மறக்கமுடியுமா? – ‘மனோன்மணீயம்’ பேராசிரியர் பெ.சுந்தரம்(பிள்ளை) :- எழில்.இளங்கோவன்
மறக்கமுடியுமா?
‘மனோன்மணீயம்’ பேராசிரியர் பெ.சுந்தரம்(பிள்ளை)
கன்னியாகுமரி மாவட்டம் நாஞ்சில் நாடுதான் இவரின் சொந்த ஊர்.
தொழில் தொடர்பாக, நாஞ்சில் நாட்டில் இருந்து குடிபெயர்ந்து, கேரளம் மாநிலம் ஆலப்புழையில் குடியேறியவர்கள் பெருமாள்பிள்ளை, மாடத்தியம்மாள் இணையர்.
இவர்களின் மகனாக ஆலப்புழையில் பங்குனி 23, 1886 / 1855ஆம் ஆண்டு ஏப்பிரல் 4ஆம் நாள் பிறந்தவர் ‘மனோன்மணீயம்’ பெ.சுந்தரம்(பிள்ளை).
தமிழ் மொழி இயல், இசை, கூத்து என மூன்று பிரிவுகளைக் கொண்டது. கூத்து என்பது நாடக வடிவத்தின் பெயர்.
நாடக வழக்கினும் உலகியல் வழக்கினும்
பாடல் சான்ற புலனெறி வழக்கம்
என்பது தொல்காப்பியம்.
பாடல் ஓர்ந்தும் நாடகம் நயந்தும்
என்கிறது பட்டினப்பாலை.
பார்த்து மகிழ்வதற்கு மட்டுமன்று நாடகம். படித்து இன்புறவும் முடியும் என்பதைத் தன் மனோன்மணீயம் நாடகக் காப்பியத்தால் நிறுவிக் காட்டினார் சுந்தரம்(பிள்ளை).
இலிண்டன் பிரபு எழுதிய ‘இரகசிய வழி’ (The secret Way) என்ற நூலின் மூலக் கருவைத் தழுவி எழுதப்பெற்ற மனோன்மணீயம் வெளிவந்த ஆண்டு 1891.
இந்நூலுள் ‘சுந்தரமுனிவர்’ என்ற ஒரு கதை மாந்தரை உருவாக்கி உலவ விட்டிருப்பார் அவர். பேரசிரியர் சுந்தரம்(பிள்ளை)யின் மதிப்பு வாய்ந்த ஆசான்களில் ஒருவரான கோடகநல்லூர் சுந்தரசுவாமிகளை மனத்தில் இருத்தி, உருவாக்கப் பட்ட படைப்பு.
கோடக நல்லூர் சுந்தரசுவாமி, கைக்கோட்டு ஐயாறு சாமி, நாராயணகுரு, சட்டாம்பி சுவாமி போன்ற சாமியர்கள் சிலர் இவரின் நண்பர்கள் என்பதனால், இவர் சைவத்தின் மீது நாட்டம் கொண்டும், அதற்கான ஆய்வுகளின் மீதும் நாட்டம் கொண்டும் இருந்தார் என்பதில் வியப்பேதும் இல்லை.
பத்துப்பாட்டு நூல் தொகையில் புலவர் நக்கீரர் எழுதிய ‘திருமுருகாற்றுப்படை’, ‘நெடுநல்வாடை’, மாங்குடி மருதனார் எழுதிய ‘மதுரைக்காஞ்சி’ ஆகிய மூன்று நூல்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர் பேராசிரியர் சுந்தரம்(பிள்ளை).
அவை The Ten Tamil Ideas என்ற நூலில் இடம்பெற்றுள்ளது.
பத்துப்பாட்டு குறித்த மிகச் சிறந்த ஆய்வினை ஆங்கிலத்தில் எழுதிச் சென்னைக் கிறித்துவக் கல்லூரி இதழில் வெளியிடச் செய்தார்.
தன் இளம் பருவத்தில், தமிழ்ப் புலவரான இவரின் தந்தையார் பெருமாள்(பிள்ளையிடம்) திருக்குறள், மூதுரை, பழமொழி, சிறுபஞ்சமூலம் போன்ற அறநூல்களைப் பழுதில்லாமல் படித்துள்ளார்.
பின்னர்த் தமிழ்க் கடல் மறைமலை அடிகளாரின் ஆசிரியர் நாகப்பட்டினம் நாராயணசாமி(பிள்ளை)யிடம் முறைப்படி தமிழ் இலக்கண இலக்கியங்களைப் பயின்றார்.
தேவார திருவாசகத்தையும் இளமையிலேயே தெளிவுறப் படித்திருக்கிறார்.
1877ஆம் ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றார்.
1877ஆம் ஆண்டு ‘திருநெல்வேலி ஆங்கில & தமிழ் கல்விச்சாலை’யின் தலைமை ஆசிரியரானார்.
இந்தக் கல்விச்சாலை பின் வந்த காலங்களில் ‘இந்து கல்லூரி’ஆக மாறக் காரணமாக இருந்தவர் சுந்தரம்(பிள்ளை).
அவர் முதுகலைப் பட்டம் பெற்றதைத் தொடர்ந்து ‘திருவனந்தபுரம் பாலராம வர்மர் மகாராசா கல்லூரி’யில் தத்துவத்துறை ஆசிரியராகப் பணியமர்த்தப் பெற்றார்.
