ப. சம்பந்த(முதலியா)ரின் ‘என் சுயசரிதை’ 18 : 11. தமிழ் நாடகத்திற்காகத் தான் உழைத்தது
(ப. சம்பந்த(முதலியா)ரின் ‘என் சுயசரிதை’ 17 : நான் எந்த கட்சியையும் சேராதது – தொடர்ச்சி)
‘என் சுயசரிதை’
அத்தியாயம் 11. தமிழ் நாடகத்திற்காகத்தான் உழைத்தது
1891 முதல் 1936 வரையில் நான் தமிழ் நாடகங்களை எழுதி அவற்றில் நடித்து உழைத்து வந்த சரிதையை “நாடகமேடை நினைவுகள்” என்னும் புத்தகத்தில் மிகவும் விவரமாக எழுதி அச்சிட்டுள்ளேன். ஆகவே அவற்றைப் பற்றி மறுபடியும் இங்கு எழுதுவேனாயின் கூறியது கூறல் என்னும் குற்றத்திற்கு உள்ளாவேன் என்று அஞ்சி இங்கு எழுதாது விடுத்தேன். அவறறைப் பற்றி பல விசயங்களை அறிய விரும்புபவர்கள் அந்நூலில் கண்டு கொள்ள வேண்டுகிறேன். ஆயினும் அந்நாடகங்களின் பெயர்களை மாத்திரம் இங்கு என் சுயசாதனையை எழுதுங்கால் குறிப்பிட வேண்டியது அவசியமாகும். அந்நாடகங்கள் அடியில் வருமாறு:- புட்பவல்லி, சுந்தரி, (இ)லீலாவதி, சுலோசனா, கள்வர் தலைவன், யயாதி, மனோகரா, சாரங்கதரா, இரண்டு நண்பர்கள், முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும், (இ)ரத்னாவளி, சத்குசித்(து), நற்குல தெய்வம், காலவரிசி, மார்க்கண்டேயர், காதலர் கண்கள், விரும்பிய விதமே, பேயல்ல பெண்மணியே, அமலாதித்யன், வாணிபுர வணிகன், சபாபதி 1ஆம் பாகம், சிம்க நாதன், வேதாள உலகம், பொன்விலங்கு, மகபதி, சிறுத்தொண்டர், (இ)ரசபுத்திர வீரன், விசயரங்கம், கண்டு பிடித்தல், கோனேரி அரசகுமாரன், சந்தையிற் கூட்டம், ஊர்வசியின் சாபம், புத்த அவதாரம், அரிச்சந்திரன், வள்ளிமணம், பொங்கல் பண்டிகை அல்லது சபாபதி 2ஆம் பாகம், சந்திரகரி, ஓர் ஒத்திகை அல்லது சபாபதி 3ஆம் பாகம், தாசிப் பெண், சுபத்திரா அருசுன், கொடையாளிக் கருணன், மனைவியால் மீண்டவன், சகதேவன் சூழ்ச்சி, சர்சன் செனரல் விதித்த மருந்து, விச்சுவின் மனைவி, இடைச்சுவர் இருபுறமும், என்ன நேர்ந்திடினும், சகுந்தலை, விக்கிரமோர்வசி, மாளவிகாக்னி மித்ரம், விபரீதமான முடிவு, சுல்தான் பேட்டை மாசிசுட்டிரேட்டு, உண்மையான சகோதரன், சபாபதி 4ஆம் பாகம், காளப்பன் கள்ளத்தனம், பிராம்மணனும் சூத்திரனும், உத்தம பத்தினி, குறமகள், வைகுண்ட வைத்தியர், சதி.சுலோசனா ஆம்.
இனி 1936-ஆம் வருடத்திற்குப் பிறகு நான் எழுதிய நாடகங்களைப் பற்றி சில விவரங்களைத் தெரிவிக்கிறேன்.
நல்ல தங்காள்: இது ஒரு பழைய கதையை நாடகமாக என்னால் எழுதப்பட்டது. இதை 1936 ஆம் வருசம் அச்சிட்டேன்.
ஏமாந்த இரண்டு திருடர்கள்: இது ஒரு சிறந்த நகைச்சுவை நாடிகையாம். இதை 1937-ஆம் வருசம் அச்சிட்டேன். எங்கள் சபையில் ஆடப்பட்டிருக்கிறது. சபாபதி 5ஆம் பாகம் அல்லது மாறுவேட விருந்து :- இதை 1937-ஆம் வருசம் அச்சிட்டேன்.
