அட்டை-கவிதைஉறவு, மறைமலைattai-kavithaiuravu-maraimalai

மனத்தில் பதிந்தவர்கள் :

பேராசிரியர் முனைவர் மறைமலை இலக்குவனார்

– ஏர்வாடி இராதாகிருட்டிணன்

 

  பாவேந்தருடன் பழகுதற்கியலாத வாய்ப்பை உடன்பிறப்பு மன்னர்மன்னனுடனும் எழுத்தாளர் தமிழ்வாணனுடன் கிடைக்காத தொடர்பைச் உடன்பிறப்புகள் லேனா, இரவி தமிழ்வாணன் ஆகியோரிடமும், இசைமேதை சீர்காழியுடன் பெறாத தோழமைப் பேற்றினைத் தம்பி மரு.சிவசிதம்பரத்திடமும் பெற்றதைப் போல மூத்த தமிழறிஞர் மறைந்த பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார் அவர்களுடன் பழகக் கிடைக்காத குறையை இறைவன் எனக்குப் பேராசிரியர் மறைமலையுடனான நட்பில் அருளியிருக்கிறான் என்கிற நிறைவு என் நெஞ்சில் நிரம்பவுண்டு.

  பேராசிரியர் மறைமலை அவர்களைப்ப்றறி நான் எழுதுகிற தருணம்கூடப் பேராசிரியர் இலக்குவனார் நூற்றாண்டைத் தமிழகம் கொண்டாடுகிறபோது அமைவது இன்னும் சிறப்பானது. ஐயா மறைமலை அவர்களும் நானும் சென்னைத் தமிழில் சொல்வதானால் ஒரே பேட்டைக்காரர்கள். சென்னை அண்ணாநகர் வாசிகள். சென்னையில் நடக்கும் எந்த இலக்கிய விழாக்களிலும் எங்கள் இருவரையும் இணைந்தே காணலாம். சேர்ந்து வருவதும் சேர்ந்து போவதும் மட்டுமன்றிப் பல செய்திகளில் சேர்ந்தும் சிந்திக்கிற ஒத்த உணர்வுடையவர்கள் நாங்கள்.

  அவரிடம் எனக்குப் பிடித்த பண்புகளில் தலையாயவை அவருடைய எளிமையும் இனிமையும்தான். இப்பண்புகள் அவரை என் இதய இமயத்தில் வைத்துள்ளன. ஆற்றல்களெல்லாம் அதற்குப் பிறகுதான். அன்பு உடன்பிறப்பு பேராசிரியர் மறைமலை அவர்கள் மாற்றாரிடம் காணும் மிளகளவுத் திறனைக்கூட மலையளவு பாராட்டி மகிழும் மாண்புடையவர். இப்பண்பு இன்னும் அதிகமாய் இவரிடம் எனக்கு ஈர்ப்பினை ஏற்படுத்தியதாகும். இந்தப் பண்பின் பெருவிளைவுதான் இன்றளவு ஏறத்தாழ 108 வாழும் கவிஞர்களை வரலாற்றில் வரவு வைக்கும் வளர்தமிழ்ப்பணியான அவர்தம் கவிதைகளின் திறனாய்வு. என்னுடைய கவிதைகளும் ஒருமுறை இவரது மதிப்பீட்டில் வருகிற மாண்பினை இந்நிகழ்ச்சியால் பெற்றன.

  1995 ஆகத்துத்திங்களில் இவர் வழங்கும் வாழும் கவிஞர் திறனாய்வு தொடங்கிற்று. பேராசிரியர் முனைவர் சாலை இளந்திரையன் கவிதைகள் அந்த முதற்பேற்றினைப் பெற்றன. மகிழ்ந்து நெகிழ்ந்த சாலையார் ஒய்.எம்.சி.ஏ.பட்டிமன்றத்திற்கு எழுதிய மடல் மறைமலை அவர்களின் தமிழ்த்தொண்டினை உற்சாகப்படுத்தும் வகையில் அமைந்திருந்தது; இன்றுவரை தொடர்வது தமிழ் ஏற்றம் பெறுதற்குரிய இவர்தம் பங்களிப்பாய்த் திகழ்கிறது.

  மறைமலை அவர்களின் மனம் விசாலமானது என்பதுபோல அவரது மதிப்பீடுகளில் வெளிப்படுத்தும் அவர்தம் புலமையும் விரிந்தது, பரந்தது. படித்தவற்றை மதிப்பிடுவது மட்டுமல்ல, முனனேர தாம்படித்து வைத்துள்ள செய்திகளைத் தொடர்புபடுத்திச் சீர்தூக்குவது சிறப்பான பொழிவு துய்ப்பறிவாக அவருக்கும் கேட்டுப் பயனுறும் சுவையான விருந்தாக நமக்கும் மதிப்பு பெருகிற வாய்ப்பாகக் கவிஞர்களுக்கும் அமைவது குறிப்பிடத்தக்கது.

