தமிழ் இலக்கியப் பதிவுகளில்

பெண் வன்முறைகள்  கருத்தரங்கம்:

அவதூறு கற்பிப்பது எங்ஙனம் கருத்துரிமையாகும்?

– ‘நம்ம திருச்சி’ இதழில் இலக்குவனார் திருவள்ளுவன்

இலக்குவனார் திருவள்ளுவன்: தமிழ்க்காப்புக்கழகம் என்னும் அமைப்பின் தலைவரும் இலக்குவனார் இலக்கிய இணையத்தின் ஒருங்கிணைப்பாளரும் ‘அகரமுதல’ மின்னிதழ் ஆசிரியருமான இலக்குவனார் திருவள்ளுவன் (தமிழுக்குக்கேடு வரும் பொழுது முதல் எதிர்ப்புக்குரல் எழுப்பும் தமிழறிஞர்) அவரிடம் திருச்சிராப்பள்ளியில் சூசையப்பர் கல்லூரி நடத்த உள்ள கருத்தரங்கம் குறித்து ‘நம்ம திருச்சி’ இதழின் சார்பாகக் கேட்டபோது, இதனைக் கடுமையாக எதிர்த்துப் பின் அவர் கூறிய பதில்கள்

தமிழியல் துறை தமிழ் இலக்கியங்கள் குறித்துக் கருத்தரங்கம் நடத்துவதில் என்ன தவறு? ஏன் எதிர்ப்பு தெரிவிக்கிறீர்கள்?

கருத்தரங்கத்தை நடத்துவது தமிழியல் துறையில் உள்ள இதழியல்துறை. இதழியல் துறை தமிழ்நாட்டு இதழ்கள் குறித்தோ பிறஇதழ்கள் குறித்தோ கருத்தரங்கம் நடத்தலாம். 1882இல்தான் தமிழில் முதல் இதழ் சுதேசமித்திரன் வெளிவந்தது. அவ்வாறிருக்க மூவாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தொல்காப்பியத்திலிருந்து இலக்கியங்களைக் குறித்துத் தலைப்புகள் தந்தது ஏன்? வேண்டுமென்று அவதூறு கற்பிக்கத்தானே!

அப்படி என்றால் தமிழ் வளர்ச்சித்துறை இதை நடத்தினால் தவறில்லை என்கிறீர்களா?

தமிழியல்துறை இதை நடத்துவதை விட வேறு இழுக்கு இல்லை என்பதை அவர்களே அறிவார்கள். எனவே தான் தமிழியல்துறை நடத்தவில்லை.

மக்களாட்சி நாட்டில் கருத்துரிமைக்கு எதிராக இவ்வாறு கூறுவது தவறல்லவா?
எது கருத்துரிமை? உண்மையை மறைத்துத் திட்டமிட்டு அவதூறு கற்பிப்பது எங்ஙனம் கருத்துரிமையாகும்?

ஆராய்ச்சி என்று வந்தால் தானே அக்காலத்தில் நடைபெற்ற பெண்களுக்கு எதிரானவன் கொடுமைகள் குறித்து நாம் அறிய முடியும். அதற்குத் தடை விதிக்கலாமா?

இதழ்களில் இடம் பெறும் பெண்களுக்கு எதிரான வன் கொடுமைகள் பற்றிய செய்திகள் அல்லது படைப்புகள் குறித்துக் கருத்தரங்கம் நடத்தியிருந்தால் வரவேற்றிருக்கலாம்.

கருத்தரங்கத் தலைப்புகள் வேண்டுமென்றே தமிழ் இலக்கியங்களிலும் அக்காலச்சூழலிலும் பெண்களுக்கு எதிரான வன் கொடுமைகள் மட்டுமே இருந்தமை போல் சித்திரிப்பதாக உள்ளன

. நாம் பெண்களைக் குடும்பத்தலைவி, இல்லத்தரசி, மனைவிளக்கு, வாழ்க்கைத்துணை, மனை முதல்வி என்றெல்லாம் அழைப்பதே அவர்களுக்கு முதன்மை தருவதை உணர்த்துகின்றனவே! இலக்கியங்கள் பெண்களைச் சிறப்பிப்பதை அறிஞர்கள் பலரும் உணர்த்தியுள்ளனர்.

“பழந்தமிழ்நாடு பெண்மக்கள் உரிமைக்கு ஒர் இலக்கியம் என்று கூறல் உயர்வு நவிற்சியாகாது. பழந்தமிழ் நூல்களைத் துருவித்துருவி ஆராய்ந்தால் அவற்றில் யாண்டும் பெண்ணுரிமை காணலாம். பெண்தாழ்ந்தவள், குறையுடையாள், அடிமை என்னும் உணர்வே அற்றைநாளில் இல்லை.” என்கிறார் தமிழ்த்தென்றல் திரு.வி.க.

சங்க இலக்கியங்களில் பரத்தை இடம் பெறுகிறாள். கோவலன் கணிகையிடம் சென்று குடும்பம் நடத்தி உள்ளான். இந்த உண்மைகளை ஆராய்ந்தால் என்ன தவறு?

இலக்கிய மரபிற்காகப் பரத்தையிடம் செல்வது போலும் இதனால் தலைவி ஊடல் கொள்வது போலும் எழுதியிருப்பார்கள். அது தான் வாழ்க்கையல்ல. மயிலுக்குப் போர்வை கொடுத்த மன்னன் பேகன் தன் மனைவி கண்ணகி அரசியை விட்டு விட்டு வேறொரு பெண்ணைத் தேடிச்சென்றான். இதை அறிந்த புலவர் பரணர் அவனைக் கண்டித்துத் திருத்தினார்.