சோம்பேறி சகுனம் பார்த்தது: இதுவும் ஒரு ஃகாசிய நாடிகையாம். இதை 1937-ஆம் வருசம் அச்சிட்டேன்.
இசுத்திரீ இராச்சியம்:– இதுவும் ஒரு சிறு ஃகாசிய நாடிகையாம். இதை 1938-ஆம் வருசம் அச்சிட்டேன். மாண்டவர் மீண்டது. ஆசுத்தானபுர நாடக சபை சங்கீதப் பயித்தியம் இம் மூன்றையும் மூன்று நகைச்சுவை நாடகங்கள் என்கிற பெயருடன் 1940- ஆண்டு அச்சிட்டேன். இவை எங்கள் சடை தசரா கொண்டாட்டங்களுக்காக எழுதப்பட்டன. மாண்டவர் கண்டது பன்முறை ஆடப்பட்டிருக்கின்றது. மூன்றாவது சில முறை ஆடப்பட்டிருக்கிறது. இவை நான் எழுதிய ஃகாசிய நாடகங்களில் முக்கியமானவை என்று நினைக்கிறேன்.
இருவர்களும் திருடர்களே, கான நாதனும் அவனது அமைச்சர்களும், பாடலீபுரத்து பாடகர்கள், புத்திசாலி பிள்ளை மாண்டான், விருப்பும் வெறுப்பும், ஆலவீரன், நான் பிறந்த ஊர், சமீன்தார் வரவு, பெண்புத்திக் கூர்மை, இவை ஒன்றாக ஒன்பது குட்டி நாடகங்கள் என்ற பெயருடன் என்னால் 1941-ஆம் வருசம் அச்சிடப்பட்டன. முதல் எட்டும் பெரும்பாலும் ஆங்கிலத்திலிருந்து மொழி பெயர்க்கப்பட்டவை. இவற்றை எழுதி அச்சிட்டதற்கு முக்கிய காரணம் இவை பள்ளிக்கூடத்து மாணவர்கள் ஒப்புவிக்க உயயோகக்கூடும் என்று. இவை சிலமுறை பள்ளிக் கூடங்களில் ஆடப்பட்டிருக்கின்றன. பெண் புத்திக் கூர்மை என்பது திருச்சிராப்பள்ளி வானொலிக்காக எழுதியது.
இந்தியனும் இட்லரும்:– இதை முதலில் ஆங்கிலத்தில் எழுதினேன். சென்னையிலுள்ள ஒரு பிரபலமான ஒரு சங்கத்தார் தாங்கள் ஆடுவதற்காக ஆங்கிலத்தில் எழுதித் தரவேண்டு மென்று என்னைக் கேட்டபோது எழுதி முடித்தேன். அதை யுத்த கட்ட நிவாரண பண்டுக்காக ஆடத் தீர்மானித்து நாடகப் பாத்திரங்களையும் பகிர்ந்து கொடுத்தனர் என் ஞாபகப்படி சில வருடங்களுக்கு முன்பாகப் பிறகு திடீரென்று இப் பிரயத்தனத்தை விட்டு விட்டு என் கையேட்டுப் பிரதியை திருப்பி அனுப்பிவிட்டனர். இப்படித் திருப்பிவிட்டதற்குக் காரணம் இன்றளவும் நான் அறிகிலேன். பிறகு கட்டப் பட்டு எழுதியது வீண் போகாதபடி இதைத் தமிழில் மொழி பெயர்த்து 1947-ஆம் வருசம் இதை அச்சிட்டேன். சாபாபதி சமீன்தார்:– இது ஒரு ஃகாசிய நாடக மென்று நான் கூறாமலே தெரியும். இதைப் பேசும் படக் காட்சிக்காகவே எழுதி அச்சிட்டேன். 1948-ஆம் வருசம். மேடை நாடகமாட பெரும்பாலும் கூடும். அவ்வாறு ஆடப்பட்டுமிருக்கிறது.
மனை ஆட்சி:– இது எனது நண்பர் சீமான் வி. வி. சிரீனிவாச ஐயங்கார் எழுதிய Domestication of Damoo என்னும் ஆங்கில நாடகத்தின் தமிழ் அமைப்பு. இது வானொலி நாடகமாக ஆடப்பட்டிருக்கிறது.
சதி சக்தி:– இது ஒரு பிரஃகசனம் அல்லது ஃகாசிய நாடிகையாம். இது வானொலிக்காக எழுதப்பட்டது.
