may1802 

  இறுதிக்கடன் என்பதன் மூலம் நாம் இறந்தவர்க்கு நம் மதிப்பையும் வணக்கத்தையும் செலுத்துகிறோம். இறந்தவர் நினைவைப் போற்றுவதற்கு நாம் நினைவேந்தல் என்கிறோம். இயற்கையாகவோ நோய்வாய்ப்பட்டோ  எதிர்பாரா நேர்ச்சி போன்றவற்றாலோ இறக்கும் பொழுது இவ்வாறு நினைவேந்தலாக நிகழ்த்துவது சரியே!  போராளியாக வீர மரணம் அடையும்  பொழுது நினைவேந்தலை வீர வணக்கம் செலுத்தும் வகையில் கடைப்பிடித்தலே இறந்தவர்க்கு நாம் அளிக்கும் மதிப்பாகும்! கொலை செய்யப்பட்டு இறக்கும் பொழுது,  நினைவேந்தல் நடத்தினாலும் – ‘பல்லுக்குப் பல்’ என்பதுபோல் பழிவாங்குவது தவறு என்றாலும் – பழிவாங்கும் எண்ணமே பலருக்கும் எழுகின்றது. பழிதீர்க்காமல் நினைவேந்தல் நிகழ்த்துவதும் தவறு என எண்ணுவோர் உளர். கொலைக்குத் தீர்வு கொலையாகாதுதான். எனவே இதற்கு எதிராக உணர்வுகளை அடக்கிக் கொண்டு நினைவேந்தல் நிகழ்த்துவது வழக்கமாகிறது.

eezham-genocide08  பன்னூராயிரம் மக்கள் வஞ்சகத்தால் படுகொலை செய்யப்படும்பொழுதும் நாம் அமைதியாக நினைவேந்தல் நடத்துவதால் கொலையாளிகள் மேலும் கொலைச் செயல்களில் ஈடுபடவே வாய்ப்பளிக்கிறோம். அவ்வகையில் தமிழ் ஈழத்தில் எரிகுண்டுகளாலும் ஏவுகணைகளாலும் அறநெறி பிறழ்ந்தும் உயிர்நேயமின்றியும் ஈழமக்களை – நம் சொந்தத்திற்குரிய தமிழ்மக்களை – ஈவு இரக்கனமின்றி அழித்த நாளை நினைவேந்தலாகக் கொண்டாடாமல் துக்க நாளாக – துயர நாளாகக் கொண்டாட வேண்டும் என்று முன்பு தெரிவித்து இருந்தேன். இன்று பலரும்  துக்கநாளாகவே கடைப்பிடித்து வருகின்றனர். என்றாலும் வெறும் துக்கநாள் கொண்டாடுவதால் இறந்தவர்க்கு நாம் ஆற்ற வேண்டிய கடமையை ஆற்றத் தவறுகிறோம்.

  வஞ்சகக் கொலையாளிகள், கொலைக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் உதவிய கூட்டுக் குற்றவாளிகள்  ஆகியோர் எத்தண்டனையும்  பெறாமல்  வெற்றி உலா வரும் பொழுது,  அவர்களுக்குத் தண்டனை கிடைக்கச் செய்யாமல், அவர்களை அரசியலில் இருந்தும் அதிகாரத்தில் இருந்தும் அப்புறப்படுத்தாமல் வெறும் துயர நாள் கொண்டாடுவதால் என்ன பயன்?  இலட்சத்து எழுதாயிரத்திற்கும் மேற்பட்ட ஈழத்தமிழர்கள் இறந்து ஐந்தாண்டுகள் ஆயினும். பன்னூறாயிரம் ஈழத்தமிழர்கள் தம் நிலங்களையும் உடைமைகளையும் உற்றார்eezham-genocide11 உறவினர்களையும் இழந்தும் உரிமையுடன் வாழ இயலாமல் அல்லல்பட்டு ஆற்றாது அழுது கொண்டு இருக்கும்  பொழுது அவர்களின் கண்களைத் துடைக்காமல் நாம் அமைதி காக்கலாமோ? இதே நிலை தொடர்ந்தால் வருங்காலம் நம்மைப் பழிக்காதா?