மன்னரே இவ்வாறு நடந்து கொள்ளக்கூடாது என்று கருதியிருந்தால் சிறப்பான வாழ்க்கை தானே இருந்திருக்க வேண்டும்.
கோவலன் கணிகைப் பெண்ணிடம் சென்றதைக் கண்ணகி “போற்றாஒழுக்கம்” என்கிறார். அதாவது மக்கள் பாராட்டாத இழிவொழுக்கம் என்கிறார். கோவலன் தந்தையோ கண்ணகி தந்தையோ அக்கால மன்னர்களோ அவ்வாறு நடந்து கொண்டதாகக் குறிப்பு இல்லை.

எனவே தனிமனிதர் தவறுகளை மன்பதைத் தவறுகளாக-சமுதாயக் குற்றங்களாக-மிகைப்படுத்துவது தவறாகும்.
இரண்டு கண்ணகிகளின் வாழ்க்கையும் பொதுவாக மக்களிடம் இல்லற மாண்பிற்கே சிறப்பு இருந்ததையே உணர்த்துகின்றன.

சிறுபான்மைச் மதத்திற்கு எதிராக எதிர்ப்பு தெரிவிப்பது தவறல்லவா?

சிறுபான்மைச்சமயத்தினர் என்னசெய்தாலும் பாதுகாக்க வேண்டும் என்று எண்ணுவதோ நடுநிலைக்கருத்துகளைப் புறந்தள்ளுவதோ தவறாகும்.

நடு நிலை உணர்வு இருந்தால், தேவ அருள் வேத புராணம், தேம்பாவணி, யோசேப்புப் புராணம், கிறிசுதாயனம், கிறித்துமான்மியம், இரட்சணிய யாத்திரிகம், எசுதர்காவியம், இயேசு மாகாவியம், இயேசுநாதர் சரித்திரம், கன்னிமேரி காவியம் முதலான நாற்பதுக்கு மேற்பட்ட கிறித்துவ இலக்கியங்கள் உள்ளனவே! அவற்றில் குறிக்கப்படும் பெண் வன்கொடுமைகள் போன்று ஆராயத்தலைப்பு கொடுக்கலாமே!

 உலகத் தமிழ் மாநாடுகளிலும் பிற கருத்தரங்கங்களிலும் இலக்கியங்களில் இடம் பெறும் குறைகளைச் சுட்டிக்காட்டிக் கட்டுரைகள் வந்துள்ளன. அவ்வாறிருக்க இப்பொழுது மட்டும் எதிர்ப்பது ஏன்?

பொதுவான தலைப்புகளில் ஆராயும் பொழுது நிறைகளும் குறைகளும் சுட்டிக்காட்டப் படலாம். வேண்டுமென்றே தவறான கருத்துகளைத் தெரிவித்த கட்டுரைகளும் வந்துள்ளன. அவற்றிற்கு அந்தந்த மாநாட்டு அரங்குகளில் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஆனால் இப்பொழுது வேண்டு மென்றே தமிழ்ச்சமுதாயம் கேடு கெட்ட ஒன்று என்பது போலத் தலைப்புகளை அமைத்துள்ளனர். இது கண்டிக்கத்தக்கது.

கருத்துரிமை என்ற பெயரில் ‘கன்னிமேரிக்கு இழைக்கப்பட்ட வன்கொடுமை’ எனக் கருத்தரங்கம் நடத்தினால் இவர்கள் சும்மா இருப்பார்களா?

 நீங்கள் என்னதான் கூறுகிறீர்கள்?

‘தமிழ் இலக்கியப்பதிவுகளில் பெண்வன்முறைகள்’ என்னும் பொதுத்தலைப்பிலான கருத்தரங்கத் தலைப்புகள் நடுவுநிலைமையின்றி உள்ளன. உலக அறிஞர்களால் போற்றப்படும் தமிழ் இலக்கியச் சிறப்புகளையும் அக்காலப் பெண்கள் வாழ்க்கையையும் இழிவுபடுத்தும் வகையில் அமைந்துள்ளன. இந்து கிறித்துவ மோதல்கள் கூட இதனால் உருவாகலாம். இக்கருத்தரங்கத்தால் நமக்குத்தலை குனிவு ஏற்படும். மாணவர்களிடையே பிளவு ஏற்படும்.

சிறுபான்மைக் காவலர்கள் நடுநிலையோடு எண்ணி இத்தகைய முயற்சிகளுக்குத் துணை நிற்கக் கூடாது.

தமிழ் இலக்கிய ஆராய்ச்சி என்ற முக மூடியிட்டுக்கொண்டு தமிழையும் தமிழ்ப்பண்பாட்டையும் இழிவுபடுத்தும் எம்முயற்சிக்கும் யாரும் துணை நிற்கக்கூடாது.

 பண்பாட்டுச்சீரழிவு முயற்சிகளுக்கு முற்றுப்புள்ளிவைப்போம்! தமிழ் இலக்கியங்களைக் காப்போம்!

இலக்குவனார் திருவள்ளுவன் கருத்துகள் செய்திக் கட்டுரையின் ஒரு பகுதியே!

பிறர் கருத்துகளையும் குறிப்பிடும் செய்தியாளரின்

தூய வளனார் கல்லூரியில் நடைபெறவுள்ள ‘தமிழ் இலக்கியப் பதிவுகளில் பெண் வன்முறைகள்’ கருத்தரங்கம் அவதூறை பரப்புகிறதா இந்து முன்னணி

என்னும் முழுக்கட்டுரைக்கும் பின் வரும் இணைப்பு காண்க.

https://ntrichy.com/2018/12/05/32046seminar-condemns-women-violence-in-tamil-literature-records/

நம்ம திருச்சி, வார இதழ் 06.12.2018