போலிப் பெரியாரியவாதி

குட்பூவிற்குச் சில வினாக்கள்

 

பெண்களை இழிவுபடுத்துவதில் மனுநூலுக்கு இணை மனுநூல்தான். அதில் உள்ள அத்தகைய கருத்தை முனைவர் தொல்.திருமாவளவன் கடந்த திங்கள் பெரியார் வலைக்காட்சியில் குறிப்பிட்டுப் பேசியுள்ளார். அவர் இல்லாத ஒன்றைக் கூறவில்லை. முன்னரே திராவிட இயக்க இதழ்களிலும் குமுக வலைத்தளங்களிலும் மட்டுமல்லாமல் நடுநிலை எழுத்தாளர்களாலும் அறிஞர்களாலும் பன்முறை கூறப்பட்ட செய்திதான்.

பா.ச.கட்சியில் புதியதாகச் சேர்ந்தமையால் விளம்பரம் தேட விரும்பிய நடிகை குட்பூ ஒரு திங்கள் கழித்து வந்த அப்பேச்சைப் பார்த்துப் பொங்கி எழுந்துள்ளார். பெண்களை இழிவுபடுத்திப் பேசியதாகக் கூறித் திருமாவிற்குக் கண்டனம் தெரிவித்துள்ளார்.

பாசகவினர் பெண்களுக்கு எதிராகக் கொடுமைகள் இழைத்தபோதும் அவற்றுக்குப் பரிசாகப் பதவிகளை அக்கட்சி வாரி வழங்கிய போதும் அமைதி காத்தவர், விழிப்புணர்வுப் பேச்சிற்காகப் பொங்கிஎழுந்து கண்டனம் தெரிவிப்பதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதும் ஏன்? சான்றுக்கு ஒன்றிரண்டைப் பார்ப்போம்.

தில்லி சட்டப்பேரவைத் தேர்தலின் பொழுது பாசக வெற்றி பெற்றால் பள்ளிவாசல்கள் இடிக்கப்படும் என்று பாசக நாடாளுமன்ற உறுப்பினர்  பருவேசு வெர்மா(Parvesh Verma) எச்சரிக்கை விடுத்தார். இம் மதவெறிப்பேச்சிற்காகப் பொங்கி எழாமல் அக்கட்சியிலேயே ஐக்கியமாகியது ஏன்?

கடந்த இரண்டாண்டுக்கு முன்பு உள்ள புள்ளிவிவரப்படி பெண்களுக்கு எதிரான குற்றம் இழைத்து வழக்கு தொடுக்கப்பட்டவர்களில் 47 பேருக்குப் பாசகவில் 2014-2018 இல், தேர்தலில் வாய்ப்பு தரப்பட்டுள்ளது. பா.ச.க. தோன்றிய முதல் இதுவரை என்றால் இத்தகையோர் நூற்றுவரைத் தாண்டுவர். பெண்களுக்கு எதிரான குற்றம் இழைத்தவர்களுக்குப் பதவிகளா எனப் பொங்கி எழாமல் அக்கட்சியிலேயே ஐக்கியமாகியது ஏன்?

கடந்த 2018-ஆம் ஆண்டு, சனவரி 10 அன்று சம்மு பகுதியின் கத்துவா நகரில் `பகர்வால்’ என்ற நாடோடிப் பழங்குடி இனத்தைச் சேர்ந்த எட்டு அகவைச் சிறுமி காணாமல் போனார். பின்னர் அச்சிறுமி கோயில் பணியாளர் சஞ்சிஇராம் முதலானவர்களால் கூட்டு வன்புணர்விற்கு ஆளாக்கப்பட்டுக் கொல்லப்பட்டார் என அறிய வந்தது. பின்னர் இவர்கள் நீதி மன்றத்தால தண்டிக்கப்பட்டுச் சிறையில் உள்ளனர்.

எனினும் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டபொழுது அவர்களுக்கு ஆதரவாகவும் விடுதலை செய்ய வலியுறுத்தியும்  இந்து ஏக்தா மன்சு(Hindu ekta munch) அமைப்பு பேரணி நடத்தியது. இதில் பா.ச.க. அமைச்சர்கள் சந்திர பிரகாசு கங்கா, இலால் (சிங்கு) ஆகியோர் பங்கேற்றுள்ளனர். அமைச்சர்களே, சிறுமியைச் சீரழித்துக் கொன்றவர்களுக்காக வாதிடுவதா எனப் பொங்கி எழாமல் அக்கட்சியிலேயே ஐக்கியமாகியது ஏன்?

