மக்கள் வெறுப்பைப் பெற்றோர் விரைவில் அழிய வேண்டிய நிலையை அடைவர் – சி.இலக்குவனார்
மக்கள் வெறுப்பைப் பெற்றோர் விரைவில் அழிய வேண்டிய நிலையை அடைவர்
ஆளும் நிலையில் இருப்போர், மக்கள் விரும்பாத கொடுஞ் செயல்களைப் புரியின், “நம்மை ஆள்கின்றவர் கொடியர்” என்று மக்களால் வெறுக்கப்படுவர். மக்கள் ஆட்சியில் மக்களால் வெறுக்கப்படுவோர் ஆளும் நிலையிலிருந்து அகற்றப்படுவர். சில நாடுகளில், ஒருமுறை தேர்ந்தெடுக்கப்பட்டோர், ஒரு குறிப்பிட்ட காலம் வரையில், ஐந்தாண்டோ ஆறாண்டோ பதவியில் இருக்கலாம். மறுதேர்தலில் மக்கள் மதிப்பிழந்து வீழ்ச்சியடைவர். சில நாடுகளில் ஆளும் காலத்திலேயே கொடியோரை வேண்டாம் என்று விலக்கும் முறைமை இருக்கின்றது. ஆதலின் ஒரு குறிப்பிட்ட காலம் வரையில்கூடப் பதவியில் இருத்தல் இயலாது.
நன்முறையில் ஆண்டால் குறிப்பிட்ட ஐந்தாண்டோ ஆறாண்டோ பதவியில் இருத்தல் கூடும். கொடுங்கோன்மை பூண்டால் பதவியிலிருந்து அகற்றப்படுவர். ஆதலின் ‘உறை கடுகி’ பதவியில் உறையும் நாள் குறைந்து, அழிவர் என்று கூறியிருப்து இக்காலத்திற்கு முற்றிலும் பொருந்தும். பண்டு, நன்முறையில் ஆளாத ஒருவரைத் திரும்ப அழைக்கும் முறை இன்மையின், ‘உறை கடுகி’ என்பதற்கு ‘வாழ்நாள் குறைந்து’ என்று பொருள் உரைத்தனர். அன்று பதவியை விட்டு அகற்றுதல் என்பது, உலகைவிட்டே அகற்றுதலாக இருந்ததனால் என்று அறிதல் வேண்டும். சார்லசும் உலூயியும் பதவியையும் இழந்து வாழ்நாளையும் இழந்தனர் அன்றோ?
ஆளும் நிலையை அடைந்தோர் மக்களால் போற்றப்படும் நிலையில் பணிபுரிய வேண்டும். வெறுக்கப்படும் நிலையில் ஆளத்தொடங்கின் மக்கள் வெறுப்பைப் பெற்றோர் விரைவில் அழிய வேண்டிய நிலையை அடைவர்.
பேராசிரியர் சி.இலக்குவனார் :
இலக்குவம் : வள்ளுவர் வகுத்த அரசியல்: பக்கம் 736
Leave a Reply