  ஆகவே நாம் இந்த நாளில்  பலியிட்டவர்களைப் பழி தீர்க்கச் சூளுரை மேற்கொள்ள வேண்டும்! வரலாற்றில் அவர்கள்   கொடுங்குற்றவாளிகளாக இடம் பெறும் வகையில், தண்டனை பெற்றுத் தரவும் தம் இன்னுயிர்களைப்  போராளிகளும் மக்களும் எதற்காக இழந்தார்களோ அந்தக் கனவு நனவாகும் வகையில் தமிழ் ஈழம் அமைய ஒல்லும் வகைஎலாம் உழைத்திடவும் சூளுரை மேற்கொள்ள வேண்டும்.

  இலங்கையில் போர்த்துக்கீசியர் வரும் முன்பு இரு தமிழ் அரசுகளும் ஒரு சிங்கள அரசும் இருந்தன. அதற்கிணங்க நாம் 1.1.1600 அன்று இலங்கையில் தமிழர்கள் வாழ்ந்த பகுதியையும் தமிழ் அரசு இருந்த பகுதியையும் இணைத்துத் தமிழ் ஈழமாக  மலரச்  செய்ய வேண்டும். தமிழர் நிலத்தைச் சிங்களக் குடியேற்றமாக மாற்றிவரும் சிங்களக்  கொடுங்கோலர்களுக்கு மரண அடி கொடுக்கும் வகையில் முந்தைய நிலப்பரப்பை மீளப் பெற ஆவன செய்ய வேண்டும். அதற்குத் தமிழ் மக்கள் தாங்கள் வாழும் நாடுகளில் உள்ள மக்களிடம் அவரவர் மொழிகளில் விளக்கி ஆதரவைப்  பெற வேண்டும். உலக நாடுகள் பல, தமிழ் மக்களுக்கு எதிராகக்  கைகோத்துக்  கொண்டு நாடகமாடினாலும் உலக மக்களிடம் பரிவும் நேயமும் இருக்கத்தான் செய்கின்றன. எனவே, உலக அரசுகளைப்பற்றிக் கவலைப்படாமல் ஆதரவாக இருக்கும் அரசுகளின் கரங்களை வலுப்படுத்தியும் உலக மக்களிடம் தமிழ் ஈழம் தமிழர்களின் தாயகம் என்னும் உண்மையை விதைத்தும் சிங்கள ஆட்சியை விரட்ட வேண்டும்.

உயிர்களைக் குடித்தவர்களின் உயிர்களைச் சட்டமுறைப்படி பறிக்க வேண்டும்!

கொலைகாரக் கொடியவன் யாராயினும், கற்பழித்த கயவன் எவனாயினும் தூக்கு மரம் தனக்காகக் காத்துக்  கொண்டிருக்கிறது என்பதை உணர்ந்து அணுஅணுவாகத் துன்புற்று மடிய வேண்டும்!

உயிர்களைப் போக்கியவனின் உயிரைப் போக்கு!

உடைமைகளைப் பறித்தவனின் உடைமைகளைப் பறி!

என நாமே ஆயுதம் தாங்கிச் செயல்பட்டோம் என்றால் வன்முறை! இந்த வன்முறை வேண்டா! ஆனால், அறமன்றம் முன்னர் இக்  கொடுங்குற்றவாளிகளை நிறுத்தி இதனை நிறைவேற்றினோம் என்றால் அதுவே நன்முறை!

நன்முறையில் – அறமுறையில் –  குற்றவாளிகள் தண்டனை பெறச் செய்வோம்!

வினைபகை என்றிரண்டின் எச்சம் நினையுங்கால்

தீயெச்சம் போலத் தெறும். (குறள் 674)

என அறிவுறுத்துகிறார் தெய்வப்புலவர் திருவள்ளுவர்.எனவே, பகை முடிக்கும் வினை முடிப்போம்!

ஆதலின் நாம், மே 18 என்பதை,  வெறும்துயர நாளாக நிகழ்த்தக் கூடாது.

பேரினப் படுகொலை – பழிதீர் சூளுரை நாள்

 எனக் கடைப்பிடித்து தண்டனைக்குரியவர்கள் தண்டனை பெறவும் தமிழ் ஈழம் மலரவும் தமிழ் ஈழ மக்கள் மன அமைதி காணவும் சூளுரை மேற்கொண்டு வாகை சூட வேண்டும்!

eezham-with-prapakaran01இலக்குவனார் திருவள்ளுவன்