குல்தீபு சிங்கு செங்கர் (Kuldeep Singh Sengar)  என்பவர், பெண்களுக்குப் பாதுகாப்பற்ற மாநிலமாகக் கூறப்படும் உ.பி.யில் பா.ச.க சட்டமன்ற உறுப்பினர் ஆவார். இவர் ச.ம.உ.ஆகத் தேர்ந்தெடுக்கப்பட்ட 2017 ஆம் ஆண்டே வேலை கேட்டு வீட்டிற்கு வந்த 17 அகவைச் சிறுமியை மற்றொருவருடன் சேர்ந்து வன்புணர்வு செய்துள்ளார்.  அப்பெண்ணின் தந்தைமீது பொய்வழக்கு பதியச்செய்து சிறையில் இறக்கும் படிச் செய்துள்ளார். அப்பெண்ணின் வழக்குரைஞரையும் உறவினர் ஒருவரையும் மகிழுந்தில் செல்லும் பொழுது சுமையுந்து ஏற்றிக் கொல்லச் செய்துள்ளார். இதற்காகத் தில்லி நீதிமன்றத்தால் ஆயுட் தண்டனையும் பெற்றுள்ளார் மக்கள் சார்பாளரான தன்னை வேலைக்காக நாடிவந்த சிறுமியைக் கற்பழித்ததுடன் அதற்காகக் காவல் துறையில் முறையிட்ட தந்தை, வாதாடிய வழக்குரைஞர், உதவிய உறவினர் எனப் பலரையும் அழித்தவருக்கு அழித்தவருக்கு எதிராகப் பொங்கி எழாமல் அக்கட்சியிலேயே ஐக்கியமாகியது ஏன்?

பெண்களைப் பழித்துச் சொன்னதாகப் பொங்குபவர் தொலைக்காட்சிகளிலும் திரைக்காட்சிகளிலும் பெண்களை இழிவாகக் காட்டுகிறார்களே! ஏன் பொங்கி எழவில்லை? பெண்கள் என்றால் அன்பின் உருவம், பண்பின் சிகரம் என்றெல்லாம் சொல்கிறார்கள். ஆனால், தொலைக்காட்சித் தொடர்களில் காட்டப்படும் பெண்கள் வஞ்சகர்களாகவும் கூட்டுச் சதியினராகவும் அடுத்தவள் கணவனை அடைய குறுக்கு வழிகளை மேற்கொள் பவர்களாகவும் கணவன் மனைவியரைப் பிரித்து வைப்பவர்களாகவும் தான்  ஆசை கொள்பவனை அடைய  என்ன வேண்டுமானாலும் செய்யும் காமுகியராகவும்தான் உள்ளனர். அடியாட்கள். கொலைகாரர்கள், கொள்ளைக்காரர்கள், போதை மருந்து விற்பவர்கள் முதலானவர்களை அறிந்து வைத்து அவர்கள் மூலம் கொடுமை செய்பவர்களாகவும் பாசங்காட்டும் அன்னைபோல் நடித்து வளர்ப்பு மகன் சொத்துகளை அடைய  அவனை அழிக்க  முயல்பவர்களாகவும் அவன் மனைவியாகிய மருமகளைக் கொன்று தனக்கு வேண்டியவளுக்குத் திருமணம் செய்ய முயலும் மோசடிக்காரிகளாகவும்தான் காட்டப்படுகின்றனர். மனுநூல் பெண்களைப்பற்றி என்ன சொல்கிறதோ அப்படித்தான் காட்டப்படுகின்றனர். இவற்றுக்காகப் பொங்கி எழாமல் உண்மையை உரைப்பதற்குப் பொங்கி எழுவது ஏன்?

வெற்று விளம்பர ஆரவாரத்திற்காகத்தானே இல்லாத பெருமையைக் கூறி இருக்கின்ற இழிவைச் சுட்டிக்காட்டியதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார். எனினும் அவரிடம் சிறிது மனச்சான்று ஒட்டிக்கொண்டுள்ளது. எனவேதான், மனுநூலில்  பெண்களைக் கேவலப்படுத்தும் அளவுக்கு ஏதும் இல்லை என்றவர், “மனு நீதி என்று அழைக்கப்படும் மனுசுமிருதி நூலை இப்போது யாரும் பின்பற்றுவதில்லை. அதைப் பற்றி இப்போது யாரும் பேசவும் இல்லை. அப்படி இருக்கும்போது, பழங்காலத்தில் எழுதப்பட்ட அந்த நூலைப் பற்றி இப்போது திருமாவளவன் விமர்சித்துப் பேசுவதற்கு என்ன தேவை வந்தது?” என்றார்.

