ப. சம்பந்த(முதலியா)ரின் ‘என் சுயசரிதை’ 12 : வழக்குரைஞராக வேலை பார்த்தது 1/2
(ப. சம்பந்த(முதலியா)ரின் ‘என் சுயசரிதை’ 11 : நடுப் பருவம் – தொடர்ச்சி)
என் சுயசரிதை : அத்தியாயம் 6. வழக்குரைஞராக வேலை பார்த்தது 1/2
என் தமையனார் ஐயாசாமி முதலியார் இதற்கு முன்பாகவே உயர்நீதிமன்ற வழக்குரைஞராக இருந்தார். ஆகவே அவரது அறையிலேயே நான் வழக்குரைஞராக அமர்ந்தேன். எழுத்தர், வேலையாள் முதலிய சௌகர்யங்களுக்கெல்லாம் நான் கட்டப் படாதபடி ஆயிற்று.
நான் பதிவு (enrol) ஆன தினமே அவருக்கு பதிலாக ஒரு வழக்கை நடத்தினேன். சென்னையில் சிறுவழக்கு நீதிமன்றத்தில் நான் முதல்முதல் ஒரு வழக்கில் கட்டணம் பெற்றது, அந் நீதிமன்றத்தில் பதிவாளர் முன்பாக. சேம்சு சார்ட்டுசுக்காக ஒரு சிறு வழக்கை நடத்தி வெற்றி பெற்றேன்.
அதுமுதல் சின்ன நீதிமன்றத்திலேயே பெரும்பாலும் வழக்குரைஞர் வேலை பார்த்து வந்தேன். சில சமயங்களில் நகர உரிமைமன்றத்திற்கும் (City Civil Court) போவேன். சீக்கிரம் காவல்துறை நீதிமன்றத்துக்கும் போக ஆரம்பித்தேன். உயர்நீதிமன்றத்தி்ல் கார்த்திகை பிறைபோல் தோன்றுவேன்! இதைப்பற்றி சற்று விவரமாய் எழுத விரும்புகிறேன். முதல் இரண்டு வருசம் என் வழக்குரைஞர் வரும்படி சராசரியாக மாதத்திற்கு 50 உரூபாய் முதல் 10 உரூபாய் வரை இருந்தது. பிறகு உயர்ந்து கொண்டு போய் சுமார் 1000 உரூபாய் சம்பாதித்தேன். இருந்தபோதிலும் நான் வழக்குரைஞாகப் பெரும் பதவியையாவது ஊதியத்தையாவது பெறவில்லை என்று ஒப்புக்கொள்ளவேண்டும். இதற்கு முக்கிய காரணம் வழக்குரைஞர் உத்தியோகத்தில் என் மனம் பலமாக ஈடுபாடாததேயாம். பெரிய வழக்குரைஞர் என்று பெயர் எடுத்து ஏராளமாகப் பணம் சம்பாதிக்க வேண்டுமென்று நான் விரும்ப வில்லை. வெளிப்படையாகக் கூறுமிடத்து என் மன உற்சாக மெல்லாம் தமிழ் நாடகங்களில் நடித்தும், தமிழ் நாடகங்களை எழுதியும் பெரிய பெயர் எடுக்கவேண்டுமென்றே இருந்தது! இதன் பொருட்டு என் ஓய்வுக் காலத்தையெல்லாம் சட்டப்புத்தகங்களையும் சட்ட அறிக்கைகளையும் படிப்பதில் செலவிடாது சுகுண விலாச சபைக்காக உழைப்பதிலேயே செலவழித்தேன். இதற்காக நான் எப்பொழுதும் வருத்தப்பட்டவனன்று. இப் பொழுதும் வருத்தப்படவில்லை; சந்தோசமே படுகிறேன். நான் கொஞ்சம் பிரபல நடிகனும் நாடக ஆசிரியனுமான பிறகு ஒரு நாள் ஆந்திர நாடகப் பிதா மகனான பல்லாரி வி.. கிருட்டிணமாச்சார்லு அவர்கள் தன்னுடைய அனுபவத்தை எனக்குத் தெரிவித்து “நீ சிறந்த வழக்குரைஞராக வேண்டுமென்றால் நாடகத்தைத் தூரத்தில் விட்டுவிட வேண்டும்” என்று போதித்தது எனக்கு ஞாபகமிருக்கிறது. அவரது போதனையை நான் ஒப்புக்கொள்ள வில்லை என்று எழுதவேண்டியது அநாவசியம்’
நான் வழக்குரைஞராகப் பணம் சம்பாதிக்கும் போது, என் இல் வாழ்க்கை சுகமாய் நடத்தவும், என் நாடகங்களை அச்சிட வேண்டியதற்கும் போதுமான பொருள் கிடைத்தால் போதும் என்று உழைத்துவந்தேன். மேற்சொன்ன காரணங்கள் பற்றியே கூடுமான வரையில் எனது வழக்குரைஞர் வேலையையெல்லாம் சுகமாய்க் காலம் கழிக்கக் கூடிய சிறுவழக்கு நீதிமன்றத்தில் பெரும்பாலும் நகர் உரிமையியல் மன்றத்தில் சில பாகமும் காவல்துறை நீதிமன்றத்தல் சில பாகமும் வைத்துக்கொண்டேன். எப்பொழுதாவது கடினப்பட்டு உழைக்கவேண்டிய பெரிய வழக்குகள் வந்தால் அவற்றை மெல்ல, எனக்கு அவகாசமில்லை’ என்று தட்டிவிடுவேன்.
