தலைப்பு-மதச்சார்பற்ற இந்தியத்தேசியம் : katturai_madhachaarpattra_indhiathesiyam_

மதச்சார்பற்ற இந்தியத்தேசியம் இருக்கிறதா?” 2/3

 

  இந்திய அரசமைப்புச் சட்டம் வரையப்பட்டு, 1950-இல் செயலுக்கு வந்தபோது, “இறையாண்மையுள்ள சனநாயகக் குடியரசு’’ என்பதாகத்தான் இந்தியா வரையறுக்கப்பட்டது. இந்திரா காந்தியின் அவசர நிலை ஆட்சிக் காலத்தில், 1976 இறுதியில்தான் 42ஆவது திருத்தத்தின் மூலம் “இறையாண்மையுள்ள மதச்சார்பற்ற சோசலிச சனநாயகக் குடியரசு’’ என மாற்றப்பட்டது.

  ஆனால், இதே காலப்பகுதியில்தான் முசுலிம்கள் தில்லியில் கட்டாயக் குடும்பக் கட்டுப்பாட்டு அறுவைப்பண்டவத்திற்கு(சிகிச்சைக்கு) ஆளாக்கப்பட்டார்கள். துர்க்மான்வாயிலில்(கேட்டில்) அவர்களது வீடுகள் தரைமட்டமாக்கப்பட்டன. தன்னை நிலைநிறுத்திக் கொள்ள போலியாக இதுபோன்ற பல்வேறு சட்டங்களை இந்திரா காந்தி பிறப்பித்தார். அவசரகால ஆட்சிக் காலத்தில் “கல்வி’’யும், “வனம்’’தொடர்பான அதிகாரங்களும் மாநிலப் பட்டியலிலிருந்து பொதுப்பட்டியலுக்கு மாற்றப்பட்டன.

  ஆயினும், விடுதலைப் போராட்டக் காலத்திலிருந்து சமயச்சார்பற்ற இந்தியா என்பது பேசப்பட்ட ஒன்றாகவே தொடர்ந்தது. சமயச்சார்பின்மை கருத்தியலின் இந்தியத் தலைமகனாக கருதப்பட்ட சவகர்லால் நேரு கூற்றுகளிலிருந்தே, இந்தியத்திற்கும் சமயச்சார்பின் மைக்கும் தொடர்பேதும் இருக்க முடியாது என்பது தெளிவாகும்.

நேரு எழுதிய புகழ்பெற்ற நூலான  “இந்தியாவைக் கண்டறிதல்: (The discovery of India)நூலில், “ஆரிய நாகரிகமும், பிராமணியக் கட்டமைப்பும் இணைந்த இந்துயிசத்தின் அடிப்படையில் உருவானதுதான் இந்தியத் தேசியம்” எனப் பல இடங்களில் குறிப்பிடுகிறார். அவர் ஆற்றிய பல்வேறு சொற்பொழிவுகளிலும் இதே செய்தியை வெவ்வேறு சொற்களில் குறிப்பிடுகிறார்.

“சமயத்தோடு மெய்யியலும் வரலாற்றோடு மரபும் பழக்க வழக்கங்களும் குமுகாய(சமூக)க் கட்டமைப்பும் கலந்த கலவைதான் இந்திய வாழ்வின் மிகப்பெரும்பாலான கூறுகளில் நிறைந்து காணப்படுகிறது. பிராமணியம் அல்லது இந்துயிசம் என்று கூறப்படும் இந்தப் பொதுத்தன்மைதான் இந்தியத் தேசியத்தின் குறியீடாக இருக்கிறது. இதுதான் தேசியச்சமயமாகவும் விளங்குகிறது’’ என்பதே சவகர்லால் நேருவின் இந்தியா குறித்த வரையறுப்பு.

இதற்குள் நின்றுகொண்டு, சில சகிப்புத்தன்மைகளை அவர் கூறுகிறார். இதைத்தான் சமயச்சார் பின்மை என்பதாகத் தலையில் வைத்துக் கொண்டாடுகிறார்கள்.

ஆரிய பிராமணிய இந்துத் தன்மைதான் இந்தியத்தின் அடிப்படை! இதில், சமயச்சார்பற்ற இந்தியத் தேசியம் எனக் கூறுவதற்கு என்ன இடமிருக்கிறது?

ஏனெனில், எந்தவொரு தேசியத்திற்கும் ஓர் மெய்யியல், வரலாறு, மரபு, இனத் தொடர்ச்சி ஆகியவை அடிப்படையாகத் தேவைப்படுகிறது. இந்தியத் துணைக் கண்டத்தில், இதில் எந்தவொரு கூறிலும் ஒற்றைத்தன்மை இல்லை. ஒத்தத்தன்மையும் இல்லை. எனவே, ஏதாவதொரு குமுகத்தின் மேற்கண்ட கூறுகளைக் கொண்டு ஓர் தேசியத்தைப் புனைய வேண்டிய கட்டாயத்தில் இதிலுள்ள ஆதிக்க சக்திகள் உள்ளன. அவ்வாறான ஆதிக்கப் புனைவே இந்தியத் தேசியமாகும்.

இன்னொன்று, எந்தவொரு தேசியத்திற்கும் ஓர் வரலாற்றுத் தாயகமும், தேசிய மொழியும் இன்றிய மையாதக் கூறாகும்.

