விக்கிரமன்

விக்கிரமன்

the hindu muthirai

மழை பாதிப்பினால் மயானம் கிடைக்காமல்

இன்னலுற்ற புகழ்மிகு எழுத்தாளர் விக்கிரமனின்

இறுதிச் சடங்கு: சென்னையில்

4 நாள் அவதிக்குப் பிறகு எரியூட்டல்

 கடந்த 1-ஆம் நாள் புகழ்மிகு எழுத்தாளரும், ‘அமுதசுரபி’ இதழின் முன்னாள் ஆசிரியருமான விக்கிரமன் காலமானார். இவரது உடல், மழை வெள்ளம் காரணமாக உடலை பாதுக்காக்கும் உறைகலன் பேழை கிடைக்காமல், எரியூட்ட மயானம் கிடைக்காமல் 4 நாட்கள் கடும்அவதிக்குப் பிறகு 4- ஆம் நாள் நண்பகல் எரியூட்டப்பட்டது.

  ‘நந்திபுரத்து நாயகி’, ‘வந்தியத் தேவன் வாள்’ ‘இராசராசன் சபதம்’ முதலான புதினங்களை எழுதியவர் எழுத்தாளர் விக்கிரமன். ‘அமுதசுரபி’ மாத இதழின் முன்னாள் ஆசிரியரான இவர், கடந்த 1- ஆம் நாள் மதியம் தனது 88 வயதில் உடல்நலக் கோளாறு காரணமாகச் சென்னையில் காலமானார். கழுத்தளவு தண்ணீர் சூழ்ந்த சென்னை – மாம்பலத்தில் இருந்த இவரது வீட்டுக்கு வந்து அஞ்சலி செலுத்த முடியாமல் விக்கிரமனின் மீது அன்புகொண்ட பலர் மன வேதனை அடைந்தனர்.

  விக்கிரமனின் உடலைப் பாதுகாக்க உறைகலன் பேழை கிடைக்காமல், எரியூட்டி இறுதிச் சடங்கு நிகழ்த்த மயானம் கிடைக்காமல் 4 நாட்கள் அவதியுற்றதை அவருடைய மகன் கண்ணன் விக்கிரமன் கண்ணீருடன் நம்முடன் பகிர்ந்துகொண்டார்:

  ‘‘கடந்த 1- ஆம் நாள் மதியம் எனது தந்தை விக்கிரமன் இறந்த செய்தியை உற்றார் உறவினர் அனைவருக்கும் அலைபேசி மூலம் தெரியப்படுத்தினேன். வெளியே மழை கொட்டித் தீர்த்துக்கொண்டிருந்தது. இவர்மீது பற்றுக்கொண்டவர்கள் தமிழகமெங்கும் உள்ளனர். அவர்களில் பலர் இவரது இறப்பு செய்தி அறிந்தும்கூட மழை வெள்ளம் காரணமாக வரமுடியாமல் போனது.

  என்னோடுகூடப் பிறந்தவர்கள் உடன்பிறந்தான் ஒருவர், மூன்று உடன்பிறந்தாள். அவர்கள் வரும் வரையில் உடலைப் பாதுகாக்க உறைகலன் பேழைக்காக நாங்கள் அலையாத இடமில்லை. அப்படியே கிடைத்தாலும் மின்சாரம் இல்லாததனால் எந்தப் பயனும் இல்லாமல் போனது. பனிக்கட்டியும் எங்கும் கிடைக்கவில்லை. 2-ஆம்நாள் மதியம் எங்களுக்கும் வெளி உலகுக்கும் முற்றிலும் தொடர்பு இல்லாமல் போனது. அலைபேசி இயங்கவில்லை.

  எவரையும் தொடர்பு கொண்டு எந்த உதவியும் பெற முடியவில்லை. மின்சாரம் இல்லாததனால் வீடு இருளில் மூழ்கியது. ஏரி உடைந்து வெளியேறிய தண்ணீர் காரணமாக எங்கள் வீடு இருக்கும் மாம்பலம் பகுதியை வெள்ள நீர் சூழ்ந்தது. கழுத்தளவு தண்ணீரில் நீந்திச் சென்று எப்படியாவது உடலை இடுகாட்டுக்குக் கொண்டு செல்ல முயன்றோம். எங்கள் நம்பிக்கை வீணானது.