 மாதந்தோறும் சென்னை எசுபிளனேடு ஒய்.எம்.சி.ஏ. அரங்கில் ஒய்.எம்.சி.ஏ.பட்டிமன்றச் செயலாளர் திரு கே.பக்தவத்சலம் ஏற்பாட்டில் தவறாமல் நிகழ்ந்து வரும் இக்கவிதைத் திறனாய்வில் என்னுடைய கவிதை நண்பர்கள் பலரது கவிதை நூல்களையும் திறனாய்வு செய்து இந்தவரலாற்றுச் சிறப்பு மிக்கப் பணியில் பதிந்துள்ளார். மறைமலை அவர்கள். இவரது ‘வாழும் தமிழ்க்கவிஞர்கள் தொடர் சொற்பொழிவு’ கவிஞர்களுக்கு மணிமகுடம் சூட்டி மேருவில் அமர்த்தும் முயற்சியாகும்.

  பேராசிரியர் மறைமலை அவர்கள் மற்றுமொரு சிறந்த பண்பினை மனமுவந்து செய்து வருகிறார். புகழ்வாய்ந்த கவிஞர்கள் சிலருக்குக் கணிணியில் வலைப்பூக்கள் வடிவமைத்து அவர்களது வாழ்க்கை வரலாறு, அவர்தம் சிறந்த கவிதைகள், படைப்புகள் ஆகியவற்றை உலகப் படிப்பில் விரித்துப் பலருக்குப் பயன் விளைவிப்பது போற்றுதலுக்குரிய பணியாகும். ஆங்கிலத்திலும் தமிழிலுமாக இந்த வலைப்பூக்களில் கவிதைகள் வலம் வருகின்றன.

  உலக மொழிகளில் தமிழில்தான் அதிகமான வலைகளும் வலைப்பூக்களும் கணிணிப்பயன்பாடும் உள்ளதாக அறிவதில் மகிழ்ச்சியும் பெருமையும் நமக்கு மிகுதியாகிறது. கவிக்கோ அப்துல்இரகுமான், கவிஞர்கள் தமிழன்பன், வைரமுத்து, அமுதபாரதி, அறிவுமதி, வா.மு.சே., வேழவேந்தன்,   என வளரும் பட்டியலில் எனக்கும் ஒரு வைலப்பூ முடித்துச் சிற்பித்திருக்கிறார் மறைமலை அவர்கள். இதுவரை இவர் தொகுத்த வலைப்பூக்களின் எண்ணிக்கை 33. இன்னும் வளர நாம் வாழ்த்த வேண்டும். இந்த வலைப்பூக்களில் கவிஞர்கள் தாங்களே தங்கள் கவிதைகளை மேலும்மேலும்சேர்த்துக் கொள்ளலாம். எப்படியென்று சொல்லித்தர பேராசிரியர் மனம் சலித்துக் கொள்வதில்லை. தொலைபேசினால்கூடப் போதும்.

  பேராசிரியர் மறைமலை அவர்கள் சென்னை மாநிலக்கல்லூரியில் 29 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். குடியாத்தம், திருவண்ணாமலை, கோவை, கிருட்டிணகிரி, சேலம், சென்னை-நந்தனம் ஆகிய நகரங்களில் உள்ள அரசு கலைக்கல்லூரிகளிலும் பணியாற்றியவர். வெளிநாட்டுப்பல்கலைக்கழகங்கள் பலவற்றில் வருகை தரும் பேராசிரியராகவும் பணியாற்றுகிறார். அவற்றுள் கலிபோர்னியா பல்கலைக்கழகம், சிங்கப்பூர் சிம் பல்கலைக்கழகம், மலேசியப் பல்கலைக்கழகம் ஆகியன குறிப்பிடத்தக்கன.

  பணியில் அமர்ந்து பணியாற்றிய நிறுவனங்களைப் போலவே பேராசிரியர் மறைமலை பதவியில் அமர்ந்து பெருமை சேர்த்த அமைப்புகளும் பல உள்ளன. மாநிலக்கல்லூரி ஆய்வுக்கருத்தரங்கு அமைப்பாளராக முதுநிலைப் பாடங்களுக்குப் பணியாற்றியுள்ளார். பாடத்திட்டக்குழு உறுப்பினராகப் பங்கேற்றுள்ளார். மருத்துவச் சொல்லகராதி தயாரிப்பு வல்லுநர் குழு உறுப்பினர், புதுவைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை மேம்பாட்டுத் திட்ட அறிவுரைக்குழு உறுப்பினர் போன்ற பதவிகளுக்கும் பெருமை சேர்த்துள்ளார். குறள்நெறி இதழின் ஆசிரியர் – வெளியீட்டாளர் என்ற நிலையிலும் தமிழ்த்தொண்டு புரிந்திருக்கிறார். அலுவலர் – மாணவர் கூட்டுறவுச் சங்கச் செயலராகவும் பணியாற்றியுள்ளார்.

