தலைப்பு-மதச்சார்பற்ற இந்தியத்தேசியம் : katturai_madhachaarpattra_indhiathesiyam_

மதச்சார்பற்ற இந்தியத்தேசியம் இருக்கிறதா?” 1/3

  “தேசியம் குறித்த தருக்கத்தைத் தீவிரமாக முன்னெடுத்துச் செல்லுங்கள்” என்று பாரதிய சனதாக் கட்சியின் அனைத்திந்தியத் தலைவர் அமித்சா தங்கள் கட்சியினருக்கு அழைப்பு விடுக்கிறார். அக்கட்சியின் அனைத்திந்தியச் செயற்குழுக் கூட்டம் கடந்த 2016 மார்ச்சு 20 – 21 நாட்களில் நடந்தபோது, முதன்மைத் தீர்மானமாகவும் இதுவே சொல்லப்பட்டது.

  “தேசியம் குறித்த தருக்கத்தில் நாம் முதல் சுற்று வெற்றியடைந்திருக்கிறோம்’’ என இந்திய நிதியமைச்சர் அருண் செட்லி மகிழ்ச்சிக் கூத்தாடுகிறார். கூர்ந்து கவனித்தால் இஃது உண்மையென்பதும் புலப்படும்.

  அதைவிட இந்துத்துவம் என்பது வன்மையான இந்தியம் என்றும், இந்தியம் என்பது மென்மையான இந்துத்துவம் என்றும் நாம் கூறுவது உறுதியாக மெய்ப்பிக்கப்படுகிறது என்பதும் புலப்படும். சமயச்சார் பற்ற இந்தியம் என்பதோ, முற்போக்கான இந்தியம் என்பதோ, பன்மைக்கு இடமளிக்கும் இந்தியம் என்பதோ எதுவும் இல்லை என நாம் கூறி வருவதும் உறுதிப்படுகிறது.

  இப்போது, இந்தத் தருக்கம் கடந்த 2016 பிப்ரவரி 8ஆம் நாள், தில்லி – சவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட அடக்குமுறையிலிருந்து மேலெழுந்தது. இதில் இரா.சே.ச.(ஆர்.எசு.எசு.) – பா.ச.க. பரிவாரங்களைக் கருத்தியல் களத்திலும் போராட்டக் களத்திலும் எதிர்கொண்டு வருபவர்கள் முதன்மையாக இ.பொ.க., இ.பொ.க.(மா.), இ.பொ.க. (மா-இலெ) [சி.பி.ஐ.,  சி.பி.ஐ.எம்., சி.பி.ஐ.எம்.எல்.] ஆகிய இடதுசாரிக் கட்சிகளைச் சேர்ந்த மாணவர்களும் கல்வியாளர்களுமே ஆவர்.

  இப்போராட்டக் களத்தில், பாரதிய சனதா குண்டர்களையும் ஆட்சி நிருவாகத்தின் அடக்குமுறைகளையும் உறுதியாக அவர்கள் எதிர் கொள்கிறார்கள் என்பது பாராட்டத்தக்கது.

  பா.ச.க. ஆட்சியின் உருட்டாட்சி(பாசிச) அடக்கு முறை சவகர்லால் நேரு பல்கலைக் கழகத்தோடு மட்டும் நிற்கவில்லை. அகமதாபாத்து பல்கலைக் கழகம், புனே பெர்கூசன் கல்லூரி,  மீண்டும் அடுத்த சுற்று ஐதராபாத்து பல்கலைக் கழகத்தில் வரலாறு காணாத காவல்துறைத் தாக்குதல் என தொடர்கிறது. இங்கெல்லாம் மாணவர்கள் மட்டுமின்றிப் பேராசிரியர்களும் கடும் தாக்குதலுக்கு ஆளாகி வருகிறார்கள்.

 “இந்திய இராணுவம் காசுமீரிலும் வடகிழக்குத் தேசிய இன மாநிலங்களிலும் ஆக்கிரமிப்புப் படையாகச் செயல்படுகிறது’’ என ஓர் கருத்தரங்கில் பேசியதற்காகப் புகழ்பெற்ற பேராசிரியர் நிவேதித்தா(மேனன்) தாக்கப்பட்டார். அந்த அம்மையார் மின்னஞ்சலுக்கும் கைப்பேசிக்கும் திட்டமிட்ட முறையில் அன்றாடம் நூற்றுக்கணக்கான ஆபாச வசவுகள் இரா.சே.ச.(ஆசு.எசு.எசு.) பரிவாரங்களால் அனுப்பப்படுகின்றன. சீ தொலைக் காட்சி முதலான வடநாட்டு ஊடகங்கள் சில அவரை இந்திய எதிரியாகத் தொடர்ந்து சித்திரிக் கின்றன. அவர் மீது பொய் வழக்கும் போடப்பட்டுள்ளது.

  அதேபோல், உலகப்புகழ் பெற்ற வரலாற்றியலாளர் முனைவர் சமன்லால் மார்ச்சு 23 அன்று பகத்சிங்கு நினைவு நாளில், தில்லி பல்கலைக் கழகத்தில் பா.ச.க. வெறியாட்டத்தைக் கண்டித்துப் பேசியதற்காகத் தாக்கப்பட்டார்.