  திருவான்மியூர், கண்ணம்மா பேட்டை, கிருட்டிணாம்பேட்டை இடுகாடுகளைத் தண்ணீர் சூழ்ந்ததால் புதைக்கவும் வழியில்லை. மரபுவழியில் எரியூட்ட விறகும் கிடைக்கவில்லை. மின்மயானத்தில் எரியூட்டவோ மின்சாரம் இல்லை. நாங்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளானோம்.

  இந்த இக்கட்டானச் சூழலில் ம.நடராசன், தொழிலதிபர் மாம்பலம் சந்திரசேகர் ஆகிய இருவரும் எங்கள் துயருக்குத் தோள்கொடுத்தனர்.

  மயானம் கிடைக்கும் வரையில் உடலைப் படகு மூலம் மருத்துவமனைக்குக் கொண்டு சென்று பாதுகாக்க, ம.நடராசனின் உதவியாளர்கள் சென்னையில் இருக்கிற தனியார், அரசாங்க மருத்துவமனைகளை எல்லாம் அணுகினர். இறந்து 2 நாள் ஆன உடலை மற்ற உடல்களுடன் வைக்க முடியாது என்று எல்லா மருத்துவமனைகளும் கைவிரித்துவிட்டன.

  இதற்கிடையில் 15577 என்கிற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டால் உதவி கிடைக்கும் என்று யாரோ சொல்ல, தொடர்பு கொண்டோம். அந்த எண்ணில் இருந்தவர்கள் ‘உங்கள் அருகில் உள்ள காவல்நிலையத்தில் ஒரு கடிதம் வாங்கி வந்துவிடுங்கள். உடலை நாங்கள் பாதுகாப்பில் வைக்கிறோம். ஆனால் ஒரு நிபந்தனை. உடலைப் பிணஆய்வு செய்துதான் வைப்போம்’ என்றார்கள். எங்களுக்கெல்லாம் பேரதிர்ச்சி.

  சரியென்று மனத்தைத் திடப் படுத்திக்கொண்டு பிணஆய்வுக்கு இசைந்து, எங்கள் பகுதியில் இருந்த காவல்நிலையத்திற்குச் சென்று கடிதம் கேட்டோம். ஆனால் அவர்கள் தர மறுத்துவிட்டனர். அதன் பிறகு திருவல்லிக்கேனியில் இருந்த ‘பென் அண்ட் கோ’ என்கிற தனியார் அமைப்புக்குக் கொண்டுச் செல்ல முயன்றோம். அதுவும் தோல்வி அடைந்தது.

 மிகுந்த இன்னலுக்குப் பிறகு 3- ஆம் நாள் இரவு இராமசந்திரா மருத்துவமனைக்கு நோயர்ஊர்தியில் விக்கிரமனின் உடலைக் கொண்டு சென்றோம். நாங்கள் கொண்டு சென்ற நோயர்ஊர்தியிலேயே பதனப்படுத்தி(embalm) உடலைப் பாது காக்க முன்வந்தார்கள்.

  4-ஆம் நாள் மதியம் இராமச்சந்திரா மருத்துவமனையில் இருந்து நேரடியாகத் திருவல்லிக்கேணியில் இருக்கும் கிருட்டிணாம்பேட்டை இடுகாட்டுக்குக் கொண்டுசென்று உயிர்வளி முறையில் என் தந்தை விக்கிரமனின் உடலுக்கு எரியூட்டினோம்’’ என்றார்.

  54 ஆண்டுகள் ‘அமுதசுரபி’ இதழின் ஆசிரியராக இருந்தவர் விக்கிரமன். கடந்த 19 ஆண்டாக ‘இலக்கிய பீடம்’ எனும் இதழை நடத்திவந்தார். 33 வரலாற்றுப் புதினங்களும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறுகதைகளும் எழுதியுள்ள இவர் 30 ஆண்டுகளாக அனைத்திந்திய எழுத்தாளர் சங்கத்தின் தலைவராகவும் இருந்து வந்தார்.

  பலரது வாழ்வாதாரத்தையே புரட்டிப்போட்ட மழை வெள்ளம்… புகழ்பெற்ற ஓர் எழுத்தாளரின் இறுதிப் பயணத்தையும் விட்டு வைக்கவில்லை!

– மானா பாசுகரன்

தமிழ்இந்து