“மனுநூல் பிராமணரால் எழுதப்பட்டது என்பதோடு பிராமணர்க்காகப் பிராமணர் நலன் கருதி எழுதப்பட்டது” என்று வெண்டை தானிகெர்             (Wendy Doniger) தம் நீண்ட ஆய்வு முன்னுரையில் எடுத்துரைக் கிறார்(பேரா.ப.மருதநாகயம், ஒப்பியல் வள்ளுவம், பக்.166). மனுநூல், பிராமணர்களைப்பற்றி மட்டுமே உயர்த்திப் பிறரைப் பழித்தும் இழித்தும் சொல்லும்  அறமற்ற நூல்.

எனவே, மனு சாதிக்கொரு நீதி கூறுவதில் வியப்பில்லை. பிற நாட்டு அறிஞர்களும் அறநூல்களுடன் ஒப்பிட்டு மனுவிற்கும் அறத்திற்கும் தொலைவு மிகுதி எனக் கூறியுள்ளனர். ஆனால், உயர்த்தப்படும் சாதியினர்தான் அதைத் தலையில் வைத்து ஆடுகிறார்கள் என்றால் பிறரும் அதைப் போற்ற வேண்டும் என எதிர்பார்ப்பது எப்படிச் சரியாகும்?

எனினும் இங்கே அதைப்பற்றிப்பாராமல் பெண்களுக்கு எதிராக அந்நூல் கூறியுள்ள சிலவற்றைப்பற்றி மட்டும் பார்ப்போம்.

அறமுறைக்கு எதிரான கருத்துகளையும் பெண்களை இழிவுபடுத்தும் செய்திகளையும் உடையது மனுநூல் என்னும் உண்மையை மறுக்க வழியில்லை. எனவே, எப்பொழுதோ எழுதப்பட்ட நூலைப்பற்றி, இப்பொழுது வழக்கிலில்லாத நூலைப்பற்றிக் கூறுவானேன் என மழுப்புகின்றனர்.

இதுவரை இதனை அறநூலாகவும் அறிவியல் நூலாகவும் போற்றி வந்தவர்கள், இப்பொழுது மனு என்று ஒருவர் இல்லை எனப் பின் வாங்குகின்றனர்.  மனுவின் உண்மை மக்களுக்குப் புரியத் தொடங்குவதால் எடுத்த நிலைப்பாடு. எனினும் வாய்ப்புள்ள பொழுது மீண்டும் முருங்கை மரம் ஏறுவர்.

மேற்கோள் காட்டிய மனு நூல், ஆங்கிலேயர்களால் புகுத்தப்பட்டது; வயவர்.வில்லியம் இயோன்சு என்ற ஆங்கிலேயரால் 1794ஆம் ஆண்டு எழுதப் பட்டது. என்றும் இந்து மதத்திற்கும், அதற்கும், எந்தத் தொடர்பும் இல்லை என்றும் சிலர் பொய் விளக்கம் அளிக்கின்றனர். வேதக்காலத்தில் குறிப்பிடப்பட்ட ஆரியத்தை – சங்கக்காலத்தில் குறிக்கப்பெற்ற ஆரியத்தை  ஆங்கிலேயர்களால் புகுத்தப்பட்ட கற்பனை என்போர்தான் இவ்வாறு கூறுகின்றனர்.

ஆரியர்கள் தமிழ்நூல் சிறப்பாக இருந்தாலும் பழித்துக் கூறுவர். அதையும் மீறி அதன் செல்வாக்கு உயர்ந்தது எனில், தாழ்த்தப்பட்டவரால் எழுதப்பட்டது என்பர். இருப்பினும் மக்கள் அந்த நூலைப் பாராட்டிப் பின்பற்றினால் தாழ்த்தப்பட்டவனுக்கும் பிராமணனுக்கும் பிறந்தவரால் எழுதப்பட்டது என்பர். இதையும் மக்கள் புறக்கணித்தால் எழுதியவர் பிராமணன் என்பர். இவ்வாறுதான் திருவள்ளுவர் குறித்தும் கூறினர்.

