maangani_attai01

  கண்ணதாசன் என்றால் அனைவருக்கும் நினைவிற்கு வருவது அவரது திரைப்பாடல்கள்தாம். நம் வாழ்வில் பல்வேறு நிகழ்வுகளின் பொழுது நம்மோடு தொடர்புடையனவாக – நமக்கே என்று எழுதப்பட்டனவாக – அமைந்த பாடல்கள் வழி நாம் அவரை என்றும் நினைவில் கொள்கிறோம். ஆனால் அவர் பாடலாசிரியராக மாறும் முன்னரும் பின்னருமே கவிஞர், கதையாசிரியர், நாடக ஆசிரியர். இதழாசிரியர், திரைப்படக் கதைஉரையாடலாசிரியர், புதின எழுத்தாளர், காவிய ஆசிரியர், கட்டுரையாளர், எனப் பன்முகமும் கொண்டவர்.

பிறப்பும் சிறப்பும்

  கண்ணதாசன் ஆனி 10, 1958 / 24.6.1927 இல் சிறுகூடல்பட்டியில்சாத்தப்பன்-விசாலாட்சி இணையருக்கு மகனாகப் பிறந்தவர்.ஐப்பசி 1, தி.பி. 2012 /17.10.81இல் மறைந்தார். இவரது இயற்பெயர் முத்தையா; உடன்பிறந்தோர் எண்மர்; சிறுகூடல் பட்டியில் தொடக்கப்பள்ளி முடித்தபின்பு அமராவதிபுதூரில் எட்டாம் வகுப்புவரைதான் படித்துள்ளார். தன் பதினேழாம் அகவையில் (தி.பி.1975 /1944) ‘திருமகள்’ என்னும் இதழாசிரியராகத் தன் இலக்கியப்பணியையும் இதழ்ப்பணியையும் தொடங்கியுள்ளார். அதே ஆண்டிலேயே ‘முதற்கவிதை’ என்னும் தலைப்பில் தன் முதற்கவிதையை வெளியிட்டுக் கவி உலகில் அடி யெடுத்து வைத்தார். அடுத்து, திரை ஒலி (1945), மேதாவி (1946), சண்டமாருதம் (1949), தென்றல் (கிழமை இதழ், 1954 – 1962), சண்டமாருதம்(திங்களிருமுறை, 1954), தென்றல் திரை, முல்லை(1956), தென்றல்(நாளிதழ், 1960), தென்றல் திரை(நாளிதழ், 1961) கண்ணதாசன்(1968), கடிதம்(நாளிதழ்-1969)ஆகிய இதழ்களின் ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார். இவற்றுள் தென்றல், தென்றல்திரை, முல்லை, கண்ணதாசன் முதலிய கண்ணதாசனே வெளியிட்டவையாகும்.காரை முத்துப் புலவர், வணங்காமுடி, கமகப்பிரியா, பார்வதிநாதன், ஆரோக்கியசாமி என்னும் புனைபெயர்களிலும் எழுதி உள்ளார். சந்திரமோகன் என்னும் பெயரில் நடிப்பதற்கு வாய்ப்பு கேட்டும் முயன்றுள்ளார்.

  1949 இல் ‘கன்னியின் காதலி’ என்னும் திரைப்படத்திற்காகக் ‘கலங்காதிரு மனமே’ எனமுதல் பாடல் எழுதினார். தொடர்ந்து திரைப்பாடல்கள் எழுதி அவை, 5 தொகுதிகளாக வந்துள்ளன.இவை தவிர, கவிதைகள் 7 தொகுதிகள் வந்துள்ளன;கவிதைநூல்கள் 10 வந்துள்ளன. புதினங்கள் 21, குறும் புதினங்கள் 13, காப்பியங்கள் 9, சிற்றிலக்கியங்களும் பக்தி இலக்கியங்களும் 10, சிறுகதைத் தொகுப்பு 7, நாடகங்கள் 3, மேடை நாடகங்கள் 3 , கட்டுரை நூல்கள் 27, தத்துவ நூல்கள் 10, தன் வரலாறு 3, திரைக் கதை உரையாடல்கள் 12 திரைப்படங்கள என இவரது படைப்புப் பரப்பு (தரவு: த.இ.க.க.) அகன்றதும் ஆழமானதுமாகும்