இக்காரணம் பற்றியே கட்சிக்காரர்கள் என்னிடம் வருவதென்றால் காலை 9½ மணிக்குள் வரவேண்டும் என்றும் சாயங் காலங்களில் 5 மணிக்குமேல் ஒருவரும் வரக்கூடாது என்றும் ஒரு நிபந்தனை செய்து கொண்டேன்.
இந்த நிபந்தனையினின்றும் சுமார் 25 வருடங்கள் நான் வழக்குரைஞராக வேலை பார்த்த காலமெல்லாம் மாறவில்லை. இராத்திரியில் யாராவது என் வீட்டிற்கு வந்து ‘அவசர வழக்கு’ என்று என்னைத் தொந்தரவு செய்பவர்களுக்கெல்லாம் ஒரு பதில், ஏற்பாடு செய்து கொண்டேன். அதாவது “உங்கள் வழக்கு இன்றிரவு ஏதாவது நடக்கப் போகிறதா? இல்லையே! நாளைக் காலை 11 மணிக்குத்தானே. வழக்கு (case). ஆகவே தயவுசெய்து நாளை காலை வீட்டிற்கு வந்துவிடுங்கள்” என்று பதில் சொல்லி அனுப்பிவிடுவேன். இந்த வழக்கத்தை அறிந்த என் வழக்கமாக வரும் கட்சிக்காரர்கள் என்னைச் சாயங்காலங்களில் தொந்தரவு செய்வதில்லை. மற்றவர்களிடமும் “இந்த வழக்குரைஞர் சாயங்காலத்திற்குமேல் நீதிமன்ற வழக்குகளைப் பார்க்கமாட்டார். கட்டணம் (Fees) கொடுத்த போதிலும் நாளை காலை கொண்டு வா என்று அனுப்பிவிடுவார். ஆகையால் அவரை 5 மணிக்குமேல் போய்ப் பார்ப்பதில் பிரயோகன மில்லை”, என்று தடுத்துவிடுவார்கள்.
இந்தக் கோட்பாட்டினால் எனக்கு ஒரு பெரிய நன்மை கிடைத்தது. சாதாரணமாக உயர்நீதிமன்ற நீதிபதிகள் நாற்பது ஐம்பது வயதாவதற்குள் நீர் வியாதி, குன்ம நோய் முதலிய ஏதாவது வியாதிக்கு உள்ளாகின்றனர் என்பது எல்லோரும் அறிந்த விசயமே. இதற்கு முக்கிய காரணம் அவர்கள் காலக்கிரமப்படி போசனம் கொள்ளாததும், தக்கபடி சாயங் காலங்களில் உடற்பயிற்சி(வியாயாமம்/exercise) எடுத்துக் கொள்ளாததுமாம் என்று வைத்தியர்கள் கூறியிருக்கின்றார். எத்தனை சிறந்த வழக்குரைஞர்கள் சுமார் 50 வயதிற்குள் வியாதிக்கு ஆளாகி மடிந்திருக்கின்றனர்! தேகத்தில் சிறு வயது முதல் தக்க பலமில்லாத நான் இப்ப ஏதாவது வியாதிக்கு ஆளாகாமல், தடுத்தது காலக்கிரமப்படி போசனங் கொண்டதும் சாயங் காலங்களில் ஏதாவது உடற்பயிற்சியும் எடுத்துக்கொண்டு தக்கபடி ஓய்வையும் எடுத்துக்கொண்டு ஓய்வுக் காலங்களில் மனத்திற்கு உற்சாகத்தையும் சந்தோசத்தையும் அளிக்கத்தக்க மனதிற்கினிய தொழில் (Hobby), ஒன்றை ஏற்படுத்திக் கொண்டு நடந்துவந்ததே, இதுவரையில் ஈசுவரன் கிருபையில் என் தேக நலத்தைக் காப்பாற்றிக்கொண்டு வரச் செய்தது என்று உறுதியாக நம்புகிறேன்.
நான் வழக்குரைஞனாக நடவடிக்கை நடத்திய காலத்தில் எனக்கே மற்றொரு நிபந்தனை ஏற்படுத்திக் கொண்டேன். அதாவது கட்சிக்காரர்கள் என்னிடம் வந்தால் அவர்கள் வழக்கு பொய்யானது, தப்பானது; நியாயமல்ல என்று என் புத்திக்குப் பட்டால் அவர்கள் வழக்கை எடுத்துக்கொள்ளக் கூடாதென்பதாம். இதனால், என்னிடம் வந்த பல வழக்குகளை ஒதுக்கியிருக்கிறேன். இருந்தும் இதனால் நான் ஒரு நன்மை பெறாமல் போகவில்லை. அதாவது “சம்பந்தம் சாதாரணமாக தப்பான வழக்குகளை எடுத்துக்கொள்ளமாட்டான்” என்னும் பெயர் பெற்றேன் என்று நினைக்கிறேன். என்னிடம் வரும் கட்சிக்காரர்களுக்கெல்லாம் ஆரம்பத்தில் ஒரு கதை சொல்வேன். “ஐயா, வைத்தியனிடம் போய் உங்களுக்கு ஒரு வியாதி இருக்க அதை மறைத்து வேறொன்றைக் கூறினால் அந்த வைத்தியன் உங்கள் உண்மையான வியாதியைக் குணப்படுத்த முடியுமா? அதுபோல வழக்குரைஞனாகிய என்னிடம் உண்மையைக் கூறுங்கள். பிறகு உங்கள் வழக்கிற்குப் பரிகாரம் தேடுகிறேன்” என்று சொல்வேன்.
(தொடரும்)
பம்மல் சம்பந்தம்
என் சுயசரிதை
Leave a Reply