ஆரியத்தின் நச்சு வெளியே வந்தால் அதை மறைக்கப் பார்ப்பர். அதையும் மீறி வெளிவந்தது என்றால் அதனைக் கற்பனை, வேண்டாதவர்களால் புனையப்பட்டது என்பர்.

ஆரியர்கள் தங்களுக்குச் செல்வாக்கு இருக்கும் பொழுது ஆர்ப்பரிப்புடன் தங்களை வெளிப்படுத்திக் கொள்வர். ஆனால், செல்வாக்கு இல்லாத பொழுது மறுவாய்ப்பிற்காகக் காத்திருந்து அடங்கிக்கிடப்பர். 

பெண்களை இழிவுபடுத்தும் மனுவின் சாத்திரங்கள் மேலும் பின் வருமாறு உள்ளன.

“நிறை பிறழ்தலும், நிலையில் மனமும், நண்பின்மையும், மாதர் தம் இயல்பாவதால், கணவனால் நன்கு போற்றிப் புரக்கப்படும்போதும், அவர்கள் கணவரின் காவலை விரும்புவதில்லை.”( மனு, 9 : 15).

“மாதர்க்குப் பிறவியைத் தூய்மையாக்கும் சமக்காரங்கள் மந்திரப்பூர்வமாகச் செய்வித்தல் யாதுமின்று. இவர்களுக்கு வெள்ளையுள்ளமும் இல்லை. பாவம் நீக்கும் மந்திர உபதேசமும் கிடையாது. எனவே பொய்யைப் போல் மாசு வடிவினராக மாதர் இயன்றிருக்கின்றனர்.” (மனு, 9 : 18).

“பெரும்பாலும் மாதர் கற்பிலார் என்றே பெரிதும் பல நூல்களிலும் குறப்படுவனவற்றையும் கேட்பீராக!”(மனு 9.19)

“புலன்களை அடக்கியவனாயினும் அறிவிலியாயினும் அவர்களைத் தங்களது தொடர்பால் காமக்குரோதமுள்ளவனாகச் செய்வர் மாதர்.” (மனு, 2.214)

மனுவில் உள்ளன பொய்,  ஆங்கிலேயர்களின் கற்பனை என்கிறார்களே! அப்படியானால் ஆரியச்சாமியார்கள் அவற்றை ஏன் மேற்கோளாகக் கூற வேண்டும்.

காஞ்சிமடம் ஆரியச் சமயத்தையும் அதன் வருணாசிரமத் தருமத்தையும் காப்பதற்காகவும் பாடுபடுகிறது. கடந்த நூற்றாண்டில் அதன் தலைவராக இருந்த சந்திரேசகர(ஆச்சாரியா)ர், நேரு, பெண்களுக்குச் சொத்துரிமை எனச் சட்டவரைவு கொண்டுவந்த பொழுது அதனைக் கடுமையாக எதிர்த்தார். அப்பொழுது  அவர் இதனை மனுவிற்கு எதிரானது என்றார்.

“பெண்களுக்குச் சொத்தில் பாத்தியம் கொடுக்கப் போறாளாம்; அவாளுக்குச் சொத்துலே பங்கு கொடுத்தால் என்னாகும் தெரியுமா? இட்டப்பட்டவா கூடப் பெண்கள் ஓடிப் போயிடுவா. அபாண்டமா அபச்சாரமா போயிடும். மேலும் இதனால் பெண் தருமமே பாழாயிடும். பெண்களுக்குப் பாத்தியமோ சம்பாத்தியமோ இருக்கக் கூடாதுன்னு மநு சுமிருதி சொல்லியிருக்கு. ஆம்படையானுக்கு அடிமையாக இருக்கறதுதான் பெண்ணிற்கு அழகு.” என்றவர்தான் காஞ்சி மடத்தலைவர் சந்திரசேகரேந்திர சரசுவதி(அக்னிகோத்திரம் இராமானுச தாத்தாச்சாரியார், இந்து மதம் எங்கே போகிறது?) ஆரியச் சமையத்தலைவரே மனுவில் உள்ளதாகத் தெளிவாகக் கூறி அதனை மீறக்கூடாது என்னும் பொழுது “ஆங்கிலேயர், இல்லாத மனுவின் பெயரில் கூறியுள்ள கற்பனை’ என்பது பெரும் மோசடி அல்லவா?

