ளுவன்