  கல்வி அறிவுரைஞராகவும் உலகச் சொல்லகராதி மற்றும் இலக்கணச் சங்கம், இந்தியத் திராவிட மொழியியல் சங்கம் ஆகியவற்றில் உறுப்பினராகவும் உலகளாவிய தமிழ்த்தகவல் தொழில்நுட்பக் கழகம், உலக அறிவியல் இதழ் அறிவுரைஞர் குழு ஆகியவற்றில் செயற்குழு உறுப்பினராகவும் பணியாற்றுகிறார்.

  தமிழில் சிறந்த நூல்கள் சிலவற்றை எழுதியுள்ளார். அவற்றுள் இலக்கியக் கோலங்கள், புதுக்கவிதையின் தேக்கநிலை, இலக்கியத்திறனாய்வு – ஓர் அறிமுகம், சொல்லாக்கம் ஆகியன குறிப்பிடத்தக்கவை. தன் தந்தையின் வாழ்க்கை வரலாற்றைத் தந்துள்ளார். இந்நூல் சாகித்திய அகதமியால் வெளியிடப்பட்டுள்ளது. இவர் தமிழில் சிறந்த கவிதைகளைத் தேர்ந்து மொழிபெயர்த்துத் தாமே வெளியிட்டுத் தமிழ்க்கவிதைகளுக்கு உலகளாவிய அங்கீகாரம் கிடைக்க உதவியது குறிப்பிடத்தக்கது. சொல்லாக்கம் குறித்த இவரது நூல் புகழ் வாய்ந்தது. மிகச்சிறந்த இந்த ஆய்வுநூல் தமிழில் சொல்லாக்கம் குறித்த முயற்சிகளுக்கும் பணிகளுக்கும் வெளிச்சம் பாய்ச்சியுள்ளது. பல்வேறு நூல்கள், ஆவணங்கள், கட்டுரைகள் போன்றவற்றைக் கற்றாய்ந்து தந்துள்ள கடின உழைப்பிது. மறைமலை அவர்களின் திறனுக்கும் தளர்வறியா உழைப்புக்குமான சான்று இந்நூல். பல்கலைக்கழக ஆய்வு மாணவர்கள் பலருக்கு ஆய்வு மேற்பார்வையாளராகப் பணியாற்றி உதவியிருக்கிறார்.

  பேராசிரியர் மறைமலை அவர்கள் சிறந்த இலக்கியப் பொழிவாளர். நல்லதை நன்றாகப் பேசக்கூடிய நல்ல பேச்சாளர். ‘வாழுந்தமிழ்க்கவிஞர்கள்’ தொடரைப்போலவே ஒய்.எம்.சி.ஏ.பட்டிமன்றத்தில் இராவண காவியச் சொற்பொழிவை 23 நாள்கள் தொடராக நிகழ்த்திய பெருமைக்குரியவர். வாழும்போதே கவிஞர்களை வாழ்த்திப் பெருமைப்படுத்த வேண்டமென்கிற இலக்குடைய பேராசிரியர் மறைமலை அவர்கள் தம்முடைய பொழிவுகளில் வாழும் கவிஞர்தம் வரிகளை அவர்தம் பெயர்கூறி மேற்கோள் காட்டுகிற பரந்த மனமும் புலமையும் போற்றுதற்குரியன.

  கணிணிப்பயன்பாட்டில் பெரிதும் ஈடுபாடு காட்டுகிற தமிழறிஞர்களில் முதலிடம் வகிக்கிறார் என்றுகூட மறைமலை அவர்களை மனம் திறந்து பாராட்டலாம். மறைமலை அவர்கள் எண்மக் காணொளி(digital video) உருவாக்கத்திலும் பட்டயம்பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. என்னுடைய தமிழாசான் என்பதுபோலவே என்னுடைய கணிணி ஆசானும் இவர்தான். எனக்கு மின்னஞ்சல் அறிவூட்டுவதுமட்டுமின்றிக் கணிணிப்பயன்பாட்டையும் கற்றத்தருகிறார். எந்த இரவிலும் அழைத்து ஐயம் அகற்றிக் கொள்ளும் இசைவை நானே இவரிடம் வலியுறுத்திப் பெற்றுக்கொண்டிருக்கிறேன். அதிகமான ஐயங்கள் என்றால் ஐயா மறைமலை அரைக்கல் தொலைவு நடந்துஎன் இல்லத்துக்கே வந்து கற்றுத்தருவார். அவருக்கு இதுவொரு நடைப்பயிற்சி என்பதுபோல எனக்கு அவரில்லத்திற்கு நடந்து போகும்போது நடைப்பயிற்சி மட்டுமல்ல நல்ல தமிழ்ப்பயிற்சியும் கிடைக்கும்.