நேருவும், காந்தியடிகளும் அடிக்கடி கூறியது போல், பிரித்தானிய இந்திய ஆட்சிப் பகுதியே இவர்களது புனைவுக்கான தாயகமாக வாய்த் தது. இயற்கையில் ஆட்சிப் பகுதியும் (Territory)தேசியத் தாயகமும் வரலாற்றில் பல நேரங்களில் வெவ்வேறாக அமைந்து விடுகின் றன. தேசியத் தாயகமே ஆட்சிப் பகுதியாக மாறும்போது, அங்கு ஓர் தேச அரசு மலர்கிறது. அது விடுதலையின் அடையாளம்!

ஆனால், வரலாற்றில் தற்செயலாக ஆயுத வலிமை காரணமாக அமைந்துவிட்ட ஓர் ஆட்சிப் பகுதியைத் தேசியத் தாயகமாக மாற்ற முயலும்போது, அது ஆதிக்கப் புனைவாக அமைகிறது. அதற்குள் பல்வேறு தேசியத் தாயகங்கள் சிறைப்படுகின்றன. இந்தியாவில் அதுதான் நிகழ்ந்தது.

காந்தி, நேரு, அம்பேத்கர், பொதுவுடைமைத் தலைவர்கள், இந்து மகா சபையினர் ஆகிய வெவ்வேறு உலகப் பார்வை கொண்ட இந்தியத் தலைவர்கள் மேற்கண்ட ஆட்சிப் பகுதித் தேசியத்தில் (Territorial Nationalism) ஒரே கருத்துடையவர்களாக இருந்தார்கள்.

இதன் தவிர்க்க முடியாத தருக்க முடிவாக அவர்களுக்கு ஓர் ஒற்றைத் தேசிய மொழி தேவைப்பட்டது. அதற்கு, இந்தி மொழியைத் தேர்ந்தெடுத்தார்கள். அரசமைப்புச் சட்டத்தில் இந்தியை அலுவல் மொழி எனக் குறிப்பிட்டாலும், இவர்களது புனைவான இந்தியத் தேசியத்தின் தேசிய மொழியாகவே அதை நடைமுறையில் மாற்றினார்கள். “சமற்கிருத மயமாக்கப்பட்ட இந்தி’’என்பதிலும் பெரிய வேறுபாடு இவர்களிடையே இல்லை.

வேற்றுமையில் ஒற்றுமையை வலியுறுத்திய நேருவின் ஆட்சியில் மிகத் தீவிரமான போராட்டத்திற்குப் பிறகே மொழிவழி மாநிலங்கள் அமைய முடிந்தன. இச்சிக்கலில் தீவிர இந்தியவாதியாக அம்பேத்கர் விளங்கினார். மொழிவழி மாநிலத்தையே எதிர்த்தார்.

தனி நாடாக விளங்கிய காசுமீரின் மீது படை யெடுத்து பாகித்தானோடு பங்கு போட்டுக் கொண்டதிலோ, நாகாலாந்து – மிசோரம் – மணிப்பூர் போன்ற தனித்தன்மையான தேசங்களின் மீது படை நடத்தி அவற்றை இந்தியாவின் மாநிலங்களாக மாற்றிக் கொண்டதிலோ, தனி அரசோடு விளங்கிய சிக்கிமை இந்தியாவின் ஆட்சிப் பகுதியாக மாற்றிக் கொண்டதிலோ வலதுசாரி — இடதுசாரி, சமயவாத — சமயச்சார்பற்ற, முற்போக்கு – பிற்போக்கு இந்தியத் தேசியத் தலைவர்களிடையே ஒரு வேறுபாடும் இல்லை.

அங்கங்கே நடக்கும் சில மிகை அத்துமீறல்களைக் கண்டித்து அவ்வப்போது சிலர் முனகுவார்கள் என்பதைத் தவிர இந்த இந்தியத்திற்குள் எந்த வேறுபாட்டையும் காண முடியாது.

இதனால்தான் “காசுமீரைப் பற்றி நாங்கள் எதுவும் பேசவில்லை’’ என்று கண்ணையா குமாரிலிருந்து சீத்தாராம் யெச்சூரி வரை எல்லோரும் ஒரே ‘தேசபக்தி’ கூக்குரல் எழுப்புகிறார்கள். தமிழீழ இனப் படுகொலையில் எல்லாத் தரப்பு வட இந்தியத் தலைவர்களும், ஒத்த கருத்தில் இருப்பதற்கும் இதுவே காரணம்! ஏழு தமிழர் விடுதலையில் அனைத்திந்தியத் தலைவர்கள் அனைவரும் ஒரே குரலில் பேசுவதன் அடிப்படையும் இதுதான்!

காவிரிச் சிக்கலிலோ, முல்லைப் பெரியாறு சிக்கலிலோ அனைத்திந்தியத் தலைவர்கள் பலரின் அழுத்தமான அமைதிக்கு  (மவுனத்திற்கு)ப் பின்னணியும் இதுதான்!

இந்திய அரசியலும், இந்திய அரசமைப்பும் இவ்வாறு இருப்பதன் காரணமாகத்தான் இந்திய நீதிமன்றமும் பெரும்பாலான நேரங்களில் இது போன்ற வழக்குகளில் இவர்களுக்கு ஒத்த குரலில் பேசுகின்றது.

தலைப்பு-தொடரும் : thalaippu_thodarum

தோழர் கி. வெங்கட்ராமன்

பொதுச் செயலாளர், தமிழ்த் தேசியப் பேரியக்கம்

தமிழர் கண்ணோட்டம் ஏப்பிரல் 1-15 

முத்திரை-தமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம் : muthirai_thamizharkannoaattam