அவர். பெண்கள் வேலைக்குச் செல்வதை எதிர்த்து, பெண்மையையும் இழந்து கொண்டு தீய ஆசைகளைப்பெருக்கிக் கொண்டு வேலைக்குச் செல்வதாகக் கூறுகிறார். “வீட்டில் அடைபட்டில்லை என்று அலுவலகத்திற்குப் போவதால் எத்தனை தப்புக்களுக்கு இடம் கொடுத்துப் போகிறது?” என அவரே கூறுகிறார்.(தெய்வத்தின் குரல் பாகம் 2).

“மாதர்கள் கற்பு நிலையின்மையும், நிலையா மனமும், இயற்கையாக உடையவர் ஆதலால் கணவனால் காக்கப்பட்டிருப்பினும் அவர்களை விரோதிக்கின்றார்கள்”(மனு 9.15)

“மாதர்கள் பெரும்பாலும் விபச்சார தோச முள்ளவர்களென்று அநேக சுருதிகளிலுஞ் சாத்திரங்களிலுஞ் சொல்லப்பட்டிருக்கின்றன.”  (மனுநூல்.9.19).

பெண்கள் திருமணத்துக்கு முன் பாலியல் உறவு வைத்துக் கொள்வது தவறில்லை என்கிறவர்கள் இவற்றை இயல்பாகக் கருதலாம். ஆனால், ஒருவனுக்கு ஒருத்தி என்று வாழ்பவர்களுக்கும் பிறன்மனை விழையாமையைப் போற்றுபவர்களுக்கும் எல்லாப் பெண்களையுமே பரத்தையர் என ஒழுக்கக்கேடராகக் கூறுவது எப்படி ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கும்?

பெண்களுக்கு எதிரானதே மனு என்பதற்குப்பின்வரும் வரிகள் சான்று.

 “மலடியான மனைவியை எட்டு வருடத்திற்கு மேலும், சாப்பிள்ளை பெறுபவளைப் பத்து வருடத்திற்கு மேலும், பெண்ணையே பெறுபவளை பதினொரு வருடத்திற்கு மேலும், தீங்கு சொல்பவளை அப்பொழு தேயும் நீக்கி வேறு விவாகம் செய்து கொள்க. இந்த மனைவியர்களுக்கு மனமகிழ்ச்சிப் பொருள் கொடுக்க வேண்டியதில்லை.”

ஆனால்,இதே நிலையில் உள்ள ஆண்களுக்கு எத்தண்டனையும் இல்லை. (மனு 9.81)

“இப்பொழுது எங்கே இருக்கிறது மனுதருமம்? ஏன் அதைக் கிளப்ப வேண்டும்?” என்று மனு ஆதரவாளர்கள் சொல்வதே மனுவின் தீமைகளை மறைப்பதற்குத்தான்.

காஞ்சி மடத்தலைவர் சுப்பிரமணியன் என்ற செயேந்திரர் “வேலைக்குச் செல்லும் பெண்கள் எல்லாம் பரத்தையர்கள்” – என்று செவ்வி(பேட்டி) அளித்தார்.

நடிகர் ச.வெ.(எசு.வி.)சேகர், பெண்களை இழிவாகச் சொன்னவர்; பெரிய ஆட்களுடன் படுக்காமல் அவர்களால் (ஊடகப் பெண்களால்) செய்தியாளராகவோ செய்தி வாசிப்பவராகவோ ஆகிவிட முடியாது என்றதும் மனுஅவர் மனத்தில் ஆழமாகப்பதிந்துள்ளதுதான்.

பெண்கள் வேலைக்குச் செல்லாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்? “வீட்டிற்கு வேண்டிய பாத்திரம் முதலியவற்றை தேடிப் பெறுவதற்காக பொருளை அவளிடம் கொடுத்தும் அதனைக் காப்பாற்றி வைத்து வேண்டிய போது செலவிடும்படி செய்தும் தட்டு முட்டுச் சாமான்களை சுத்தமாக வைத்துக் கொள்ளச் செய்தும் வீட்டை துப்புரவாக்கி வைத்தல், தேவ பூசைக்கான ஏற்பாடுகளைச் செய்தல், அடுக்களைப் பொறுப்பு, பாத்திரம் படுக்கை முதலியவற்றைச் சரியாக கவனித்துக் கொள்ளல் போன்ற இன்றியமையாத இல்லத்துக் காரியங்களை மனைவிக்குக் கற்பித்து அவற்றை அவளைக் கொண்டு செய்வித்தல் போன்றவற்றாலும் அவளது மனம் வேறிடம் செல்லாமற் காக்க!”(மனு 9.11).