  இல்லறம் இவர்க்கு இனியது. அன்பே உருவாக அம்மையார் திருமதி சுபத்திரா மறைமலை இவர்தம் வாழ்க்கைத் துணைவியார். இவர் சென்னை காயிதே மில்லத்து கல்லூரியில் பொருளியல்துறைப் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர்களின் அன்புப் புதல்வி முனைவர் திருமதி நீலமலர்; அண்ணா பல்கலைக்கழகத்தில் இதழியல் பேராசிரியராகப் பணியாற்றுகிறார். நீலமலரின் திருவாளர் முனைவர் வே.செந்தில்குமார் அவர்களும் அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறிநுட்பவியல் பேராசிரியராகத் திகழ்கிறார். பேரன் குருபரன், பேத்தி உதயமலர், மறைமலை அவர்களின் அதிகப்டச நேரத்தை ஆனந்தமயமாக்குவது இம் மழலைப் பூக்கள்தான்.

  புலவர்களோடு பார்க்கலாம் அல்லது பேரக்குழந்தைகளோடு பார்க்கலாம் எனுமாறு சீர்மிகுந்த தமிழறிஞராகவும், சிறந்த தாத்தாவாகவும் திகழ்கிறார் பேராசிரியர் மறைமலை அவர்கள். இவர்தம் அன்பு இளவல் திருவள்ளுவர். தமிழ்நாடு அரசு தமிழ்ப்பண்பாட்டுத்துறையில் துணை இயக்குநராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். நாள்தோறும் இவர் நண்பர்களுக்கு இலக்கியக் காட்சிகளையும் திருக்குறள்கோட்பாடுகளையும் குறுஞ்செய்தியாக (SMS) அனுப்பித் தமிழ்ப்பணி செய்து வருகிறார். பேராசிரியர் இலக்குவனார் எனும் தமிழ்த்தரு கிளைவிட்டுச் செழித்துத் தமிழ்நிலத்தின் நிழலாகத் துலங்குதல் பார்த்து நெஞ்சம் நிறைகிறது தமிழகமும் தமிழ்ச்சமூகமும். தமிழின் வளத்தினும் மேலாய்த் தமிழின் நலம் பாடிய நற்றமிழவர் இவர்.

  தேமதுரத் தமிழோசை தேசமெங்கும் பரவும் வகை செய்கிற மறைமலை இலக்குவனார் மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா போன்ற நாடுகள் பலவற்றிற்குச் சென்று சிறப்பித்துத் திரும்பியிருக்கிறார். மொழியியல் ஆய்வில் முனைவர் பட்டம் பெற்ற மறைமலை அவர்களுக்குச் சமற்கிருத ஞானமும் உண்டு; சென்னைப்பல்கலைக்கழகத்தின் பட்டயத் தேர்வு பெற்றுள்ளார். ஆங்கிலப்புலமையும் இவரிடத்தில் அற்புதமாய் அமைந்துள்ளது.

  பன்முக ஆற்றலும் பண்புகளின் செறிவும் இந்தப் பைந்தமிழளாரின் பெருமைக்குப் பெருமை சேர்க்கின்றன. பழகுதற்கினிய பேராசிரியர் மறைமலை அவர்களின் நட்பு கிடைத்ததில் நெஞ்சம் நிறைகிறவன் நான். எளிமையாகவும் இதமாகவும் எவரும் அணுகும் வண்ணம் இனியைமாகவும் பேசுகிற பழகுகிற இவரை நீங்கள் சந்திக்க நேர்ந்தால் உங்கள மனத்திலும் பதித்துக் கொள்வீர்கள்.

  பேராசிரியர் இலக்குவனார் தமிழகத்திற்குத் தந்த இலக்கியச் செல்வங்களைப்போலவே தமிழகம் அவரிடமிருந்து பெற்றுள்ள மறைமலை, திருவள்ளுவர் ஆகிய இலக்கியச் செல்வங்களும் நிறைந்த புகழைப் பெற்றவர்கள். இவர்போல யாரென்றால் இவர்மட்டுமே எனுமளவு வாழும் இந்த வரலாற்றின் வயது அறுபத்து மூன்றுதான் (14.12.2009). இது இன்னும் நூறாகப் பெருகி நலமாக வாழ வாழ்த்துகிறேன்.

– ஏர்வாடி இராதாகிருட்டிணன்

கவிதை உறவு, மார்கழி 2040 / திசம்பர் 2009 பக்கங்கள் 15-18

ervadi rathakrittinan01