கசப்பும் இனிப்பும்

  கண்ணதாசனைப்பற்றி என் உள்ளத்தில் காலத்திற்கேற்ற பல படிமங்கள் உருவாகியுள்ளன. பள்ளிப்பருவத்தில் எல்லாப் பாடல்களுமே கண்ணதாசன் எழுதியவை என எண்ணி வியப்பின் உச்சியில் அவரைக் கொண்டிருந்தேன். பள்ளிப் பருவ நிறைவிலேயே அவ்வாறு எண்ணிய சிறந்த பாடல்கள் பிறரால் எழுதப்பட்டன என அறிய வந்ததும் சற்றுச் சறுக்கல். மீண்டும் அன்றாட வாழ்விற்கேற்ற அவரது பாடல்கள் அவரை மேலும் உயர்த்தின. அடுத்து அவரைப்பற்றிய ஒரு தொடரைப்படித்ததும் இலக்கியப்பாடல்களைத் தம் பாடல்களாகக் காட்டியவர் என்றும் தம்மை நாடிக் கருத்து கேட்கும் வளரும் கவிஞர்களின் பாடல்களைத் தம் பாடல்களாக் காசாக்கியவர் என்றும் எண்ணம் எழுந்து மீண்டும் சறுக்கல். அடுத்து, எப்படியோ இலக்கியப் பாடல்களை எளிய வடிவில் மக்களிடம் அறிமுகம் செய்வது சிறப்புதானே! என்றும் அவரது சூழலுக்கேற்ற பாடல்களின் சிறப்பால் அப்படி ஒன்றும் திருடியிருக்கமாட்டார் என்றும் எண்ணம் ஆட்சி செய்தது. அவரது ‘அருத்தமுள்ள இந்துமதத்தின்’ சில பகுதிகளைப் படித்த பொழுது, ஒரு சாராரின் அளவு கடந்த பாராட்டுதலுக்கு உள்ளான இப்படைப்புகள் அவர் மீது வெறுப்பையே விளைவித்தன. ‘இயேசு காவியம்’ பற்றி அறிந்த பொழுது அவரது சமயப் பொறுமை புரிந்தது.

மறக்க முடியாத கவிஞர்

  இவ்வாறு வெவ்வேறு காலக்கட்டங்களில் கண்ணதாசன் பற்றிய வெவ்வேறு எண்ணங்கள் ஆட்சி செய்தன. உண்மையை உரைக்கின்றேன் எனத் தன்னுடைய குடிப்பழக்கம், விலைமகள் தொடர்பு முதலான தீய பழக்கங்களைப் பெருமையாகக் கூறிய பொழுது வெறுப்புதான் வந்தது.

ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு

ஒரு கோல மயில் என் துணையிருப்பு

என்றும், “குடிப்பதும், தவறுக்கென்றே தங்களை ஒப்புக்கொடுத்துவிட்ட பெண்களுடன் ஈடுபடுவதும், ஒரு தனி மனிதன் தன் உடல்நிலைக்கும் வசதிக்கும் ஏற்ப செய்யும் தவறுகளே தவிர, அதனால் சமுதாயத்தின் எந்த அங்கமும் பாதிக்கப்படுவதில்லை” என்று தனது தவறுகளைச் சரிஎன்பன போல் விளக்கம் அளிப்பதும் ஏற்கத்தக்கனவாக இல்லை. எனினும் அவரே, “வனவாசம், மனவாசம் இரண்டும் ஒருவன் எப்படி வாழக்கூடாது என்பதற்கான எடுத்துக்காட்டுகள். எப்படியெல்லாம் வாழக்கூடாதோ, அப்படியெல்லாம் வாழ்ந்திருக்கிறேன்”, என ஒப்புதல் வாக்குமூலம் கொடுப்பதையும் தன் படைப்புகளைப் பற்றி, “புத்தங்களைப் பின்பற்றுங்கள். அதன் ஆசிரியரைப் பின்பற்றாதீர்கள்!’ எனக் கூறியதையும் இன்றைய சூழலில் ஏற்கத்தான் வேண்டி உள்ளது.இதனால், இறுதியில் – குற்றத்தை ஒப்புக்கொள்ளாத பலரைப் போற்றும் பொழுது, குற்றங்களை வெளிப்படையாகக் கூறுவதாலேயே – அவரை வெறுக்க வேண்டுமா என்ற எண்ணம் எழுந்தது. ஆதலின் அவரது வாழ்க்கையை மீறிய அவரது பாத்திறனே மேலோங்கி நின்றது. கண்ணதாசன் என்னால் மறக்க முடியாத கவிஞராக இடம் பெற்றுவிட்டார்.

 kannadasan01

(தொடரும்)