 இந்தக் கல்வியாளர்கள் இத் தாக்குதல்களைக் கண்டு அஞ்சாமல் தங்கள் கருத்துகளை உறுதியாகப் பேசி வருகிறார்கள்.

  ஆயினும், இந்த இடதுசாரி மாணவர்களும் பேராசிரியர்களும் இக்கட்சிகளின் தலைவர்களும் இந்துத்துவாவிற்கு எதிராகப் பன்மைகளை ஏற்கும் இந்தியத் தேசியம், சமயச்சார்பற்ற இந்தியத் தேசியம், உலகமயத்திற்கு எதிரான முற்போக்கு இந்தியத் தேசியம் எனப் பேசும் போதுதான் தோல்வியை மீண்டும் மீண்டும் சந்திக்கிறார்கள்.

  ஏனெனில், இந்துத்துவத்திற்கு எதிராக இந்தியத் தேசியத்தை முன்வைப்பது உண்மையில் வெறும் நிழல் சண்டைதான்! ஆனால், இந்த நிழல் சண்டையைத் தெரிந்தோ தெரியாமலோ அவர்கள் தொடர்கிற போது, “முதல் சுற்று வெற்றி எங்களுக்கு’’ என அருண் செட்லிகள் கொக்கரிக்க வாய்ப்பு ஏற்படுகிறது.

  இந்தத் தருக்கத்தின் போக்கில் இவர்கள் இந்திய அரசமைப்புச் சட்டத்திற்குத் தங்கள் பற்றுறுதியை ஆணையிட்டு உறுதி செய்கிறார்கள்.

 இவற்றின் காரணமாக பா.ச.க.வின் இந்துத்துவத் தேசியத்திற்கு எதிரான, மக்கள் சார்பான மாற்றுகளை இவர்களால் முன்வைக்க முடியவில்லை. நடைமுறையில், ஒரே கருத்தியல் முகாமுக்குள் நடக்கிற சண்டையாக இது தொடர்கிறது.

  உயராய்வு நிறுவனங்களிலும், பல்கலைக்கழகங்களிலும் தங்கள் ஆட்களை உயர் பதவியில் அமர்த்துவது காங்கிரசு ஆட்சியிலும் நடந்ததுதான். ஆயினும், தகுதியுள் ளவர்களில் தங்களது ஆட்களைக் கொண்டு காங்கிரசு ஆட்சி இந்த இடங்களை நிரப்பியது. இதனால், தங்கள் தகுதி காரணமாக இடது சாரி அறிஞர்கள் இந்த ஆய்வு நிறுவனங்களில் முகாமையான இடங்களில் செயல்பட முடிந்தது.

  ஆனால், பா.ச.க. ஆட்சி இதே வேலையைச் செய்யும் போது, ஓர் அடிப்படை வேறுபாடு உள்ளது. தகுதியற்றவர்களாக இருந்தாலும், அதுபற்றியெல்லாம் பொருட்படுத்தாமல் தங்கள் பரிவார ஆட்களைக் கொண்டு உயராய்வு நிறுவனங்களை நிரப்புவது பா.ச.க. ஆட்சியின் பொதுப் போக்காக உள்ளது.

  புனே, திரைப்பட – தொலைக்காட்சி கல்லூரியில் தலைவராக அமர்த்தப்பட்ட கசேந்திர சவுகான், இந்திய வரலாற்றுக் கழகத்தின் தலைவராக அமர்த்தப்பட்ட சுதர்சன இராவு, தேசியப் புத்தக ஆணையத்தின் தலைவராக அமர்த்தப்பட்ட பாலதேவ்வு (சர்மா), திரைப்படத் தலைமைத் தணிக்கையாளராக அமர்த்தப் பட்ட பாலாசி நிகலானி போன்றவர்கள் அவர்கள் வகிக்கும் பொறுப்பிற்கு உரிய தகுதி பெற்றவர்கள் அல்லர். இரா.சே.ச.(ஆர்.எசு.எசு.) ஆட்கள் என்பது மட்டுமே அவர்களின் தகுதி!

  இதுபோன்ற சிற்சில இடங்களில் இந்த இடதுசாரிகள் சரியான மாற்றுகளை முன்வைத்துப் போராடினாலும், கருத்தியல் தளத்தில் மாற்றுகளை முன்வைக்க முடியாமல் தத்தளிக்கிறார்கள்.

  இவர்கள் பற்றுறுதி(விசுவாசம்) காட்டும் இந்திய அரசமைப்புச் சட்டம் இந்தியத் தேசியம் என்பதாக ஒன்றைச் சொல்லாவிட்டாலும், இந்த இடதுசாரிகள் பா.ச.க.வை விடவும் இந்தியத் தேசியம் குறித்து உரத்துப் பேசுகிறார்கள்.

தலைப்பு-தொடரும் : thalaippu_thodarum

தோழர் கி. வெங்கட்ராமன்,

பொதுச் செயலாளர், தமிழ்த் தேசியப் பேரியக்கம்

தமிழர் கண்ணோட்டம்: ஏப்பிரல் 1-15

முத்திரை-தமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம் : muthirai_thamizharkannoaattam