பெண்கள் வீட்டுக்குள்ளேயே வேலை செய்து குடும்பத்தை பார்த்துக் கொள்வதற்காகவே உருவாக்கப்பட்டவர்கள் என்று உத்தரப் பிரதேச முதல்வர் சொல்கிறார்.

மனு கூறுவதைத்தானே இவர்கள் கூறுகிறார்கள். “மனு பழைமையான நூல், இப்பொழுது அதைப்பற்றிப் பேசுவது ஏன்” என்பது தவறுதானே.

இடைச்செருகல் என்பது ஆரியர்களுக்குக் கைவந்த கலை. தமிழ், பாலி, பிராகிருதம் முதலான மொழி நூல்களில் தங்கள் கருத்துகளை இடைச்செருகலாகப் புகுத்துவர். அதற்கு முன்னதாக அந்நூல்களைத் தங்கள் மொழியில் புத்தாக்கம் போல் எழுதி வைத்துக் கொண்டு சமற்கிருதத்தில் இருந்துதான் பிற மொழிகளுக்குச் சென்றது என்பர். தங்கள் நூல்களின் காலங்களை முன்னுக்குத் தள்ளித் தமிழ் முதலான பிற மொழி நூல்களின் காலங்களைப் பின்னுக்குத் தள்ளுவர். அதேபோல் தமிழ் முதலான மொழிநூல்களின் சிறந்த கருத்துகளைத் தங்கள் நூல்களில் இடைச்செருகல்களாகச் சேர்ப்பர். அவ்வாறு மனுவிலும் தமிழ் அறக்கருத்துகள் சேர்க்கப்பட்டுள்ளன. எனினும் நூலை முழுமையாகப் படிக்கும் பொழுது அக்கருத்துகள் மனுவின் அடிநாதக் குரலுக்கு எதிராக உள்ளதைப் புரிந்து கொண்டு இடைச்செருகல் என்பதை உணர்த்தி விடும். மனுவிற்கு எதிர்ப்பு வரும் பொழுது இடைச்செருகல்கள் கருத்துகளைக் காட்டி மனு பெண்ணின் காவலர் என்பதுபோல் பொய்யுரை கூறுகின்றனர்.

தன்னை நடுநிலையாளராகவும் துணிவானவராகவும் காட்டிக் கொள்பவர் குட்பூ. எனவே, பெண்களை இழிவாகக் கூறும் மனுவிற்கு எதிராக – மக்களிடையே உயர்வு தாழ்வைக் கற்பித்து ஒரு சாதி நலனுக்காக மட்டும் சாத்திரம் பேசும் மனுவிற்கு எதிராகக் குரல் கொடுக்க வேண்டும். அதற்கு வாய்ப்பில்லை எனக் கருதினால் பா.ச.க.வை விட்டு வெளியேற வேண்டும். தானே, அமைப்பு ஒன்றைத் தொடங்கிப் பெண்களை இழிவு படுத்துவோருக்கும் சாதி வேற்றுமை பாராட்டுவோருக்கும் அத்தகைய நூல்களுக்கும் எதிராக இயக்கமாகச் செயல்படவேண்டும். அவ்வாறில்லாமல் அமைதி காத்தாலோ மீண்டும் மீண்டும் மனுவிற்கு ஆதரவாகக் குரல் கொடுத்தாலோ,  நடு நிலை தவறும் அவர், தமிழ்நாட்டில் நட்டாற்றில் விடப்படுவார் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். என்ன செய்யப் போகிறார் அவர்? உழைக்கும் மக்களின் பக்கம் இருப்பாரா? ஏய்த்துப் பிழைக்கும் மக்களின்பக்கம் இருப்பாரா? பெண்களின் உரிமையை மீட்போர் பக்கம் இருப்பாரா? பெண்களை இழிவுபடுத்துநர் பக்கம் இருப்பாரா?

எனவே, பெண்களைப் பரத்தையராகவும் இழிவாகவும் கூறும் மனுவின் மீது பாயாமல் , அதைத் தடை செய்யக் குரல் கொடுக்காமல் அதை எடுத்துரைப்பவர்கள் மீது பாய்வதில் எந்நீதியும் இல்லை என்பதை உணர வேண்டும்!

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

அகரமுதல : இதழுரை