தீயின் சிறு திவலை:– இதை என் வயோதிகத்தில் எழுதிய ஒரு முக்கியமான நாடகமாகக் கொள்கிறேன். இதை 1939-ஆம் வருசம் ஒரு பேசும் பட நிறுவனத்திற்காக எழுதிமுடித்தேன். இப்பிரயத்தனம் முடிவு பெறாமல் போகவே பிறகு 1947-ஆம் ஆண்டு இதை அச்சிட்டேன். இதை இத்தனை வருடம் நான் அச்சிடாமலிருந்ததற்குக் காரணம் இது வரையில் ஆங்கில இராச்சியத்தில் அடங்கியிருந்த நமது தேசம் நமது சுயராச்சியத்திற்கு வந்ததேயாம். 1947-ஆம் வருசம் ஆகட்டு மாதம் 15ந் தேதி வரையில் எங்கு இந்நூல் முன்பிருந்த துரைத்தனத்தாரால் தங்களுக்கு விரோதமாக அச்சிடப்பட்டதென்று எண்ணுகிறார்களோ என்று சிறிது அச்சப்பட்டேன். பிறகு 1947 -ஆம் ஆண்டு ஆகஸ்டு 15ஆ ந்தேதி அந்த அச்சம் அறவே நீங்கவே இதை அச்சிட்டேன். இது நாடக மேடைக்கும் பேசும் படக் காட்சிக்கும் உபயோகப்படும் என்பது என் துணிவு.
தீபாவளி வரிசை:— இது சில வருடங்களுக்கு முன்பு எழுதியது. எந்த வருடம் என்று எனக்கு சரியாக ஞாபக மில்லை. இதை 1947-ஆம் வருசம் அச்சிட்டேன்.
கலையோ காதலோ:– இதை நான் நாடகமாக எழுத ஆரம்பித்தது 1935-ஆம் வருசம். அச்சமயம் நான் பம்பாய்க்கு ஓர் பேசும்படக் காட்சிக்காகப் போயிருந்தேன். பிறகு இதை பேசும்படமாக மாற்றினால் நன்றாய் இருக்குமெனத் தீர்மானித்து அதற்குத் தக்கபடி மாற்றினேன். இதை எழுதும் போது என் மனத்திற்கு பூரண திருப்தியில்லா விட்டால் மேலே போவதில்லை என்னும் தீர்மானப்படி பன்முறை தடை பட்டது. இதை நான் முதிர் வயதில் எழுதிய சிறந்த நாடகங்களில் ஒன்றாக மதிக்கின்றேன். இதை யாராவது பேசும் படமாக மாற்றினால் அதை பார்க்க வேண்டுமென்ற ஆசை எனக்கிருக்கிறது. ஈசன் திருவுள்ளம் எப்படியோ! இவையன்றி சபாபதி துணுக்குகள் என்னும் சிறு காட்சிகளை சேர்த்து அச்சிட்டுள்ளேன்.
சென்ற பத்து பதினைந்து வருடங்களாக நான் எழுதிய நாடகங்களெல்லாம் பேசும் பட ரீதியாக இருக்கின்றன என்பதற்கு தடையில்லை. அதற்கு முக்கிய காரணம் ஏறக்குறைய அவைகள் எல்லாம் திரை நாடகங்களாக உபயோகப்பட வேண்டுமென்று எழுதினதேயாம். ஆங்கிலத்தில் எழுதிய நாடகங்கள் (1) முன்பே கூறியபடி அரிச்சந்திரா நாடகம் முதலில் ஆங்கிலத்தில் எழுதினதாம். (2) அந்தச் சிறுவர்கள் சபைக்கு நான் தமிழில் எழுதிய, யயாதியை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துக் கொடுத்தேன். (3) சபாபதி 4ஆம் பாகம் இது முதல் உலக யுத்தத்திற்காகப் பொருள் சேர்க்கக் கமிட்டியார் இச்சைப்படி சேப்பாக்கம் மைதானத்தில் ஆடுவதற்காகப் பெரும்பாலும் ஆங்கிலத்தில் எழுதியதாம். (4) முன்பே நான் கூறித்தபடி இந்தியனும் இட்லரும் என்னும் நாடகத்தை ஆங்கிலத்தில் முதலில் எழுதினேன். பிறகு தமிழில் மொழி பெயர்த்தேன். (5) சபாபதி துவிபாசி இது பெரும்பாலும் ஆங்கிலத்திலும் சிறிது தமிழிலும் எழுதப்பட்டது.
(தொடரும்)
பம்மல் சம்பந்தம்
என் சுயசரிதை
Leave a Reply