பொங்கல் விழாக்கள் – சில நெருடல்கள் : வி. சபேசன்
பொங்கல் விழாக்கள் – சில நெருடல்கள்
இம் முறை புலம்பெயர் நாடுகளில் பொங்கல் விழாக்கள் சிறப்பாக கொண்டாடப்பட்டுள்ளன. அடுத்த ஆண்டு இந்தக் கொண்டாட்டங்கள் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கிறேன்.
தமிழர்களிடம் எஞ்சியுள்ள தமிழர் திருநாளான பொங்கலுக்கு விழா எடுத்துக் கொண்டாடியவர்கள் போற்றுதலுக்கு உரியவர்கள்.
ஆயினும் சில செய்திகளைச் சுட்டிக் காட்ட வேண்டும். அடுத்த ஆண்டு பொங்கலை இன்னும் சிறப்பாக, ஒரு தமிழர் திருநாள் விழாவாகக் கொண்டாட வேண்டும் என்பதற்காகச் சிலவற்றைச் சுட்டிக் காட்ட வேண்டியிருக்கிறது.
பொங்கல் விழா என்பது தமிழர் திருநாள். தமிழர் பண்பாட்டைக் கட்டிக்காப்பதற்காக நடக்கின்ற போராட்டங்களின் முதன்மைக் களம் அது.
புலம்பெயர் நாடுகளில் நடந்த சில பொங்கல் விழாக்களில் இந்திப் பாடல்களுக்கு நடனம் ஆடப்பட்டிருக்கிறது; சமசுகிருதப் பாடல்களுக்கு நடனம் ஆடப்பட்டிருக்கிறது; மேடையில் இந்துக் கடவுள்களின் படங்கள் வைக்கப்பட்டு சமசுகிருதப் பூசை நடத்தப்பட்டிருக்கிறது.
இப்படியான நிகழ்வுகள் பல இடங்களில் நடந்திருக்கின்றன. இந்து மதச் சின்னங்கள் பல இடங்களில் காணக் கூடியனவாக இருந்தன.
‘தமிழர் திருநாள் விழா’ என்று பொங்கலைச் சொல்வதன் அடிப்படை பற்றிய சரியான புரிதல் பலருக்கு இல்லாமல் இருப்பதனால் இப்படியான நிகழ்வுகள் நடந்து விடுகின்றன.
தமிழர்கள் ஒரு கலை விழாவை நடத்தி இந்தி, சிங்களம், ஆங்கிலம் என்று எந்தப் பாடல்களுக்கு வேண்டும் என்றாலும் ஆடி விட்டுப போங்கள்; தவறு இல்லை.
கோயில்களில் பொங்கல் செய்கின்ற போது, இந்து மற்றும் சைவ சமயச் சங்கங்கள் பொங்கல் விழாவைச் செய்கின்ற போது, தாராளமாக உங்கள் மத முறைப்படி செய்து விட்டுப் போங்கள். யாரும் கேள்வி கேட்க மாட்டார்கள்.
ஆனால் ஒரு பொது அமைப்பாக செயற்படுகின்ற சங்கங்கள் பொங்கலைச் செய்கின்ற போது, அதில் மத வழிபாடுகள், சின்னங்கள் போன்றவற்றைத் தவிர்த்து, தமிழ்ப் பண்பாட்டைச் சொல்கின்ற நிகழ்வாக நடத்துங்கள்.
ஈழத் தமிழர்களுக்கு ஒரு சிக்கல் இருக்கிறது. அவர்களுக்கு அவர்களுடையது மட்டும்தான் போராட்டம். தமிழ்நாட்டில் நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டம், அதற்காக உயிர் துறந்தவர்கள் பற்றி எல்லாம் கவலை இல்லை.
தமிழ்நாட்டில் பல நூறு ஆண்டுகளுக்கு மேலாகத் தூய தமிழை ஆரிய ஆக்கிரமிப்பில் இருந்து காப்பதற்கு நடந்து வரும் போரட்டம் பற்றியும், கடந்த நூற்றாண்டில் அது உச்சம் பெற்றது பற்றியும் அறிந்து கொள்வதிலும் அக்கறை இல்லை.
இவைபற்றி ஓரளவாவது அறிந்து கொண்டிருந்தால், மேற்குறிப்பிட்டிருக்கும் நிகழ்வுகள் தவிர்க்கப்பட்டிருக்கும்.
தமிழர் திருநாளை விழாவாகக் கொண்டாட வேண்டும் என்று நினைப்பவர்களிடம் தமிழ்த் தேசிய உணர்வு இருக்கிறது. அதனாலேயே அவர்கள் அதைக் கொண்டாடுகிறார்கள். இவர்கள் அனைவரும் என்னுடைய தோழர்கள்.
தோழர்களைக் குற்றம் சொல்லும் நோக்கத்தில் இதை எழுதவில்லை. அடுத்த ஆண்டு இது போன்ற நெருடல்கள் தமிழர் திருநாளில் நடக்கக் கூடாது என்னும் அக்கறையோடு இதை எழுதுகிறேன்.
பொங்கல் விழா என்பது தமிழ்த் தேசியத்தின் விழா. தமிழர்களின் திருநாள். இந்தப் புரிதலோடு அடுத்த ஆண்டு சிறப்பாகப் பொங்கலை கொண்டாடுங்கள்.
வி. சபேசன்
Leave a Reply