இக்கல்லூரியில் மூன்று ஆண்டுகள் பணியாற்றிய இவர், திருவனந்தபுரம் அரண்மனையில், அரண்மனைத்துறைத் தனி ஆணையராக மன்னரால் அமர்த்தப் பெற்றார்.
1855ஆம் ஆண்டில் மீண்டும் மன்னர் கல்லூரியில் தத்துவத்துறைத் தலைமைப் பேராசிரியர் பெறுப்பேற்றார்.
இந்திய & மேற்குலகத் தத்துவம், வரலாறு, தொல்பொருளியல், கல்வெட்டு ஆய்வு, இலக்கண & இலக்கியம், நவீன அறிவியல் ஆகிய துறைகளில் புலமை பெற்றவர் சுந்தரனார்.
‘திருஞானசம்பந்தர் கால ஆராய்ச்சி’ என்ற இவரின் ஆய்வு நூல் 1894ஆம் ஆண்டு வெளியானது.
நற்றொகை விளக்கம், திருவிதாங்கூர் பண்டைய மன்னர்களின் கால ஆராய்ச்சி போன்ற இருபதுக்கும் மேற்பட்ட நூல்களைச் சுந்தரனார் எழுதியிருக்கிறார்.
இவரின் மனோன்மணீயத்தின் இரண்டாம் பதிப்பை வெளியிட்டவர் பேராசிரியர் வையாபுரி(ப் பிள்ளை). மூன்றாம் பதிப்பு சைவசித்தாந்த நூற்பதிப்பு கழகத்தால் வெளியிடப் பெற்றது. தொடர்ந்து 25 திற்கும் மேற்பட்ட பதிப்புகளில் இந்நூல் வெளிவந்துள்ளன என்பது குறிப்பிடதக்கது
அடியேன் கடையேன் அறியாச் சிறியோன்
கொடுமலை யாளக் குடியிருப் புடையேன்
ஆயினும் நீயே தாயெனும் தன்மையின்
மேயபே ராசையென் மீக்கொள ஓர்வழி
உழைத்தலே தகுதியென் றிழைவிந் நாடகம்
வெள்ளிய தெளினும் விளங்குறின் களைக்காற்
ஒள்ளிய சிறுவிர லணியாக்
கொள்மதி யன்பெ குறியெனக் குறித்தே
மனோன்மணீயம் பாயிரத்தில் வரும் இந்த வரிகள் சுந்தரனாரின் தமிழ் வேட்கையைத் தெள்ளெனக் காட்டுகிறது.
“ஆரியம் போல் உலக வழக்கு அழிந்தொழியா நின் சீரிளமைத் திறம்வியந்து, செயல் மறந்து வாழ்த்துதுமே” என்று தமிழின் சீரிளமையை விதந்து போற்றும் ஆசிரியர், ஆரியம் உலக வழக்கு அழிந்து ஒழிந்தது என்பதையும் மறக்காமல் சுட்டிக்காட்டியிருப்பது, இன்றைய சூழலில் முதன்மை பெறுகிறது.
இன்னும் ஒருபடி மேலே சென்று 16.12.1896 ஆம் நாளில் சுந்தரனார் அவரின் நண்பர் சே.எம்.நல்லுசாமி பிள்ளைக்கு எழுதிய கடிதத்தில் இப்படி எழுதியிருக்கிறார் :
“Most of what is ignorantly called Aryan Philosophy, Aryan civilization is literally Dravidianor Tamilian at the bottom”.
(பொதுவாக ஆரியத் தத்துவம், ஆரிய நாகரிகம் என்றெல்லாம் சொல்லப்படுவனவற்றில் அடித்தளத்தில் திராவிட அல்லது தமிழ்த் தத்துவமே உள்ளது என்பது பேருண்மை.)
‘மனோன்மணீயம்’ ஆசிரியர், பேராசிரியர் பெ.சுந்தரம்(பிள்ளை) அவர்கள் ‘இராவ்பகதூர்’ பட்டம் பெற்றவர்.
இவரின் மகன் நடராச(பிள்ளை) பின்னாளில் கேரளவின் அமைச்சராக இருந்திருக்கிறார்.
சித்திரை 15, 1928 / 1897ஆம் ஆண்டு ஏப்பிரல் திங்கள் 26ஆம் நாள் பேராசிரியர் சுந்தரனார் அவர்கள், தம் 42ஆம் அகவையில் இயற்கை எய்தினார்.
– எழில்.இளங்கோவன்
சூலை 29, 2017
மறக்க முடியாது! சுந்தரனாரை மட்டுமில்லை, அவர் எழுதிய மனோன்மணீயத்தையும் மறக்க முடியாது. அந்த நூலை முழுவதும் படித்திருக்கிறேன். நூலின் தொடக்கத்தில் “பாண்டிய அரசனின் கோட்டை மீது பறக்கும் கொடியில் இருந்த மீன் நிலவின் கறையை நக்கிப் பார்க்கும்” என்று வருணித்திருப்பார். அதாவது, பாண்டியன் கொடி அந்தளவுக்கு வானளாவப் பறக்கிறது என்று பொருள். அந்தளவுக்கு மாபெரும் கோட்டையில் அவன் வாழ்ந்தான் என்றும் இன்னொரு பொருள் உண்டு. என்றும் நினைத்து இன்புறத்தக்க உவமை!